under review

எம்.கோபாலகிருஷ்ணன்

From Tamil Wiki

To read the article in English: M. Gopalakrishnan. ‎

எம்.கோபாலகிருஷ்ணன்
எம்.கோபாலகிருஷ்ணன்
எம்.கோபாலகிருஷ்ணன்
எம் கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணன் (டிசம்பர் 2, 1966) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுகிறார். ஆங்கிலத்தில் இருந்தும் இந்தியில் இருந்தும் மொழியாக்கங்களும் செய்கிறார். திருப்பூர் பின்புலத்தில் தொழில்மயமாக்கம் உருவாக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை சித்தரிக்கும் படைப்புக்களால் முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

எம்.கோபாலகிருஷ்ணன் டிசம்பர் 2, 1966 அன்று திருப்பூர் குமரானந்தபுரத்தில் பிறந்தவர். தந்தையார் ந.முருகேசன், தாயார் அருக்காணியம்மாள். கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் குடும்பம். அப்பா முருகேசன் பண்டரி பஜனை குழுவில் மிருதங்கம் வாசித்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரத்துக்கு பக்திச் சுற்றுலா செல்லும் இந்தக் குழுவினருடன் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செல்லும் வழக்கம் கொண்டவர். அவருடைய நான்கு பிள்ளைகளில். எம்.கோபாலகிருஷ்ணன் மூன்றாவது மகன். மூத்தவர் சண்முகசுந்தரமும் இரண்டாமவர் வாசுதேவனும் திருப்பூரில் பனியன் தொழிலில் உள்ளனர். இளையவர் எம்.வெங்கடேசன் ஜவுளித் தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு பெருந்துறையில் தொழில் புரிகிறார்

திருப்பூர் நெசவாளர் காலனி ஆரம்பப் பள்ளியில் ஆரம்பக் கல்வி. ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளி. வணிகவியல் இளங்கலைப் பட்டம் திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரியில். கோவை அரசுக் கலைக் கல்லூரியில் வணிகவியல் முதுகலைப் பட்டத்தின் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே காப்பீட்டுத் துறையில் பணி நியமனம் பெற்றார். எனவே, இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலை கல்வி வழியாக நிறைவு செய்தார். மைசூர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலமாக ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

டிசம்பர் 04, 1999ல் திருமணம். மனைவி ப.பிரேமாகுமாரி இராசயன அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவிநாசியைச் சேர்ந்த பொ.பழனிச்சாமி (தபால் தந்தித் துறை), அரசம்மாள் (தொடக்கப் பள்ளி ஆசிரியை) தம்பதியினரின் மகள்.

இரண்டு குழந்தைகள். மகன் எம்.ஜி.ரிஷி, சென்னை வி.ஐ.டி பொறியியல் கல்லூரியில் பி.டெக் பட்டம் பெற்றவர். ஹெ.சி.எல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணி. மகள் எம்.ஜி.ஸ்ரீநிதி கோவையில் பள்ளிக்கல்வி பயில்கிறார்.

இலக்கியவாழ்க்கை

இலக்கியப் பின்னணி

எம்.கோபாலகிருஷ்ணன் கல்லூரிப் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து 'எண்ணங்கள்’ கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தும்போது திருப்பூரைச் சேர்ந்த கவிஞர் பக்தவத்சலத்தின் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் கிடைத்தது. பக்தவத்சலமும் சுப்ரபாரதிமணியனும் இணைந்து நடத்திய 'சூத்ரதாரி’ இதழ் வேலைகளில் பங்கேற்ற அனுபவம் நவீன இலக்கியத்தின் பல்வேறு தரப்புகளை அறிந்துகொள்ள உதவியது. தன் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று வேப்பமரங்களை ஒவ்வொன்றாக வெட்டி, விறகுக்குப் பயன்படுத்தியதைக் கண்டு உருவான வெறுமையை கவிதையாக எழுதி சுப்ரபாரதி மணியனுக்கு அனுப்ப அவர் அதை கணையாழிக்கு அனுப்பி அது பிரசுரமானது. அதுவே முதல் படைப்பு.

சிறுகதை

திருப்பூரிலிருந்து வெளிவந்த 'குதிரை வீரன் பயணம்’ இதழ் வழியாக யூமா வாசுகியின் அறிமுகம் உருவாகியது. அவரது தூண்டுதலின்பேரில் எழுதிய முதல் சிறுகதை.

'விளிம்பில் நிற்கிறவர்கள்’ குதிரை வீரன் பயணம் இதழில் நவம்பர் 1994ல் வெளியானது. அப்போது யூமா வாசுகி சூட்டிய புனைப்பெயர்தான் 'சூத்ரதாரி’. அதே சமயத்தில் புதிய பார்வை இதழில் 'இருப்பு’ சிறுகதையும் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'பிறிதொரு நதிக்கரை’ டிசம்பர் 2000ல் கோவை, ஐடியல் பள்ளி நஞ்சப்பன் அவர்களது 'வைகறை’ பதிப்பகம் வெளியிட்டது.

நாவல்

முதல் நாவலான 'அம்மன் நெசவு’ தமிழினி வெளியீடாக 2002ம் ஆண்டில் வெளியானது. தேவாங்கர் குடியினரின் இடப்பெயர்வு பற்றிய நாவல்.

திருப்பூர் தொழில்மயமாதலின் பின்னணியில் மனிதவாழ்க்கைகளின் உருமாற்றத்தை சித்தரித்த மணல்கடிகை நாவலும் திருமண உறவின் வெவ்வேறு பக்கங்களை ஆராயும் மனைமாட்சி நாவலும் எம்.கோபாலகிருஷ்ணனின் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன

இதழியல்

ஈரோட்டிலிருந்து 1999ம் ஆண்டு ஜுலை மாதத்தில் வெளியான 'சொல் புதிது’ இதழின் ஆசிரியராக பொறுப்பு வகித்தார். ஜெயமோகன், செந்தூரம் ஜெகதீஷ் ஆகியோருடன் இணைந்து நடத்திய சிற்றிதழ் இது. பின்னர் அலுவலக பதவி உயர்வின் பணிச்சுமையால் அப்பொறுப்பில் இருந்து விலகினார். சொல்புதிது பிறகு நாகர்கோயிலில் இருந்து எம்.சதக்கத்துல்லா ஹசநீ ஆசிரியத்துவத்தில் வெளிவந்தது.

இலக்கிய இடம்

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழின் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவராக விமர்சகர்களால் கருதப்படுகிறார். நெசவாளர்குடிகளின் புலம்பெயர்தல் பற்றிய அவருடைய அம்மன்நெசவு தொன்மத்தில் இருந்து சமகால வாழ்க்கை வரை நீடிக்கும் படைப்பு. திருப்பூர் தொழில்மயமாவதன் பின்னணியில் வெவ்வேறு இளைஞர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கும் மணல்கடிகை தமிழின் முக்கியமான நாவல் களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது. "நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக மணல் கடிகை காலத்தை அதை உணரும் மனித அகத்தை மிக வெற்றிகரமாக பிரதிபலிக்கிறது" என இளம் விமர்சகர் சுரேஷ் பிரதீப் குறிப்பிடுகிறார்.[1]

எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி நாவல் வெவ்வேறு குடும்பங்களில் ஆண்பெண் உறவு அமைந்திருப்பதன் வகைபேதங்களை சித்தரித்து ஒப்பிட்டுக்காட்டும் படைப்பு. "அன்பின் வழி மனம் நிகழ்த்தும் பாய்ச்சல்களை எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். ஆனால், அன்பின் நீர்ச்சுனை வற்றிவிடும் தருணத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தத்தளிக்கும் மனதின் ஊசலாட்டத்தை இத்தனை கருணையுடன் வேறு எவரும் அணுகியதில்லை" என்று விமர்சகர் கோகுல்பிரசாத் குறிப்பிடுகிறார்*. எம்.கோபாலகிருஷ்ணனின் தீர்த்தியாத்திரை நாவலும் பெரிதும் வாசிக்கப்பட்ட ஒன்று. உணர்ச்சிநாடகத்தன்மை அற்றதும், குறைவாகச் சொல்லப்படுவதுமான யதார்த்தவாதம் எம்.கோபாலகிருஷ்ணனின் படைப்புக்களில் உள்ளது. நம்பகமான அன்றாடவாழ்க்கையின் சித்திரங்கள் வழியாக வரலாறும், மானுட உள்ளமும் செயல்படும் நுண்மையான பாதையைச் சொல்லும் படைப்புக்கள் அவருடையவை.

விருதுகள்

  • 'கதா’ தேசிய விருது – 1999ம் ஆண்டு
  • சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசு விருது – 'ஒரு அடிமையின் வரலாறு’ – 1999
  • 'மனைமாட்சி’ நாவலுக்காக தஞ்சை பிரகாஷ் நாவல் விருது 2018
  • 'ஸ்பேரோ’ விருது 2021
  • சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான வாசக சாலை விருது (ஆண்டன் செகாவ் கதைகள்) 2021

நூல்கள்

நாவல்கள்
குறுநாவல் தொகுப்பு
  • வால்வெள்ளி (2018)
  • மாயப் புன்னகை (2020)
சிறுகதைத் தொகுப்புகள்
  • பிறிதொரு நதிக்கரை (2000, 2015)
  • முனிமேடு (2007)
  • சக்தியோகம் (2018)
  • மல்லி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) – தியாகு நூலகம் (2019)
  • அமைதி என்பது… (2022)
கவிதைத் தொகுப்பு
  • குரல்களின் வேட்டை (2000)
கட்டுரைத் தொகுப்பு
  • நினைவில் நின்ற கவிதைகள் (2018) – சிறுவாணி வாசகர் மையம், கோவை
  • மொழி பூக்கும் நிலம் (2019)
  • ஒரு கூடைத் தாழம்பூ (2019)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
  • ஈஷாவாஸ்ய உபநிஷத் – ஒரு அறிமுகம் (1999)
  • ஒரு அடிமையின் வரலாறு – வாழ்க்கைச் சரிதம் – பிரடெரிக் டக்ளஸ் (2001)
  • வாழ்விலே ஒரு நாள் – நாவல் – சோல்ஸெனிட்சன் (2003)
  • காதலின் துயரம் – நாவல் – கதே (2006)
  • அறிவு – நாராயண குருவின் பாடல்களுக்கான நித்ய சைதன்ய யதியின் உரை, தன்னறம் பதிப்பகம் (2021)
  • ஆன்டன் செகாவ் கதைகள், நூல்வனம் (2021)
இந்தியிலிருந்து தமிழுக்கு
  • சிவப்புத் தகரக் கூரை – நாவல் நிர்மல்வர்மா, காலச்சுவடு (2013)
  • துயர் நடுவே வாழ்வு - திகார் பெண் கைதிகளின் கவிதைகள், காலச்சுவடு (2015)
  • வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்யாயன், புலம் (2020)
  • செக்காவ் சிறுகதைகள் 2022
இணையாக்கங்கள்
  • இலக்கிய உரையாடல்கள் (ஜெயமோகனுடன் இணைந்து கண்ட நேர்காணல்கள்) – எனி இந்தியன் பதிப்பகம் (2006)
  • வீட்டின் மிக அருகே மிகப் பெரும் நீர்ப்பரப்பு (செங்கதிர் தொகுத்த ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு) – காலச்சுவடு (2014)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page