புதுமைப்பித்தன்
To read the article in English: Pudhumaipithan.
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ் சிறுகதைகளை தொடங்கிவைத்தவர்களுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். மணிக்கொடி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் உரைநடையின் அனைத்து சாத்தியமான அழகியல் வடிவங்களையும் தன் புனைவில் முயற்சித்த முன்னோடி.
பிறப்பு கல்வி
புதுமைப்பித்தன் ஏப்ரல் 25, 1906 அன்று கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை, நிலப்பதிவு தாசில்தாராக அரசாங்கத்தில் பணியாற்றினார். தாயார் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தன் தங்கை ருக்மிணி. புதுமைப்பித்தனின் எட்டு வயதில் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின் சித்தியிடம் வளர்ந்தார்.
புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை தென்ஆற்காடு உட்பட பல ஊர்களுக்கு பணி மாற்றம் பெற்றார். இதனால் புதுமைப்பித்தன் தனது இளமைக்காலக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் பயின்றார். 1918-ம் ஆண்டு தந்தை ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரான திருநெல்வேலியில் ஆர்ச் யோவான் ஸ்தாபன பள்ளியில் படிப்பை நிறைவு செய்தார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலை (B.A.) சேர்ந்து 1931-ம் ஆண்டு பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தை சேர்ந்த கமலாம்பாளை ஜூலை 31,1931 அன்று மணந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946-ம் ஆண்டு தினகரி என்ற மகள் பிறந்தாள்.
புதுமைப்பித்தன் பட்டப் படிப்பை முடிப்பதற்குள் இருபத்தைந்து வயதை கடந்திருந்ததால் அரசு பணியில் சேரும் வாய்ப்பு இல்லாமல் ஆனது. புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை புதுமைப்பித்தனை சட்டம் படிக்க வைக்க விரும்பினார். புதுமைப்பித்தனின் இலக்கியம் கற்க விரும்பினார். திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள முத்தையா பிள்ளையின் "கடைச் சங்கம்" என்ற புத்தக கடைக்குச் சென்று நண்பர்களுடன் கூடி இலக்கியம் பேசத் தொடங்கினார். இதனால் தந்தையுடன் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு சென்னை சென்றார்.
1933-ம் ஆண்டு மனைவியை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கச் சொல்லி தனியாக சென்னை சென்றார். புதுமைப்பித்தன் சென்னையில் டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா வுடன் வேலையில்லாமல் இருந்த போது காரைக்குடியில் இருந்து ராய. சொக்கலிங்கம் வெளியிட்டு வந்த ’ஊழியன்’ பத்திரிக்கையில் உதவி ஆசிரியர் பணி கிடைத்தது. ஊழியனில் மற்றொரு ஆசிரியருடன் ஏற்பட்ட சண்டையில் வேலையை விட்டு மீண்டும் சென்னை சென்றார். மணிக்கொடி இதழின் பொறுப்பாசிரியராக பி.எஸ். ராமையா பதவி ஏற்ற போது அவருக்கு துணையாக உதவி ஆசிரியாக புதுமைப்பித்தன் பணிபுரிந்தார்.
1936-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக மணிக்கொடி இதழ் நின்றது. இதன் பின் டி.எஸ். சொக்கலிங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் 'தினமணி’ இதழின் ஆசிரியராக புதுமைப்பித்தன் பொறுப்பேற்றார். 1943-ம் ஆண்டு வரை தினமணியில் வேலை செய்த புதுமைப்பித்தன் அதன் நிர்வாகத்திற்கும், டி.எஸ். சொக்கலிங்கத்திற்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் அவருடன் சேர்ந்து விலகினார்.
1944-ம் ஆண்டு டி.எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய 'தினசரி’ பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். தினசரியில் வேலை செய்து கொண்டிருந்த போது புதுமைப்பித்தனுக்கு திரைத் துறையில் நாட்டம் ஏற்பட்டது. 1946-ம் ஆண்டு அவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தது.
விடுதலைப் பத்திரம்
1943-ம் ஆண்டு சென்னை மீது ஜப்பானியர்களின் குண்டுவீச்சு பயம் இருந்த காரணத்தினால் புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாம்பாளை திருநெல்வேலியில் தங்க வைக்க விரும்பினார். சென்னை, திருநெல்வேலி என இரண்டு இடங்களில் வாடகை கொடுக்க இயலாத சூழலில் இருந்த புதுமைப்பித்தன் தன் தந்தை சொக்கலிங்கப் பிள்ளையிடம் இருந்த நான்கு வீடுகளில் ஒன்றில் கமலாம்பாள், மகள் கண்மணி இருவரையும் தங்க வைக்க விரும்பினார். அதற்கு சொக்கலிங்கப் பிள்ளை மறுக்கவே புதுமைப்பித்தன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தந்தையிடம் பாகப் பிரிவினைப் பெற்றார்.
தன் தந்தையிடம் வாங்கிய நிலத்தை புதுமைப்பித்தன் தினசரியை விட்டு விலகி வறுமையில் இருந்த காலத்தில் குறைந்த விலைக்கு விற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை 'குலோப்ஜான் காதல்’ காந்தி இதழில் 1933-ம் ஆண்டு வெளிவந்தது. 1934 முதல் புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரைப் பிள்ளையார்’ சிறுகதை மணிக்கொடி இதழில் வெளிவந்த முதல் சிறுகதை. இச்சிறுகதை ஏப்ரல் 1934, 22, 29-ம் தேதிகளில் தொடர்ந்து வெளிவந்தது. மார்ச் 1935-ல் மணிக்கொடி இரண்டாம் முறையாக தொடங்கப்பட்ட போது அதன் முதல் இதழில் புதுமைப்பித்தன் 'துன்பக்கேணி’ சிறுகதை வெளிவந்தது. தொடர்ந்து புதுமைப்பித்தனின் சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் போன்ற இதழ்களில் வெளிவந்தன. புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் தன் இலக்கிய ரசனைப் பற்றி நமது கலைச் செல்வம், கடவுளின் கனவும் கவிஞனின் கனவும், இலக்கியத்தில் உட்பிரிவுகள், இலக்கியத்தின் இரகசியம் போன்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். மேலும் கம்பன், பாரதி, பாரதிதாசன் எனத் கவிஞர்கள் குறித்தும், கவிதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதினார்.
தமிழர் நாகரீகத்தின் கிராம வாழ்க்கை, அரிஸ்டாட்டில் கண்ட ராஜீயப் பிராணி போன்ற தனிக் கட்டுரைகள், இராமாயணம், மகாபாரத கதாபாத்திரங்கள் பற்றி சிறு கட்டுரைகள், நாட்டுப் பாடல்கள், தனிப்பாடல்கள் பற்றிச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். 'தினமணி’, 'தினசரி’ நாளிதழ்களில் பணியாற்றிய போது தொடர்ந்து புத்தக மதிப்புரைகளை ரசமட்டம் என்ற பெயரில் எழுதினார்.
கவிதைகள்
புதுமைப்பித்தன் வசன கவிதைகளை ஆதரிக்கவில்லை. யாப்பில் அடங்கும் கவிதைகளையே புதுமைப்பித்தன் எழுதினார். சரஸ்வதியை நோக்கி கேட்கிற தொனியில் புதுமைப்பித்தன் எழுதிய 'நிசந்தானோ சொப்பனமோ’ என்ற கவிதை பிரபலமானது.
புதுமைப்பித்தன் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதினார். வறுமையில் வாழ்ந்த கு.ப.ரா இறந்த போது நிதி திரட்டியவர்களை கேலி செய்து 'ஓகோ உலகத்தீர்! ஓடாதீர்!’ என்ற கவிதையை எழுதினார். இளம் காதலர்களை கேலி செய்து 'காதல் பாட்டு’ என்ற தலைப்பில் நையாண்டி கவிதை எழுதினார். அந்த கால இந்திய நிலையை 'இணையற்ற இந்தியா’ என்ற தலைப்பில் கேலிக் கவிதை எழுதினார். 'தொழில்’ என்ற கவிதை முருகனை நோக்கி பாடுவதாகவும் தொழிலில் உள்ள ஏற்ற தாழ்வுகளைக் கண்டிப்பதாகவும் அமைந்தது.
நாடகங்கள்
புதுமைப்பித்தன் சில சிறு நாடகங்கள் எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் எழுதிய முதல் நாடகம் 'பக்த குசேலா - கரியுக மாடல்’. குசேலர் கதையை பகடி செய்து எழுதிய நாடகம் இது. புதுமைப்பித்தனின் 'நிச்சயமா நாளைக்கு’ நாடகம் மத்தியதரக் குடும்பத்தின் அன்றாட சிக்கல்களைப் பற்றி பேசுவது. செல்வம் அதிகமாக கொண்ட அறிவிலியையும், ஞானம் கொண்ட ஏழைக்கும் இடையில் நடக்கும் போட்டி நாடகம் 'வாக்கும் வக்கும்’.
வரலாற்று நூல்கள்
புதுமைப்பித்தன் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாழ்க்கை வரலாற்றை 'பேசிஸ்ட் ஜடாமுனி’ என்ற தலைப்பில் எழுதினார். ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வாழ்க்கையை 'கப்சிப் தர்பார்’ என்ற தலைப்பில் எழுதினார். கப்சிப் தர்பாரின் முதல் பகுதி மட்டும் புதுமைப்பித்தன் எழுதினார். பிற்பகுதிகளை பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய ந. ராமரத்னம் எழுதினார்.
நாவல்
புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிய 'சிற்றன்னை’ நாவல் எழுதி முடிக்கப்படாமல் பாதியில் நின்றது. புதுமைப்பித்தன் ஒரு நாவலுக்கு 'மூக்கபிள்ளை’ எனப் பெயரிட்டிருந்தார். அதனை பெருநாவலாக எழுதும் கனவு புதுமைப்பித்தனுக்கு இருந்தது.
மொழிபெயர்ப்புகள்
புதுமைப்பித்தன் ஐம்பத்தியெட்டு சிறுகதைகளுக்கு மேல் உலக இலக்கியத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய 'பலிபீடம்’ நாவலையும், ஷேக்ஸ்பியர் நாடகங்களையும் மொழிபெயர்த்தார்.
திரைப்படத் துறை
புதுமைப்பித்தன் எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த 'அவ்வையார்’ படத்தின் கதை வசனம் எழுத ஒப்பந்தமாகியிருந்தார். எனினும் படம் தயாரான போது புதுமைப்பித்தனின் வசனம் இடம்பெறவில்லை. புதுமைப்பித்தன் ஏ. முத்துஸ்வாமி இயக்கிய 'காமவல்லி’ என்னும் படத்திற்கு கதை வசனம் எழுதினார். அதன் பின் சொந்தமாக படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 'பர்வத குமாரி புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் ’வசந்தவல்லி’ என்னும் தலைப்பில் "குற்றாலக் குறவஞ்சி" கதையை படமாக்க திட்டமிட்டார். இப்படம் பத்திரிக்கையில் விளம்பரம் வந்ததோடு நின்றது. இதனால் மீண்டும் வறுமை நிலைக்கு திரும்பினார்.
பின் பாகவதரின் படத்துக்குக் கதை வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பாகவதர் தயாரித்த 'ராஜமுக்தி’ என்ற படத்திற்கு புதுமைப்பித்தன் வசனம் எழுதினார். 1947-ம் ஆண்டு ராஜமுக்தி படக்குழுவினருடன் புனா சென்றார் அங்கே அவருக்கு காச நோய் ஏற்பட்டது. உடல்நிலை மோசமாக 1948-ம் ஆண்டு புனாவிலிருந்து திருவனந்தபுரம் திரும்பினார்.
இலக்கிய இடம்
புதுமைப்பித்தன் நவீன தமிழ் சிறுகதைகளில் பல வடிவச் சோதனைகளைச் செய்தவர். திகில் கதைகள், பேய் கதைகள், துப்பறியும் கதைகள், யதார்த்தக் கதைகள், தத்துவக் கதைகள், உருவகக் கதைகள் எனச் சிறுகதையின் அனைத்து வடிவச் சாத்தியத்தையும் முயற்சித்தவர். "தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு முன்னோடிகளோ, தடங்களோ இல்லை. அப்படி இல்லாததும் அவருக்கு அநுகூலமாக அமைந்தது அவரது இலக்கிய அழகியலை "மாற்றுப்பார்வை" என்பதாக வரையறுக்கலாம்" என்று சு.வேணுகோபால்[1] குறிப்பிடுகிறார்.
"வ.வே.சு ஐயரால் தொடங்கப் பெற்ற சிறுகதை மரபு, புதுமைப்பித்தனிடத்து தமிழாகி, தமிழ் உரைநடையின் சிகரமாகி, அகில உலகிற்கும் தமிழின் பெருமையைக் காட்டி நிற்கிறது" என கா.சிவத்தம்பி மதிப்பிடுகிறார். "புதுமைப்பித்தன் பரம்பரை எனக்கூறத்தக்க வகையில் தமது வழியில் புதிய சிறுகதை எழுத்தாளர்கள் உருவாவதற்கு பிதாமகராகவும், உந்துசக்தியாக விளங்கியவர்" என்கிறார் தொ.மு.சி. ரகுநாதன். "தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியில் அளவுக்கு மிஞ்சிய சோதனைகள் செய்து உருவகத்தில், உள்ளடக்கத்தில், கற்பனையில் என்று பல்வேறு சமயங்களில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு அவருக்குப் பின் வந்த படைப்பாளர் பலர் அவர் வழியைப் பின்பற்றும் பக்தர்களாக உருவாக்கியது புதுமைப்பித்தனின் சிறுகதை மேதைமை" என சிட்டி-சிவபாதசுந்தரம் இரட்டையர் மதிப்பிடுகின்றனர்.
"புதுமைப்பித்தனின் இலக்கியத்தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக்கதைகள், மிகை யதார்த்தக்கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்தரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார். அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டுமே நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதைவடிவம், நடைஆகியவை பற்றித் தனி கவனமேதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள் எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன" என்கிறார் ஜெயமோகன்.
புதுமைப்பித்தன் தன் கதைகளைப் பற்றி, "என் கதைகளின் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னது தான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம்" என்று 'என் கதைகளும் நானும்’ கட்டுரையில் கூறுகிறார்.
விவாதங்கள்
- அ. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் நடந்த தழுவல் குறித்த விவாதம் [ரசமட்டம் கட்டுரைகள்]
- ஆ. மூனாவருணாசலமே மூடா விமரிசன கவிதை.- மு.அருணாசலம், இன்றைய தமிழ் உரைநடை என்ற தன் நூலில் மணிக்கொடி இயக்கத்தை குறிப்பிடாமல் விட்டமைக்காக பாடியது.
- தமிழில் தழுவி எழுதப்பட்ட 'பில்கணன் நாடகம்’ சொந்தப் படைப்பு எனப் பெயரிடப்பட்டிருந்ததால் அதனைக் கண்டித்து 'இரவல் விசிறி மடிப்பு’ என்ற பெயரில் நீண்ட கட்டுரை எழுதினார்.
இறுதிக்காலம்
காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதுமைப்பித்தன் தன் இறுதி நாட்களை திருவனந்தபுரத்தில் உள்ள தன் மனைவியின் பிறந்த வீட்டிலிருந்து திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். காசநோய் முற்றி ஜூன் 30, 1948 அன்று இயற்கை எய்தினார்.
நாட்டுடைமை
புதுமைப்பித்தனின் படைப்புகள் தமிழக அரசால் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
படைப்புகள்
கவிதைகள்
- திரு ஆங்கில ஆசான் தொண்டரடிப்பொய்யாழ்வார் வைபவம்
- மூனாவருணாசலமே மூடா
- இணையற்ற இந்தியா
- செல்லும் வழி இருட்டு
சிறுகதைகள்
- அகல்யை
- செல்லம்மாள்
- கோபாலய்யங்காரின் மனைவி
- இது மிஷின் யுகம்
- கடவுளின் பிரதிநிதி
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- படபடப்பு
- ஒரு நாள் கழிந்தது
- தெரு விளக்கு
- காலனும் கிழவியும்
- பொன்னகரம்
- இரண்டு உலகங்கள்
- மனித யந்திரம்
- ஆண்மை
- ஆற்றங்கரைப் பிள்ளையார்
- அபிநவ் ஸ்நாப்
- அன்று இரவு
- அந்த முட்டாள் வேணு
- அவதாரம்
- பிரம்ம ராக்ஷஸ்
- பயம்
- டாக்டர் சம்பத்
- எப்போதும் முடிவிலே இன்பம்
- ஞானக் குகை
- கோபாலபுரம்
- இலக்கிய மம்ம நாயனார் புராணம்
- 'இந்தப் புரவி'
- காளி கோவில்
- கபாடபுரம்
- கடிதம்
- கலியாணி
- கனவுப் பெண்
- காஞ்சனை
- கண்ணன் குழல்
- கருச்சிதைவு
- கட்டிலை விட்டிறங்காக் கதை
- கட்டில் பேசுகிறது
- கவந்தனும் காமனும்
- கயிற்றரவு
- கேள்விக்குறி
- கொடுக்காப்புளி மரம்
- கொலைக்காரன் கை
- கொன்ற சிரிப்பு
- குப்பனின் கனவு
- குற்றவாளி யார்?
- மாயவலை
- மகாமசானம்
- மனக்குகை ஓவியங்கள்
- மன நிழல்
- மோட்சம்
- 'நானே கொன்றேன்!'
- நல்ல வேலைக்காரன்
- நம்பிக்கை
- நன்மை பயக்குமெனின்
- நாசகாரக் கும்பல்
- நிகும்பலை
- நினைவுப் பாதை
- நிர்விகற்ப சமாதி
- நிசமும் நினைப்பும்
- நியாயம்
- நியாயந்தான்
- நொண்டி
- ஒப்பந்தம்
- ஒரு கொலை அனுபவம்
- பால்வண்ணம் பிள்ளை
- பறிமுதல்
- பாட்டியின் தீபாவளி
- பித்துக்குளி
- பொய்க் குதிரை
- 'பூசனிக்காய்'அம்பி
- புரட்சி மனப்பான்மை
- புதிய கூண்டு
- புதிய கந்த புராணம்
- புதிய நந்தன்
- புதிய ஒளி
- ராமனாதனின் கடிதம்
- சாப விமோசனம்
- சாளரம்
- சாமாவின் தவறு
- சாயங்கால மயக்கம்
- சமாதி
- சாமியாரும் குழந்தையும் சீடையும்
- சணப்பன் கோழி
- சங்குத் தேவனின் மர்மம்
- செல்வம்
- செவ்வாய் தோஷம்
- சிற்பியின் நரகம்
- சித்தம் போக்கு
- சித்தி
- சிவசிதம்பர சேவுகம்
- சொன்ன சொல்
- சுப்பையா பிள்ளையின் காதல்கள்
- தனி ஒருவனுக்கு
- தேக்கங் கன்றுகள்
- திறந்த ஜன்னல்
- திருக்குறள் குமரேச பிள்ளை
- திருக்குறள் செய்த திருகூத்து
- தியாகமூர்த்தி
- துன்பக் கேணி
- உணர்ச்சியின் அடிமைகள்
- உபதேசம்
- வாடாமல்லிகை
- வாழ்க்கை
- வழி
- வெளிப்பூச்சு
- வேதாளம் சொன்ன கதை
- விபரீத ஆசை
- விநாயக சதுர்த்தி
- தமிழ் படித்த பெண்டாட்டி
மொழிபெயர்ப்புகள்
- ஆஷாட பூதி
- ஆட்டுக் குட்டிதான்
- அம்மா
- அந்தப் பையன்
- அஷ்டமாசித்தி
- ஆசிரியர் ஆராய்ச்சி
- அதிகாலை
- பலி
- சித்திரவதை
- டைமன் கண்ட உண்மை
- இனி
- இந்தப் பல் விவகாரம்
- இஷ்ட சித்தி
- காதல் கதை
- கலப்பு மணம்
- கனவு
- காரையில் கண்ட முகம்
- கிழவி
- லதீபா
- மகளுக்கு மணம் செயது வைத்தார்கள்
- மணிமந்திரத் தீவு
- மணியோசை
- மார்க்ஹீம்
- மிளிஸ்
- முதலும் முடிவும்
- நாடகக்காரி
- நட்சத்திர இளவரசி
- ஓம் சாந்தி! சாந்தி!
- ஒரு கட்டுக்கதை
- ஒருவனும் ஒருத்தியும்
- பைத்தியகாரி
- பளிங்குச் சிலை
- பால்தஸார்
- பொய்
- பூச்சாண்டியின் மகள்
- ராஜ்ய பாதை
- ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
- சாராயப் பீப்பாய்
- சகோதரர்கள்
- சமத்துவம்
- ஷெஹர்ச்சாதி - கதை சொல்லி
- சிரித்த முகக்காரன்
- சுவரில் வழி
- தாயில்லாத குழந்தைகள்
- தையல் மிஷின்
- தந்தை மகற்காற்றும் உதவி
- தெய்வம் கொடுத்த வரம்
- தேசிய கீதம்
- துன்பத்திற்கு மாற்று
- துறவி
- உயிர் ஆசை
- வீடு திரும்பல்
- ஏ படகுக்காரா!
- யாத்திரை
- எமனை ஏமாற்ற
- யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
- தர்ம தேவதையின் துரும்பு
பிற ஆக்கங்கள்
- பிரேத மனிதன் - மேரி ஷெல்லி
- ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
பிற படைப்புகள்
- சிற்றன்னை (குறுநாவல்)
- ஆண்மை
- நாரத ராமாயணம்
அரசியல் நூல்கள்
- ஃபாசிஸ்ட் ஜடாமுனி
- கப்சிப் தர்பார்
- ஸ்டாலினுக்குத் தெரியும்
- அதிகாரம்
கடிதங்கள்
- கண்மணி கமலாவுக்கு-புதுமைப்பித்தன் கடிதங்கள், சாந்தி பிரசுரம் (தொகுப்பு: இளையபாரதி)
புதுமைப்பித்தன் பற்றி எழுதப்பட்ட பிற நூல்கள்
- புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி. ரகுநாதன்
- இந்திய இலக்கியச் சிற்பிகள் - புதுமைப்பித்தன் - வல்லிக்கண்ணன் (சாகித்திய அகாடமி, 1987)
- புதுமைப்பித்தன் ஆளுமையும் ஆக்கங்களும், சுந்தர ராமசாமி
- புதுமைப்பித்தன் எனும் பிரம்மராஷஸ், ராஜ் கௌதமன் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
- இலக்கிய முன்னோடிகள் ’முதல்சுவடு’ - ஜெயமோகன் (நற்றிணை பதிப்பகம், 2003)
உசாத்துணை
- இலக்கிய முன்னோடிகள் (முதல்சுவடு)- ஜெயமோகன்(2003)
- புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன்
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
வெளி இணைப்புகள்
- புதுமைப்பித்தன் - சிறுகதைகள், sirukathaigal.com
- புதுமைப்பித்தன் நூல்கள், chennailibrary.com
- புதுமைப்பித்தனின் பெண்கள், jeyamohan.in
- புதுமைப்பித்தனின் மரணங்கள், ஜா. ராஜகோபாலன், jeyamohan.in
- புதுமைப்பித்தன் வாழ்க்கை குறிப்பு, write2maanee
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Jan-2023, 12:07:27 IST