பெருமாள் முருகன்
To read the article in English: Perumal Murugan.
பெருமாள் முருகன்(பிறப்பு:அக்டோபர் 14,1966) தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார். படைப்புகளில் கொங்கு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்து, அதிகம் அறியப்படாதிருந்த கொங்கு வேளாண் வாழ்க்கையைப் பதிவு செய்தார். பெருமாள் முருகனின் இலக்கியச் செயல்பாடு கவிதைகள்,வட்டாரச் சொல்லகராதி,வரலாற்று ஆய்வு,இலக்கிய முன்னோடிகள் குறித்த மறுவாசிப்பு,கல்விப்புலத்தில் இலக்கிய உரையாடல்களை முன்னெடுத்தது என பல துறைகள் சார்ந்தது. மாதொருபாகன் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி, கருத்துரிமை பற்றிய வலுவான கேள்விகளை எழுப்பிய படைப்பு.
பிறப்பு, கல்வி
பெருமாள் முருகன் அக்டோபர் 14,1966 அன்று தற்போதைய நாமக்கல் மாவட்டம் கூட்டப்பள்ளியில் பெருமாள்-பெருமாயி இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் முருகன். தந்தை சிறு விவசாயி.கிராமத்து திரையரங்கில் சோடா மற்றும் பண்டங்கள் விற்கும் கடையையும் நடத்தினார்.
பள்ளிப்படிப்பை ராஜாக்கவுண்டம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், திருச்செங்கோடு நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். இளங்கலைப்பட்டத்தை (தமிழ் இலக்கியம்)ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும், முதுகலைப்பட்டத்தை கோவை பிஎஸ்ஜி கலைக் கல்லூரியிலும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளியில் படிக்கும் போதே அவர் எழுதிய சிறுவர் பாடல்கள் திருச்சி வானொலியின் மணிமலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாயின. கவிஞர் கண்ணதாசனால் ஈர்க்கப்பட்டு மரபு மற்றும் புதுக்கவிதைகள் எழுதினார். கல்லூரிக்காலத்தில் அவர் எழுதிய நிகழ்வு என்ற சிறுகதை கணையாழி இதழில் பிரசுரமானது.
தனி வாழ்க்கை
மனைவி எழிலரசி தமிழ்ப்பேராசிரியை , தமிழ்க்கவிஞர். மிதக்கும் மகரந்தம் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மகன் இளம்பரிதி, மகள் இளம்பிறை.
பெருமாள் முருகன் ஆத்தூர் கலைக்கல்லூரி, நாமக்கல் கலைகல்லூரி, மாநிலக் கல்லூரி இவற்றில் விரிவுரையாளராகப் பணி புரிந்து, தற்போது ஆத்தூர் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பெருமாள் முருகன் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என 16 நூல்களும், 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதினார். திருச்செங்கோடு பகுதியில் கள ஆய்வு செய்து எழுதிய மாதொருபாகன் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
ஏறுவெயில்
பெருமாள் முருகனின் முதல் நாவல் கட்டட வேலைக்காக விவசாயத்தை விட்டுச் சென்ற மக்களின் வாழ்க்கை சிக்கல்களையும், பாதிப்புகளையும் சொல்லிய ஏறுவெயில் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்று, பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.
நிழல் முற்றம்
தன் தந்தையின் சோடாக்கடையில் வேலை செய்த அனுபவங்களை கொண்டு எழுதப்பட்ட நிழல் முற்றம் திரையரங்கைச் சார்ந்து பணி செய்யும் பெட்டி கடைக்காரர், அனுமதிச் சீட்டு கிழிப்பவர், துப்புரவாளர் போன்ற பலவகை மக்களின் வாழ்வியல் பற்றிய பதிவாகவும், தமிழில் அத்தகைமையில் முதல் நாவலாகவும் அமைந்தது.வ.கீதாவால் Current Show என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
கூளமாதாரி
கொங்கு வட்டாரத்தில் நிலவுடைமையாளர்களிடம் பண்ணையாட்களாக வேலை செய்யும் சிறுவர், சிறுமியரை அடிப்படையாகக் கொண்ட கூளமாதாரி 'Season of the Palm என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. கடும் வறுமையும், ஓயாத வேலையும் வளரிளம் பருவத்திற்கேயான சிக்கல்களும் சிரிப்பும், துள்ளலும், தோழமையும், பகைமையும் கலந்த வாழ்வைக் காட்டுகிறார்.
பிற புனைவுகள்
ஆளண்டாப் பட்சி பிழைப்பிற்காக இடம் பெயர்ந்த மக்களின் சிக்கல்களைச் சொல்கிறது. இதன் மொழியாக்கம் 2023-க்கான ஜே.சி.பி. பரிசைப் பெற்றது.
பீக்கதைகள் சிறுகதைத் தொகுப்பில் பெருமாள் முருகன் மலத்தையே கருப்பொருளாக்கி பேசாத பொருளைப் பேசுகிறார்.
காதல் மணம் புரிந்துகொண்ட, அதனால் சாதி வேறுபாடுகளுக்கும், வெறுப்புக்கும் ஆட்படும் இளம் தம்பதியரின் கதை 'பூக்குழி'. 2017-க்கான தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் பரிசுப் போட்டிக்கான பதின்மூன்று நாவல்கள் கொண்ட நெடும்பட்டியலில் இடம்பெற்றது. இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ் நாவல் இதுவே.
கட்டுரைகள்
நிழல் முற்றத்து நினைவுகள் பெருமாள் முருகன் காட்சிப்பிழை என்னும் திரைப்பட ஆய்விதழில் வந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. கல்வியியல் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கவிதைகள்
பெருமாள் முருகன் இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். 'நிகழ் உறவு', 'நீர் மிதக்கும் கண்கள்',' நதிக்கரைக் கூழாங்கல்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. கவிதைதான் தனக்கு மிகவும் நெருக்கமான் வெளிப்பாட்டு வடிவம் எனக் குறிப்பிடுகிறார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பங்குவகித்தார்.
பதிப்பியல், அகராதியியல்
பெருமாள் முருகன் அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.கொங்கு வட்டாரம் சார்ந்த மானுடவியல் ஆய்வுகள், வட்டார வழக்கு ஆராய்ச்சி, நாட்டார் இலக்கியம் பற்றிய ஆய்வுகளில் தீவிரமான பங்காற்றியுள்ளார். கூடு' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். அதில் மாதமொருமுறை நடைபெரும் கூட்டங்களில் இலக்கிய விவாதங்கள் நடைபெறுகின்றன.எஸ்.வையாபுரிப் பிள்ளை தொகுத்த பேரகராதியை முதன்மையாக வைத்தும் க்ரியா வின் தற்காலத் தமிழ் அகராதியை மாதிரியாகக் கொண்டும் கொங்கு வட்டார வழக்குச் சொல்லகராதி யத் தொகுத்தார்.
மொழியாக்கம் செய்யப்பட்ட பெருமாள் முருகன் படைப்புகள்
பெருமாள் முருகனின் ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் 'நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
'பூக்குழி' 2016-ல் 'Pyre' என்ற பெயரில் அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 2017-க்கான தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் பரிசுப் போட்டிக்கான பதின்மூன்று நாவல்கள் கொண்ட நெடும்பட்டியலில் இடம்பெற்றது. இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ் நாவல் இதுவே.
ஆளண்டாப்பட்சி 'Fire Bird' என்ற பெயரில் ஜனனி கண்ணனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
மாதொருபாகன் பற்றிய சர்ச்சை
இவர் 2010-ல் எழுதிப் பதிப்பித்த மாதொருபாகன் நாவல் திருச்செங்கோடு பகுதியை புனைவு வெளியாகக் கொண்டு கோவில் திருவிழாவின் இறுதியில் வைகாசி விசாகத்தன்று முன்பு வழக்கத்தில் இருந்ததாக நம்பப்படும் சடங்கை மையமாகக் கொண்டது. அதுபற்றிய கள ஆய்வுக்குப் பின் நாவல் எழுதப்பட்டதாக பெருமள் முருகன் குறிப்பிட்டார்.அன்று குழந்தைப்பேறு வாய்க்காத பெண்கள் வேறு ஆடவனுடன் கூடுவதற்கு அச்சடங்கு அனுமதிக்கிறது. அதன் விளைவாகப் பிறந்த குழந்தைகள் 'சாமி பிள்ளை' யாக ஏற்றுக்கொள்ளப்படுவர். அன்பான தம்பதிகளான பொன்னா-காளி குழந்தைப் பேறின்மையால் வருந்துகிறார்கள். பின் உறவினரின் வற்புறுத்தலால் பொன்னா சடங்கிற்குச் சம்மதித்து, பிள்ளை பிறக்கிறது.
நாவல் வெளிவந்து பெரும் சர்ச்சைகளையும் கண்டனங்களையும் எழுப்பியது. அந்நிய நிதி பெற்று வரலாற்றாதாரமற்ற நிகழ்வுகளை வரலாற்று நாவல் என்றெழுதி, திருச்செங்கோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் 2015-ல் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையின் போது நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO - District Revenue Officer) முன்னிலையில் பெருமாள் முருகன் பொது மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்து, தான் இனி எழுதப்போவதில்லை என அறிவித்தார்.
நூலைத் தடைசெய்யவும்; பெருமாள் முருகன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யவும் வேண்டி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாதொருபாகன் நூலைத் தடைசெய் யக் கூடாது என்று கோரி அந்நூலைப் பதிப்பித்த காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் சார்பில் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் தலைவராகவும் வழக்குரைஞராகவும் உள்ள வி.சுரேஷ், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஒரு வருட காலம் நடந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.கே. கவுல்(எம்.எஃப்.ஹுசைன் வழக்கில் தீர்ப்பு வழங்கியவர்), நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தனர். மே 7, 2016 அன்று வந்த தீர்ப்பு அக்குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து, தடையை விலக்கி,கருத்துரிமை காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. கருத்துரிமை தொடர்பான நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
தீர்ப்பின் இறுதி வரி - எழுத்தாளன் தன் தன்னறமாகிய எழுத்தில் உயிர்த்தெழட்டும் ( "Let the author be resurrected to what he is best at. Write.")[1]
சர்ச்சைக்கு இலக்கிய உலகின் எதிர்வினை
மாதொருபாகன் நாவலை வெளியிட்ட பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன் பெருமாள் முருகனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். ஆ.இரா.வேங்கடாசலபதி, தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் சுவாமிநாதன் ஆகியோர் வழக்கை சந்திப்பதில் துணை நின்றார்கள். தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து, போராட்டம் நிகழ்த்தினர். அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஆதரவுக் குரல் எழுப்பினர். சென்னையில் நடைபெற்ற தி இந்து இலக்கியத் திருவிழா, ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா ஆகியவற்றில் தனி அமர்வுகள் அமைத்து ஆதரவுக் குரல்களை எழுப்பினர்.
விருதுகள், பரிசுகள்
- சமான்வே பாஷா சம்மான் 2015
- விளக்கு விருது 2012
- கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது 2013
- கதா விருது 2000
- கனடா இலக்கியத் தோட்ட விருது - அபுனைவுப் பிரிவு 2011
- சிகேகே அறக்கட்டளை விருது
- அமுதன் அடிகள் விருது
- மணல் வீடு விருது
- களம் விருது
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது
- தேவமகள் விருது
- ஜே.சி.பி. பரிசு (JCB Prize for literature, 2022) (ஆளண்டாப்பட்சி நாவலுக்காக)
இலக்கிய இடம்
கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் , வட்டார வழக்கையும் எழுத்தாக்கியவர் பெருமாள் முருகன். ஏறுவெயில்,நிழல் முற்றம் கூளமாதாரி மூன்று நாவல்களும் பதின்ம வயது சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட படைப்புகள். விளிம்பு நிலை வாழ்வின் நேர்த்தியான சித்தரிப்பு அவரது புனைவுலகத்தின் சிறப்பம்சம்.
கூள மாதாரி தமிழின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று. 'புழுதி', 'காழிமண்', 'வறள்' என்ற மூன்று பாகங்களாக அமைந்த நாவலில் ஆடு மேய்க்கும் பிள்ளைகள் குழந்தைப் பருவம் பறிக்கப்பட்டு,கொத்தடிமைகளாக சகித்துக் கொள்ளும் துயரங்களும் ,அவற்றுக்கிடையே பரந்து விரிந்த மோட்டுக் காட்டில் அவர்கள் சித்தரித்துக் கொள்ளும் தங்களுக்கான உலகும் ஆவணப் புனைவின் தன்மையில் பதிவாகியுள்ளன.ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த வளரிளம் பருவத்தினரின் வாழ்வியல் சிக்கல்களும், உடலியல் பிரச்சனைகளும் அழுத்தமாகச் சொல்லப்பட்டதாலும், கொங்கு நாட்டின் விவசாய மக்களின் வாழ்வியல் மற்றும் மொழியின் இயல்பான சித்தரிப்பாலும் கூளமாதாரி 'ஒரு முக்கியமான படைப்பாகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நூல்கள் பட்டியலில்[2] இடம்பெறுகிறது.
இந்நாவலின் ஆங்கில மொழியாக்கம் பசிபிக் கலாசார நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் 'கிரியாமா’ விருதுக்கான போட்டியில் இறுதிச் சுற்றிற்குத் தேர்வாகிய 5 நூல்களில் ஒன்று.
2010-ல் தென்கொரியாவின் கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற எழுத்தாளர் முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எழுத்தாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார்.அறுவரில் பெருமாள் முருகன் மட்டுமே ஆசியாவைச் சேர்ந்தவர்.
நிழல் முற்றம் திரையரங்கைச் சார்ந்து பணி செய்யும் பெட்டி கடைக்காரர், அனுமதிச் சீட்டு கிழிப்பவர், துப்புரவாளர் போன்ற பலவகை மக்களின் வாழ்வியல் பற்றிய பதிவாகவும், தமிழில் அத்தகைமையில் முதல் நாவல் என்ற வகையிலும் முக்கியமான படைப்பு. ஜெயமோகனின் தமிழ் நாவல் விமரிசகன் சிபாரிசு பட்டியலில் பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய, ஆனால் முழு கலையமைதி பெறாத நாவல்கள் பட்டியலில் இடம்பெறுகிறது.[3] விமரிசகர் வெங்கட் சுவாமிநாதன் இவரை தமிழில் கவனிக்கத் தக்க எழுத்தாளர் என மதிப்பிட்டார்.
பெருமாள் முருகனின் சிறுகதைகள் அவரின் மண்சார் மொழியையும் பண்பாட்டையும் சாதிய அரசியலையும் உள்ளடக்கியவை. திட்டமிட்ட நிகழ்வுகளைச் சுற்றி நடப்பவையாக இல்லாமல், வாழ்வின் பாதையில் எங்கோ எவரோ தொட்டுச் சென்ற உணர்வினைப் பின்தொடர்ந்து ஒரே ஒரு கணத்தில் எழுந்த உணர்வுப்பொறியைப் பதிவு செய்தவை.
நீர்விளையாட்டு[4] எஸ்.ராமகிருஷ்ணனின் தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் [5]பட்டியலில் இடம் பெறுகிறது
படைப்புகள்
நாவல்கள்
- ஏறுவெயில்(1991)
- நிழல்முற்றம்(1993)
- கூளமாதாரி(2000)
- கங்கணம்(2007)
- மாதொருபாகன்(2010 )
- ஆளண்டாப்பட்சி (2012)
- பூக்குழி (2013)
- ஆலவாயன் (2014)
- அர்த்தநாரி (2014)
- பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை -( 2016)
- கழிமுகம் (2018)
சிறுகதைத் தொகுப்புகள்
- திருச்செங்கோடு-1994
- நீர் விளையாட்டு-2000
- பீக்கதைகள்-2006
- வேப்பெண்ணெய்க் கலயம் - 2012
- பெருமாள்முருகன் சிறுகதைகள் - 2016
- மாயம் - 2020
கவிதைத் தொகுப்புகள்
- நிகழ் உறவு-1991
- கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்-2000
- நீர் மிதக்கும் கண்கள்-2005
- வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - 2012
- கோழையின் பாடல்கள் - 2016
- மயானத்தில் நிற்கும் மரம் - 2016
அகராதி
- கொங்கு வட்டாரச் சொல்லகராதி 2000
கட்டுரைகள்
- ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை(2000)
- துயரமும் துயர நிமித்தமும்(2004)
- கரித்தாள் தெரியவில்லையா தம்பி(2007)
- பதிப்புகள் மறுபதிப்புகள்(2011)
- கெட்ட வார்த்தை பேசுவோம்(2011)
- வான்குருவியின் கூடு (2012)
- நிழல்முற்றத்து நினைவுகள் ( 2012)
- சகாயம் செய்த சகாயம் (2014)
- நிலமும் நிழலும் (2018)
- தோன்றாத்துணை (2019)
- மனதில் நிற்கும் மாணவர்கள் (2021)
மொழிபெயர்ப்புகள்
- SEASONS OF THE PALM 2004 (கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)
- CURRENT SHOW 2004 (நிழல்முற்றம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)
- ONE PART WOMAN 2013 (மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்)
- PYRE (பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்) 2015
- A Goat Thief (பத்துச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு : கல்யாண்ராமன்) 2017
- POONAACHI OR STORY OF A BLOCK GOAT (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: கல்யாண்ராமன்) 2017
- A Lonely harvest (ஆலவாயன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அனிருத்தன் வாசுதேவன்) 2018
- Trail by silence (அர்த்தநாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அனிருத்தன் வாசுதேவன்) 2018
- A black coffee in a coconut shell (சாதியும் நானும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அம்பை) 2017
- Amma (தோன்றாத்துணை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: நந்தினி முரளி, கவிதா முரளிதரன்) 2019
- Rising Heat (ஏறுவெயில் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜனனி கண்ணன்) 2020
- Estuary (கழிமுகம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : நந்தினி கிருஷ்ணன்) 2020
பதிப்புகள்
- கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்)
- நாமக்கல் தெய்வங்கள்
- பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்)
- சாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு)
- கு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்
- பிரம்மாண்டமும் ஒச்சமும்
- உடைந்த மனோரதங்கள்
- சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
- கொங்குச் சிறுகதைகள்
- தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
- உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
- தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா )
உசாத்துணை
- மின் தமிழ் பெருமாள் முருகன் சிறப்பிதழ்
- தமிழ் மின்னிதழ்-பெருமாள் முருகன் நேர்காணல்
- நாமக்கல் கூடு
- தென்றல் இதழ்-எழுத்தாளர் பெருமாள் முருகன்
- கீற்று-மாதொருபாகன் வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
- தமிழ்ஹிந்து-பெருமாள் முருகன் நேர்காணல்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Jan-2023, 06:31:21 IST