under review

வெங்கட் சாமிநாதன்

From Tamil Wiki
சாமிநாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாமிநாதன் (பெயர் பட்டியல்)
வெங்கட் சாமிநாதன்
வெ.சா
வெ.சா செல்லப்பாவுடன்
வெசா மௌனியுடன்
வெசாவும் மௌனியும்
வெசா பிரமிள் மற்றும் நண்பர்கள்
வெசா தி.ஜானகிராமனுடன்
வெசா பிரமிளுடன்
வெசா மனைவியுடன்
வெசா
வெ.சா
வெசா இயல்விருது
சொல்புதிது

வெங்கட் சாமிநாதன் (ஜூன் 1, 1933 - அக்டோபர் 21, 2015 ) தமிழ் இலக்கிய விமர்சகர். திரைப்படம், மரபிசை, நாட்டார்கலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ச்சியாக அறிமுகக் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிவந்தார். யாத்ரா என்னும் சிற்றிதழை நடத்தினார். தேசியவிருது பெற்ற அக்ரஹாரத்தில் கழுதை என்னும் திரைப்படத்தின் கதைவசனத்தை எழுதினார்.

பிறப்பு, கல்வி

வெங்கட் சாமிநாதன் ஜூன் 1, 1933-ல் கும்பகோணம் அருகே உடையாளூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். இளமையில் உடையாளூரில் இருந்து நிலக்கோட்டைக்குச் சென்று அங்கே தன் தாய்மாமனுடனும் பாட்டியுடன் தங்கினார். 14 வயது வரை நிலக்கோட்டையிலேயே வளர்ந்தார். ஆரம்பக்கல்வியும் நடுநிலைக் கல்வியும் நிலக்கோட்டையில் நடைபெற்றது. 1946-ன் இறுதியில் வெங்கட் சாமிநாதனின் தாய்மாமா மதுரைக்கு குடிபெயர்ந்தார். அவருடன் மதுரைக்குச் சென்ற சாமிநாதன் அங்கே மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை தொடர்ந்தார். ஓராண்டு கழித்து 1947-ல் பள்ளி இறுதிக் கல்விக்காக மீண்டும் உடையாளூர் திரும்பி அங்கிருந்து கும்பகோணம் சென்று கும்பகோணம் பாணாதுரைப் பள்ளியில் படித்தார்.

தனிவாழ்க்கை

பள்ளியிறுதிப் படிப்பை முடித்தபின் சாமிநாதன் உறவினர் ஒருவரின் அழைப்பின் பேரில் 1950 மார்ச்சிலிருந்து 1956 வரை ஒரிசாவில் ஹிராகுட் அணை கட்டப்படும் பணியில் ஊழியராகச் சேர்ந்து பணிபுரிந்தார். அங்கிருந்து மத்திய அரசுப்பணித் தேர்வெழுதி வென்று டெல்லியில் பணிக்குச் சேர்ந்தார். ஓய்வு பெறும்வரை டெல்லியில் வாழ்ந்தார். பின்னர் சென்னையில் வாழ்ந்தார். வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா. ஒரே மகன். மனைவி இறந்தபின் மகனுடன் பெங்களூர் சென்ற சாமிநாதன் இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார்.

இலக்கியவாழ்க்கை

வெங்கட் சாமிநாதனின் இலக்கிய வாழ்க்கை நான்கு கட்டங்கள் கொண்டது.

எழுத்து காலகட்டம்

வெங்கட் சாமிநாதன் ஹிராகுட்டில் இருக்கும்போதே சி.சு. செல்லப்பா தொடங்கிய எழுத்து இதழுடன் தொடர்பு கொண்டிருந்தார். எழுத்து இதழில் இரண்டாவது இதழிலேயே அவருடைய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. தொடர்ச்சியாக எழுத்து இதழுக்கு தன் எதிர்வினைகளை எழுதி கொண்டிருந்த சாமிநாதன் 1959-ல் சென்னை வந்து சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தார். 1961-ல் எழுத்து 19-வது இதழில் சாமிநாதன் எழுதிய 'பாலையும் வாழையும்' என்னும் கட்டுரை பிரசுரமாகியது. தமிழ் நவீன இலக்கியச் சூழல் ஒரு பாலைவனம் என்றும் அதில் ஓரிரு படைப்புகள் தவிர எவையும் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றும் கடுமையாக எழுதியிருந்த அக்கட்டுரை விவாதத்திற்கு உள்ளாகியது. சாமிநாதனின் கட்டுரையால் ஆர்வம்கொண்ட பிரமிள், சுந்தர ராமசாமி ஆகியோர் அவருடன் தொடர்பு கொண்டனர். அவர்களுக்குள் நட்பும் உரையாடலும் தொடங்கியது. இக்காலகட்டத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகள் சி.சு.செல்லப்பாவின் முன்னுரையுடன் 'பாலையும் வாழையும்' என்னும் தலைப்பில் 1976-ல் ராஜபாளையம் மணி பிரசுரத்தால் வெளியிடப்பட்டது. பான்சாய் மனிதன், ஓர் எதிர்ப்புக்குரல் என்ற தலைப்புகளில் தொடர்ந்து நூல்கள் வெளிவந்தன. தமிழில் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு ஆளான நூல்கள் இவை. ஓர் எதிர்ப்புக்குரல் 1977-ல் சுந்தர ராமசாமியின் முன்னுரையுடன் வெளிவந்தது.

கசடதபற காலம்

எழுத்து இதழில் இலக்கியம் தவிர சினிமா, ஓவியம் போன்றவற்றுக்கு இடமில்லை என்னும் நிலைபாடு கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவுக்கும் வெங்கட் சாமிநாதன் போன்றவர்களுக்கும் முரண்பாடு உருவாகியது. அவ்வாறு முரண்பட்டு வெளியேறியவர்கள் கசடதபற என்னும் சிற்றிதழை 1970-ல் தொடங்கினர். வெங்கட் சாமிநாதன் அவர்களுடன் தொடக்க காலத்தில் இணைந்திருந்தார். பின்னர் ஜெயகாந்தனுடனான தன் விவாதத்தை ஒருதலைப்பட்சமாக கசடதபற குழு முடித்துக்கொண்டது தவறு என குற்றம்சாட்டி அதிலிருந்து விலகினார். இவ்விவாதங்கள் 'இலக்கிய ஊழல்கள்' என்னும் நூலாக 1973-ல் வெளிவந்தன. ஸிந்துஜா முன்னுரையும் ந.முத்துசாமி பின்னுரையும் எழுதியிருந்தனர்.

யாத்ரா காலம்

கால், நடை, அஃக் போன்ற சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருந்த சாமிநாதன் தனக்காக 1978-ல் யாத்ரா என்னும் சிற்றிதழை ஆரம்பித்தார். அவ்விதழ் சிலகாலம் ராஜபாளையத்தில் இருந்து வெளிவந்தது. பின்னர் நாகர்கோயிலில் இருந்து, அ.கா.பெருமாள் ஒத்துழைப்புடன் வெளிவந்தது. வெங்கட் சாமிநாதன் யாத்ராவில் திரைப்படம், ஓவியம், நாட்டாரியல் ஆகியவற்றுடன் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். ‘மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல்’ போன்ற விவாதத்திற்குள்ளான கட்டுரைகள் யாத்ராவில் வெளிவந்தன. வெங்கட் சாமிநாதனின் யாத்ரா காலகட்ட எழுத்து தீவிரமான இலக்கியப் பூசல்தன்மை கொண்டது. தனிநபர் தாக்குதல்களும் மிகுந்திருந்தது. பிரமிளுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் இடையே கடுமையான கருத்துபூசல்கள் நிகழ்ந்தன. பிரமிள் வெங்கட் சாமிநாதனை கடுமையாகத் தாக்கி அவர் பின்னின்று நடத்திய லயம் இதழில் எழுதிக்கொண்டிருந்தார். வெங்கட் சாமிநாதனுக்கும் க. கைலாசபதிக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இக்காலகட்ட கட்டுரைகள் அன்றைய வறட்சியில் இருந்து இன்றைய முயற்சி வரை (1985) என்னும் நூலில் தொகுக்கப்பட்டன.

இறுதிக்காலம்

பணி ஓய்வுக்கு முன் வெங்கட் சாமிநாதன் ஒரு விபத்துக்கு ஆளானார். அதில் கால் முறிந்து அவர் மீண்டுவர ஓரிரு ஆண்டுகள் ஆயின. அக்காலத்தில் யாத்ரா நின்றுவிட்டது. வெங்கட் சாமிநாதன் சென்னைக்கு வந்தபின் அவருடைய எழுத்துக்களை வெளியிட அவருக்காகவே வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் (வெசாஎ) என்னும் இதழை தஞ்சை பிரகாஷ் எழுதினார். அவ்விதழ் தொடர்ந்து வெளிவரவில்லை. வெங்கட் சாமிநாதன் 2000- த்துக்குப் பின் உருவாகி வந்த இணைய இதழ்களில் எழுத தொடங்கினார். திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் தொடர்ச்சியாக அவருடைய எழுத்துக்கள் வெளியாயின. பின்னர் சொல்வனம், தமிழ் ஹிந்து இணையதளம் ஆகியவற்றில் எழுதினார். இக்காலகட்டத்து வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்கள் நினைவுப்பதிவுகள், நூல்மதிப்புரைகள் ஆகியவை நிறைந்தவை. நேரடியான அரசியல் கட்டுரைகளும் எழுதினார்.

திரைப்படம்

1977-ல் வெளிவந்து தேசிய விருது பெற்ற அக்ரஹாரத்தில் கழுதை வெங்கட் சாமிநாதனின் கதைவசனத்தில் வெளியாகியது. இதை ஜான் ஆபிரஹாம் இயக்கியிருந்தார். சி.சுப்ரமணிய பாரதியார் கடையத்தில் தங்கியிருந்தபோது ஒரு கழுதையை கொண்டுவந்து வளர்த்தார் என்றும் அது அக்ரஹாரத்தில் எதிர்ப்பை உருவாக்கியது என்றும் சொல்லப்படும் நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை அது. 1971-ல் எழுதப்பட்ட அக்கதை ஆறாண்டுகளுக்குப் பின்னர்தான் படமாக வெளியாகியது. 1977-ல் ’அக்ரஹாரத்தில் கழுதை’ திரைக்கதைப் புத்தகத்தை ‘மணி பதிப்பகம்’ வெளியிட்டது.

இதழியல்

  • வெங்கட் சாமிநாதன் யாத்ரா என்னும் சிற்றிதழை நடத்தினார். ராஜபாளையத்தில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் இவ்விதழ் வெளிவந்தது. இதை அ.கா. பெருமாள் பொறுப்பேற்று வெளியிட்டார்
  • வெங்கட் சாமிநாதன் எழுதுவதற்காகவே வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் என்னும் சிற்றிதழை தஞ்சை பிரகாஷ் வெளியிட்டார்.

விமர்சனப் பார்வை

மதிப்பீடுகள்

வெங்கட் சாமிநாதனின் கருத்துலகை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று சுந்தர ராமசாமி 1977-ல் ஓர் எதிர்ப்புக்குரல் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவை

  1. கலை உணர்வு நிலை (தமிழகச் சூழலின் கலையுணர்வின் சமகாலச் சரிவை மதிப்பிட்டு விமர்சிப்பவை)
  2. கலைப்பார்வை (இலக்கியம் உள்ளிட்ட கலைகளைப் பற்றிய தன் பார்வையை உலக இலக்கிய பின்னணியுடன் விளக்குதல்)
  3. சூழல், உள்வட்டம் (கலைக்கு சூழல் ஆற்றும் பங்கு, தேர்ந்த கலைகளை ரசிக்கும் அறிவார்ந்த உள்வட்டம் உருவாகவேண்டிய தேவை பற்றிய எழுத்துக்கள்)
  4. போலியும் பிரச்சாரமும் (இலக்கியச் சூழலில் உள்ள பாவனைகள், சமரசங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டும் இலக்கியப்பூசல் சார்ந்த கட்டுரைகள்)

கலைப்பார்வைக்கும் தொழில்திறனுக்குமான வேற்றுமையை வற்புறுத்தி, தொழில்திறனை அதற்குரிய ஸ்தானத்தில் பின்னகர்த்தி கலையுணர்வுகள் செழுமைப்படும் சூழ்நிலையை உருவாக்குவதே வெங்கட் சாமிநாதனின் ஆதார முயற்சி என சுந்தர ராமசாமி அக்கட்டுரையில் மதிப்பிடுகிறார்.

தேர்ந்த படைப்பாளிகளை தொடர்ச்சியாக முன்வைத்து தமிழ் நவீன இலக்கியத்திற்கு ஒரு மூலநூல் தொகையை உருவாக்கியவர் வெங்கட் சாமிநாதன் என எம். வேதசகாயகுமார் மதிப்பிடுகிறார். பி.ஆர். ராஜம் ஐயர், புதுமைப்பித்தன், மௌனி, லா.ச. ராமாமிர்தம், தி.ஜானகிராமன் ஆகியோர் வெங்கட் சாமிநாதனால் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட படைப்பாளிகள் என்கிறார் (வெங்கட் சாமிநாதனின் விமர்சனப் பயணம்).

வெங்கட் சாமிநாதன் மரபுசார்ந்த கலைத்தொடர்ச்சியை வலியுறுத்துபவராக இருந்தார். இலக்கியத்தில் ஆழ்மனம் தன்னிச்சையாக மொழியில் வெளிப்படும் பித்துநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தார். அதை அவர் trance என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். அந்த இரு அடிப்படைகளிலும் தன் சமகாலத்து நவீனத்துவ எழுத்துமேல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். அவர் தமிழ் நவீனத்துவத்தின் மறுதரப்பாகச் செயல்பட்டார் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார் (வெங்கட் சாமிநாதன் ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்).

எதிர்மதிப்பீடுகள்.

சுந்தர ராமசாமி வெங்கட் சாமிநாதனுக்கு பண்டைய கோயில்கலாச்சாரம் மீது இருக்கும் மதிப்பு வெறுமே நினைவுகள் சார்ந்தது என்றும், அக்கலைமரபு நூற்றாண்டுகளுக்கு முன்னரே தேங்கிவிட்ட ஒன்று என்றும் மதிப்பிடுகிறார் (வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம்).

பிரமிள் வெவ்வேறு கட்டுரைகளில் வெங்கட் சாமிநாதனின் பார்வை சாதிய அடிப்படையும் சனாதன விழுமியங்கள் மீதான பற்றும் கொண்டது என்று குற்றம் சாட்டுகிறார்.

ஞானி தமிழ்ச்சூழல் பற்றிய வெங்கட் சாமிநாதனின் பார்வை என்பது வரலாற்றுத் தன்மை அற்றது என்று மதிப்பிடுகிறார். தமிழ்ப்பண்பாட்டின் சாதனைகள் கண்கூடானவை, அவற்றைப் பற்றிய செய்திகளை ஒருங்கிணைத்து ஒரு அறிவுத்தொகையாக ஆக்கினால் மட்டுமே அதிலிருந்து புதியவை உருவாகும். அப்பணி தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகவில்லை. அதுவே முதன்மையாக செய்யப்படவேண்டியது. அந்த வரலாற்று இடைவெளியை வெங்கட் சாமிநாதன் எதுவும் முளைக்க வாய்ப்பில்லாத வெளி என மதிப்பிடுவது பிழை என்று கூறுகிறார் (பாலையா வாழையா தொடர்ந்த தேடல்).

நிர்மலா நித்தியானந்தன் ‘வெ.சாவின் பிரச்சினையே கலையை ஏதோ ஒரு அரூப விடயமாகவும் கலைத்துவம் என்பது தன்னளவில் முழுமையானது, மாறாதது என்றும், கலைரசனை என்பது சுத்த சுயம்புவானதென்றும் வரித்துக் கொண்டபடியால் ஏற்பட்டிருக்கிறது’ ( ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்-வெ.சாவுக்குச் சில குறிப்புகள்).

பெருமாள் முருகன் வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்கள் கட்டுரைகளுக்குரிய ஒழுங்குமுறை அற்ற வெற்றுப்பேச்சுக்கள் போல இருப்பதாகவும், தொடர்பற்ற தனிப்பட்ட கருத்துக்களுக்கு செல்வனவாக உள்ளன என்று குற்றம்சாட்டுகிறார். 'வெசாவின் விமர்சனம் சாய்வுகள் அற்றது அல்ல. அவரது எழுத்துக்களை பருந்துப்பார்வையில் காணும்போதே சாய்வுகளை எளிதாகக் கணக்கிட்டுவிடலாம். அவரது சமகாலத்தில் தீவிரமாக இயங்கிய எழுத்தாளர்கள் பற்றிய மதிப்பீட்டுக்கும் அதற்கு முந்தைய எழுத்தாளர்களைப் பற்றிய மதிப்பீட்டுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. அவரோடு விவாதித்த எழுத்தாளர்களைப் பற்றிய மதிப்பீட்டுக்கும் விவாதத்திற்குள் வராத எழுத்தாளர்கள் பற்றிய மதிப்பீட்டுக்கும் வித்தியாசம் உண்டு. மார்க்ஸியர்கள் குறித்து முற்றிலும் எதிர்ப்பார்வையையே முன்வைத்துள்ளார்’ என்கிறார் (ஓர் எதிர்ப்புக்குரல்).

விவாதங்கள்

  • வெங்கட் சாமிநாதன் எழுதிய பாலையும் வாழையும் நூலில் தமிழ் கலாச்சாரச் சூழல் பாலைவனம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டமை கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகியது.
  • மலர்மன்னன் நடத்திய 1/4 கால் இதழில் (ஜூலை, அக்டோபர் 1981) வெங்கட் சாமிநாதன் ஹிட்லருக்கும் வாக்னருக்குமான உறவை பற்றிய ஒரு திரைப்படத்தைப் பற்றி ஆராய்கையில் உயர்ந்த கலையுள்ளம் கொண்டவர் மானுடவிரோதியாக இருக்க இயலாது என்று சொன்னார் (ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்). அதை எதிர்த்து ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்-வெ.சாவுக்குச் சில குறிப்புகள் என்னும் கட்டுரையை இலங்கையில் இருந்து வெளிவந்த அலை 18-வது இதழில் நிர்மலா நித்யானந்தன் எழுதினார். உலகில் உயர்ந்த கலையுள்ளம் கொண்டவர்கள் குரூரமான மானுடவிரோதிகளாக இருந்துள்ளனர் என வாதிட்டார்.
  • நடை இதழில் க.கைலாசபதி எழுதிய தமிழ் நாவல் இலக்கியம் என்னும் நூலை விமர்சனம் செய்து ‘மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல்’ என்னும் கட்டுரையை வெங்கட் சாமிநாதன் எழுதினார். கைலாசபதி நேரடியாக அதற்குப் பதில் அளிக்கவில்லை. ஆனால் அக்கட்டுரைக்கு வெவ்வேறு மார்க்ஸியர்கள் எதிர்வினை ஆற்றினர்.
  • தினமணி கதிர் இதழில் ஜெயகாந்தன் எழுதிய ரிஷிமூலம் என்னும் கதையை அதன் ஆசிரியர் சாவி திருத்தியதையும், அதன்பிறகும் இந்திரா பார்த்தசாரதி தினமணி கதிரில் எழுத முற்பட்டதையும் கண்டித்து வெங்கட் சாமிநாதன் எழுதினார் (திரைகளுக்கு அப்பால், யாருக்காக எதற்காக என்று அழுவது). அதற்கு அசோகமித்திரன் எதிர்வினையாற்றினார் (அழவேண்டாம், வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும்). அவ்விவாதத்தில் வெங்கட் சாமிநாதன் அசோகமித்திரனின் கதைகள் சில தழுவல்கள் என்று எழுதினார் (தித்திக்கும் திருட்டு மாம்பழங்கள்). இவை பின்னர் இலக்கிய ஊழல்கள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டன.

மறைவு

வெங்கட் சாமிநாதன் அக்டோபர் 21, 2015-ல் பெங்களூரில் தன் மகன் இல்லத்தில் மறைந்தார்.

விருதுகள்

2003-ல் கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல் விருது வெங்கட் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

நினைவுகள்

  • வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும். தொகுப்பு பா. அகிலன், திலீப் குமார், சத்திய மூர்த்தி.
  • வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள்- பாவண்ணன்.
  • சொல்வனம் இணைய இதழ் வெ.சாமிநாதன் சிறப்பிதழ் வெளியிட்டது. 2015.

இலக்கிய இடம்

வெங்கட் சாமிநாதன் தமிழ்ச்சூழலில் நவீன இலக்கியத்தில் இருந்த தர்க்கபூர்வமான நவீனத்தன்மைக்கு எதிராக செவ்வியல் மரபு மற்றும் நாட்டார் மரபுடன் தொடர்கொண்டதும் பித்துநிலை மொழியில் வெளிப்படுவதுமான ஓர் இலக்கிய எழுத்துமுறைக்காக வாதாடியவர். வணிகக்கேளிக்கை எழுத்து மற்றும் பிரச்சார எழுத்தை கடுமையாக மறுத்தார். இலக்கியம் என்பது சினிமா, ஓவியம், இசை ஆகியவற்றுடன் இணைந்த உரையாடல் நிகழும் சூழலிலேயே உருவாகமுடியும் என வாதிட்டார். அவருடைய எழுத்துமுறை நீண்ட தன்னுரையாடல் போன்றது. இலக்கியப்பூசல்தன்மை கொண்டது.

நூல்கள்

வெங்கட் சாமிநாதன் 35 நூல்கள் எழுதியிருக்கிறார்.

விமர்சனம்
  • பாலையும் வாழையும்
  • பான் ஸாய் மனிதன்
  • இச்சூழலில் (கலாச்சார விமர்சனம்)
  • என் பார்வையில் சில கவிதைகள்
  • என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்
  • ஓர் எதிர்ப்புக்குரல் : காலத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்கி
  • சில இலக்கிய ஆளுமைகள்
  • கலை, அனுபவம், வெளிப்பாடு
  • விவாதங்கள் சர்ச்சைகள்
  • விவாதங்கள் சர்ச்சைகள்
  • இன்னும் சில ஆளுமைகள்
  • புதுசும் கொஞ்சம் பழசுமாக
திரைப்படம்
  • திரை உலகில் (திரைப்பட விமர்சனம்)
  • ஏழாவது முத்திரை (இங்கமார் பெர்க்மன் இயக்கிய Seventh Seal என்ற திரைப்படம் பற்றிய நூல்)
திரைக்கதை
  • அக்ரஹாரத்தில் கழுதை
தன் வரலாறு
  • தொடரும் பயணம் - இலக்கிய வெளியில்
  • நினைவுகளின் சுவட்டில்
கலை
  • கலை வெளிப்பயணங்கள் (கலை விமர்சனம்)
  • அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்)
  • பாவைக்கூத்து
  • இன்றைய நாடக முயற்சிகள்
  • கலை உலகில் ஒரு சஞ்சாரம்
தொகுப்பு
  • தேர்ந்தெடுத்த ந.பிச்சமூர்த்தி கதைகள் (தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்)
  • பிச்சமூர்த்தி நினைவாக (பிச்சமூர்த்தி நினைவஞ்சலிக் கட்டுரைத் தொகுப்பு , தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்)
நேர்காணல்
  • உரையாடல்கள் (நேர்காணல்கள் தொகுப்பு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:22 IST