விஷ்ணுபுரம் இலக்கிய விருது
To read the article in English: Vishnupuram Literary Award.
விஷ்ணுபுரம் இலக்கிய விருது, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினால் 2010-ம் ஆண்டு முதல் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை சிறப்பு செய்யும் வகையில் வழங்கப்படும் எழுத்தாளுமைக்கான விருது.
நோக்கம்
அரசு சார்ந்த அமைப்புகளாலும், கல்வி நிறுவனங்களாலும் கௌரவிக்கப்படாத மூத்த தமிழ் படைப்பாளிகளை சிறப்பிப்பதே இவ்விருதின் நோக்கம்.
விருது
2010-ல் ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்கப் பணமும், கேடயமும் ஆக இருந்த இந்த விருது 2013-ல் ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. 2021-ல் விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூபாய் இரண்டு லட்ச ரூபாய் நினைவுத் தொகையும், கேடயமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டியும் விருது பெறுபவரைப் பற்றிய விமர்சன நூல் ஒன்று வெளியிடப்படும். முதல் சில விழாக்களில் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் எழுதி வெளிவந்த விமர்சன நூல், பின்னாளில் வாசகர்கள் பலர் சேர்ந்து எழுதும் கட்டுரைகள் அடங்கிய விமர்சன நூல் என்றானது.
விருது பெறும் எழுத்தாளரின் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு விருது விழாவிற்கு முன்பு வெளியிடப்படும். பரிசு பெறும் படைப்பாளியை முன்வைத்து இரண்டு நாள் இலக்கிய விழா நிகழும் (பார்க்க: விஷ்ணுபுரம் இலக்கிய விழா). தமிழ் இலக்கியத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பலருடன் கருத்தரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு நாள் விழாவாக இது நடத்தப்படுகிறது.
விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2016 முதல் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருது பெற்றோர்
ஆ.மாதவன் 2010 [1]
2010-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்பட்டது. விழா டிசம்பர் 26, 2010 அன்று கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் கலையரங்கத்தில் நிகழ்ந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் மணிரத்னம், மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர். விழாவைத் தலைமை ஏற்று கோவை ஞானி நடத்தினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன், முனைவர் வேதசகாயகுமார் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
நூல் வெளியீடு: கடைத்தெருவின் கலைஞன்[2] (ஜெயமோகன்)
ஆ. மாதவன் விழா பதிவு: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010[3]
ஆ. மாதவன் கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழாசிரியர் என்று பல இலக்கியத்தளங்களில் இயங்கியவர்.
பூமணி 2011[4]
2011 ஆண்டு விஷ்ணுபுரம் விருதை எழுத்தாளர் பூமணி பெற்றார். விழா டிசம்பர் 18, 2011 அன்று கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள கீதா ஹாலில் நிகழ்ந்தது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவை தலைமை ஏற்று கோவை ஞானி உரை நிகழ்த்தினார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
நூல் வெளியீடு: பூக்கும் கருவேலம் [5](ஜெயமோகன்)
பூமணி விழா பதிவு: பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது - 2011[6]
பூமணி நவீன தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்தியவர். இவரது படைப்புகள் கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. அஞ்ஞாடி நாவலுக்காக 2014-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
தேவதேவன் 2012[7]
கவிஞர் தேவதேவன் 2012-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விழா டிசம்பர் 22, 2012 அன்று கோவையில் நிகழ்ந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன், சுகா, ராஜகோபாலன், க. மோகனரங்கன் ஆகியோர் பங்கேற்று தேவதேவனைப் பற்றி உரையாற்றினர்.
நூல் வெளியீடு: ஒளியாலானது - தேவதேவன் படைப்புலகம்[8] (ஜெயமோகன்)
தேவதேவன் விழா பதிவு: விஷ்ணுபுரம் விழா நினைவுகள், அதிர்வுகள் - 2012[7]
தேவதேவன் நவீன தமிழின் முதன்மை கவிஞர். கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நவீன தமிழ் கவிதையில் மிக அதிக கவிதைகளை எழுதிய கவிஞர்.
தெளிவத்தை ஜோசப் 2013[9]
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் 2013-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விழா டிசம்பர் 22, 2013 அன்று கோவையில் நிகழ்ந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, திரைப்பட இயக்குநர் பாலா, எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், கவிஞர் ரவி சுப்ரமணியன், சுரேஷ் ஆகியோர் பங்கேற்று தெளிவத்தை ஜோசப்பை கௌரவப்படுத்தினர்.
தெளிவத்தை ஜோசப் அயல்நிலத்துப் படைப்பாளி என்பதால் அவரின் புனைவுநூல் ஒன்று விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.
தெளிவத்தை ஜோசப் விழா பதிவு: விழா 2013[9]
தெளிவத்தை ஜோசப் ஈழத் தமிழ் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியானவர்.
ஞானக்கூத்தன் 2014[10]
கவிஞர் ஞானக்கூத்தன் 2014-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். டிசம்பர் 28, 2014 அன்று விழா கோவையில் நிகழ்ந்தது. திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், மலையாள எழுத்தாளர் டி.பி.ராஜீவன், கவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
ஆவணப்படம்: இலைமேல் எழுத்து[11]
கவிஞர் ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப்படம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் விஜி பாலா அவர்களால் தயாரிக்கப்பட்டது. ஒளிப்பதிவு & இயக்கம் கே.பி.வினோத் செய்தார்.
ஞானக்கூத்தன் விழா பதிவு: விழா 2014 நினைவுகள்[10]
ஞானக்கூத்தன் நவீன தமிழின் முதன்மையான கவிஞர்களுள் ஒருவர். இவரது தாய்மொழி கன்னடம். "திருமந்திரம்" நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயரை ஞானக்கூத்தன் என்று வைத்தார். "அன்று வேறு கிழமை", "சூரியனுக்குப் பின்பக்கம்", "கடற்கறையில் சில மரங்கள்", "மீண்டும் அவர்கள்" மற்றும் "பென்சில் படங்கள்" போன்ற கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
தேவதச்சன் 2015[12]
கவிஞர் தேவதச்சன் 2015-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். டிசம்பர் 27, 2015 அன்று கோவையில் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் யுவன் சந்திரசேகர், லட்சுமி மணிவண்ணன், ஜோ.டி.குரூஸ், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.
நூல் வெளியீடு: அத்துவானவெளியின் கவிதை[13] (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
ஆவணப்படம்: நிசப்தத்தின் சப்தம்[14]
தேவதச்சனின் ஆவணப்படம் விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனால் வெளியிடப்பட்டு, திரையிடப்பட்டது. தேவதச்சனை நேர்காணல் செய்தவர் செந்தில் குமார் தேவன், பின்னணி பேசியவர் ஜா. ராஜகோபாலன்.
இந்த ஆவணப்படத்தை சரவணவேல் இயக்கினார். சண்முகநாதன் ஒளிப்பதிவு செய்தார். படத்தொகுப்பாளர் மேகநாதன். துணை இயக்குநர்கள் யானிதரன் மற்றும் பாலுமகேந்திரா.
தேவதச்சன் விழா பதிவு: விழா 2015 - விஷ்ணுபுரம் விருது[12]
தேவதச்சன் நவீனத் தமிழின் முதன்மையான கவிஞர்களுள் ஒருவர். கோவில்பட்டியில் வசித்து வருகிறார். "அவரவர் கை மணல்", "அத்துவான வேளை", "கடைசி டினோசார்", "ஹோம்ஸ் என்ற காற்று", "எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது" போன்ற கவிதை தொகுப்புகள் எழுதியுள்ளார்.
வண்ணதாசன் 2016[15]
2016-ம் ஆண்டின் விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. விழா டிசம்பர் 25, 2016 அன்று கோவையில் நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக கன்னட எழுத்தாளர் எச்.எஸ்.சிவப்பிரகாஷ், திரைப்பட நடிகர் நாசர், மருத்துவர் கு.சிவராமன், எழுத்தாளர்கள் இரா.முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
நூல் வெளியீடு: தாமிராபரணம்[16] (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
ஆவணப்படம்: நதியின்பாடல்[17]
வண்ணதாசனின் ஆவணப்படம் எழுத்தாளர் செல்வேந்திரன் இயக்கத்தில், சன் கீர்த்தி ஒலிப்பதிவில், அருண் இசையமைப்பில் வெளிவந்தது. நூல் இலக்கிய வட்ட நண்பர்களின் கட்டுரைகளை உள்ளடக்கியது.
வண்ணதாசன் விழா பதிவு: விஷ்ணுபுரம் விருது விழா - ஒருங்கிணைத்தலின் கொண்டாட்டம்[15]
வண்ணதாசன் நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மையான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். கல்யாண்ஜீ என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது தந்தை தி.க. சிவசங்கரன். வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம்.
சீ.முத்துசாமி 2017[18]
மலேசிய தமிழ் எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு 2017-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விழாவிற்காக சீ. முத்துசாமி கோவை வந்திருந்தார். விழா டிசம்பர் 17, 2017 அன்று நிகழ்ந்தது. எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், மேகாலய எழுத்தாளர் ஜேனிஸ் பரியத், மலேசிய எழுத்தாளர் ம.நவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சீ. முத்துசாமியை கௌரவப்படுத்தினர்.
நூல் வெளியீடு: சீ.முத்துசாமியின் படைப்புகள் குறித்து "சீ.முத்துசாமி - மலேசியத் தமிழிலக்கிய முன்னோடி" என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆவணப்படம்: ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்[19]
மலேசிய எழுத்தாளர் ம. நவீன் இயக்கத்தில் சீ. முத்துசாமியின் ஆவணப்படம் வெளிவந்தது.
சீ. முத்துசாமி விழா பதிவு: விஷ்ணுபுரம் விழா பதிவுகள்[18]
சீ. முத்துசாமி மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி. 70-களில் நவீன இலக்கியம் மலேசியாவில் வேர்விட 'நவீன இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள் போன்ற இடைவிடாத இலக்கியப் பங்களிப்புகள் வழியே மலேசிய இலக்கியச் சூழலை வளப்படுத்தும் படைப்பாளி.
ராஜ் கௌதமன் 2018[20]
பேராசிரியர் ராஜ் கௌதமன் 2018-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விழா டிசம்பர் 17, 2018 அன்று கோவையில் உள்ள ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, மலையாள எழுத்தாளர் மதுபால், எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி, சுனில் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
நூல் வெளியீடு: பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்[21] (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
ஆவணப்படம்: பாட்டும் தொகையும்[22]
பேராசிரியர் ராஜ் கௌதமன் ஆவணப்படத்தை கே.பி. வினோத் இயக்கி, ஒலிப்பதிவு செய்தார். இசையமைப்பாளர் பி.சி. சிவன். ராஜ் கௌதமனைப் பற்றிய நூல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களின் கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தது.
ராஜ் கௌதமன் விழா பதிவு: விஷ்ணுபுரம் விழா: இலக்கியமென்னும் களிப்பு[20]
ராஜ் கௌதமன் தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர்.
அபி 2019[23]
கவிஞர் அபி 2019-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விருது விழா டிசம்பர் 29, 2019 அன்று கோவை ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை, அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா, கவிஞர்கள் பெருந்தேவி, ரவி சுப்ரமணியன், ஸ்வேதா சண்முகம் ஆகியோர் பங்கேற்று அபியைப் பற்றி உரையாற்றினர்.
நூல் வெளியீடு: இரவிலிநெடுயுகம்[24]
ஆவணப்படம்: அந்தரநடை[25]
அபி ஆவணப்படத்தை கே.பி. வினோத் இயக்கினார். பிரகாஷ் அருண் ஒலிப்பதிவு செய்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைத்தார். அபி கவிதைகள் குறித்தான நூல் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தது.
அபி விழா பதிவு: விழா 2019[23]
அபி (ஹபிபுல்லா) தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். தமிழில் அரூப கவிதையை படைத்த முன்னோடிக் கவிஞர். வழக்கமான பருண்மை படிமங்களை விட, நுட்பமான அரூப படிமங்கள் வழியாக காலம், வெளி, மனித இருப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படையான தத்துவக் கேள்விகளை கவிதையில் எழுப்பிக்கொண்டவர்.
சுரேஷ்குமார இந்திரஜித் 2020[26]
சுரேஷ்குமார இந்திரஜித் 2020-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். 2020-ம் ஆண்டு விருது விழா கோவிட் தொற்று காரணமாக பெரிய விழாவாக இல்லாமல் மதுரை கே.கே. நகரில் விருது வழங்கும் நிகழ்ச்சி மட்டும் நடந்தது. சுரேஷ்குமார இந்திரஜித்தை வாழ்த்தி எழுத்தாளர் ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன் ஆகியோர் பேசினார். சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்புரை வழங்கினார். நூல் வெளியீடு: வளரும் வாசிப்பு[27]
ஆவணப்படம்: தற்செயல்களின் வரைபடம்[28]
சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படத்தை கே.பி. வினோத் இயக்க, கவிஞர் ஆனந்த்குமார் ஒலிப்பதிவு செய்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைத்தார். நூல் சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகள்மேல் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் வாசிப்புக் கட்டுரைகளைக் கொண்டது.
சுரேஷ்குமார இந்திரஜித் விழா பதிவு: விருது விழா 2020[26]
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் சிறுகதை, நாவல், குறுங்கதை எழுத்தாளர். கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதுபவர். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக் களங்களில் எழுதி வருபவர்.
விக்ரமாதித்யன் 2021[29]
கவிஞர் விக்ரமாதித்யன் 2021-ம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். விருது விழா கோவிட் தொற்று காலத்திற்கு பின் விமரிசையாக கோவை ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நிகழ்ந்தது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், தெலுங்கு எழுத்தாளர் சின்ன வீரபத்ருடு, எழுத்தாளர் சோ. தர்மன், திரைப்பட இயக்குநர் வசந்த் சாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விக்ரமாதித்யனைக் கௌரவித்தனர். நூல் வெளியீடு: நாடோடியின் கால்த்தடம்[30]
ஆவணப்படம்: வீடும் வீதிகளும்[31]
விக்ரமாதித்யன் ஆவணப்படத்தை கவிஞர் ஆனந்த்குமார் இயக்கி, ஒலிப்பதிவு செய்தார். ராஜன் சோமசுந்தரம் இசையமைத்தார். நூல் விக்ரமாத்தியனின் படைப்புகள் மேல் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் வாசிப்புக் கட்டுரைகளைக் கொண்டது.
விக்ரமாதித்யன் விழா பதிவு: விருது விழா 1[32], விருது விழா 2[33]
சாரு நிவேதிதா 2022
எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு 2022-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. 17, 18 டிசம்பர் 2022-ம் தேதியில் கோவையில் நிகழ்ந்த விழாவில் அருணாச்சலப் பிரதேச எழுத்தாளர் மமங் தாய், போகன் சங்கர் ஆகியோர் விருது வழங்கினர்.
நூல் வெளியீடு: தனிவழிப் பயணி
ஆவணப்படம்: தி அவுட்சைடர்
அராத்து இயக்கிய அவுட்சைடர் என்னும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. சாரு நிவேதிதா பற்றிய விமர்சன வாசிப்பு நூலான தனிவழிப்பயணி வெளியிடப்பட்டது.
சாரு நிவேதிதா விழா பதிவு: விஷ்ணுபுரம் விழா 2022[34], விஷ்ணுபுரம் விழா 2022 - எண்ணங்கள் எழுச்சிகள்[35]
யுவன் சந்திரசேகர் 2023
2023-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. டிசம்பர் 16, 17, 2023 நாட்களில் கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது[36] யுவன் சந்திரசேகர் பற்றிய ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்னும் நூலும் சுழற்பாதை யாத்ரீகன் என்னும் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது
இரா.முருகன்
2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் இரா.முருகன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 21 மற்றும் 22 டிசம்பர் 2024 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங்க் அரங்கில் விருது வழங்கப்பட்டது. இரா முருகன் பற்றிய A Garden of Shadows என்னும் ஆவணப்படமும் முப்பட்டைக்கண்ணாடியின் உலகம் என்னும் விமர்சன நூலும் வெளியிடப்பட்டது.
வெளி இணைப்புகள்
- விஷ்ணுபுரம் வட்டம் இணையத்தளம்
- விஷ்ணுபுரம் விருது விழா நினைவுகளில் - ஜெயமோகன்
- விஷ்ணுபுரம் விருது நினைவுகள்
- விஷ்ணுபுரம் விருதுகள் கடந்தவை
- விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்கள் இதுவரை
- விஷ்ணுபுரம் விழா உரைகள் ஜெயமோகன்
- விஷ்ணுபுரம் ஏற்புரைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் 2
- விஷ்ணுபுரம் விழா பதினைந்தாண்டுகள்
அடிக்குறிப்புகள்
- ↑ விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா-2010
- ↑ கடைத்தெருவின் கலைஞன் - ஜெயமோகன் முன்னுரை
- ↑ விஷ்ணுபுரம் விருது விழா-2010
- ↑ விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2011
- ↑ பூக்கும் கருவேலம்-ஜெயமோகன்
- ↑ https://www.jeyamohan.in/23330/#.WFngRHpppdg
- ↑ 7.0 7.1 2012-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.jeyamohan.in/32521/#.XfHO8NUzbIU
- ↑ 9.0 9.1 2013-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ 10.0 10.1 2014-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.youtube.com/watch?v=PwtRXYLCwZw
- ↑ 12.0 12.1 2015-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.jeyamohan.in/81360/
- ↑ https://www.youtube.com/watch?v=pkhi2ZGmjmA
- ↑ 15.0 15.1 2016-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.jeyamohan.in/93576/
- ↑ https://www.youtube.com/watch?v=S5_RNslW9Wg
- ↑ 18.0 18.1 2017-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.youtube.com/watch?v=rk_Jfnnb0cw
- ↑ 20.0 20.1 2018-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.jeyamohan.in/116328/
- ↑ https://www.youtube.com/watch?v=549IKs4voP0
- ↑ 23.0 23.1 2019-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.jeyamohan.in/128310/
- ↑ https://www.youtube.com/watch?app=desktop&v=Ipo6tNJMC04
- ↑ 26.0 26.1 விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2020
- ↑ https://www.jeyamohan.in/142041/
- ↑ https://www.youtube.com/watch?v=u5mP6g_3S04
- ↑ 2021-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
- ↑ https://www.jeyamohan.in/160528/
- ↑ https://www.youtube.com/watch?v=_Y8a2P7gQoM
- ↑ https://www.jeyamohan.in/160972/
- ↑ https://www.jeyamohan.in/160978/
- ↑ https://www.jeyamohan.in/177312/
- ↑ https://www.jeyamohan.in/177322/
- ↑ எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:45 IST