under review

லக்ஷ்மி மணிவண்ணன்

From Tamil Wiki
லக்ஷ்மி மணிவண்ணன் [நன்றி அமர்நாத்]
லக்ஷ்மி மணிவண்ணன்,சுந்தர ராமசாமி
லக்ஷ்மி மணிவண்ணன்,விக்ரமாதித்யன்
லக்ஷ்மி மணிவண்ணன், மகன் மகள்

லக்ஷ்மி மணிவண்ணன் (அ.மணிவண்ணன்) (லட்சுமி மணிவண்ணன்) (நவம்பர் 23, 1969) தமிழில் கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் அரசியல் சமூக விமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர். கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுந்தர ராமசாமியின் மாணவராக இலக்கியத்துக்குள் நுழைந்தவர்.

பிறப்பு, கல்வி

லக்ஷ்மி மணிவண்ணன் என்னும் பெயரில் எழுதும் அ.மணிவண்ணன் கன்யாகுமரிமாவட்டத்தில் பனங்கொட்டான் விளை (பள்ளம்-அஞ்சல்) என்னும் ஊரில் நவம்பர் 23, 1969 அன்று ஆ.அய்யாக்கண் - எஸ்.பாக்கிய லட்சுமி ஆகியோருக்கு பிறந்தார். தொடக்கக் கல்வி நாகர்கோயில் டதி தொடக்கப்பள்ளி. உயர்நிலை, மேல்நிலை கல்வி எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி நாகர்கோவில். பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பொறியியல் படிக்க சேர்ந்தார். முடிக்கவில்லை

தனிவாழ்க்கை

ஆசிரியையாக பணியாற்றிய மணிவண்ணனின் தாய் இளம் வயதில் லட்சுமி மணிவண்ணன் சிறுவனாக இருக்கையிலேயே மறைந்தார். பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய தந்தை மறுமணம் புரிந்துகொண்டார். லக்ஷ்மி மணிவண்ணன் தன் தாய்வழிப்பாட்டியிடமும் உறவினர்களிடமும் வளர்ந்தார். தொடக்கத்தில் பள்ளம் என்னும் ஊரில் வீட்டுப்பயன்பொருட்கள் தவணை முறையில் விற்கும் ஒரு கடையை நடத்தினார். இழப்பு ஏற்படவே அதை நிறுத்தினார். இப்போது தெங்கம்புதூர் என்னும் ஊரில் வெயிலாள் டிரேடர்ஸ் என்னும் வீட்டுப்பயன் பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

எஸ்.சுதந்திரவல்லியை பிப்ரவரி 02, 1996 அன்று மணந்தார். ரிஷி நந்தன் என்னும் மகனும் ரிஷி நாராயணி என்னும் மகளும் உள்ளனர். ரிஷிநந்தன் கணிப்பொறியாளர். சுதந்திரவல்லி கவிஞர், இரு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

இலக்கியவாழ்க்கை

லக்ஷ்மி மணிவண்ணனின் இலக்கிய வாழ்க்கை மூன்று கட்டங்களாலானது. மாணவராக இருக்கும்போது வைரமுத்துவின் கவிதைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தன்முன்னேற்றப் பேச்சுகளை நிகழ்த்தும் மேடைப்பேச்சாளராகவும் அறியப்பட்டார். 1987-ல் தினமலர் டி.வி,.ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றார். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் உருவாகியது. லக்ஷ்மி மணிவண்ணனின் வாழ்க்கையின் இரண்டாவது காலகட்டம். சி.சொக்கலிங்கம், பொன்னீலன் ஆகியோரின் தொடர்பால் முற்போக்குக் கதைகளை எழுத ஆரம்பித்தார். 1991-ல் சிலேட் என்னும் சிற்றிதழை தொடங்கினார். 1990-ல் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணனுக்கு அறிமுகமானார். முற்போக்கு இலக்கிய அமைப்புகளின் சமூக- அரசியல் பார்வையிலிருந்து விலகி தனக்குரிய பார்வை ஒன்றை உருவாக்கிக் கொள்ள அந்த உறவு வழிவகுத்தது. லக்ஷ்மி மணிவண்ணன் இன்று சுந்தர ராமசாமி சிந்தனை மரபின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுகிறார். சுந்தர ராமசாமியுடனான லக்ஷ்மி மணிவண்ணனின் உறவு விவாதத் தன்மைகொண்டதாக ஏற்பும் மறுப்பும் உடையதாக இருந்தது. சுந்தர ராமசாமி தொடங்கி நிறுத்திய காலச்சுவடு இதழ் 1994-ல் மீண்டும் தொடங்கப்பட்டபோது கண்ணன் சுந்தரம், மனுஷ்யபுத்திரன் ஆகியோருடன் லக்ஷ்மி மணிவண்ணனும் அதன் ஆசிரியர்குழுவில் இருந்தார்.

சுந்தர ராமசாமிக்கு இணையாகவே லக்ஷ்மி மணிவண்ணனின் ஆளுமையில் செல்வாக்கு செலுத்தியவர் கவிஞர் விக்ரமாதித்யன். விக்ரமாதித்யனுடன் நிறைய பயணம் செய்திருக்கிறார்.

36A பள்ளம் என்னும் சிறுகதை தன் முதல் இலக்கியப் படைப்பு என லக்ஷ்மி மணிவண்ணன் கருதுகிறார். 1990-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக்கதை புதியபார்வை இதழில் 1993-ம் ஆண்டு வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என சுந்தர ராமசாமி, காஃப்கா ஆகியோரை குறிப்பிடுகிறார். தன் அன்னையின் பெயரை இணைத்துக்கொண்டு லக்ஷ்மி மணிவண்ணன் என்னும் பெயரில் எழுதுகிறார்.

இதழியல்

லக்ஷ்மி மணிவண்ணன் 1991 முதல் சிலேட் என்னும் சிற்றிதழை கால இடைவெளிகளுடன் நடத்தி வருகிறார். சிலேட் பிரசுரமாக நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

1994-ல் காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதில் ஆசிரியர்குழுவில் பணியாற்றினார்.

1997-ல் மின்தமிழ் இணைய இதழில் துணைஆசிரியராக பணியாற்றினார்

ஆன்மிகம்

குடும்ப வழியின்படி லக்ஷ்மி மணிவண்ணன் அய்யா வைகுண்டர் நிறுவிய அய்யாவழி என்னும் துணைமதப் பிரிவைச் சேர்ந்தவர். இடதுசாரிச் சிந்தனைகளில் பயணம் செய்த காலகட்டத்திற்குப் பின் வைகுண்டரின் மெய்யியலை கண்டடைந்தார். வைகுண்டர் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார்

அரசியல், இலக்கியச் செயல்பாடுகள்

  • சிலேட் சார்பில் கவிதைக்கூட்டங்கள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தார்.
  • லட்சுமி மணிவண்ணன் இடதுசாரி அரசியல் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டார். 2012 முதல்கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டார்.
  • 2015 பெருமாள்முருகன் தாக்கப்பட்டபோது இலக்கியவாதிகளின் கருத்துரிமையை முன்வைத்து கண்டனக்கூட்டம் ஒருங்கிணைத்தார்
  • 2017-ல் ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு கருத்தரங்கு போன்ற அரசியல் கூட்டங்களை ஒருங்கிணைத்தார்
  • 2018-ல் பறக்கையில் நிழல்தங்கல் என்னும்பெயரில் இலக்கியவாதிகள் தங்கி எழுதுவதற்கான இடம் ஒன்றை அமைத்தார்.

இலக்கிய இடம்

லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள் காஃப்காவின் கதைகளின் சாயல் கொண்டவை. சுந்தர ராமசமியின் கொந்தளிப்பு போன்ற கதைகளின் சாயலும் உண்டு. இறுக்கமான மொழிநடையும் உளவியல் ஆய்வுமுறையும் அறிவார்ந்த கூர்மையும் எதிர்மறையாக வாழ்க்கையைப் பார்க்கும் கோணமும் கொண்டவை அவை. அவருடைய கவிதைகள் இரண்டு காலகட்டங்களாலானவை. சீற்றமும் நேரடியான மொழியும் கொண்டவை முதற்கட்ட கவிதைகள். இரண்டாம் கட்டக் கவிதைகள் படிமங்களின் அழகும், நுண்சித்தரிப்புத்தன்மையும், அகவிவேகம் நோக்கிச் செல்லும் அமைதியும் கொண்டவை. தமிழில் அகம்நோக்கிச் செல்லும் படைப்புகளை எழுதியவர், மைய ஓட்டத்திற்கு அப்பாலுள்ள மத, ஆன்மிக சாரம் ஒன்றை நோக்கிச் சென்றவர் என்னும் வகையில் முக்கியமானவர்.

விருதுகள்

  • குழந்தைகளுக்கு சாத்தான்; பெரியவர்களுக்கு கடவுள் - கட்டுரைத் தொகுப்பு - ஆனந்த விகடன் விருது
  • ஓம் சக்தி ஓம் பராசக்தி - கட்டுரைத் தொகுப்பு - பீம ராஜா விருது

நூல் பட்டியல்

சிறுகதை
  • 36A பள்ளம் - சிறுகதை
  • சித்திரக் கூடம் - சிறுகதை
  • வெள்ளைப் பல்லி விவகாரம் - சிறுகதை
கவிதை
  • சங்கருக்கு கதவற்ற வீடு - கவிதை
  • வீரலட்சுமி - கவிதை
  • எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் - கவிதைகள்
  • அப்பாவைப் புனிதப்படுத்துதல் - கவிதைகள்
  • கேட்பவரே - கவிதைகள்
  • கடலொரு பக்கம் வீடொரு பக்கம்
  • வாடா மலர்
  • விஜி வரையும் கோலங்கள்
நாவல்
  • அப்பாவின் வீட்டில் - நாவல்
கட்டுரைகள்
  • குழந்தைகளுக்கு சாத்தான்; பெரியவர்களுக்கு கடவுள்
  • ஓம் சக்தி ஓம் பராசக்தி - கட்டுரைகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:21 IST