under review

புயலிலே ஒரு தோணி

From Tamil Wiki
புயலிலே ஒருதோணி முதல்பதிப்பு (நன்றி s arun prasath)

To read the article in English: Puyalile Oru Thoni. ‎

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி (1972) ப. சிங்காரம் எழுதிய நாவல். கடல்தாண்டிய தமிழர்களின் புலப்பெயர்ச்சியினை வரைகாட்டும் இந்நாவல் தமிழரின் பண்பாட்டை பின்னோக்கிப் பார்க்கும் விமர்சனக்கூறுதலையும் கொண்டுள்ளது. தொடர்ச்சியறு எழுத்தின் உதாரணமாகவும், உயர்தர அங்கதம் கொண்ட படைப்பாகவும் மதிப்பிடப்படும் இந்நாவல் தமிழ்நாவல்களில் ஒரு சாதனை என கருதப்படுகிறது

எழுத்து, வெளியீடு

ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணி நாவலை 1950-க்கு முன்னரே எழுதத் தொடங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் 1950-ல் எழுதி கலைமகள் நாவல் போட்டியில் பரிசு பெற்று 1959-ல் கலைமகள் காரியாலய வெளியீடாக வந்த கடலுக்கு அப்பால் நாவல் புயலிலே ஒரு தோணி கதையின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது. 1962-ல் தான் புயலிலே ஒரு தோணியை எழுதி முடித்ததாக ப.சிங்காரம் குறிப்பிட்டார்.

இந்நாவலை வெளியிட பலவாறாக அவர் முயன்றாலும் அன்றைய பதிப்புச்சூழலில் இது ஏற்கப்படவில்லை. இதழாளரும் எழுத்தாளருமான மலர்மன்னன் முயற்சியால் 1972-ல் கலைஞன் பதிப்பகம் அதை வெளியிட்டதாகச் சி.மோகன் குறிப்பிடுகிறார். கலைஞன் பதிப்பகம் நாவலை வெட்டிச் சுருக்கியதாக சொல்லப்பட்டாலும் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி அதை மறுத்துள்ளார். அடுத்த பதிப்புகளில் சற்று மேம்படுத்தி அளிக்க ப.சிங்காரம் எண்ணினாலும் அவர் உள்ளம் அதிலிருந்து விலகிவிட்டிருந்தது.

கி.ராஜநாராயணன் புயலிலே ஒரு தோணி குறித்துக் கடிதம் எழுதி ப.சிங்காரத்தைப் பாராட்டியுள்ளார். பிறகு அவர் மூலம் சிட்டி -சோ.சிவபாதசுந்தரம் இருவரும் ப.சிங்காரத்தைச் சந்தித்து நாவல் குறித்து உயர்வாகப் பேசி, அவரிடம் இருந்த நாவலின் ஒரே பதிப்பை வாங்கி அதன் முழுவடிவையும் அச்சுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லி சென்றனர் என்றும், பின்னர் அவர்களிடமிருந்து தகவல் ஏதுமில்லை என்றும் ப.சிங்காரம் சொன்னதாக சி.மோகன் குறிப்பிடுகிறார். சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதி 1977-ல் வெளிவந்த 'தமிழ் நாவல் நூற்றாண்டு: வரலாறும் வளர்ச்சியும்" ஆய்வு நூலில் ப.சிங்காரத்தின் இரு நாவல்களுமே குறிப்பிடப்படவில்லை என்கிறார் சி.மோகன்.

மறுவருகை

புயலிலே ஒரு தோணி அன்றைய இலக்கிய வாசகர்களாலும் விமர்சகர்களாலும் ஏற்கப்படவில்லை. க.நா.சுப்ரமணியம் அதை ஒரு தன்வரலாறு மட்டுமாக பார்த்தார். சுந்தர ராமசாமி, பிரமிள் , வெங்கட் சாமிநாதன் ஆகியோர் அதை வடிவ ஒருமையற்ற நாவல் என்றும், இரண்டாம்பகுதி தட்டையான சாகசப்படைப்பு என்றும் மதிப்பிட்டனர். 1972-க்குப்பின் இந்நாவல் நெடுங்காலம் மறுபதிப்பு வரவில்லை. கி.ராஜநாராயணன் மட்டுமே அதை முதன்மையான படைப்பு என்று குறிப்பிட்டார். ப.சிங்காரத்துக்கு ஒரு கடிதமும் எழுதினார்.

விமர்சகர் சி. மோகன் புயலிலே ஒரு தோணி பற்றி தொடர்ந்து சொல்லிவந்தாலும் ப.சிங்காரம் அவருடைய ஊர்க்காரர் என்பதனால் அவர் அப்படி பேசுகிறார் என்றே கருதப்பட்டது என்கிறார். 1987-ல் புதுயுகம் பிறக்கிறது என்னும் இதழில் தமிழ் நாவல்கள் பற்றி எழுதிய கட்டுரையில் இந்நாவலை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த மூன்று நாவல்களில் ஒன்று என மதிப்பிட்டார்.(மோகமுள், ஜே.ஜே. சில குறிப்புகள் மற்ற இரு நாவல்கள்) அக்கருத்து சிற்றிதழ் சார்ந்த இலக்கியச்சூழலில் பேசுபொருளாகியது. ப.சிங்காரம் மீதும் புயலிலே ஒரு தோணி மீதும் கவனம் குவிந்தது. புதுயுகம் பிறக்கிறது ஆசிரியராக இருந்த வசந்தகுமார் தமிழினி பதிப்பகத்தை தொடங்கியபோது இந்நாவலையும் கடலுக்கு அப்பால் நாவலையும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். பதிப்பு முயற்சி நடந்துகொண்டிருக்கையிலேயே ப.சிங்காரம் மறைந்தார்.

1998-ல் வெளிவந்த அந்நூலில் ஜெயமோகன் எழுதிய நீண்ட ஆய்வுரை ’வரலாற்று அபத்தத்தின் தரிசனம்’ வெளியிடப்பட்டிருந்தது. புயலிலே ஒரு தோணி நாவல் பற்றி அதுவரை நவீன இலக்கியச் சூழலில் இருந்துவந்த எதிர்மதிப்பீடுகளுக்கு விரிவான விளக்கம் அளித்த அந்த முன்னுரை அந்நாவலை மையமற்ற, பலகுரல்தன்மை கொண்ட, உயர்தர அங்கதவெளிப்பாடு கொண்ட நாவலாக வாசிக்கவேண்டும் என வாதிட்டது. நவீனத்துவத்திற்கு பிந்தைய அழகியல் கொண்ட நாவல் என்று கூறியது. 1998-க்குப்பின் ப.சிங்காரம் பரவலாக ஏற்பு அடைந்தார். புயலிலே ஒரு தோணி புதியவகை நாவல் என்றும், தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு சாதனை என்றும் கருத்து உருவாகியது.

கதைச்சுருக்கம்

புயலிலே ஒரு தோணி மரபான சீரான கதையோட்டம் கொண்ட நாவல் அல்ல. 1930 -1945 காலகட்டத்தில் உலகப்போர் பின்னணியில் கதை நிகழ்கிறது. சின்னமங்கலம் என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வளர்ந்து மெடானுக்குச் சென்று பணியாற்றும் பாண்டியன் இதன் கதைநாயகன். பர்மா, பினாங்கு, சிங்கப்பூர், மலேசியா, பாங்காக் போன்ற ஊர்களின் பின்னணியில் நிகழ்வுகள் நிகழ்கின்றன. ஜப்பான் படை மலேசிய மெடான் நகரில் இறங்குவதிலிருந்து கதை தொடங்குகிறது. அப்படையெடுப்பின் பின்னணியில் மாலாயாவில் வாழும் தமிழர்களின் வட்டித்தொழில், அவர்கள் வெவ்வேறு விடுதிகளில் அமர்ந்து குடித்தும் பரத்தையருடன் ஆடியும் வாழும் சூழல், அவர்களின் விவாதங்கள் வழியாக நாவல் விரிகிறது. தமிழ்ப்பண்பாட்டின் போலிப்பெருமிதம் பற்றிய விமர்சனங்கள், பகடிகள் அந்த உரையாடல்கள் வழியாக முன்வைக்கப்படுகின்றன. ஆண்டியப்ப பிள்ளை, நல்லதம்பி கோனார், சண்முகப் பிள்ளை போன்ற பல கதாபாத்திரங்கள் வருகிறார்கள். மாணிக்கம், செல்லையா போன்றோருடன் பாண்டியனும் தமிழ்ப்பண்பாடு பற்றியும் தமிழர் விடுதலை பற்றியும் பேசுகிறான். அப்போது ஜப்பானியருடன் இந்திய தேசிய ராணுவமும் மலாயாவில் நுழைகிறது. மாணிக்கம், செல்லையா, பாண்டியன் ஆகியோர் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகின்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாவலில் வருகிறார். இந்திய தேசிய ராணுவத்தின் முதன்மைவீரர்களாக மாறும் மாணிக்கம் ,செல்லையா, பாண்டியன் ஆகியோர் வெவ்வேறு வகைகளில் போரை எதிர்கொள்கிறார்கள். இந்திய தேசிய ராணுவத்தின் உள்ளே நிகழும் ஊழல்கள், பூசல்கள் வழியாக முன்னகரும் நாவல் பாண்டியன் பர்மாவை மீட்பதற்காகப் போராடும் கொரில்லா குழுக்களுடன் இணைந்து இறுதியில் கொல்லப்படும்போது முடிவடைகிறது.

விமர்சனங்கள்

புயலிலே ஒரு தோணி பற்றிய குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் பல உள்ளன

  • புயலிலே ஒரு தோணியின் தொடக்கப் பகுதிகள் அங்கதமும் பண்பாட்டுவிமர்சனமும் நினைவொழுக்குகளும் கொண்ட செவ்வியல் நாவலின் அமைப்பில் உள்ளன, ஆனால் இரண்டாம் பகுதி எளிமையான சாகசநாவல் போல மேலோட்டமான நிகழ்வுக்குறிப்புகளாகவே நின்றுவிட்டிருக்கிறது. பல சித்தரிப்புகள் பொதுவாசிப்புக்குரிய ஆங்கில சாகசநாவல்களின் சாயலில் அமைந்துள்ளன.
  • பர்மாவில் கொரில்லா படை அமைத்து பாண்டியன் போராடுவதை பற்றிப் பேசும் பகுதிகளில் அங்குள்ள பழங்குடி மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை எவையுமே குறிப்பிடப்படவில்லை. பொதுவான, மேலோட்டமான கற்பனைச்செய்திகளாலேயே அப்பகுதி விவரிக்கப்பட்டுள்ளது.
  • மலாயாவில் இந்திய தேசிய ராணுவத்தின் போராட்டம் பற்றிய செய்திகளும் நாளிதழ்களில் இருந்து சேகரிக்கப்பட்ட செய்திகள். பின்னாளில் இந்திய தேசிய ராணுவத்தின் உள்முரண்பாடுகள், அதன் முழுமையான தோல்வி பற்றி எழுதப்பட்ட வரலாற்றுச் செய்திகளுடன் ப.சிங்காரம் அளிக்கும் சித்திரம் முரண்படுகிறது
  • மலாயாவில் ஜப்பானிய ராணுவம் பல்லாயிரம் தமிழர்களை கொன்று அழித்த சயாம் மரணரயில் எனப்படும் ரயில்திட்ட அமைப்பு பற்றி சிங்காரம் அறிந்திருக்கவே இல்லை என புயலிலே ஒரு தோணி காட்டுகிறது

இலக்கிய இடம்

புயலிலே ஒரு தோணி இன்று அதன் வடிவமற்ற வடிவத்துக்காகவும், அங்கதத்துக்காகவும், புதியவகைக் கவித்துவம் கொண்ட சில பகுதிகளுக்காகவும் முக்கியமான இலக்கியப் படைப்பாக கருதப்படுகிறது. மலாயாவின் கேளிக்கைவிடுதிகளில் நிகழ்வதாக காட்டப்படும் உரையாடல்களில் தமிழ்ப்பண்பாடு சார்ந்த பெருமிதங்கள் மற்றும் பாவனைகளை ப.சிங்காரம் பகடி செய்கிறார். அவருடைய தாவிச்செல்லும் மொழியும், உதிரி உரையாடல்களாக வரும் பகடிகளும் நாவலை செறிவான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. பாண்டியனின் நினைவுகள் வழியாக வரும் சின்னமங்கலம், மதுரைச் சித்தரிப்புகள் தமிழ் உரைநடையில் புதியவகையான ஓர் எழுத்துமுறை கொண்டவை. பாண்டியன் படகில் செல்லும் போது கடலில் புயல்வரும் பகுதியில் நினைவுகளிலும் அலைகளெழுவது போன்ற இடங்கள் தமிழ் புனைவிலக்கியத்தில் அரிய கவித்துவத் தருணங்கள். பிற்பகுதிகளில் எளிமையான சாகசநிகழ்வுகளாக நாவல் சிறுத்துச் சென்றாலும் ஆங்கிலேயருடனான விடுதிப்பூசலும் அங்கு நிகழும் உரையாடல்களும் சிறந்த அங்கதம் கொண்ட பகுதிகள். மையப்பார்வை, ஒருமையுள்ள கதை, முழுமையான கதாபாத்திர வார்ப்புகள் ஆகியவை இல்லாதது இந்நாவல். சிதறிப்பரந்து செல்லும் வடிவம், பலவற்றை தொட்டுச்செல்லும் மொழிநடை, ஒன்றுடன் ஒன்று முரண்படும் பலவகையான புனைவு அடுக்குகள் கொண்டது. தமிழர்களின் வீரப்பெருமிதத்தை பகடி செய்யும்போதே பாண்டியனை வீரநாயகனாகவும் கட்டமைக்கிறது. இந்த பலகுரல்தன்மையாலும் இந்நாவல் தமிழில் ஒரு சாதனையாக நிலைகொள்கிறது.

உசாத்துணை


✅Finalised Page