under review

ந. முத்துசாமி

From Tamil Wiki
ந. முத்துசாமி

ந. முத்துசாமி (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், இதழியலாளர். சிறுகதைகள், நாடகப் பனுவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னையில் 'கூத்துப்பட்டறை' என்ற நாடக அமைப்பை நிறுவி நாடக நெறியாள்கை செய்து அரங்கேற்றியதோடு, நாடகக் கலைஞர்களையும், சினிமா நடிகர்களையும் உருவாக்கினார்.

ந. முத்துசாமி

வாழ்க்கைக் குறிப்பு

ந. முத்துசாமி ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகில் உள்ள புஞ்சை கிராமத்தில் மே 25, 1936-ல் பிறந்தார். இரண்டாம் ஆண்டு புதுமுக வகுப்பு (இன்டர்மீடியட்) படித்துக்கொண்டிருந்தபோது, படிப்பைத் தொடராமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன் குடும்பத்துடன் தொடக்கத்தில் திருவல்லிக்கேணி வெங்கடரங்கம்பிள்ளை தெருவுக்கு அருகில் இருந்த மீனவர் குப்பத்தில் வசித்தார். மகன்கள் நடேஷ், ரவி.

இலக்கிய வாழ்க்கை

விக்டோரியா தங்கும் விடுதியில் தங்கி பிரசிடென்சி கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த கவிஞர் சி.மணியுடன் நட்புகொண்டு இலக்கியத்தில் ஈர்க்கப்பட்டார். இலக்கிய வாழ்வின் தொடக்க காலத்தில் சி.சு.செல்லப்பா இவரின் ஆசிரியராக அமைந்தார். ரஷ்ய மறைஞானத் தத்துவ மேதையான குர்ஜீப்பின் (Gurdjieff) மறைஞான சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டார்.

ந. முத்துசாமி

1966-ல் ‘எழுத்து’ இதழில் இவரது முதல் சிறுகதை ‘யார் துணை’ வெளியானது. ந. முத்துசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நீர்மை'க்கு க.நா.சுப்ரமணியம் எழுதிய முன்னுரையை பதிப்பாளர் போட மறுத்ததால் இரண்டு ஆண்டுகள் தாமதமாகி அம்முன்னுரையுடன் வெளியிட்டார். 1974 வரை எழுத்து, நடை, கசடதபற, ஞானரதம், கணையாழி ஆகிய சிற்றிதழ்களில் கதைகள் எழுதினார். நாடகக்கலையில் கவனம் செலுத்தி முப்பது ஆண்டுக் கால இடைவெளிக்குப் பின் 2004-ல் மீண்டும் சிறுகதைகள் எழுதினார். 30-க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

ந. முத்துசாமியின் முதல் கட்ட எட்டாண்டுக் காலச் சிறுகதைப் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பை 1984-ல் ‘நீர்மை’ என்ற தலைப்பில் ‘க்ரியா’ வெளியிட்டது. இரண்டாம் கட்டச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளும், ‘நீர்மை’ தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுமாக 21 கதைகள் அடங்கிய தொகுப்பு, ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ என்ற தலைப்பில் 2009-ல் ‘க்ரியா’ வெளியீடாக வந்தது. ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ தொகுப்பு டேவிட் சுல்மன் மற்றும் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ‘Bullocks from the West’ என ‘வெஸ்ட்லேண்ட்’ பதிப்பக வெளியீடாக வந்தது. இவ்விரு தொகுப்புகளிலும் இடம்பெறாத கதைகள் இன்னமும் புத்தக வடிவம் பெறாது இருந்துகொண்டிருக்கின்றன. ந.முத்துசாமியின் 21 நாடக ஆக்கங்கள் ’ந.முத்துசாமி நாடகங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.

ந. முத்துசாமி

இதழியல்

’எழுத்து’ சி.சு.செல்லப்பாவுடன் ந. முத்துசாமிக்கும் இவரது நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, இவருடைய குழுவினர் நடை என்கிற புதிய இதழைத் தொடங்கினார்கள்.

நாடக வாழ்க்கை

ந. முத்துசாமி கூத்துப்பட்டறை ஆட்களுடன்

வெங்கட் சாமிநாதன் டில்லி சங்கீத நாடக அகாடமியில் 1965 அல்லது 66-ல் பார்த்த நடேசத் தம்பிரானின் தெருக்கூத்து பற்றியும், ”தெருக்கூத்துதான் நம்முடைய மகத்தான பாரம்பரியத் தியேட்டர்” என்ற எண்ணத்தையும் ந. முத்துசாமியோடு பகிர்ந்துகொண்டார். 1975-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைவாணர் அரங்கில் நடத்திய கிராமியக் கலை விழாவில் புரிசை நடேசத் தம்பிரானின் ‘கர்ணன்’ தெருக்கூத்தைக் கண்டது ந. முத்துசாமிக்கு உந்துதலாக இருந்தது. அதன்பின் நிகழ்த்துக் கலையாக விளங்கிய தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்குவதற்காக உழைத்தார். 1977-ல் சென்னையில் 'கூத்துப்பட்டறை' என்ற நாடக அமைப்பை நிறுவி நாடகக் கலைஞர்களையும், சினிமா நடிகர்களையும் உருவாக்கினார். தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக பல நாடகங்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றினார். விஜய் சேதுபதி, விமல், விதார்த், தினேஷ் உள்ளிட்ட பலரும் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். கூத்துப்பட்டறை அப்பொழுது அமெரிக்காவின் ஃபோர்டு ஃபௌண்டேஷன் நிதி உதவியில் இயங்கிக் கொண்டிருந்தது. ந. முத்துசாமி நவீன நாடகப்பிரதிகளை எழுதியதோடு, அதை முழுமையானதொரு நவீன நாடகமாக நடிகர்களைக்கொண்டு பயிற்சி செய்து உருமாற்றிக் காட்டினார்.

ந. முத்துசாமி

1988-ல் மதுரை சீதாராம் குப்தா அரங்கில் கூத்துப்பட்டறையின் நாடகம், மகேந்திர விக்கிரமவர்ம பல்லவனின் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்பது ந. முத்துசாமியின் தமிழாக்கத்தில் ‘முற்றுகை’ எனும் பெயரில் வ. ஆறுமுகம் நெறியாளுகையில் நிகழ்ந்தது. 1990-ல் சீத்தாராம் குப்தா அரங்கில் கூத்துப்பட்டறையின் (Siegfried Lenz) ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’ (தமிழில் ஜி.கிருஷ்ண மூர்த்தி) நாடகம், இங்ஙபோர்க்மய்யர் & தனுஷ்கோடி ஆகியோரின் நெறியாளுகையில் நிகழ்ந்தது. மே 22 ,1992 அன்று மாலை 5 மணிக்கு மகாத்மா பள்ளியில் கூத்துப்பட்டறையின் நாடகம் ‘சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு-ஓர் உலகப் பிரச்சனை’ என்ற நாடகம் ந. முத்துசாமியின் வடிவமைப்பு நெறியாள்கையில் நிகழ்ந்தது. அதில் பசுபதி, ஜெய்குமார், ஜெயராவ், ஜார்ஜ், ராஜ்குமார், ரவிவர்மா, கலைச் செல்வன், கலைராணி, பாஸ்கர், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். நவீன நாடகப் பனுவல்களைப் எழுதினார். 1968-ல் ‘நடை’ இதழில் அவரது முதல் நாடகமான ‘காலம் காலமாக’ பிரசுரமானது. 1974-ல் ந. முத்துசாமியின் முதல் புத்தகமாக ‘நாற்காலிக்காரர்’ என்ற நவீன நாடகத் தொகுப்பு ‘க்ரியா’ வெளியீடாக வெளிவந்தது. இது ‘காலம் காலமாக’, ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’ என மூன்று சிறு நாடகங்களை உள்ளடக்கியது. குறிப்பாக மேடையின் ஒளியமைப்பில் கூத்துப்பட்டறையில் புது முயற்சிகள் செய்தார்.

பழமையான கோயில் நிகழ்த்துகலையான கைசிக புராண நாடகத்தின் மீட்டுருவாக்கத்தில் பேராசிரியர் ராமானுஜத்துடன் இணைந்து பணியாற்றினார்.

கூத்துப்பட்டறை மாணவர்கள்
மாணவர்கள்
  • நாசர்
  • கலைராணி
  • விஜய் சேதுபதி
  • விமல்
  • விதார்த்
  • தினேஷ்
  • தலைவாசல் விஜய்
  • சண்முகராஜன்
  • குரு சோமசுந்தரம்
  • பசுபதி
  • பாபி சிம்ஹா
கூத்துப்பட்டறை நாடகம்
நெறியாள்கை செய்த நாடகங்கள்
  • சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு-ஓர் உலகப் பிரச்சனை
  • முற்றுகை
  • நிரபராதிகளின் காலம்
  • நாற்காலிக்காரர்
  • சுவரொட்டிகள்
  • உந்திச்சுழி
  • கட்டியக்காரன்
  • நற்றுணையப்பன்
  • இங்கிலாந்து தெனாலி
  • பிரகலாத சரிதம்
  • சந்திரஹரி
  • படுகளம்

இலக்கிய இடம்

புஞ்சை கிராமத்து வாழ்க்கையே அவருடைய எல்லாக் கதைகளிலும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுகிறது. சென்னை நகர வாழ்க்கை சார்ந்தும் ஓரிரு கதைகள் எழுதியுள்ளார். ”இது புஞ்சைக்கும் எனக்கும் உள்ள உறவுமுறையில் உள்ள ஒரு சிக்கல். எப்போதும் அது வெளியீட்டுக்கு மனதில் காத்துக்கொண்டே இருக்கிறது. அதன் பெயர் சொல்லி அதற்கு அடையாளம் உண்டாக்க வேண்டும் என்ற வற்புறுத்தலோடு இருந்துகொண்டிருக்கிறது. `நை... நை' என்று அலுத்துக்கொண்டு சவலைக்குழந்தையைப்போல இருக்கிறது. அதற்கு உண்டான இடத்தில் அது இருக்க வேண்டும். அதற்கு பெரிய இடமாக வேண்டுமாம். எல்லாக் கதைகளிலும் வந்தாலும் ஆசை தீர்ந்துபோய்விடவில்லை. நாடகங்களிலும் வர வேண்டுமாம்.” என ந. முத்துசாமி தன் கதைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

சிறு பிராய புஞ்சை கிராமத்து வாழ்வின் நினைவோடையிலிருந்து இவரது கதைகள் உருவாகின. மனித மனச் சலனங்களின் சுழிப்புகளுக்கேற்பச் சுழித்தோடும் மாயப் புனைவு மொழியையும் மந்திர நடையையும் கைப்பற்றிய அசாதாரணமான படைப்பாளுமை ந. முத்துசாமி. தன் கதைகள் பற்றி, “உட்சலனங்களாலேயே ஆட்பட்டு, வெளி மெளனத்தை மேற்கொண்டவை. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டப்பட்டிருக்கின்றன” என்கிறார். இவரது இந்த உட்சலனப் புனைவு மொழிதான் தமிழ்ச் சிறுகதையின் வளமான பிராந்தியத்தில் இவருக்கெனத் தனித்துவமான இடத்தை அமைத்துக் கொடுத்தது." என சி. மோகன் மதிப்பிடுகிறார்.

திரைப்படம்

இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவல், ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற படமாக எடுக்கப்பட்டபோது அதில் இயக்குனர் ஸ்ரீதர்ர்ராஜனுடன் வசனகர்த்தாவாகப் பணியாற்றினார். ‘அவள்பெயர் தமிழரசி’ படத்தில் நடித்துள்ளார்.

இறப்பு

ந. முத்துசாமி அக்டோபர் 24, 2018 அன்று காலமானார்.

நூல்கள்

ந. முத்துசாமி நாடகங்கள்
சிறுகதைத் தொகுப்பு
  • நீர்மை
நாடகங்கள்
  • காலம் காலமாக
  • அப்பாவும் பிள்ளையும்
  • நாற்காலிக்காரர்
  • சுவரொட்டிகள்
  • படுகளம்
  • உந்திச்சுழி
  • கட்டியக்காரன்
  • நற்றுணையப்பன்
கட்டுரைத் தொகுப்பு
  • அன்று பூட்டியவண்டி (தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)

விருதுகள், சிறப்புகள்

  • 2000-ல் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றார்.
  • 2012-ல் இவரது கலைச்சேவையை பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
  • "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2023, 06:17:35 IST