under review

இந்திரா பார்த்தசாரதி

From Tamil Wiki
இந்திரா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இந்திரா (பெயர் பட்டியல்)
பார்த்தசாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பார்த்தசாரதி (பெயர் பட்டியல்)
இபா
இந்திரா பார்த்தசாரதி முருகபூபதியுடன்

To read the article in English: Indira Parthasarathy. ‎

இந்திரா பார்த்தசாரதி.jpg
இ.பா
இபா சொல்புதிதில்

இந்திரா பார்த்தசாரதி (இ.பா.) (ஜூலை 10, 1930) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாதமியின் ஃபெல்லோவாக இருக்கிறார். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.

பிறப்பு, இளமை

இந்திரா பார்த்தசாரதி
சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்

இயற்பெயர் பார்த்தசாரதி. மனைவி பெயரான இந்திராவை சேர்த்துக்கொண்டு இந்திரா பார்த்தசாரதி என்ற பெயரில் எழுதினார். ஜூலை 10, 1930-ல் சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. தி.ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952-ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

1981முதல் 1986 வரை போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். அவ்வனுபவங்களை ஏசுவின் தோழர்கள் என்னும் நாவலில் எழுதியிருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிடைத்தது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.

ஹிந்து லிட் ஃபார் லைஃப்

இலக்கிய பங்களிப்பு

சிறுகதைகள்

இந்திரா பார்த்தசாரதி தனது 15-ஆவது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது. முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை 'மனித எந்திரம்'. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.

நாவல்கள்

இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968-ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். இந்திரா பார்த்தசாரதி டெல்லியில் குடியேறிய பின் அங்குள்ள அரசியல் சூழலை பகடியாக சித்தரித்து எழுதிய சுதந்திர பூமி, தந்திர பூமி ஆகிய நாவல்கள் அவருக்கு புகழ்தேடித் தந்தவை.

குருதிப்புனல்

இந்திரா பார்த்தசாரதியின் சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா.வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவும் படைப்பு.

கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் விவாதித்தது.

நாடகங்கள்

நாடகங்கள் மேல் தமிழ் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது அந்த படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். போர்வை போர்த்திய உடல்கள் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் முதன்மையானது. இது இருத்தலியல் பார்வையை முன்வைக்கும் நாடகம். அவசரநிலைக் காலத்துப் பின்னணியில் வெளிவந்தமையால் இந்நாடகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது

டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இந்திரா பார்த்தசாரதியின் பெரும்பாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் புகழ்பெற்றவை.

டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக பொறுப்பேற்று அங்கே நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமாநுஜர் நாடகத்துக்கு 'சரஸ்வதி சம்மான்’ விருது வழங்கப்பட்டது.

திரைப்படங்கள்

  • இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவல் 1983-ல் ஶ்ரீதர்ராஜன் இயக்கத்தில் 'கண் சிவந்தால் மண்சிவக்கும்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது
  • இந்திராபார்த்தசாரதியின் உச்சிவெயில் என்னும் குறுநாவல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் 1990-ல் மறுபக்கம் என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இந்திய ஜனாதிபதியின் தங்கத்தாமரை விருது பெற்றது.

இலக்கிய இடம்

பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள்.

மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை இந்திரா பார்த்தசாரதி கடைப்பிடித்தது.

எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகத்தை தேர்வுசெய்தார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. 'மாயமான் வேட்டை', 'வேதபுரத்து வியாபாரிகள்' போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.

விருதுகள்

  1. சாகித்ய அகாடமி விருது ( குருதிப்புனல் நாவல் )
  2. சரஸ்வதி சம்மான் விருது (ராமானுஜர் நாடகம்)
  3. சங்கீத் நாடக அகாடமி விருது
  4. பாரதிய பாஷா பரிஷத்
  5. பத்மஸ்ரீ விருது (2010)
  6. தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது 2018
  7. சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப் 2021

படைப்புகள்

சிறுகதைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புகளாக இவை வெளியிடப்பட்டுள்ளன.

  1. நாசகாரக்கும்பல்
  2. மனித தெய்வங்கள்
  3. முத்துக்கள் பத்து
  4. இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
நாவல்கள்
  1. கால வெள்ளம் (1968)
  2. ஆகாசத் தாமரை
  3. மாயமான் வேட்டை
  4. தந்திர பூமி
  5. திரைகளுக்கு அப்பால்
  6. சத்திய சோதனை
  7. குருதிப்புனல்
  8. கிருஷ்ணா கிருஷ்ணா
  9. வேதபுரத்து வியாபாரிகள்
  10. சுதந்திர பூமி
  11. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
  12. காலவெள்ளம்
  13. வேர்ப்பற்று
  14. வெந்து தணிந்த காடுகள்
  15. அக்னி
  16. தீவுகள்
  17. ஏசுவின் தோழர்கள்
  18. நிலம் என்னும் நல்லாள் (மழை என்ற நாடகத்தின் மூலக்கதை)
  19. உச்சி வெயில்
நாடகங்கள்
  1. மழை (மூலக்கதை: நிலம் என்னும் நல்லாள் நாவல்)
  2. போர்வை போர்த்திய உடல்கள்
  3. கால யந்திரங்கள்
  4. நந்தன் கதை
  5. கொங்கைத் தீ
  6. ஔரங்கசீப்
  7. ராமாநுஜர்
  8. இறுதி ஆட்டம்
  9. சூறாவளி
  10. பசி
  11. கோயில்
  12. தர்மம்
  13. நட்டக்கல்
  14. புனரபி ஜனனம், புனரபி மரணம்
  15. வீடு
மொழிபெயர்ப்புகள்

இந்திரா பார்த்தசாரதி எழுதிய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாகும்.

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால்.

பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

  1. கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.
  2. குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு
  3. திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லட்சுமி கண்ணன்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Nov-2022, 10:58:07 IST