under review

அ.கா. பெருமாள்

From Tamil Wiki
அ.கா.பெருமாள்

To read the article in English: A.K. Perumal. ‎

அ.கா.பெருமாள் மாணவராக
அ.கா.பெருமாள்

அ.கா. பெருமாள் (செப்டம்பர், 28 1947) தமிழின் நாட்டாரியல் ஆய்வாளர். குமரிமாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகளைச் செய்பவர். இலக்கிய வரலாற்றாசிரியர். நாட்டாரியல் மற்றும் தொல்லியல் களப்பணி அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டு, சிற்பவியல், கோவில்கலை, ஏடு, நாட்டார் கதைகள், கலைகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்

பிறப்பு, கல்வி

அ.கா.பெருமாள்

அ.கா. பெருமாள் செப்டெம்பர் 28, 1947-ல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு பிறந்தவர். பறக்கை பறவைக்கரசனூர் என்றும் பக்ஷிராஜபுரம் என்றும் அழைக்கப்படும் வைணவத்தலம். அ.கா.பெருமாளின் முழுப்பெயர் அ. காக்கும் பெருமாள் . இவரது தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தாயார் பகவதி அம்மாள். பறக்கை அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். நாகர்கோயில் தெ.தி.இந்துக் கல்லூரியில் இளங்கலை முடித்த பிறகு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசன் இவருக்கு ஆசிரியர். எஸ். வையாபுரிப் பிள்ளை பற்றி 'தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய எண்ணினாலும் அதை தொடரவில்லை. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் "நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்" எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் இவருடன் இணைந்து ஆய்வு செய்தவர்.

தனிவாழ்க்கை

அ.கா. பெருமாள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தேவகுமாரியை பிப்ரவரி 6, 1983-ல் மணந்தார். மகள் ரம்யா. 1969-ல் நான்கு மாதம் தினத்தந்தி திருச்சி இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1973 முதல் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி 2006-ல் ஓய்வுபெற்றார். நாகர்கோயிலில் வாழ்கிறார்.

ஆய்வுப் பணி

1972-ல் ஜூன் மாதம் அ.கா.பெருமாள் சுந்தர ராமசாமியைச் சந்தித்தார். அப்போது சுந்தர ராமசாமியின் எதிர் வீட்டில்தான் குடியிருந்தார். சுந்தர ராமசாமி இல்லத்துக்கு வந்த நா. பார்த்தசாரதி, சி.சு. செல்லப்பா, பிரமிள், க.நா.சுப்ரமணியம் போன்ற எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சுந்தர ராமசாமியின் பெரிய நூலகத்தை பயன்படுத்திக்கொண்டார்.

அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள் இலக்கிய ஆய்வாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் நாட்டாரியல், தொல்லியல், இலக்கிய வரலாறு ஆகிய மூன்று களங்களில் பங்களிப்பாற்றினார்.

நாட்டாரியல்
A.k.-Perumal-6.jpg

வெங்கட் சாமிநாதன் எழுதி நடத்திய யாத்ரா இதழை நாகர்கோயிலில் இருந்து அ.கா.பெருமாள் அச்சிட்டு வெளியிட்டார். வெங்கட் சாமிநாதன் நாட்டாரியல் ஆய்வுகளின் தேவை குறித்த கட்டுரைகளை யாத்ராவில் எழுதினார். வெங்கட் சாமிநாதன் தந்த ஊக்கத்தில் அ.கா.பெருமாள் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். 'யாத்ரா’ இதழில் இசக்கி அம்மன் வழிபாடு, கணியான் கூத்து பற்றி கட்டுரைகளை எழுதினார். கன்னியாகுமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இதுதான் நாட்டார் வழக்காற்றியல் துறையில் இவரது முதல் ஆய்வு. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் மையம் தொடங்கப்பட்டபோது அதன் அமைப்பாளர் அருட்பணி ஜெயபதி அவர்களிடமிருந்து நாட்டாரியலை முறைப்படி கற்றார். நாட்டாரியல் அறிஞர் ஆலன் டன்டிஸின் வகுப்புகளில் பங்கெடுத்தார். நாட்டாரியல் ஆய்வாளர்கள் தே.லூர்து, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் 'தோல்பாவைக்கூத்து’ முக்கியமான ஆய்வுநூலாக கருதப்படுகிறது. இவரது 'ராமாயண தோல்பாவைக்கூத்து’ நூல் கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவத்தையும், விரிவான ஆய்வுக் குறிப்புகளையும் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார். நாட்டார் கலைகளுக்கான கலைக்களஞ்சியம் ஒன்றை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் ஆய்வு மையத்துக்காக தொகுத்து வெளியிட்டார். சடங்கில் கரைந்த கலைகள், தெய்வங்கள் முளைக்கும் நிலம், சுண்ணாம்பு கேட்ட இசக்கி என நாட்டார் கலைகளைப் பற்றியும் நாட்டாரியல் கள அனுபவங்கள் பற்றியும் நூல்களை எழுதியிருக்கிறார்.

வரலாற்றாய்வு

வட்டார நுண்வரலாற்றாய்வில் அ.கா.பெருமாள் முப்பதாண்டுகால ஆய்வுகளைச் செய்திருக்கிறார். நாட்டாரியலை கருத்தில் கொண்டு வரலாற்றாய்வை மேற்கொள்வது அ.கா.பெருமாளின் வழிமுறை. ’வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்’ என்று அ.கா.பெருமாள் கருதுகிறார்*.

தென்திருவிதாங்கூர் வரலாற்றாய்வாளர் டாக்டர் திரிவிக்ரமன் தம்பி அ.கா.பெருமாளுக்கு ஆய்வு முன்னோடி. செந்தீ நடராசனுடன் இணைந்து அ.கா.பெருமாள் குமரிமாவட்ட கல்வெட்டுகளைத் தேடி அலைந்து ஆவணப்படுத்தினார். குமரிமாவட்ட வரலாற்றுப் பதிப்புகளான அழகியபாண்டியபுரம் முதலியார் ஓலைகளை பாடம்நோக்கி பதிப்பித்தார். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களான சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில் பற்றி நூல்களை எழுதினார். தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை ஆலயங்களின் சமூக,வரலாற்று முக்கியத்துவத்தையும், கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்கள். தென்குமரியின் கதை என்னும் தலைப்பின் குமரிமாவட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார். குமரிமாவட்ட அடிமை ஆவணங்களை ஆராய்ந்து நூலாக்கியிருக்கிறார்

A.k.-Perumal-3.jpg

அ.கா.பெருமாளின் வரலாற்றாய்வு முறைமை என்பது அடிப்படைத் தரவுகளை ஆவணங்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் திரட்டி சீராக ஒழுங்குபடுத்தி முன்வைப்பது. தரவுகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தாலேயே முழுமையான சித்திரங்களை அளிப்பவை அவரது நூல்கள்.

இலக்கிய ஆய்வு
A.k.-Perumal-2.jpg

அ.கா.பெருமாள் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுமுறைமைகளைப் பின்பற்றி இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். ’வையாபுரியாரின் கால ஆராய்ச்சி’ அவருடைய முதல் ஆய்வுநூல். தமிழிலக்கிய வரலாறு, தமிழறிஞர்கள் போன்றவை தமிழிலக்கிய வரலாற்று நூல்கள். அ.கா.பெருமாளின் இலக்கிய ஆய்வுகள் இலக்கிய நூல்களின் பதிப்பு வரலாறு மற்றும் நூலின் பின்புலம் சார்ந்த செய்திகளை முறைமைப்படி திரட்டி முன்வைப்பவை. இலக்கிய அழகியல் மற்றும் சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் அவருடைய ஆய்வெல்லைக்குள் அமைவதில்லை.

பதிப்புப்பணி

அ.கா.பெருமாள் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் நூல்களை விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தார். தேவசகாயம் பிள்ளை கூத்து, ஐயா வைகுண்டரின் அகவல் ஆகியவற்றை ஆய்வுரையுடன் பதிப்பித்திருக்கிறார்.

கல்விநூல்கள்

 • அ.கா.பெருமாளின் "நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி" பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ. பாடத்திட்டத்தில் 1997 முதல் பாடமாக உள்ளது.
 • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு 'ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக 1996 முதல் 1999 வரை இருந்தது.
 • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 'பி.லிட்.’ வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியுள்ளார்.
 • கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் அ.கா.பெருமாள் எழுதிய 'ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் 1996 முதல் 1999 வரை பாடமாக இருந்துள்ளது.
 • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் "நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி" நூல் 2001 முதல் பாடமாக உள்ளது.
 • திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) 'ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக 2003 முதல் 2006 வரை இருந்துள்ளது.
 • "பொன்னிறத்தாள் கதை" நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக 2002 முதல் 2005 வரை இருந்துள்ளது.
 • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக 2003 முதல் உள்ளது.
 • குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பாடமாக 2007 முதல் உள்ளது.

பிற பணிகள்

AKP.jpg
 • ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.
 • ஆலோசகர், தமிழக கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.
 • செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
 • ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.

விருதுகள்

நாஞ்சில் நாடனுடன்
 • தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - "தென்னிந்தியாவில் தோல் பாவைக்கூத்து" என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில், நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
 • தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - தமிழில் 2003-ல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் 'தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது .(31.03.2004)
 • Great contribution Award - People Parliament for unity and development, Kanyakumari (19 ஆகஸ்ட் 2017)
 • ஈரோடு மருத்துவர் ஜீவா பசுமை விருது 2023க்காக வழங்கப்பட்டது.

ஆய்வுமுறைமையும், பங்களிப்பும்

AKP-2.jpg

அ.கா.பெருமாளின் வரலாற்றாய்வும் இலக்கிய ஆய்வும் எஸ்.வையாபுரிப்பிள்ளை கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஆகிய ஆய்வாளர்களை முன்னோடிகளாகக் கொண்டது. ஆகவே மரபான ஆய்வுமுறைமையை உறுதியாக வலியுறுத்துவது. ஆய்வாளர் என்னும் எல்லையைக் கடந்து எந்நிலையிலும் எந்த கருத்தையும் அவர் முன்வைப்பதில்லை.

ஆய்வில் நேரடியான கள ஆய்வுக்கு முதன்மையிடம் அளிப்பவர். நாட்டாரியல் ஆய்வுகளில் விரிவாக பயணம் செய்து நாட்டாரியல் செய்திகளை அவை நிகழும் இடத்தில் இருந்தே பதிவுசெய்திருக்கிறார். வரலாற்றாய்வுகளில் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் தன் கண்களால் பார்த்து நகல் எடுக்காத எதையும் மேற்கோளாக்குவதில்லை. இதனால் அ.கா.பெருமாளின் தரவுகளுக்கு முதல்நிலை நம்பகத்தன்மை உண்டு.

ஆய்வாளரின் பணி தரவுகளைச் சேகரித்து ஒழுங்கமைப்பது என்றும்; வரலாற்று அறிஞர்களும், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களுமே கொள்கைகளை உருவாக்கவேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டவராதலால் அ.கா.பெருமாள் தன் ஊகங்களையோ கொள்கைகளையோ நூல்களில் முன்வைப்பதில்லை. செய்திகளை தொகுப்பதன் வழியாக உருவாகும் பொதுச் சித்திரத்தை மட்டுமே முன்வைப்பது அவரது வழக்கம்.

அ.கா.பெருமாள் தமிழ் வரலாற்றாய்வின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர். முதற்கட்டத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் தமிழகத்தின் பொதுவரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கினர். அ.கா.பெருமாள் அவ்வரலாற்றுச் சித்திரத்திற்குள் நுண்வரலாற்றாய்வை நிகழ்த்துபவர். குமரிமாவட்டம் (பழைய திருவிதாங்கூர்) என்னும் நிலப்பகுதிக்குள் நிலைகொள்பவை அவருடைய ஆய்வுகள். பொதுவரலாறு இந்த ஆய்வின் பகைப்புலமாகவே நிலைகொள்கிறது.

செவ்வியல் வரலாற்றாய்வு நாட்டாரியலை கருத்தில் கொள்வதில்லை. அ.கா.பெருமாள் நவீன நாட்டாரியல் ஆய்வின் முறைமைகளைக் கொண்டு நாட்டாரியல் செய்திகளை வரலாற்றாய்வுக்கு பயன்படுத்துபவர். கே.கே.பிள்ளை எழுதிய சுசீந்திரம் ஆலய வரலாறு செவ்வியல் வரலாற்றாய்வுக்கு உதாரணமானது. அ.கா.பெருமாள் அவ்வரலாற்றை மேலதிக நாட்டாரியல் செய்திகளுடன் சுசீந்திரம் ஆலயம் என்னும் பெயரில் விரிவாக்கி எழுதியிருக்கிறார். இது அடுத்தகட்ட வரலாற்றெழுத்துமுறையாகும்

நூல்கள்

அ.கா. பெருமாள், ஜெயமோகன், வேதசகாயகுமார்
இலக்கிய ஆய்வுகள்
 • வையாபுரியாரின் காலக்கணிப்பு
 • தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி
 • கவிமணியின் இன்னொரு பக்கம்
 • தொல்பழம் சமயக்கூறுகள்
 • ஆய்வுக்கட்டுரைகள்
 • பொதுக்கட்டுரைகள்
 • தமிழ் இலக்கிய வரலாறு
 • கம்பனின் தனிப்பாடல்கள்
 • காகங்களின் கதை
 • முல்லைப்பாட்டு உரையும் விளக்கமும்
 • புதியதமிழில் பழைய கவிதை
 • நல்லதங்காள் கதை
 • வாழ்வை நகர்த்தும் கலைஞன்
 • தமிழறிஞர்கள்
 • மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்
 • கவிமணியின் இன்னொரு பக்கம்
AKP-8.jpg
AKP-25.jpg
நாட்டாரியல் ஆய்வுகள்
 • நாட்டார் கதைகள்
 • நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி
 • சுண்ணாம்பு கேட்ட இசக்கி
 • வயல்காட்டு இசக்கி
 • பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
 • சடங்கில் கரைந்த கலைகள்
 • தோல்பாவைக்கூத்து
 • கோயில் சார்ந்த நாட்டார் கலைகள்
 • பொன்னிறத்தாள் கதை
 • வில்லுப்பாட்டு புராணக்கதைகள்
 • குமரிமாவட்ட கிராமியக் கலைகளும் கலைஞர்களும்
 • தம்பிமார்கதை
 • நாட்டார் நிகழ்த்துக்கலைகள் களஞ்சியம்
 • நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
 • அர்ச்சுனனின் தமிழ்க்காதலிகள்
 • இயக்கியம்மன் கதையும் வழிபாடும்
 • தென்னிந்தியாவில் தோல்பாவைக்கூத்து
 • இராமாயண தோல்பாவைக்கூத்து
 • கர்ப்பமாய் பெற்ற கன்னிகள்
 • சனங்களின் சாமிகளின் கதைகள்
 • படிக்கக்கேட்ட பழங்கதைகள்
 • இராமன் எத்தனை இராமனடி?
 • பூதமடம் நம்பூதிரி
 • இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
 • சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
 • தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
AKP-22.jpg
பண்பாட்டு ஆய்வு
 • தமிழர் கலையும் பண்பாடும்
 • கன்னியாகுமரி அன்னை மாயம்மா
 • பெயரில் என்ன இருக்கிறது?
 • ஸ்ரீநாராயணகுரு வாழ்வும் வாக்கும்
 • ஒரு குடும்பத்தின் கதை
 • உணவுப்பண்பாடு
 • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
அ.கா. பெருமாள்.jpg
அகராதி
 • நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி
வரலாற்றாய்வு
 • கன்யாகுமரி மாவட்ட வரலாறு
 • தென்குமரியின் கதை
 • நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைகள் காட்டும் சமூகம்
 • முதலியார் ஆவணங்கள்
 • சுசீந்திரம் கோயில்
 • பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில்
 • மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு
 • ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்
 • குமரிமாவட்ட அடிமை ஆவணங்கள்
 • தென்குமரி கோயில்கள்
 • சிவாலய ஓட்டம்
 • காலந்தோறும் தொன்மங்கள்
 • திருக்கோயில் வழிகாட்டி, கன்யாகுமரி மாவட்டம்
 • கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள்
 • கவிமணி வரலாற்றாய்வாளர்
பதிப்பு
 • நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள்
 • இராமகீர்த்தனம்
 • கவிமணியின் வரலாற்றாய்வுக் கட்டுரைகள்
 • குமரிமாவட்ட நாட்டுப்புறவியல்
 • கவிமணியின் கவிதைகள் ஆய்வுப்பதிப்பு
 • குருகுல மக்கள் கதை
 • கவிமணியின் கட்டுரைகள்
 • சித்தூர் தளவாய் மாடன் கதை
 • நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
 • அகிலத்திரட்டு அம்மானை
 • தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு (க. இராசாராம், அ.கா. பெருமாள்)
தொகுப்பாசிரியர்
 • கானலம்பெருந்துறை
 • அலைகளினூடே
 • குடிபோதை புனைவுகள் தெளிவுகள்

வெளி இணைப்புகள்✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:33 IST