under review

ஆ. சிவசுப்பிரமணியன்

From Tamil Wiki
சிவசுப்பிரமணிய என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவசுப்பிரமணிய (பெயர் பட்டியல்)
ஆ.சிவசுப்ரமணியம்
ஆ.சிவசுப்ரமணியம்
ஆ.சிவசுப்ரமணியன்

ஆ.சிவசுப்பிரமணியன்.(பிறப்பு: ஏப்ரல் 9, 1943 ) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வாளர் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்து ஆவணப்படுத்தியவர். தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர். நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டு, மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அவரது ஆய்வுகள் அமைந்தன.

பிறப்பு, கல்வி

ஆ. சிவசுப்பிரமணியன் நெல்லை மாவட்டம் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) ஓட்டப்பிடாரத்தில் ஏப்ரல் 9, 1943 அன்று பிறந்தார். பெற்றோர் பெயர் ஆழ்வாரப்பன், சுப்பம்மாள். தந்தையாரின் பணி நிமித்தம் இவரது இளமைக் காலமும் பள்ளிக் கல்வியும் ஓட்டப்பிடாரம், சென்னைச் சூளைமேடு, திருநெல்வேலி என்று தமிழகத்தின் பல ஊர்களில் அமைந்தது.

திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். 1963-1967 வரை நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1967-ல் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியேற்று. ஏப்ரல், 2001 வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஆ.சிவசுப்ரமணியம் மனைவி பெயர் அருணா. ஆழ்வார், ராமலிங்கம் என இரு மகன்கள், சுப்பு என ஒரு மகள். ஆ.சிவசுப்ரமணியம் தூத்துக்குடியில் வசிக்கிறார்.

பேராசிரியர் கு.அருணாசலக் கவுண்டர் , தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, ப.மாணிக்கம், தோழர் நல்லக்கண்ணு போன்ற ஆளுமைகளுடன் 17 வயதிலேயே இவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர்.

ஆய்வு வாழ்க்கை

தொடக்கம்

ஆ.சிவசுப்ரமணியன் பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற கட்டுரையை எழுதினார். நீண்ட கள ஆய்வு செய்துஅதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை எழுதினார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிடைக்க ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

ஆ.சிவசுப்ரமணியம் கிறிஸ்தவ வரலாறு, அரசியல்வரலாறு, பண்பாட்டு அரசியல், நாட்டாரியல் என்னும் நான்கு களங்களில் முதன்மையான பங்களிப்பை ஆற்றியவர்.

கிறிஸ்தவ வரலாறு

ஆ.சிவசுப்ரமணியனின் ஆய்வுகளில் தமிழகத்தில் கிறிஸ்தவ மதம் உருவாகி வந்த காலகட்டத்தைப் பற்றிய பதிவுகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. கிறிஸ்தவமும் சாதியும் அவற்றில் மிக அதிகமாகக் கவனிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட நூல். தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார், கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும், தமிழ்க்கிறிஸ்தவம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

தமிழக அரசியல் வரலாறு

ஆ.சிவசுப்ரமணியன் பதினேழாம் நூற்றாண்டு முதல் தமிழக அரசியல் வரலாற்றை ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார். அடிமை முறையும் தமிழகமும், வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும், ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், பின்னி ஆலை வேலைநிறுத்தம், வ.உ.சி. ஓர் அறிமுகம், ஆகஸ்ட் போராட்டம்ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

பண்பாட்டு அரசியல்

ஆ.சிவசுப்ரமணியம் தன்னுடைய இடதுசாரிக் கொள்கையின் அடிப்படையில் தமிழகப் பண்பாட்டை ஆராய்ந்து பல நூல்களை முன்வைத்திருக்கிறார். அவை எந்தப் பாதை, தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும், பிள்ளையார் அரசியல், பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள், மதமாற்றத்தின் மறுபக்கம், விலங்கு உயிர்ப்பலி தடைச் சட்டத்தின் அரசியல் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை

நாட்டாரியல்

ஆ.சிவசுப்ரமணியன் தமிழகத்தில் நாட்டாரியலாய்வில் குறிப்பிடத்தக்க ஆளுமை. நாட்டாரியல் தரவுகளை சேகரிப்பது மட்டுமல்லாமல் அவற்றை அரசியல்நோக்குடன் ஆய்வுசெய்வதும் அவற்றிலிருந்து சமூக -அரசியல் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளுவதும் அவருடைய வழிமுறை. அதற்கு நா.வானமாமலையின் முன்னுதாரணம் அவருக்கு உண்டு. பல நாட்டாரியல் படைப்புகளை பதிப்பாக்கியிருக்கிறார். தமிழரின் தாவரவழக்காறுகள், கூலித் தமிழ் காட்டும் சமுதாயம், நாட்டார் வழக்காற்றியல் அரசியல், அடித்தள மக்கள் வரலாறு போன்றவை முக்கியமான நூல்கள்

இலக்கிய இடம்

ஆ.சிவசுப்ரமணியனின் ஆய்வுமுறை மேலைநாட்டு நாட்டாரியல், சமூகவியல் ஆகிய அறிவுத்துறைகளின் முறைமைகளை ஒட்டியது. நா.வானமாமலையிடமிருந்து பெற்றுக்கொண்ட மார்க்ஸிய கண்ணோட்டமும் இணைந்து அவருடைய பார்வை உருவானது.

மார்க்சிய செவ்வியலை (அரசு, கலை போன்ற மேற்கட்டுமானங்கள் உற்பத்தி, உழைப்பு, சுரண்டல் போன்ற கீழ்கட்டுமானங்களால் மட்டுமே உருப்பெற்றவை) தன் ஆய்வுகளின் அடிப்படையாகக் கொண்டிருந்தவர், பிற்காலத்தில் அதிலிருந்து சற்று விலகி சாதி போன்ற பண்பாட்டுக் காரணிகளின் தோற்றத்தை பொருளியல் அடிப்படையில் மட்டுமே ஆராய்வது முழுமையாக இருக்க முடியாது என்று எண்ண தொடங்கினார்.

நாட்டார் வழக்காறுகளை வெறும் ஆய்வுப் பொருளாக மட்டும் பார்க்காமல், இந்த வழக்காற்றிற்கு யார் உரிமையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையையும் வழக்காற்றையும் மேம்படுத்த முனைவதாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆய்வுகள் பயன்பாட்டு வழக்காற்றியலாக (Applied Folklore) அமைந்திருக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தும் ஆ.சிவசுப்ரமணியம் ஆய்வை ஒரு பண்பாட்டு- அரசியல் செயல்பாடாக அணுகுகிறார்.

“மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளும் சடங்குகளும் அமைகின்றன. இவற்றை நாம் அப்படியே வரலாற்றில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போன்று இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.” என்று ஆ.சிவசு வெறொரு நூலுக்கான முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். (அடித்தள மக்கள் வரலாறு)

விருதுகள்

விளக்கு விருது - 2018

நூல்கள்

ஆய்வுநூல்கள்

  • பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)
  • அடிமை முறையும் தமிழகமும் (1984)
  • வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986 )
  • ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986 )
  • மந்திரமும் சடங்குகளும் (1988 )
  • பின்னி ஆலை வேலைநிறுத்தம் ( 1990) (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)
  • வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)
  • கிறித்தவமும் சாதியும் (2001 )
  • தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)
  • நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)
  • பஞ்சமனா பஞ்சயனா (2006)
  • தோணி (2007)
  • கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007 )
  • கோபுரத் தற்கொலைகள் (2007)
  • வரலாறும் வழக்காறும் (2008 )
  • ஆகஸ்ட் போராட்டம் (2008)
  • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)
  • உப்பிட்டவரை…(2009)
  • இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)
  • பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)
  • படித்துப் பாருங்களேன்….(2014)
  • பனை மரமே! பனை மரமே! (2016)
  • தமிழரின் தாவரவழக்காறுகள் (2020)
  • பண்பாடு முதல் கானுயிர் வரை (2020)
  • நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2021)
  • தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி
  • வரலாற்றுப் பொருள் முதல்வாதம் – ஓர் அரிச்சுவடி
  • காலத்தை வென்ற மாவீரர்கள்
  • வ.உ.சி.யின் திரிசூலம்
  • வரலாற்றில் ஒரு வாழ்வு
  • பிராமண போஜனமும் சட்டிச் சோறும்
  • காலனியமும் கச்சேரித்தமிழும்
  • புத்தகத்தின் பெருநிலம்
  • கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்
  • பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்
  • மந்திரமும் சடங்குகளும்
  • பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு (இணையாசிரியர் ச.நவநீதகிருஷ்ணன்)
  • வரலாறும் வழக்காறும்
  • தமிழ்க்கிறிஸ்தவம்
  • சாதியும் சமயமும்
  • வாசக மனப்பதிவுகள்
  • தனித்து ஒலிக்கும் குரல் (நேர்காணல்கள்)

சேகரித்து பதிப்பித்த நூல்கள்

  • பூச்சியம்மன் வில்லுப்பாட்டு (1989, 2013)
  • தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம் (தொகுதி 10) (2003)
  • தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் (தொகுதி10) (2004)
  • உபதேசியார் சவரிராய பிள்ளை 1801 -1874 (2006)
  • கல்லறை வாசகப்பா – கூத்து நாடகம் (2007)
  • பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு (2008)

குறுநூல்கள்

  • எந்தப் பாதை (1992)
  • தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும் (1997)
  • பிள்ளையார் அரசியல் (2000)
  • பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் (2014)
  • மதமாற்றத்தின் மறுபக்கம் (2002)
  • விலங்கு உயிர்ப்பலி தடைச் சட்டத்தின் அரசியல் (2003)
  • புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் (2006)
  • இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள் (2012)
  • தமிழ்ச்சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகல் (2012)
  • இந்தியாவில் சாதிமுறை அம்பேத்கரும் காந்தியும் (2014)
  • அம்பேத்கரும் மனுஸ்மிருதியும் (2014)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Apr-2023, 23:07:05 IST