under review

யுவன் சந்திரசேகர்

From Tamil Wiki

To read the article in English: Yuvan Chandrasekar. ‎

யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்
யுவன் மின்தமிழ் சிறப்பிதழ்
யுவன்
யுவன், ஜெயமோகன், எம்.கோபாலகிருஷ்ணன்
யுவன் சந்திரசேகர் சிறப்பிதழ் சொல்புதிது
யுவன் விஷ்ணுபுரம் சந்திப்பு
ஆர்.சிவக்குமார், யுவன்.எம்.சிவசுப்ரமணியம்
விஷ்ணுபுரம் விருது 2023
வேடிக்கை பார்ப்பவன்

யுவன் சந்திரசேகர் (பிறப்பு: டிசம்பர் 14, 1961) தமிழ் எழுத்தாளர், கவிஞர். பின்நவீனத்துவ அழகியல் கூறுகளைகொண்டு எழுதிய முக்கியமான படைப்பாளி. எம்.யுவன் என்ற பெயரில் கவிதை எழுதினார். மாற்றுமெய்மை என யுவன் சந்திரசேகர் வரையறை செய்யும் ஒருவகை மாய யதார்த்தத்தை அவருடைய படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

பிறப்பு, கல்வி

ஆர். சந்திரசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட யுவன் சந்திரசேகர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற கிராமத்தில் எம்.எஸ். ராமநாதன் - பி.எஸ். பர்வதம் அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 14, 1961-ல் பிறந்தார்.

யுவன் சந்திரசேகரின் தந்தை சோழவந்தான் அருகே சிறு உணவு விடுதி நடத்திவந்ததுடன் கரட்டுப்பட்டியில் ஓர் ஆலயத்தில் அர்ச்சகராகவும் இருந்தார். யுவன் சந்திரசேகருக்கு பத்து வயதிருக்கையில் தந்தை மகோதரம் என்னும் ஈரல்நோயால் மறைந்தார். கதைசொல்லியும், நகைச்சுவையுணர்ச்சி மிக்கவரும், மிக எளிய வாழ்க்கை அமையப்பெற்றவருமான தந்தை யுவன் சந்திரசேகரின் ஆளுமையில் மிக ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவர். யுவன் சந்திரசேகரின் கதைகளில் திரும்பத்திரும்ப வந்துகொண்டிருக்கும் கதாபாத்திரம் அவர். 'கம்பராமாயணத்தை மனப்பாடமாகச் சொல்வார். அதிலிருக்கும் அத்தனை செய்யுள்களும் அவருக்குப் பாட பேதங்களோடு மனப்பாடம். சில இடங்களில் பாடியும் காட்டுவார்’ என்று யுவன் சந்திரசேகர் கூறுகிறார்.

யுவன் சந்திரசேகரின் அண்ணாவுக்கு வேலை கிடைத்து அவர் குடும்பம் மதுரைக்கு குடியேறியது. அண்ணாவின் ஆதரவில் வளர்ந்தார்.

யுவன் சந்திரசேகர் பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை கரட்டுப்பட்டியிலும், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளை மேல்நாச்சிகுளம் அரசுப்பள்ளியிலும், எட்டாம் வகுப்பை பெரியகுளத்திலும் பயின்றார். பிறகு பள்ளியிறுதிவரை மதுரை ஷெனாய்நகர் மாநகராட்சிப் பள்ளியிலும், வணிகவியல் இளங்கலைப் பட்டப்படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் படித்தார். கல்லூரி நாட்களில் பாடகராக அறியப்பட்டிருந்தார்.

தனிவாழ்க்கை

யுவன் சந்திரசேகர் கல்லூரிப் படிப்பு முடித்ததும் வங்கித்தேர்வு எழுதி ராமநாதபுரத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராகச் சேர்ந்தார். ஆகஸ்ட் 8, 1987-ல் கோயில்பட்டியைச் சேர்ந்த உஷா பகவதியை திருமணம் செய்து கொண்டு கோயில்பட்டியில் குடியேறினார். யுவன் சந்திரசேகரின் மகன் அரவிந்தன் கணிப்பொறியாளர், மகள் மீரா உணவுசார் அறிவியலாளர்.

கோயில்பட்டியில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற யுவன் சந்திரசேகர் ஸ்டேட் வங்கியில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.யுவன் சந்திரசேகர் சென்னை சிட்லப்பாக்கத்தில் வசிக்கிறார். யுவன் சந்திரசேகரின் மனைவி உஷா தபால்நிலைய ஊழியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

யுவன் சந்திரசேகர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் சூழலால் இலக்கியத்தில் நாட்டம் கொண்டார். யுவனின் முதல் சிறுகதை கல்லூரி ஆண்டு மலரிலும், சாவி இதழிலும் வெளியானது. யுவன் சந்திரசேகர் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது தன் தந்தையின் மறைவையொட்டி ஆங்கிலத்தில் முதல் கவிதை எழுதினார்.

கோயில்பட்டியில் குடியேறியபோது கவிஞர் தேவதச்சன் யுவன் சந்திரசேகருக்கு அறிமுகமானார். தேவதச்சன் யுவனுக்கு நவீன இலக்கியத்தையும், தத்துவத்தையும் அறிமுகம் செய்தார். கோயில்பட்டியில் தேவதச்சனைச் சுற்றியிருந்த நவீன இலக்கியவாதிகளின் குழுவில் யுவன் சந்திரசேகரும் ஒருவரானார். யுவன் சந்திரசேகர் மேல் செல்வாக்கு செலுத்திய இன்னொரு இலக்கிய ஆளுமை கவிஞர் ஆனந்த். பின்னர் சுந்தர ராமசாமியுடனான உரையாடல் யுவன் சந்திரசேகரின் ஆளுமையை வடிவமைத்தது.

கவிதை

யுவன் சந்திரசேகர் தொடக்கத்தில் கவிதைகள்தான் எழுதிக்கொண்டிருந்தார். யுவனின் நவீனக் கவிதைகள் 1988-ல் கனவு இதழில் வெளியாயின. பின்னர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் எழுதினார். முதல்கவிதைத் தொகுப்பு 'ஒற்றை உலகம்’ 1996-ல் வெளியானது . சுந்தர ராமசாமியுடன் நெருக்கம் உருவாகவே அடிக்கடி நாகர்கோயில் சென்று சுந்தர ராமசாமி இல்லத்தில் தங்கி இலக்கியவிவாதத்தில் ஈடுபட்டார். எழுத்தாளர் பிரம்மராஜன் நடத்திவந்த மீட்சி இதழில் தொடர்ந்து எழுதினார்.

மாற்று மெய்மை

யுவன் சந்திரசேகர் தன் மாமனாருடன் திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் செல்லும்போது அவர் சென்ற ஆட்டோரிக்‌ஷாவை வழிமறித்த ஒரு கும்பல் அவர்களை மிரட்டி நகைகளையும் பணத்தையும் திருடிச்சென்றது. அந்நிகழ்வு மிகமெல்ல அவருக்கு உளஅழுத்தத்தை உருவாக்கவே அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். அந்த உளஅழுத்த நிலை தன்னுடைய வாழ்க்கைப்பார்வையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்று கூறுகிறார். நாம் காணும் உலகநிகழ்வுகள் நாம் பார்க்கும்படி அல்லாமல் முற்றிலும் வேறுவகையில் கோக்கப்பட்டிருக்கலாம் என்றும், தற்செயல் என நாம் நினைப்பவை நமக்கு புரியாத வேறு ஒரு அடுக்கும் தர்க்கமுறையும் கொண்டவை மட்டுமே என்றும் உணர்ந்துகொண்டதாக சொல்கிறார். அதை மாற்றுமெய்மை (Alternate Reality) என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார்.

யுவன் சந்திரசேகர் தன் உளச்சித்திரத்தை ஒருபக்கம் இயற்பியல் எழுத்தாளர்களான ரோஜர் பென்ரோஸ் போன்றவர்களை ஒட்டியும் மறுபக்கம் கார்லோஸ் கஸ்டநாடா போன்ற மாயஆன்மிகப் புனைவெழுத்தாளர்களை ஒட்டியும் விரிவாக்கிக் கொண்டார். கார்லோஸ் கஸ்டநாடாவின் டான் யுவான் யுவன் சந்திரசேகரை ஆழமாக பாதித்த கதாபாத்திரம். இந்திய மெய்ஞானிகளான ரமணர் போன்றவர்களின் வாழ்க்கையை ஒட்டியும் தன் பார்வையை விளக்கிக்கொண்டார். திருவண்ணாமலை யுவன் சந்திரசேகர் கதைகளில் அடிக்கடி வரும் ஓர் இடம்.

யுவன் சந்திரசேகரின் புனைவுலகை புரிந்துகொள்ள அவர் முன்வைக்கும் மாற்றுமெய்மை என்னும் இக்கருதுகோளை அறிந்துகொள்வது இன்றியமையாதது. நாம் சாதாரணமாக அறிவது நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளும், அவற்றுக்கான தர்க்கங்களும் மட்டும்தான் என்றும் அவற்றுக்கு அடியில் வேறுவகையான உண்மைகளால் ஆனது இந்தப் பிரபஞ்ச இயக்கமும் அதிலொரு பகுதியான நம் வாழ்க்கையும் என்றும் யுவன் சந்திரசேகர் சொல்கிறார். பல அடுக்குகளாக அவ்வுண்மைகள் உள்ளன என்றும் அவை சில தருணங்களிலேயே நம் அறிதலுக்கு வருகின்றன என்றும் கூறுகிறார். யுவன் சந்திரசேகர் கதைகளில் இக்காரணத்தால் தற்செயல் என்னும் அம்சம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டுள்ளது.

புனைவிலக்கியம்

யுவன் சந்திரசேகர் தன் மாற்றுமெய்மை சார்ந்த பார்வையை முன்வைக்க கவிதைகள் உகந்த வடிவமல்ல என்று கண்டுகொண்டார். ஆகவே புனைவிலக்கியத்திற்குத் திரும்பினார். யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் மேல்தளத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை போல நிகழ்ந்துகொண்டிருக்கும் பல நிகழ்வுகள் அடியில் வேறொரு தர்க்கமுறையால் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை, அதன் வழியாக அன்றாடவாழ்க்கையால் அறியமுடியாத ஒரு மெய்மை வெளிப்படுவதை காட்டும் தன்மை கொண்டவை. ஆகவே உதிரிக்கதைகளின் தொகுதியாகவே அவருடைய சிறுகதைகள் அமைந்துள்ளன. நவீனத்துவச் சிறுகதையின் ஒருங்கிணைந்த கதைவடிவுக்கு பதிலாக கதைக்குள் கதை என விரிந்து செல்லும் பன்முகக் கதை வடிவமும், கதையைப்பற்றியே கதைக்குள் விவாதிக்கும் வடிவில் எழுதப்படும் மீபுனைவு (Metafiction) தன்மையும் மிக உதவியானவை என கண்டுகொண்டார். இந்தக் கூறுகள் பின்நவீனத்துவ அழகியல் கொண்டவை என்பதனால் அவர் பின்நவீனத்துவ கால புனைவெழுத்தாளராகக் கருதப்படுகிறார்.

யுவன் சந்திரசேகரின் ’கதைக்கொத்துக் கதை’ என்னும் வடிவுக்கு மிக உதாரணமான கதை 'தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தியோரு சிறுகதைகள் ’ என்னும் கதை. 2000 -த்தில் சொல் புதிது இதழில் இக்கதை வெளியாகியது. சிறுகதைகளில் பயின்ற இவ்வடிவையே நாவலிலும் பயன்படுத்தினார். குள்ளச் சித்தன் சரித்திரம், பகடையாட்டம், வெளியேற்றம் போன்ற நாவல்கள் வெவ்வேறு தனிநிகழ்வுகள் மர்மமான ஒரு சரடால் ஒருங்கிணைக்கப்படுதல் என்னும் அமைப்பு கொண்டவை. அதற்குரிய கதைக்களங்களை யுவன் சந்திரசேகர் கண்டடைகிறார். வெவ்வேறு நபர்கள் சொல்லும் கதைகள், கதைக்குள் கதைநிகழ்வுகள் பற்றி நிகழும் உரையாடல்கள், நூல்குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள் என பலவகையான கூறுமுறைகள் கலந்து அந்நாவலுக்குரிய ஒரு புனைவுயதார்த்தம் பின்னி உருவாக்கப்படுகிறது.

யுவன் சந்திரசேகர் குறுங்கதைகளை தொடர்ந்து எழுதிவருகிறார். கதைக்கொத்து என்னும் வடிவின் இன்னொருவகை அவை. கதைகள் அனைத்திலும் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரம் ஆசிரியரின் அடையாளத்துடன் வருகிறது. குறுங்கதைகள் ஒரே புள்ளியில் இணைபவையாகவும் உள்ளன.

இசை

யுவன் ஜெயமோகன். ருத்ரபியராகையில்

யுவன் சந்திரசேகர் ஹிந்துஸ்தானி இசையில் ஆர்வம் கொண்டவர். தொடர்ச்சியாக இந்துஸ்தானி இசைவிழாக்களுக்குப் பயணம்செய்து இசைகேட்பவர். பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்தை ஒரு நீண்ட பேட்டி எடுத்திருக்கிறார். ஹிந்துஸ்தானி இசையுலகின் பின்னணியில் இரு நாவல்களை எழுதியிருக்கிறார். கானல்நதி ,நினைவுதிர் காலம் என்னும் இருநாவல்களும் தமிழில் இசையை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானவை.

இலக்கிய இடம்

நவீனத்துவக் கவிதையின் இறுதி உச்சம் வெளிப்பட்ட கவிதைகளை யுவன் சந்திரசேகர் (எம்.யுவன்) எழுதியிருக்கிறார். சொற்சிக்கனம், செறிவு, நுண்பொருள், உணர்ச்சி கலவாத தன்மை, புறச்சித்திரங்களை முன்வைக்கும் இயல்பு ஆகியவை கொண்ட கவிதைகள் அவை. பின்னர் அக்கவிதைகளில் இருந்து பின்நவீனத்துவக் கூறுகளை கொண்ட கதைகளை நோக்கிச் சென்றார்.

தமிழ் இலக்கியம் தன் நவீனத்துவ அழகியலை மீறி முன்னகர்ந்தமைக்கு வழியமைத்த படைப்பாளிகளில் யுவன் சந்திரசேகரும் ஒருவர். அதுவரை முன்னோடி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டிருந்த இறுக்கமானதும் செறிவானதுமான மொழி, ஒருமை கொண்ட வடிவம், மையப்பேசுபொருள் ஆகிய மூன்று இலக்கணங்களையும் யுவன் சந்திரசேகரின் கதைகள் நிராகரித்தன. அரட்டைத்தன்மை கொண்ட தளர்வான மொழியும், உட்கூறுகளுக்குள் ஒத்திசைவில்லாத வடிவமும், மையப்பேசுபொருளற்ற விவாதத்தன்மையும் கொண்டவை அவருடைய கதைகளும் நாவல்களும்.

தமிழ் நவீன இலக்கியத்தில் புறவய யதார்த்தத்தைப் பேசும் படைப்புகளும் தனிநபரின் அகவயமான உலகை முன்வைக்கும் படைப்புகளுமே அதுவரை வெளிவந்தன. யுவன் சந்திரசேகர் இவ்விரண்டு தளங்களையும் கடந்து புறவய யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டதும் தனிநபரின் புரிதலுக்கு அப்பாற்பட்டதுமான ஒரு மாயத்தளத்தை புனைவுகளில் முன்வைத்தார். முழுக்கமுழுக்க புனைவால் கட்டமைக்கப்படும் அந்த உலகம் தனக்கான நெறிகளும் இயங்குமுறைகளும் கொண்டது. 'மாற்று மெய்மை’ என அவர் கூறும் அறியமுடியாத சரடுகளால் இணைக்கப்பட்டது.

தமிழ் புனைவுலகில் இடதுசாரி அரசியல்சார்ந்த தத்துவமும், தனிநபர் சாந்த இருத்தலிய தத்துவமும் மட்டுமே விரிவாகப் பேசப்பட்டிருந்தன. யுவன் சந்திரசேகர் மதம் சாராத ஆன்மிகத்தை முன்வைக்கும் தத்துவ விவாதம் ஒன்றைத் தன் புனைவுலகில் உருவாக்கினார்.

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் அன்றாடவாழ்க்கைக்கு மிக அணுக்கமான பலவகையான கதைமாந்தர்களாலும், அவர்கள் பேசும் விதவிதமான வட்டார வழக்குகளாலும் ஆர்வமூட்டும் வாசிப்பனுபவம் தரும்படி புனையப்பட்டது. அந்த நுண்சித்தரிப்புத் தன்மையே அவற்றின் கலைத்தன்மையை உருவாக்குகிறது.

’அவருடைய கதைகளில் அடையப்படும் மெய்யியல் மற்றும் ஆன்மீகத் தளத்தின் பொருட்டு யுவன் பிற இருத்தலியல் நவீனத்துவர்களிடம் இருந்து தனித்துத் தெரிகிறார்’ என்று சுனில் கிருஷ்ணன் யுவன் சந்திரசேகரை மதிப்பிடுகிறார்1. ’நினைவுகள் வழியே சொல்லிச் செல்லப்படும் வரலாறாகவும் யுவன் கதைகளை அடையாளப்படுத்தலாம்’ என சுரேஷ் பிரதீப் மதிப்பிடுகிறார்2.

விருதுகள்

 • 2023-ல் விஷ்ணுபுரம் இலக்கிய விருது
 • 2019-ல் தமிழ் கவிதைகளுக்கான ஸ்பாரோ இலக்கிய விருது
 • 2011-ல் பயணக்கதை நாவலுக்காக கனடா இலக்கிய தோட்ட விருது
 • திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது

வாழ்க்கை வரலாறு

யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது 18 டிசம்பர் 2023ல் கோவையில் வழங்கப்பட்டது. அதையொட்டி அவருடைய வாழ்க்கை, படைப்பு பற்றி அவர் சுனில் கிருஷ்ணனுடன் நடத்திய விரிவான உரையாடல் வேடிக்கை பார்ப்பவன் என்னும் நூலாக வெளியாகியது

யுவன் சந்திரசேகர் பற்றி ஆனந்த்குமார் இயக்கிய சுழற்பாதை யாத்ரிகன் என்னும் ஆவணப்படம் 18 டிசம்பர் 2023ல் கோவை விஷ்ணுபுரம் விழாவில் வெளியிடப்பட்டது.

படைப்புக்கள்

கவிதை நூல்கள்
 • ஒற்றை உலகம் (1996)
 • வேறொருகாலம் (1999)
 • புகைச்சுவருக்கு அப்பால் (2002)
 • கை மறதியாய் வைத்த நாள் (2005)
 • தோற்றப்பிழை (2009)
 • தீராப்பகல் (முழுத்தொகுப்பு) (2016)
 • முதல் 74 கவிதைகள் (2005)
நாவல்கள்
குறுங்கதை
 • மணற்கேணி (உயிர்மை பதிப்பகம்) (2008)
சிறுகதை தொகுப்புக்கள்
 • யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் (கிழக்கு பதிப்பகம்)
 • ஒளிவிலகல் (2001)
 • ஏற்கனவே (2003)
 • கடலில் எறிந்தவை
 • ஏமாறும் கலை (2012)
 • கடல் கொண்ட நிலம் (2009)
 • தலைப்பில்லாதவை
 • ஒற்றறிதல் (காலச்சுவடு பதிப்பகம்)
 • நீர்ப்பறவைகளின் தியானம்(காலச்சுவடு பதிப்பகம்)(2009)
மொழிபெயர்ப்புகள்
 • பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைத்தொகுப்பு) (2003)
 • எனது இந்தியா (ஜிம் கார்பெட்) (2005)
 • குதிரை வேட்டை (பெர் பெதர்சன்)(2013)
 • கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் (வு மிங் யி)
 • பொம்மை அறை (லோரன்ஸ் வில்லலோங்கா) (2015)

உசாத்துணை


✅Finalised Page