நடை
நடை (1968-1969) சி.மணி நடத்திய சிற்றிதழ். கவிதையை முன்னிறுத்தியதும் கவிதை சார்ந்த உரையாடலை உருவாக்கியதும் இவ்விதழின் பங்களிப்புகள்.
வரலாறு
சேலத்திலிருந்து அக்டோபர் 1968-ல் வெளியீட்டைத் தொடங்கியது நடை காலாண்டிதழ். ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என்றபோதிலும் அது சி. மணியின் பத்திரிகையாக வெளி வந்தது. "தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே நடையின் நோக்கம்" என்று முதல் இதழின் ஆசிரியர் குறிப்பு தெரிவித்தது. மொத்தம் எட்டு இதழ்களே வெளிவந்தன.
இலக்கிய இதழில் நவீன ஓவியங்களை முதலில் நடை அறிமுகப்படுத்தியது. புத்தக வடிவத்தில் தடித்த அட்டையுடன், லினோகட் அல்லது ஸ்க்ரீன்பிரிண்ட் ஓவியத்துடன் வெளிவந்தது.
உள்ளடக்கம்
வே. மாலி, செல்வம், ஓலூலூ என்னும் பெயர்களில் சி. மணி கவிதைகள் - கட்டுரைகள் எழுதினார். இலக்கிய இதழில் நவீன ஓவியங்களை முதலில் அறிமுகப்படுத்தியது நடைதான். ஞானக்கூத்தன் புதுக்கவிதை எழுதத் தொடங்கியதும் நடையில்தான்.சி. மணியின் 'யாப்பியல்' என்னும் நீண்ட கட்டுரை அன்றைய சூழலில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. நீல பத்மநாபன், ஐராவதம், மா.தட்சிணாமூர்த்தி, மிரோஜெக், ஞானக்கூத்தன், கார்த்திகேயன், எஸ்.வைத்தீஸ்வரன் ஆகியோரின் படைப்புகள் இருந்தன. ந. முத்துசாமியின் சிறுகதைகளையும் நாடகத்தையும் நடை வெளியிட்டுள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:37 IST