under review

ப.சிங்காரம்

From Tamil Wiki

To read the article in English: Pa. Singaram. ‎

ப.சிங்காரம்
ப.சிங்காரம்

ப. சிங்காரம் (ஆகஸ்ட் 12, 1920 – டிசம்பர் 30, 1997) தமிழ் நாவலாசிரியர். புலம்பெயர்ந்த தமிழ்வாழ்க்கைப் பின்னணியில் புகழ்பெற்ற இரு நாவல்களை எழுதியவர். நேர்கோடற்ற தன்மை கொண்ட நாவல்களில் முன்னோடியான புயலிலே ஒரு தோணி அவற்றில் ஒன்று. உயர்தர அங்கதம் வெளிப்பட்ட கலைப்படைப்பாக அது கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

ப.சிங்காரம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரியில் கு. பழனிவேல் நாடார் - உண்ணாமலை அம்மாளுக்கு ஆகஸ்ட் 12, 1920-ல் மூன்றாவது மகனாகப் பிறந்தார். சுப்பிரமணியன் மற்றும் பாஸ்கரன் இவருடைய சகோதரர்கள்.. இவரது பாட்டனார் குமாரசாமி நாடாருடன் இணைந்து இவரது குடும்பத்தினர் ஆடை வியாபாரம் செய்துள்ளனர். ஆரம்பக் கல்வியை சிங்கம்புணரி ஆரம்பப் பள்ளியில் முடித்தபின் மதுரையிலுள்ள செயிண்ட் மேரிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.

தனிவாழ்க்கை

ப.சிங்காரம்
ப.சிங்காரம்

ப.சிங்காரம் மதுரையில் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தபின் பதினெட்டாவது வயதில் தன் உறவினர் எஸ். கே. சின்னமுத்துப் பிள்ளையுடன் பணி புரிய இந்தோனேசியாவிலுள்ள மேடானுக்குச் சென்றார். அங்கு திருமணம் செய்து கொண்டார். இவரது 25-வது வயதில் இவரின் மனைவி மற்றும் குழந்தை பேறுகாலத்தின் போது இறந்துவிட்டனர். எட்டு ஆண்டுகள் மலாயாவில் வாழ்ந்த அவர் (1938-1946) இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946-ல் இந்தியா வந்து மதுரையில் வசித்தார். மதுரையில் தினத்தந்தி நாளிதழ் மதுரைப் பதிப்பில் மெய்ப்பு பார்ப்பவராக பணிபுரிந்து உடல்நலக்குறைவால் 1987-ல் ஓய்வு பெற்றார். ஐம்பதாண்டுகள் மதுரையிலுள்ள ஒய். எம். சி. ஏ. விடுதியில் தனியாக வாழ்ந்த ப.சிங்காரம் இலக்கியநிகழ்வுகள் எதிலும் கலந்துகொண்டதில்லை. அனைவரிடமிருந்தும் ஒதுங்கி தனியாகவே வாழ்ந்தார். 1996-ல் இவரை ஒய்.எம்.சி.ஏ நிர்வாகம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இன்னொரு விடுதியில் இறப்புவரை வாழ்ந்தார்.

இலக்கியப் பங்களிப்பு

இருநாவல்கள்

ப.சிங்காரம் தமிழகத்தில் பள்ளிப்படிப்பு படிக்கையிலேயே மணிக்கொடி, கலைமகள் இதழ்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அவற்றில் கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தோனேசியா சென்றபின் அங்கே ஆங்கிலத்தில் நிறைய படிக்கத் தொடங்கினார். அவருடைய பார்வையிலும் நடையிலும் செல்வாக்கு செலுத்தியவர் அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே. இந்தியா திரும்பிய பின் இரண்டு நாவல்களை எழுதினார். அவற்றில் முதல் நாவலான ’கடலுக்கு அப்பால்’ 1959-ல் கலைமகள் பரிசு பெற்று கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் நாவலான புயலிலே ஒரு தோணி நீண்டநாள் கைப்பிரதியாக இருந்து 1972-ல் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரு நாவல்களுமே வெளியிடப்பட்ட காலத்தில் இலக்கியவிமர்சகர்களால் கவனிக்கப்படவில்லை. இவ்விரு நாவல்கள் தவிர அவர் சில கட்டுரைகள், கதைகள் எழுதியதாகவும் அவை கைப்பிரதியிலேயே மறைந்தன என்றும் சொல்லப்படுகிறது.

மீள்வரவு

நூல்களை வெளியிடுவதில் இருந்த சிக்கல்களாலும், இலக்கியக் கவனம் கிடைக்காததனாலும் சிங்காரம் தொடர்ந்து எழுதவில்லை. பின்னாளில் இலக்கியம் மீதான பொதுவான கசப்பும் விலக்கமும் கொண்டவராக இருந்தார். மதுரையில் வாழ்ந்த ந. முருகேசபாண்டியன் நவீன இலக்கிய விமர்சகர்களில் அவர்மேல் கவனம் கொண்டு அவருடன் பேட்டி எடுத்து வெளியிட்டார். ப. சிங்காரத்தின் எழுத்தை விரும்பியவர்கள் கி.ராஜநாராயணன், தஞ்சை பிரகாஷ் உள்ளிட்ட சில எழுத்தாளர்கள்தான். கி.ராஜநாராயணன் ப. சிங்காரத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தஞ்சை பிரகாஷ் நேரில் சென்று பார்த்திருக்கிறார் என்று ந.முருகேசபாண்டியன் குறிப்பிடுகிறார்

ஈழத்தமிழ் இயக்கங்களின் ஆதரவுடன் 1987-ல் வெளிவந்த ’புதுயுகம் பிறக்கிறது’ என்னும் இதழில் விமர்சகர் சி. மோகன் தமிழ் நாவல்களைப் பற்றி எழுதிய கட்டுரையில் தமிழின் தலைசிறந்த மூன்று நாவல்களில் ஒன்றாக ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியை குறிப்பிட்டார். அது பரவலான விவாதத்தை உருவாக்கி புயலிலே ஒரு தோணியை மீண்டும் கவனத்துக்கு கொண்டுவந்தது.

தமிழினி பதிப்பக உரிமையாளரும் புதுயுகம் பிறக்கிறது இதழின் ஆசிரியருமான வசந்தகுமார் ப.சிங்காரம் மீது பெருமதிப்பு கொண்டவர். ப.சிங்காரத்தின் இருநாவல்களையும் ஒரு நூலாக அழகிய பதிப்பாக 1998-ல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. நூல் தயாரிப்பில் இருக்கையிலேயே 1997-ல் ப.சிங்காரம் மறைந்தார். தமிழினியின் நூல் ஜெயமோகன் எழுதிய 'வரலாற்று அபத்தத்தின் தரிசனம்’ என்ற மிகநீண்ட ஆய்வுரையுடன் வெளிவந்தது. ப.சிங்காரம் பற்றி எழுதப்பட்ட முதல் விமர்சன ஆய்வுரை அது. அதில் ப.சிங்காரத்தின் நாவல்கள் மீதான முந்தையகால விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு அக்கட்டுரை மறுப்புவிளக்கம் அளித்தது. க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவ விமர்சகர்களின் மறுப்பு அந்நாவல் வடிவ ஒருமையுடன் இல்லாமலிருந்ததனால்தான் என்றும், வடிவ ஒருமையற்ற பலகுரல் தன்மையே புயலிலே ஒரு தோணியின் சிறப்பு என்றும், அவ்வியல்பால் அந்நாவல் நவீனத்துவத்தை கடந்ததாக அமைந்தது என்றும் ஜெயமோகன் விவாதித்திருந்தார்.

தொடர்ந்த வாசிப்புகளில் ப.சிங்காரம் பெரும் ஏற்பை அடைந்தார். தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு சாதனையாக புயலிலே ஒரு தோணி கருதப்படுகிறது.

மறைவு

ப.சிங்காரம் டிசம்பர் 30, 1997-ல் மறைந்தார். அவர் தன்னுடைய எஞ்சிய சேமிப்பான ஏழரை லட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படவேண்டும் என்று எழுதி நாடார் மகாஜன சங்கத்திற்கு வழங்கினார். தன் சாவுச்செய்தியை எவரிடமும் தெரிவிக்கவேண்டாம் என்றும் சொல்லியிருந்தார்.

இலக்கிய இடம்

ப.சிங்காரம் தமிழின் தலைசிறந்த அங்கத எழுத்தை உருவாக்கியவர் என்றும், நேர்கோடற்ற தன்மைகொண்ட நாவல் வடிவில் முதன்மைச் சாதனையான புயலிலே ஒரு தோணியை எழுதியவர் என்றும் மதிப்பிடப்படுகிறார். "மொழியின் மாறுபட்ட தீவிரச்சாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட புனைவுச்சந்தர்ப்பங்கள் தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் படைப்புகளிலேயே இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு இணையாகவோ வேறொரு கோணத்தில் ஒரு படி மேலானதாகவோ சிங்காரத்தின் மொழி மேலெழும் தருணங்களை குறிப்பிடலாம்’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார் (வரலாற்று அபத்தத்தின் தரிசனம்[1]). "'புயலிலே ஒரு தோணி'யின் படைப்பு மொழி, நவீனத் தமிழ் உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதைமாந்தர்களின் மன மொழி, தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாக வசப்படவில்லை. மனதின் தன்னிச்சையான நினைவோட்டங்கள் வெகு அநாயசமாக மொழிநடையில் புரள்கின்றன," என குறிப்பிடுகிறார் சி. மோகன்.

நூல்கள்

உசாத்துணை

இணைப்புகள்