under review

ஆ. இரா. வேங்கடாசலபதி

From Tamil Wiki
ஆ.இரா.வேங்கடாசலபதி

ஆ. இரா. வேங்கடாசலபதி (பி. 1967) தமிழக பண்பாட்டு வரலாற்றாய்வாளர். பேராசிரியர், எழுத்தாளர், பதிப்பாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். காலனிய வரலாற்று ஆய்வுகள், நவீனத்தமிழிலக்கிய உருவாக்க வரலாற்றாய்வுகள், பாரதியியல் ஆய்வுகள் மற்றும் பதிப்பு பணிகள் அவரது முக்கியமான பங்களிப்பாக கருதப்படுகிறது.

ஆ. இரா. வேங்கடாசலபதி. புகைப்படம் நன்றி- புது திண்ணை

பிறப்பு, கல்வி

ஆ.இரா. வேங்கடாசலபதி குடியாத்தத்தில் செப்டம்பர் 30, 1967 அன்று பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் 1987-ம் ஆண்டு வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1989-ம் ஆண்டு வரலாறில் முதுகலை பட்டம் பெற்றார். 1996-ம் ஆண்டு தமிழ்ப் பதிப்புலகத்தின் சமூக வரலாறு பற்றிய ஆய்வுக்காக, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

ஆ.இரா.வேங்கடாசலபதி நெல்லை மனோமணியம் சுந்தரனார் பலக்லைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக 1995-2000 வரை பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். சிகாகோவில், சிங்கப்பூரிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

ஆய்வு வாழ்க்கை

ஆ.இரா. வேங்கடாசலபதி தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றாய்வில் காலனியாதிக்க காலகட்டம், பத்தொன்பதாம் நூற்றாண்டின்் தமிழ் மறுமலர்ச்சிக் காலகட்டம் ஆகிவற்றில் குறிப்பான ஆய்வுகளை மேற்கொண்டு புதிய பார்வைகளை உருவாக்கியவர் . "ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுக்களம் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பண்பாட்டு மறுமலர்ச்சி சார்ந்தது. பழந்தமிழ் இலக்கியமரபு மீட்டு எடுக்கப்பட்ட காலம் அது. நவீனத் தமிழிலக்கியம் உருவாகி வந்த காலமும்கூட. ஆகவே இன்றைய தமிழிலக்கியத்தின் இவ்விரு அடித்தளங்களைப் பற்றியும் மிகமுக்கியமான ஆய்வுகளை ஆ.இரா.வேங்கடாசலபதி செய்திருக்கிறார். இன்றைய புரிதல்கள் பலவற்றை வேங்கடாசலபதி உருவாக்கியிருக்கிறார் எனில் அது மிகையல்ல. பாரதி ஆய்வாளர்களின் வரிசையிலும் வேங்கடாசலபதிக்கு முக்கியமான இடம் உண்டு." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

காலனிய காலகட்டத்து தமிழக வரலாற்றை புதிய கோணங்களில் அணுகுவது ஆ.இரா. வேங்கடாசலபதியின் முக்கியமான பங்களிப்பு. காந்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதியார், புதுமைப்பித்தன், ஏ. கே. செட்டியார், எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு, ஜி.யு. போப், உ.வே.சாமிநாதையர், ஆஷ் போன்ற ஆளுமைகளை சமூக-வரலாற்று பின்புலத்தில் வைத்து ஆய்வு செய்யும் நோக்கில் எழுதினார்.

ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுகள் மூன்று வெவ்வேறு களங்களைச் சார்ந்தவை என பொதுவாக வகுக்கப்படுகிறது. இந்திய சுதந்திரப்போராட்டம் மற்றும் காலனியாதிக்க கால வரலாறு சார்ந்த ஆய்வு. தமிழ் நவீன இலக்கியத்தின் உருவாக்கம் சார்ந்த ஆய்வு. பாரதி ஆய்வு. இந்த தளங்களின் தன் முன்னோடிகளில் இருந்து மிகவும் முன்னேறிச்சென்று புதிய சித்திரங்களை உருவாக்கவும், பழைய நம்பிக்கைகளை ஆராய்ந்து உண்மைகளை முன்வைக்கவும் ஆ.இரா.வேங்கடாசலபதியால் இயன்றுள்ளது.

காலனியாதிக்கக் கால வரலாறு

ஆ.இரா.வேங்கடாசலபதி 1987ல் எழுதிய வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும் என்னும் சிறிய நூல் வழியாக காலனியாதிக்க கால வரலாற்றாய்வுக்குள் நுழைந்தார். அந்நூல் அவருடைய பிற்கால ஆய்வுகளுக்கான முன்வரைவாகவும் அமைந்தது. 1990ல் அவர் ஆ. சிவசுப்பிரமணியனுடன் இணைந்து எழுதிய பின்னி ஆலை வேலை நிறுத்தம் என்னும் நூல் அவருக்கு தமிழ் பண்பாட்டு வரலாற்றாய்வில் முக்கியமான இடத்தை அளித்தது. ஆஷ் அடிச்சுவட்டில், திராவிட இயக்கமும் வேளாளரும் போன்ற நூல்கள் முக்கியமானவை. ஏ.கே.செட்டியார் உருவாக்கிய காந்தி ஆவணப்படத்தின் வரலாற்றை எழுதியிருக்கிறார். தொலைந்துபோன காந்தி ஆவணப்படத்தின் நகலை அமெரிக்காவில் கண்டடைந்து மீட்டது வேங்கடாசலபதியின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ என்னும் நூலுக்காக வேங்கடாசலபதி சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.

நவீனத்தமிழிலக்கிய வரலாற்றாய்வு

ஆ. இரா.வேங்கடாசலபதி நவீனத் தமிழிலக்கியம் உருவாகி வந்த பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் பண்பாட்டு வரலாற்றுப் பின்புலம் சார்ந்து அடிப்படையான ஆய்வுகளைச் செய்தார். தமிழின் தொடக்ககால சந்தைவிற்பனைக்கான வெளியீடுகள் பற்றிய முச்சந்தி இலக்கியம் , தமிழில் தொடக்ககால நாவல்களும் அவற்றின்மீதான வாசிப்பும் உருவாகி வந்த வரலாறு பற்றிய நாவலும் வாசிப்பும் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் கலைக்களஞ்சியங்கள் உருவாகி வந்த வரலாற்றையும் விரிவாக எழுதியுள்ளார்.

பாரதி ஆய்வு

ஆ.இரா.வேங்கடாசலபதி பாரதியின் படைப்புகளின் பதிப்பு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தும் பாரதியியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். பாரதியின் இந்தியா இதழில் வெளிவந்த கருத்துப்படங்களைத் தொகுத்தார். 'விஜயா’, 'தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ்களிலிருந்து பாரதியின் எழுத்தையும் திரட்டினார். பாரதியின் தேசம் கடந்த நோக்கு, அவரது வாழ்க்கை சரிதைகள் எழுதப்பட்ட பின்னணி ஆகியவற்றை விவரிக்கும் கட்டுரைகள் அவரது தனித்துவமான பங்களிப்புகள். பாரதியின் ஆக்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டது எப்படி எனும் வரலாற்றையும் எழுதினார்.

நடை

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ஆய்வாளர் என்பதற்கு அப்பால் அவருடைய தீவிரமான புதிய மொழிநடைக்காகவும் தமிழிலக்கியத்தில் இடமுண்டு. பழந்தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவதும் தனித்தமிழில் எழுதுவதும் அவருடைய வழக்கமென்றாலும் அவருடைய நடை புதியதாகவும் செறிவானதாகவும் அமைந்துள்ளது. ஆய்வுநூல்களை ஆர்வமூட்டும் வாசிப்பனுபவம் அளிப்பவையாக எழுதியவர் என சலபதி மதிப்பிடப்படுகிறார்.

மொழியாக்கம்

ஆ.இரா.வேங்கடாசலபதி பாரதிதாசனின் 'அமைதி’ நாடகம், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே சில குறிப்புகள்’ ஆகிய நூல்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். பாப்லோ நெரூதாவின் கவிதைகளை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். ரொமீலா தாப்பரின் வரலாறும் கருத்தியலும் அவர் மொழியாக்கம் செய்த நூல்களில் குறிப்பிடத்தக்கது. தமிழில் தான் எழுதிய ஆய்வுகளை ஆங்கிலத்தில் தானே மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்.

பதிப்பு

ஆ.இரா.வேங்கடாசலபதி பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்து மறைந்து போன நூல்களை விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தார். வெவ்வேறு பழைய இதழ்களில் சிதறிக்கிடந்த அக்காலக் கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டார். எஸ்.ஜி.ராமானுஜலு நாயிடு, வ.உ.சி, மறைமலையடிகள் போன்றவர்களின் நூல்களை பதிப்பித்தார். புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பை வெளியிட்டார்.

விவாதங்கள்

தமிழில் அரசியல் நோக்குடன் உருவாக்கப்பட்ட பல பிழையான செய்திகளை சரியான தரவுகளுடன் முன்வைத்து உண்மையை நிறுவியவர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

  • ஆஷ் படுகொலையின் பின்னணியை விரிவாக ஆராய்ந்து ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள் என்னும் நூல் ஆஷ் தலித்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டமையால் உயர்சாதிநோக்கில் கொல்லப்பட்டார் என்னும் பிரச்சாரத்தை மறுத்து அவருடைய கொலை சரியாகத் திட்டமிடப்படாமல் நிகழ்ந்த ஒரு வகையான தற்செயலே என்று நிறுவுகிறது.
  • வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கு தென்னாப்ரிக்கத் தமிழர்கள் கொடுத்தனுப்பிய பல்லாயிரம் ரூபாய் பணத்தை காந்தி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்னும் பொய்ப்பிரச்சாரத்தை ஆ.இரா.வேங்கடாசலபதியின் வ.உ.சியும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா என்னும் நூல் விரிவான ஆதாரங்களுடன் மறுத்து உண்மையை நிறுவுகிறது.

மதிப்பீடு

ஆ. இரா.வேங்கடாசலபதி காலனியாதிக்க வரலாறு, தமிழ் நவீன இலக்கிய உருவாக்க வரலாறு, பாரதி ஆய்வு ஆகியவற்றில் முதன்மைப் பங்களிப்பை செலுத்திய ஆய்வாளர். தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தக்க உரைநடையாளர் என்றும் கருதப்படுகிறார். கறாரான புறவயமான ஆய்வுமுறைமையை கடைப்பிடிப்பவர், விரிவான வரலாற்று நோக்கு கொண்ட வரலாற்றெழுத்தாளர் என்னும் வகையில் மதிப்பிடப்படுகிறார். தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்களில் ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக எழுதி இந்திய அளவில் விரிவாக அறிமுகமாகியிருப்பவர்.

விருது

  • ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது (2024) -
  • புதுமைப்பித்தன் விளக்கு விருது - 2017
  • இயல் விருது - 2018
  • எஸ்.ஆர்.வி இலக்கிய விருது - 2015
  • 'எழுக நீ புலவன்' நூலுக்காக கு. சின்னப்ப பாரதி நினைவு விருது, த.மு.எ. க.ச - 2017
  • வி.சி குழந்தைசாமி நினைவு பரிசு - 2018
  • V.K.R.V. Rao prize in Social Science Research - 2007
  • Visiting Fellow, Maison des Sciences de l'Homme [fr], Paris - 1996
  • Visiting Fellow, Indo-French Cultural Exchange Programme, Maison des Sciences de l'Homme [fr, Paris (1997–1998)
  • Visiting Assistant Professor, Department of South Asian Languages and Civilizations, University of Chicago (1999)
  • Charles Wallace Visiting Fellow, Centre of South Asian Studies, University of Cambridge (2006).

நூல் பட்டியல்

தமிழ்

  • எழுக, நீ புலவன்! பாரதி பற்றிய கட்டுரைகள் (2016)
  • ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள் (2016)
  • பாரதி: கவிஞனும் காப்புரிமையும் (2015)
  • முச்சந்தி இலக்கியம் (2004)
  • முல்லை: ஓர் அறிமுகம் (2004)
  • நாவலும் வாசிப்பும் (2002)
  • அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் (2000)
  • திராவிட இயக்கமும் வேளாளரும், 1927-1944 (1994)
  • பின்னி ஆலை வேலை நிறுத்தம் (ஆ. சிவசுப்பிரமணியனுடன்) (1990)
  • வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும் (1987)
  • வ.உ.சியும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா
  • ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’

பதிப்பித்தவை

  • உ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம், தொகுதி 1, 1877-1890 (2018)
  • புதுமைப்பித்தன் வரலாறு, தொ.மு.சி. ரகுநாதன் (2016)
  • அண்ணல் அடிச்சுவட்டில், ஏ.கே. செட்டியார் (2016, 2003)
  • சென்று போன நாட்கள், எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு (2015)
  • பாரதியின் சுயசரிதைகள் (2014)
  • வ.உ.சி.யின் திலக மகரிஷி (2010)
  • பாரதி கருவூலம்: ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (2008)
  • புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் (2006)
  • பாரதி, 'விஜயா’ கட்டுரைகள் (2004)
  • புதுமைப்பித்தன் கட்டுரைகள் (2002)
  • புதுமைப்பித்தன் கதைகள் (2000)
  • வ.உ.சியின் சிவஞானபோதம் உரை (1999)
  • அன்னை இட்ட தீ, புதுமைப்பித்தன் (1998)
  • வ.உ.சியும் பாரதியும் (1994)
  • பாரதியின் கருத்துப்படங்கள்: 'இந்தியா’: 1906-10 (1994)
  • மறைமலை அடிகளார் நாட்குறிப்புகள் (1988)
  • வ.உ.சி. கடிதங்கள் (1984)
  • சாதிக்கு பாதி நாளா? ராஜாஜியின் கல்வித் திட்டம்- தே. வீரராகவன் (2021)

மொழியாக்கம்

  • வரலாறும் கருத்தியலும், ரொமிலா தாப்பர் (2008)
  • துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், பாப்லோ நெரூடா (2005)

ஆங்கிலத்தில்

  • Ramanujan’s Lost Mark-sheet: Byways of History
  • Tamil Characters: Portraits, Personalities, Politics
  • Who Owns that Song?: The Battle for Subramania Bharati’s Copyright (2018)
  • Chandrahasam (2015) (ed.) S. Venkatesan, S. Balashanmugam,
  • Beyond Tranquebar: Grappling Across Cultural Borders in South India (2014) (co-edited with Esther Fihl)
  • The Province of the Book: Scholars, Scribes, and Scribblers in Colonial Tamilnadu (2012)
  • Flowers at Dawn (2012) (trans.) Singai Ma. Elangkannan,
  • Red Lilies and Frightened Birds: 'Muttollayiram’ (2011)
  • Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry (2010)
  • Review of Development and Change XIV (1–2) (Guest Editor with Esther Fihl)
  • Cultural Encounters in Tranquebar: Past and Present (2009)
  • In Those Days There Was No Coffee: Writings in Cultural History (2006)
  • A.K. Chettiar, In the Tracks of the Mahatma: The Making of a Documentary (2006)
  • Chennai, Not Madras: Perspectives on the City (2006)
  • Sundara Ramaswamy, J.J. Some Jottings (2003)
  • Guest Editor, South Indian Folklorist, Special number on 'Folklore in Print’ (1999)

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Dec-2024, 18:04:45 IST