under review

குருதிப்புனல்

From Tamil Wiki
குருதிப்புனல்

குருதிப்புனல் (1977) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். பழைய தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்னும் ஊரில் பண்ணையார்களால் ராமையா என்பவரின் குடிசை எரிக்கப்பட அதில் சிக்கி வேளாண்தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட படைப்பு

எழுத்து,வெளியீடு

இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல் நாவலை 1975-ல் கணையாழியில் தொடராக எழுதினார். 1977-ல் தமிழ்ப்புத்தகாலயம் இதை வெளியிட்டது

பின்னணி

டிசம்பர் 25, 1968-ல் ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் ராமையா என்பவரின் குடிசையில் ஒளிந்திருந்த 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது கீழ்வெண்மணி படுகொலை எனப்படுகிறது. இதைக் களமாகக் கொண்டு குருதிப்புனல் எழுதப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம்

டெல்லியில் வாழும் சிவா இரண்டு வருஷத்துக்கு முன்பு தஞ்சையில் ஒரு கிராமத்துக்கு வந்து விட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருகிறான்.கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடு வேளாண் தொழிலாளர்களைச் சுரண்டுவதை இடதுசாரியான தோழர் ராமையா எதிர்க்கிறார். அவருடன் கோபால் தங்கியிருக்கிறான். கண்ணையா நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. அதை மறைக்க அவர் ஏராளமான வைப்பாட்டிகளை வைத்திருப்பதாக பாவனை செய்கிறார். பேச்சுவார்த்தையில் கோபால் அவருடைய ஆண்மையை சீண்டுவதனால் சீற்றம் அடைந்த நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு பாப்பாத்தி என்னும் தலித் பெண்மணியை விரும்ப அவனை கண்ணையா நாயுடு தேடுகிறார். அவர்கள் நாயுடுவின் வைப்பாட்டி பங்கஜம் வீட்டில் ஒளிந்திருப்பதை கோபால் கண்டடைகிறான். பாப்பாத்தி கொல்லப்பட கொலைப்பழி கோபால் மேல் விழுகிறது. பூசல் வலுத்தபடிச் சென்று இறுதியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். அதற்கு ராமையா கைதாகிறார். நாயுடுவை ஒரு விவசாயத் தொழிலாளர் அடிக்கிறார். நாயுடு தன் ஆட்களை ஏவி தொழிலாளர்களை குடிசையோடு கொளுத்துகிறார். கோபால் வன்முறையே தீர்வு என்னும் முடிவுக்கு வருகிறான்.

விமர்சனங்கள்

இந்நாவல் கீழ்வெண்மணி தொழிலாளர் பிரச்சினையை மிராசுதாரின் பாலியல்குறைவின் விளைவு என்று காட்டி சிறுமைப்படுத்துகிறது என்று கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவான இதழ்கள் கடுமையாக கண்டித்தன. சிற்றிதழ்ச்சூழலில் அம்பை கடுமையான கண்டனக் கட்டுரையை எழுதினார். சுந்தர ராமசாமியும் தந்திரபுத்தியால் ஜோடிக்கப்பட்ட நாவல் என்று இந்நாவலை நிராகரித்தார்.

பின்னர் எதிர்ப்புகளைப் பற்றி பேசிய இந்திரா பார்த்தசாரதி " கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். ஆனால் கேரள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.‘நாவலாசிரியரின் ஃப்ராயிடிய அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.அண்மையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி' என்று பின்னர் வந்த பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

விருது

குருதிப்புனல் நாவல் 1977-ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது பெற்றது

திரைப்படம்

குருதிப்புனல் நாவலை தழுவி 1983-ல் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்னும் திரைப்படம் ஶ்ரீதர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெற்றது.

பிறநாவல்கள்

கீழ்வெண்மணி பின்னணியில் வேறு மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன

  • செந்நெல்- சோலை சுந்தரப்பெருமாள்
  • கீழைத்தீ - பாட்டாளி
  • தாளடி - சீனிவாசன் நடராஜன்

மொழியாக்கங்கள்

குருதிப்புனல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

  • ஆங்கிலம் .The river of blood - க.நா.சுப்ரமணியம்
  • வங்காளம் . சு. கிருஷ்ணமூர்த்தி.(மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது)

இலக்கிய இடம்

கீழ்வெண்மணியைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவல் குருதிப்புனல். தஞ்சையின் கலாச்சாரச்சூழலில் உள்ள தாசி முறை, பண்ணையடிமை முறை, இடதுசாரிகளின் எழுச்சி ஆகியவற்றைச் சித்தரிக்கும் படைப்பு.

உசாத்துணை


✅Finalised Page