under review

அராத்து

From Tamil Wiki

அராத்து (ஶ்ரீநிவாஸன்) (பிறப்பு: 1975) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அராத்து

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் ஶ்ரீநிவாஸன். பிறந்த ஊர் பாண்டிச்சேரி. வளர்ந்தது சிதம்பரத்திலுள்ள புவனகிரியில். பள்ளிக் கல்வியை சிதம்பரம், அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். மென்பொருள் பயிற்சி மற்றும் டிஜிட்டல் புரோமாஷன் என சேவைத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அராத்து தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக புதுமைப்பித்தன், சாரு நிவேதிதா, கோபி கிருஷ்ணன், ப.சிங்காரம், தஸ்தாயேவஸ்கி, ஆண்டன் செகாவ், ப்யூக்கோவ்ஸ்கி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். அராத்துவின் முதல் படைப்பு ’நள்ளிரவின் நடனங்கள்’ என்ற சிறுகதை 2013-ல் வெளிவந்தது. சுருக்கப்பட்ட வடிவம் குமுதத்திலும், அதன் முழுமையான வடிவம் சாருநிவேதிதா தளத்திலும்[1] வெளிவந்தது. காதலினால் காதல் செய்வீர், புக்கட், இமயா, பனி நிலா போன்ற சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தன. ப்ளே கேர்ள் பிளே பாய், அந்தி மழையில் வந்தது, வெடுக் ராஜா ஆகியவை ஜன்னல் இதழில் வெளிவந்தன. ஃபேமிலி கேர்ள் தினமலரில் வந்தது.

’அநீதி அந்தாலஜி’ என்ற நூல் ஒரே கரு கொண்ட மூன்று சிறுகதைகளின் தொகுப்பு. ’ஹனி நீ மட்டுமே என் உலகம் இல்லை’ என்பது ஆண் பார்வையில் ஆண் பெண் உறவுச்சிக்கலை விமர்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். அராத்துவின் பொண்டாட்டி நாவல் வாசகர்களிடையே வரவேற்பு பெற்றது.

விருதுகள்

 • அமேசான் பென் டூ பப்ளிஷ்(Pen to Publish) போட்டியில் "ஓப்பன் பண்ணா" முதல் பரிசு வென்றது.

இலக்கிய இடம்

சாரு நிவேதிதாவால் தனக்குப்பின் பிறழ்வெழுத்து முறையில் சிறப்பாக எழுதுபவராக அராத்து அடையாளம் காட்டப்பட்டவர். நவீனத் தமிழிலக்கியத்திற்கு புதிய களமான சமகால உயர்வர்க்க வாழ்க்கைச்சூழலையும், அவர்களின் கேளிக்கையுலகையும், புதியவகையான உறவுச்சிக்கல்களையும் கேலி கலந்த மொழியில் எழுதுகிறார். பின்நவீனத்துவச் சார்பு கொண்டவரான அராத்துவின் எழுத்து ஆசிரியரே ஊடாடிப்பேசும் மீபுனைவு வடிவில் அமைந்தது. ஒழுக்கம் அல்லது அரசியல் சார்பான விமர்சனங்கள் அற்றது அராத்துவின் பார்வை. அராத்து எழுதிய குறுங்கதைகள் முக்கியமானவை. தமிழில் குறுங்கதை வடிவை புதியவகை எழுத்தாக நிலைநிறுத்தியவர் என அராத்துவை குறிப்பிடலாம்..

நூல்கள் பட்டியல்

நாவல்
 • பொண்டாட்டி
 • ஓப்பன் பண்ணா
 • உயிர் மெய்
 • பவர் பேங்க்
 • மந்தஹாஸினி
சிறுகதைத் தொகுப்பு
 • நள்ளிரவின் நடனங்கள்
 • அநீதி அந்தாலஜி
குறுங்கதைகள்
 • தற்கொலை குறுங்கதைகள்
 • பிரேக் அப் குறுங்கதைகள்
 • சயனைட் குறுங்கதைகள்
கட்டுரைகள்
 • சர்ஜிக்கல் ஸ்டிரைக்
 • ஹனி நீ மட்டுமே என் உலகம் இல்லை
பிற
 • ஆழி டைம்ஸ் - ஆழியின் குழந்தைப்பருவ பதிவுகள்
 • காட்டுப்பள்ளி - சிறுவர் நாவல்
 • இங்கு பஞ்சர் போடப்படும் (ஆட்டோமொபைல் சார்ந்த நகைச்சுவை கட்டுரைகள்)
 • அராஜகம் 1000 - ட்விட்டர் தொகுப்பு
 • தற்கொலை கவிதைகள் - கவிதை தொகுப்பு
ஆங்கிலம்
 • Honey I have a world beyond you

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page