under review

சுனில் கிருஷ்ணன்

From Tamil Wiki

To read the article in English: Suneel Krishnan. ‎

சுனில் கிருஷ்ணன்
தலாய் லாமாவுடன்
பைரப்பாவுடன்
மரப்பாச்சி கூடுகை

சுனில்கிருஷ்ணன் (ஏப்ரல் 6, 1986) (சுனீல் கிருஷ்ன், சுநீல் கிருஷ்ணன்) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர் மற்றும் நவகாந்தியவாதி. இலக்கியத்திற்காக கேந்த்ரிய சாகித்ய அகாதெமியால் வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

சுனில் கிருஷ்ணன் பாண்டிச்சேரியின் காரைக்காலில் ஏப்ரல் 6, 1986 அன்று பிறந்தார். சுனில் கிருஷ்ணனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரிமளம். பெற்றோர் டாக்டர்.ராமச்சந்திரன், ரமாதேவி.

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியை முடித்தார். மேற்கு தாம்பரத்திலுள்ள ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்துவ கல்லூயில் ஆயுர்வேத மருத்துவ படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

சுனில் கிருஷ்ணன் மே 23, 2013 அன்று மருத்துவரான மானசாவை மணம் புரிந்து கொண்டார். சுதீர் சந்திரன் என்னும் மகனும், சபர்மதி என்னும் மகளும் இருக்கின்றனர். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றி வருகிறார்

இலக்கிய வாழ்க்கை

சுனில் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான வாசுதேவன், ஆகஸ்ட் 4, 2013 அன்று வெளியாகியது. தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், அ. முத்துலிங்கம், அசோகமித்திரன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.நரோபா என்னும் புனைப்பெயரிலும் எழுதுகிறார்.

சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் நீலகண்டம் 2019-ல் வெளியாகியது. குழந்தைப்பேறு என்பதன் பல்வேறு பக்கங்களை மரபு, ஆசாரங்கள், மதம், உளவியல், மருத்துவம் என ஆராயும் இந்நாவல் மனிதனின் அடிப்படையான பிரச்சினை ஒன்றை முன்வைப்பதில் வெற்றியடைந்த நாவல் என விமர்சகர்கள் பாராட்டினர் "மரணத்தின் அபத்தம், மரணமின்மையின் கனவு, எல்லா சுவரிலும் விசையுடன் முட்டி மோதி அலைந்து அமைவது, அதிகாரம் மற்றும் அதன் நுண்ணிய வடிவங்கள்.’ என அதன் உள்ளடக்கம் பற்றி சுனில் கிருஷ்ணன் எழுதினார்.[1]

காந்திய இலக்கியம்

சுனில் கிருஷ்ணன் தமிழகத்தில் காந்தியம் சார்ந்த எழுத்துக்களை முன்வைப்பவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். காந்திய நூல்களின் மொழியாக்கம், காந்திய எழுத்துக்களை தொகுப்பது, காந்திய கருத்துக்களை எழுதுவது என தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் . சுனில் கிருஷ்ணன் அதில் காந்தியம் குறித்த கட்டுரைகளை நண்பர்களுடன் இணைந்து எழுதியும் தொகுத்தும் வருகிறார்.

காந்திய எழுத்துக்களுக்காக தரம்சாலாவில் செப்டெம்பர் 2022-ல் தலாய் லாமாவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். ’அவருடைய ஆசிகளுக்கு நான் தகுதியுடையவனா என தெரியவில்லை. ஆனால் அதை ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுவே எஞ்சிய வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும்’ என அதை பதிவுசெய்துள்ளார்.

அமைப்புச் செயல்பாடுகள்

மரப்பாச்சி இலக்கிய வட்டம்

சுனில் கிருஷ்ணன் தொடங்கிய மரப்பாச்சி இலக்கிய வட்டம் காரைக்குடியில் 2019 ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கியக் கூடுகைகளை நடத்துகிறது. இதில் தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

காந்தி டுடே

2011-ல் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கம் பரவிய காலகட்டத்தில், தனது வலைப்பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பல கட்டுரைகள் எழுதினார். அவை ஒரு வலைப்பக்கமாக தொகுக்கப்பட்டன. அந்த வலைப்பக்கம் 2012 முதல் 'காந்தி இன்று’ என்னும் தளமாக ஆகியது. அது காந்தி, காந்தியம் மற்றும் காந்தியர்களுக்கான இணைய தளமாக ஆகி தொடர்ந்து வெளிவருகிறது.

விருதுகள்

 • 2018-ம் ஆண்டு, எழுத்து கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் பரிசு - பேசும் பூனை குறுநாவலுக்கு
 • 2018-ம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது - அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பிற்கு
 • 2020-ம் ஆண்டு, க.நா.சு சிறுகதை பரிசு - எப்போதும் முடிவிலே இன்பம் சிறுகதை

இலக்கிய இடம்

சுனில் கிருஷ்ணன் நவீன வாழ்க்கையின் சிக்கல்களை நவீன உருவகங்களைக்கொண்டு எழுதுவதை தனித்தன்மையாகக் கொண்டவர். மருத்துவத்துறையில் இருந்தும் நவீன தொழில்நுட்பங்களில் இருந்தும் தனக்கான உருவகங்களை கண்டடைகிறார். ஒழுக்கநோக்கு இல்லாமல் அறக்கேள்விகளை முன்வைக்கும் படைப்புகள் அவருடையவை "ஆயுர்வேதம், கிராமியப் பழங்கதைகள், அன்றாட நிகழ்வுகள் ஆகிய மூன்று பின்னணிகளில் சுனில் கிருஷ்ணன் அறியத்தருகிற மனம் நேரடியானது. தர்க்கங்களைக் கொண்டு அளக்க முடிவது. ஆனால், அவ்வாறன்றி தன்னிச்சையாகப் புரண்டு கைகெட்டாது தனக்கான அலைந்திருக்கும் பித்துநிலையில் மனம் கொள்ளும் போக்குகளையும் அவர் எழுதுகிறார்" என்று விமர்சகர் எம்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.[2]

நூல் பட்டியல்

சிறுகதைகள்
 • அம்புப்படுக்கை (2018)
 • விஷக் கிணறு (2020)
நாவல்கள்
 • நீலகண்டம் (2020)
தொகை நூல்கள்
 • காந்தி எல்லைகளுக்கு அப்பால் - மொழியாக்க கட்டுரைகள் (2012)
 • பின்நவீனத்துவவாதியின் மனைவி - சுரேஷ்குமார இந்திரஜித் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2019)
 • காந்தியைச் சுமப்பவர்கள் - காந்தி சிறுகதைகள் (2021)
 • Mahathma Gandhi in Tamil - An anthology (2021)
 • சியமந்தகம் (ஜெயமோகன் மணிவிழா கட்டுரைகள்) (2022)
அபுனைவுகள்
 • அன்புள்ள புல்புல் - காந்திய கட்டுரைகள் (2018)
 • வளரொளி - விமர்சனங்கள் நேர்காணல்கள் (2019)
 • நாளைய காந்தி - காந்திய கட்டுரைகள் (2021)
 • ஆயிரம் காந்திகள் - காந்திய ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் (2021)
 • சமகால சிறுகதைகளின் செல்நெறி ( 2022)
 • மரணமின்மை எனும் மானுடக் கனவு ( 2022)
நேர்காணல்
 • முதற்கால் - ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். இல. மகாதேவனுடன் நேர்காணல் (2021)
 • வேடிக்கை பார்ப்பவன் - எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் நேர்காணல் (2023)
மொழிபெயர்ப்புகள்
 • இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம் - க்ஷிதி மோகன்சென்
 • சுதந்திரமும் சமூகநீதியும் - ராஜ்மோகன்காந்தி
 • மகாத்மாவுக்கு அஞ்சலி - வானொலி அஞ்சலிகள்

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page