வைரமுத்து (பாடலாசிரியர்)
To read the article in English: Vairamuthu.
வைரமுத்து (பிறப்பு: ஜூலை 13, 1953) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர். உரத்தகுரலில் கருத்துக்களைச் சொல்லும் கவிதைகள் எழுதினார். சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். இந்திய அளவில் பாடலாசிரியராக இவருடைய இடம் குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதையின் விந்தையான சொல்லாட்சிகளையும் நாட்டாரியலின் அரிய சொல்லாட்சிகளையும் திரைப்பாடலுக்குக் கொண்டு சென்றவர். பொதுவாசிப்புக்குரிய கவிதைகளையும், கதைகளையும் எழுதியவர்.
பிறப்பு, கல்வி
வைரமுத்து தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி, அங்கம்மாள் இணையருக்கு ஜூலை 13, 1953-ல் பிறந்தார். வடுகப்பட்டியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
வைரமுத்து பொன்மணியை மணந்தார். மகன்கள் மதன் கார்க்கி, கபிலன்.
அமைப்புப் பணிகள்
வைரமுத்துவின் 'வெற்றித்தமிழர் பேரவை' என்னும் அமைப்பு இளைஞர்களை இலக்கியத்திற்குள் ஈர்க்கும் பணியைச் செய்தது.
திரை வாழ்க்கை
வைரமுத்து 1980-ல் 'நிழல்கள்' எனும் திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" எனும் பாடல் வழியாக திரைத்துறையில் நுழைந்தார். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். பாடலாசிரியராக ஆறுமுறை தேசிய விருது பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
கவிதைகள்
வைரமுத்து கவிதையை நேரடிப்பிரகடனமாகக் கருதிய வானம்பாடிக் கவிமரபிலிருந்து ஊக்கம் பெற்றவர். ஆனால் வானம்பாடி இயக்கத்தின் முற்போக்கு அரசியலை வைரமுத்து எடுத்துக்கொள்ளவில்லை. வைரமுத்து வானம்பாடிகளின் எழுத்துமுறையுடன் திராவிட இயக்க மேடைப்பேச்சுக்கான அடுக்குச்சொல்லாட்சிகளையும் இணைத்துக்கொண்டு கவிதைகள் எழுதினார்.
புனைகதைகள்
அவருடைய புனைகதைகள் செயற்கையான தருணங்களை புனைந்து வழக்கமான அரசியல்சரி கொண்ட கருத்துக்களை முன்வைப்பவை. உரத்த குரலில் , அடுக்கு மொழி நடையில் அவருடைய புனைகதைகள் அமைந்துள்ளன. அவர் எழுதிய நூல்களில் அவர் வளர்ந்த சூழலின் வாழ்க்கையின் சித்திரம் கொண்ட 'கள்ளிக்காட்டு இதிகாசம்' குறிப்பிடத்தக்கது. இளமையில் அவர் பெற்றுக்கொண்ட நுண்தகவல்களின் தொகை என்பதனாலும் அது குறிப்பிடத்தக்கது. வைரமுத்து நாவல்கள், சிறுகதைகள் எழுதினார்.
விவாதங்கள்
சாகித்ய அக்காதமி விவாதம்,2003
வைரமுத்துவுக்கு சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டபோது ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் அவர் எவ்வகையிலும் அதற்குத் தகுதியானவர் அல்ல என்றும் பல்வேறு அரசியல் தொடர்புகள் வழியாக அவர் அதை பெற்றார் என்றும் குற்றம் சாட்டினர். சாகித்ய அக்காதமி விருது பெற்ற அவருடைய நாவல் இலக்கியத் தகுதிகொண்டது அல்ல, வெறும் பொதுரசனைப் படைப்பு என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஜெயகாந்தன் கடிதம் விவாதம்
2015 ல் ஜெயகாந்தன் வைரமுத்து குமுதம் இதழில் எழுதிய கதைகளை மிதமிஞ்சிப் பாராட்டி ஒரு கடிதத்தை எழுதியதாக வைரமுத்து அளிக்க அதை குமுதம் வெளியிட்டது. ஆனால் ஜெயகாந்தன் அப்போது உடல்நலம் மிகக்குன்றி, நினைவுதவறிய நிலையில் இருந்ததாகவும் அக்கடிதம் வைரமுத்துவால் போலியாகத் தயாரிக்கப்பட்டதாகவும், அவருடையநடையே அல்ல அது என்றும் ஜெயகாந்தனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்கள். ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி "அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது" என்று முகநூலில் குறிப்பிட்டார்.
பாலியல் குற்றச்சாட்டுகள்.
வைரமுத்து மீது 2018ல் பாடகி சின்மயி ஶ்ரீபாதா பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை பொதுவெளியில் முன்வைத்தார். அதன்பின் மொத்தம் 17 பெண்கள் அவர்மேல் பாலியல் அத்துமீறல், மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். தேசிய மகளிர் ஆணையகத்தில் சான்றுகளுடன் புகார்களும் அளிக்கப்பட்டன. ஆனால் எந்த விசாரணையும் அக்குற்றச்சாட்டுக்கள்மேல் நடத்தப்படவில்லை.
ஆண்டாள் விவாதம்
2018 ஆம் ஆண்டு வைரமுத்து ஓர் உரையில் ஆண்டாள் தாசி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று பேசியது வைணவர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.
ஓ.என்.வி. விருது விவாதம்
2021-ல் திருவனந்தபுரத்தில் உள்ள ஓ.என்.வி விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது. கேரளத்தின் பெண் திரைப்படச் செயல்பாட்டாளர் சங்கத்தின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அவ்விருது திரும்பப்பெறப்பட்டது.
ஞானபீட விருது விவாதம்
2026 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டபோது அது தமிழ் நவீன இலக்கியச் சூழலில் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டது. எந்தவகையிலும் இலக்கியத்தகுதி இல்லாத வெறும் பரப்பியல் எழுத்தாளர் என்று வைரமுத்து விமர்சிக்கப்பட்டார். அவருக்கு விருதளித்து ஞானபீடம் தமிழைச் சிறுமைசெய்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டது. (வைரமுத்து ஞானபீட விவாதம்)
விருதுகள்
- கலைமாமணி விருது (1990)
- கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது (2003)
- பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது (2014)
- சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை)
- ஞானபீட விருது (2025)
மதிப்பீடு
வைரமுத்து தமிழ் திரைப்பாடல்களில் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைப் படைத்தவராகவும், கவிஞர் எழுத்தாளர் என்னும் வகையில் நவீன இலக்கியத்துடன் தொடர்பற்ற பொதுவாசிப்புத் தளத்திலேயே இயங்குபவராகவும் மதிப்பிடப்படுகிறார்.
வைரமுத்து ஞானபீட பரிசுபெற்றதை ஒட்டி இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட பொது மனு ஒன்றில் அவர் எழுத்து இவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது. "வைரமுத்துவின் எழுத்துக்களில் தமிழ்ச் சமூகத்தின் ஆழமான விழுமியங்களோ, கலாசார பெருமிதங்களோ, மெய்யானத் தேடலோடு பதிவாகவில்லை. வெறும் மேலோட்டமான அடுக்குமொழிச் சொற்களால் அலங்கரிக்கப்பட்ட வணிகமயமான எழுத்துக்களே அவரது அடையாளமாக உள்ளன. இலக்கியம் என்பது வாழ்வைச் செதுக்குவது; ஆனால் வைரமுத்துவின் படைப்புகள் பெரும்பாலும் திரைத்துறை சார்ந்த லாப நோக்கிற்காகவும், தற்காலிகப் புகழுக்காகவும் உருவாக்கப்பட்டவை"
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- வைகறை மேகங்கள்
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- இன்னொரு தேசியகீதம்
- எனது பழைய பனையோலைகள்
- கவிராஜன் கதை
- இரத்த தானம்
- இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
- தமிழுக்கு நிறமுண்டு
- பெய்யெனப் பெய்யும் மழை
- எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்
- கொடி மரத்தின் வேர்கள்
- மகாகவிதை
நாவல்
- வானம் தொட்டுவிடும் தூரம்தான்
- மீண்டும் என் தொட்டிலுக்கு
- வில்லோடு வா நிலவே
- சிகரங்களை நோக்கி
- ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
- காவி நிறத்தில் ஒரு காதல்
- தண்ணீர் தேசம்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- கருவாச்சி காவியம்
- மூன்றாம் உலகப்போர்
சிறுகதைகள்
- வைரமுத்து சிறுகதைகள்
கட்டுரைகள்
- இதுவரை நான் (தன்வரலாறு)
- கல்வெட்டுக்கள்
- என் ஜன்னலின் வழியே
- நேற்று போட்ட கோலம்
- ஒரு மெளனத்தின் சப்தங்கள்
- சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
- வடுகபட்டி முதல் வால்கா வரை
- இதனால் சகலமானவர்களுக்கும்
- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
- கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
- தமிழாற்றுப்படை
இணைப்புகள்
- வைரமுத்து வலைதளம்
- ஜெயகாந்தன் பற்றிய உரை: வைரமுத்து
- மகாகவிதை நூல் வெளியீட்டு விழா: வைரமுத்து உரை
- வைரமுத்து சிறுகதைகள்: ஜெயமோகன் தளம்
- வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்: ஜெயமோகன் தளம்
- தமிழுக்கு அவமானம் - வைரமுத்து ஞானபீடம் விருது பெற்றதற்கான எழுத்தாளர் ஜெயமோகனின் கண்டனம்
- வைரமுத்துவுக்கு ஞானபீடமா?
- வைரமுத்து ஞானபீடம்- 230 எழுத்தாளர்கள் கூட்டு அறிக்கை
- வைரமுத்துவுக்கு கண்டனம் தினமலர் செய்தி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Mar-2024, 00:36:46 IST