under review

பொன்னிறத்தாள் கதை

From Tamil Wiki
Ponnirathaal.jpg

பொன்னிறத்தாள் கதை: தென் தமிழகத்தில் வழக்கில் உள்ள நாட்டார் வாய்மொழிக் கதைகளுள் ஒன்று. பொன்னிறத்தாள் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறாள். பொன்னிறத்தாள் கதையை வில்லுப்பாட்டாகப் பாடுகின்றனர். பொன்னிறத்தாள் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கேரளாவில் சில பகுதிகளிலும் தெய்வமாக வழிபடப்படுகிறாள்.

பார்க்க: புருஷாதேவி கதை

ஆசிரியர்

Ponnirathaal2.jpg

பொன்னிறத்தாள் கதையின் ஆசிரியர் உலகுடைய பெருமாள் நாடார். இதனை தம்மத்துக்கோணம், சுயம்புலிங்கபுரம் ஊர்களில் கிடைத்த ஓலைச்சுவடிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்நூலின் ஆசிரியர் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் எதுவும் ஏட்டுப் பிரதியில் கிடைக்கவில்லை. இந்நூல் 1891-ம் ஆண்டு இயற்றப்பட்டிருக்க வேண்டுமென முத்துசாமிப் புலவர் கருதுகிறார். மேலும் முத்துசாமிப் புலவர் தம்மத்துக்கோணம் நடேசநாடாரின் ஏட்டுப்பிரதி தான் பொன்னிறத்தாள் கதையின் முதல் பிரதி என்கிறார். தம்மத்துக்கோணம் ஏட்டில் கொல்லம் ஆண்டு 1066-ல் (பொ.யு. 1891) எழுதப்பட்டதாகக் குறிப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் கிடைத்த பழைய ஏட்டுக் கதைப் பாடல்களில் பொன்னிறத்தாள் கதையும் ஒன்று.

பொன்னிறத்தாள் கதை

Ponnirathaal3.jpg

கடையம் ஊரில் வடுகர் குலத்தில் பிறந்த பொன்மாரி அணஞ்சபெருமாளை மணம் செய்து தென்காசியில் வாழ்ந்தாள். அவர்களுக்கு குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி அணஞ்சபெருமாள் பூஜை செய்தான். அந்த பூஜையின் பலனாக ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தன. பொன்மாரி அவர்களுக்கு சித்தன், சித்திரன், தம்மப்பன், மேப்பன், கிருஷ்ணன், வேலப்பன், மாடப்பன் எனப் பெயரிட்டாள். ஏழு ஆண் குழந்தைகள் இருந்து ஒரு பெண் குழந்தை இல்லை என வருத்தமுற்றாள் பொன்மாரி. அவள் கோவில்களுக்குச் சென்று தவமிருந்தாள். கோவிலை தூத்துத் தெளித்தாள் (பெருக்கி,நீர் தெளித்தாள்), விளக்கேற்றினாள், ஈர உடையுடன் கோவிலைச் சுற்றி வந்தாள். பெண் குழந்தை பிறந்தால் ரங்கநாதன், குமரி அம்மன், குருத்தோலைநாதன், சிவனணஞ்ச மார்த்தாண்டனுக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டினாள். அவள் தவத்தின் பயனாக கருவுற்றாள். பத்தாம் மாதம் வெள்ளிக்கிழமை மீனராசியில் பஞ்சமி திதியில் பெண் குழந்தைப் பெற்றாள். பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தனக்கு உதவியவர்களுக்கு பொன்னை வாரி வழங்கினாள். பொன்னிறத்தில் குழந்தை பிறந்ததால் பொன்னிறம் எனப் பெயரிட்டாள். அழகுடன் பொன்னிறம் வளர்ந்தாள். அவள் அழகு சுற்றியுள்ள எல்லா ஊர்களுக்கும் பரவியது. பொன்னிறம் தோழிகளால் சூழப்பட்டாள்.

பொன்னிறமும் அவள் தோழிகளும் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது மதுரை திருமலை நாயக்கரின் உறவினன் தளவாய் நாயக்கன் மகன் இணைசூரப்பெருமாள் அவ்வழியே வந்தான். அவனுடன் துப்பன், வெள்ளியத்தேவன், தூங்கலிங்கபுரிமறவன், அசையீட்டிக்காரர்கள் உடன் வந்தனர். இணைசூரப்பெருமாள் வேகமாக பந்தாடிய இனியகொடி பொன்னிறத்தைக் கண்டதும் மெய்மறந்து அவள் மேல் காதலுற்றான். "இந்நாட்டில் இவளைப் போல் அழகியைக் கண்டதில்லை என்ன அழகு" என்றான். பந்து விளையாடிக் கொண்டிருந்த தோழிகளை அழைந்து, "யாரிவள்?" என வினவினான்.

தோழிகள், "இவள் பேர் பொன்னிறத்தாள். தென்காசியில் வாழும் அணஞ்சபெருமாள் ஊர் தலைவனின் மகள். இவளுடன் பிறந்தவர்கள் ஏழு அண்ணன்மார்கள். இவளது உறவினர்கள் கடையத்தில் வாழ்கின்றனர்" என்றனர். அவர்கள் சொல் கேட்டு அரண்மனை திரும்பிய இணைசூரப்பெருமாள் பித்தம் கொண்டவனான். பசி, தூக்கம் மறந்த அரண்மனையில் தன் அறைக்குள்ளேயே அணங்கு கொண்டவன் போலிருந்தான். இணைசூரப்பெருமாள் உடலில் மாற்றம் கண்ட அவன் தாய், "மகனே உனக்கு என்ன நடந்தது?" எனக் கேட்டாள். இணைசூரப்பெருமாள் தான் கண்டு மீண்டதைப் பற்றி தாயிடம் சொன்னான். "அம்மா நான் தென்காசி பெருமாள் தலைவனின் மகள் பொன்னிறத்தாளை விரும்புகிறேன். அவளை நான் அடைய வேண்டும்." என்றான். மகனின் சொல் கேட்ட தாய், "அந்த பொன்னிறம் ஒருவகையில் உனக்கு முறைப்பெண் தான். அவளை உனக்கு மணமுடித்து வைக்கிறேன். கவலையை விடு" என்றாள்.

இணைசூரப்பெருமாளின் தந்தை, அணஞ்சபெருமாளிடம் தன் மகனுக்கு பெண்கேட்டு சென்றார். அணஞ்சபெருமாளும் தன் மகளுக்கு இணைசூரப்பெருமானை மணம் செய்ய சம்மதித்தான். பொன்மாரிக்கு தன் மகளுக்கு அரச வம்சத்தில் வரன் கிடைத்ததில் மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. இரண்டு குடும்பமும் சேர்ந்து திருமண நாளைக் குறித்தனர். மணமகனின் வீட்டை பூக்களால் அலங்கரித்தனர். சோதிடர் குறித்த நேரத்தில் அணஞ்சபெருமாள் பொன்னிறத்தாள் கழுத்தில் தாலி கட்டி தன் அரண்மனைக்கு அழைத்து வந்தான்.

பொன்னிறம் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். திருமணம் ஆன இரண்டாம் வருடம் பொன்னிறத்தாள் கர்ப்பமுற்றாள். தன் குல வழக்கப்படி ஏழாம் மாதம் தன் தாய் வீட்டிற்கு வந்தாள். வீட்டினுள் நுழைய வலது காலை பொன்னிறத்தாள் எடுத்தபோது கால் தட்டியது. வரப்போகும் கெட்ட நிகழ்விற்கான சகுனத்தை எண்ணி நொந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். நிறை வயிற்றுடன் வந்த தன் மகளைக் கண்டு பொன்மாரி மகிழ்ந்தாள். ஒன்பதாம் மாதம் பொன்னிறத்தாளுக்கு முளைப்பாரி செய்ய எண்ணி பொன்னிறத்தாளையும் அவள் தோழிகளையும் அழைத்து ஏழு நாள் விரதமிருக்க சொன்னாள். அனைவரும் பலவகை வித்துகளைச் சட்டியிலிட்டு குருத்தோலை கொண்டு மூடி வைத்தனர். ஏழாம் நாள் வளர்ந்த முளையை எடுத்துப் பார்த்தனர். தோழிகள் அனைவரின் முளைகளும் வளர்ந்திருந்தன. பொன்னிறத்தாளின் முளைப்பாரி அழுகியிருந்தது. பெண்கள் எல்லோரும் முளைப்பாரியை சுனையில் விடச் சென்றனர். தோழிகளின் முளை நீரில் மிதந்தது. பொன்னிறத்தாளின் முளைகள் நீரில் அமிழ்ந்தது. தன் போதாத காலத்தை எண்ணி பொன்னிறத்தாள் நொந்து கொண்டாள்.

நடந்த இரண்டு நிகழ்ச்சியையும் எண்ணி பொன்னிறத்தாளும் அவள் தான் பொன்மாரியும் வாட்டமுற்றிருந்தனர். பின் ஒரு நாள் தோழிகள் சுனையாட வேண்டி பொன்னிறத்தாளை அழைக்க வந்திருந்தனர். வேலை மிகுதியால், "நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் பின்னர் வருகிறேன்" என அவர்களை அனுப்பிவிட்டு தன் வேலையில் மூழ்கினாள். பொன்னிறத்தாள் தயிர் கடைய மத்தை எடுத்த போது பூனை பானையை உருட்டியது. தீய சகுனத்தை எண்ணி பொன்னிறத்தாள் சமைத்துக் கொண்டிருக்கும் போதே பொன்மாரி வந்தாள். "மகளே நீ இன்று சுனையாட வேண்டாம். நேற்று நான் ஒரு கனவு கண்டேன். நீ சுனையாட செல்லும் போது கள்ளர் கூட்டம் உன்னை வழிமறித்து தூக்கிச் சென்று உன்னை காட்டாளம்மனுக்கு பலி கொடுப்பதைக் கண்டேன்." என்றாள்.

பொன்னிறத்தாள், "குறத்தி சொல் கேட்டு எதுவும் உளறாதே. விதி அவ்வண்ணம் என்றால் நம்மால் அதனை மாற்ற முடியாது. மயங்காதே அம்மா நான் சுனையாடி வருவேன்" எனக் கிளம்பினாள். சுனையாடுவதற்கு மஞ்சள், எண்ணெய், மாற்றுடை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அன்னை, "அய்யோ மகளே தனியே செல்லாதே. பெண்மகளின்றி பேதலித்து கோவில்களில் விளக்கேற்றி வைத்து உன்னைப் பெற்றேன். உன் மணவாளன் வந்த பின் அவனைத் துணைக்கு அழைத்துச் செல் அல்லது உன் தந்தை, அண்ணன்கள் வரட்டும் அவர்களுடன் செல். வாகை நல்லூர் அம்பலத்தில் மறவர்கள் இருப்பார்கள். மகளே நீ போகவேண்டாம்" என்றாள்.

பொன்னிறத்தாள் தாயின் சொல்லை மீறி நீராடச் சென்றாள். வழியில் தீய சகுனங்கள் தென்பட்டன. அவற்றைக் கடந்து சென்றாள். நடுநாட்டில் குறத்தி வந்து பொன்னிறத்தாளின் கையைப் பிடித்து, "உன்னை மறவர்கள் காட்டாளம்மனுக்கு பலி கொடுப்பார்கள் தனியே சுனைக்குச் செல்லாதே" என்றாள். குறத்தியின் பேச்சைக் கேட்காத பொன்னிறத்தாள் தனியே சென்று வாகை நல்லூர் அம்பலத்தை அடைந்தாள். அங்கே தோழிகளைக் காணாததால் துணுக்குற்றாள். வேகமாக நடந்து சுனைக்கரையை அடைந்த போது அங்கே தோழிகள் கரையில் நின்றனர். தோழிகள் பொன்னிறத்தாளைக் கண்டதும் மகிழ்ந்தனர். அனைவரும் எண்ணெய் தேய்த்து சுனையில் நீராடினர். அவர்கள் மகிழ்வோடு நீராடும் நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அனைவரும் சேர்த்து வாகை நல்லூர் செல்ல முடிவு செய்தனர். தோழிகள் வேகமாக நடந்தனர். நிறைமாத கர்ப்பினியாய் இருந்த பொன்னிறத்தாளால் வேகமாக நடக்க முடியவில்லை மெல்ல நடந்து சென்றாள்.

பொன்னிறத்தாளை விட்டு தோழிகள் வெகுதூரம் கடந்து சென்றனர். அவளால் தோழிகளைப் பிடிக்க முடியாததால் ஒரு புளிய மரத்தின் அடியில் ஒதுங்கினாள். அம்மரம் சரிந்தது. ஆலமரத்தின் அடியில் சென்று நின்ற போது அதுவும் சரிந்தது. பொன்னிறத்தாள் மாமர முட்டில் சென்று நின்றாள்.

இச்சமயத்தில் வெள்ளாளர், மறவர், வாணியர் சாதிகளில் உள்ள 61 கள்ளர்கள் கூடினர். இன்று எந்த ஊரில் களவாடுவது எனக் கூடி ஆலோசித்தனர். அதில் ஒரு கள்வன், "காட்டாளம்மன் கோவில் கருவூலம் இருக்கிறது. அதில் நிறைய செல்வமிருக்கிறது. அதனைக் களவாடலாம்" என்றான். இன்னொருவன், "நான் மந்திரம் படித்தவன் மையிட்டுப் பார்க்கிறேன். எங்கே கருவூலம் இருக்கிறது எனக் கண்டு சொல்கிறேன்" என சொல்லி தீ வளர்த்து மையிட்டான். அதில் பூதங்கள், இசக்கிகள், மாடன்கள், வாதைகள், பேய்படைகள் கருவூலத்தைக் காவல் காப்பது தெரிந்தது. அதனைக் கண்ட மந்திரவாதிக் கள்வன், "கருவூலத்தைச் சுற்றி நிறைய வாதைகள் உள்ளன நாம் அங்கே நிற்க வேண்டாம். நாம் வட்டப்பாறை செல்வோம்" என்றான்.

மந்திரவாதிக் கள்வனின் சொல் கேட்டு எல்லோரும் வட்டப் பாறைக்கு மீண்டனர். அங்கே குறிக்காரன் பிரஸ்னம் வைத்துப் பார்த்தான். காட்டாளம்மன் கருவூலத்தை எடுக்க வழி கேட்டான். பேய்களும், வாதைகளும் வந்து கூடின. அவர்களுக்கு பலி கொடுக்கும் படி வேண்டின. பாலாடு, சூலாடு, கரும்பூனை, சேவல் என பல பலிகள் கொடுக்கப்பட்டன. சூலிப் பெண் வேண்டுமென இசக்கி கேட்டாள். இந்நேரத்தில் காட்டாளம்மன் கோவிலுக்கு பூஜை செய்வதற்கு உருளியில் பச்சரிசி எடுத்துக் கொண்டு வேதிகன் வந்தான். அவனை இசக்கிக்கு பலி கொடுக்க முடிவு செய்தனர்.

வேதிகன், "ஐயோ அண்ணன்மார்களே வேண்டாம், நான் வரும் வழியில் நிறை சூலிப் பெண்ணொருத்தியைக் கண்டேன் அவளைப் பலி கொடுக்க உங்களுக்கு காட்டுகிறேன். என்னை உயிருடன் விட்டுவிடுங்கள்" என்றான். வேதிகன் சொல் கேட்டு கள்ளர்கள் அதற்கு இசைந்தனர். வேதிகன் கள்ளர்களை வழிநடத்திச் சென்றான். வேதகன் அவர்களுக்கு பொன்னிறம் நின்ற மரத்தைக் காட்டினான். கள்ளர்கள் தலைச்சூலியாய் நின்ற பொன்னிறத்தாளைக் கண்டதும் வேதிகனை விட்டனர். பொன்னிறத்தாளிடம் சென்று, "பெண்ணே நீ யார்?" என வினவினர். பொன்னிறத்தாள் தான் யார் என்பதையும் தன் தோழிகள் தன்னை விட்டுவிட்டு சென்றதையும் வழிதவறி அங்கே வந்ததையும் கூறினாள். "அண்ணன்மார்களே என்னை வீடு கொண்டு சேர்த்தால் என் தந்தை என் எடைக்கு நிகராக பொன் தருவார். என் அண்ணன்கள் ஏழுபேரும் நீங்கள் வேண்டுவதைத் தருவார்கள்." என அழுத கொண்டே சொன்னாள்.

அழும் பொன்னிறத்தாளிடம் கள்ளவர்கள், "பெண்ணே கவலை வேண்டாம் உன்னை வீடு கொண்டு சேர்ப்பது எங்கள் பொறுப்பு. நீ எங்களை வழி நடத்தி முன்னே செல்" என்றனர். பொன்னிறத்தாள் முன்னே செல்ல பின்னிருந்த கள்ளர்கள் அவளை ஓடு ஓடு என விரட்டினர். பொன்னிறத்தாள் நடக்க முடியாமல் தடுமாறினாள். ஒருவன் புளியம் விளாரை வெட்டி அடித்தான். "அண்ணா என்னை அடிக்காதே பெண் பாவம் தீராது. என் தாய் இதற்காகவா என்னை பெற்றாள். மஞ்சள் பூசி தினமும் வளர்த்தாள். என் நகைகளைக் கழட்டித் தருகிறேன் என்னை விட்டுவிடுங்கள்" எனப் பொன்னிறத்தாள் அழுதாள். அவள் அழுகையை அலட்சியம் செய்து காட்டாளம்மன் கோவிலுக்குத் தூக்கிச் சென்றனர்.

கோவிலின் முன் பெரிய பரண் கட்டினர். குலைவாழை கட்டினர். குருத்தோலை கட்டினர். துள்ளுக்கிடாவும், குட்டியும் கொண்டு வந்து கோவிலின் முன் நிறுத்தி நெஞ்சைப் பிளந்தனர். அதன் குருதியை அள்ளி கோவிலின் முன் தெளித்தனர். வடக்கு வாசலில் பன்றியை பலி கொடுத்தனர். சூல் பன்றியின் நெஞ்சை பிளந்து வைத்தனர். மேற்கு வாசலில் பூனையை வைத்து கீறினர். பின்னர் கருவூலம் இருந்த இடத்தில் பலி கொடுக்க பொன்னிறத்தாளை அழைத்து வந்தனர். அவள் தலையில் ரத்தம் வழிய அழுத விழிகளுடன் அங்கே மயங்கி விழுந்து எழுந்து அழுதாள். "ஐயோ அண்ணன்மார்களே, ஆண் பிள்ளை பிறந்தால் உங்கள் பெயரை வைக்கிறேன் எனக்கு இரக்கம் காட்டுங்கள்" என்றாள்.

பொன்னிறத்தாளை பிடரியில் அடித்து பரணில் ஏற்றினர். ஒருவன் அவளது வயிற்றைக் கீற ஓடி வந்தான். அவளது அழகிய முகம் கண்டு பின்வாங்கினான். அவனிடம் கத்தியை பிடுங்கி மற்றொருவன் ஓடி வந்தான். அவனும் பொன்னிறத்தாளைக் கொல்ல துணியவில்லை. இறுதியாக மறவன் வந்தான். பொன்னிறத்தாளின் வயிற்றுப் பகுதிக்கு கீழே தலைவாழை இலையை விரித்தான். தன் இடையிலிருந்த கத்தியை எடுத்து அவளின் நெஞ்சுப் பகுதியைக் கீறினான். மெல்ல கீழே இறங்கி வயிற்றுப் பகுதியைக் கிழித்தான். பொன்னிறத்தாளின் வயிற்றுக்குள் இருந்த ஆண் மகவை வெளியே எடுத்து இலையில் வைத்தான். எரியும் திரியை எடுத்து பொன்னிறத்தாளின் வயிற்றில் குத்தி வைத்தான்.

பின் கருவூலத்தை திறந்து பொன்னை எடுத்தனர். ஒரு கள்ளன், "நாம் பொன்னை அளக்க மரக்கால் எடுத்து வரவில்லை. அதனால் மூங்கில் குழல் வெட்டி வருவோம்" என்றான். அதற்கு சம்மதித்த அனைவரும் காட்டிற்குள் சென்றனர். வெள்ளாளர் 10 பேரும் கொடுங்காட்டிற்குள் சென்றனர். கள்ளர்கள் முளைவெட்ட சென்றனர். பொன்னிறத்தாளை பலி கொடுத்ததைக் கண்ட காட்டாளம்மை புலி, கடுவாய்களை அவர்கள் மேல் ஏவி விட்டாள். கள்ளர்களை கடுவாய்கள் கடித்தன. வெள்ளாளர்களை புலிகள் வேட்டையாடின. அனைவரும் இறந்தனர். இறந்தவர்கள் அனைவரும் நரகத்திற்குச் சென்றனர்.

இந்நேரத்தில் பொன்னிறத்தைக் காணாமல் அவள் தாய் தேடினாள். அண்ணன்மார் ஏழு பேரும் வாகை நல்லூர் அம்பலம் வந்து தேடினர். இணைசூரப்பெருமாள் தோழிகளை அழைத்து விசாரித்தான். தோழிகள் முன்னே வந்துவிட்டதாகவும், பொன்னிறத்தாள் பின்னே வந்ததாகவும் கூறினர். அவர்கள் சொல்வதைக் கேட்டு தாய் பதறினாள். தந்தையும், உறவினர்களும் கூடினர். 90 பேர் கூடி சுனைக்குச் சென்றனர். அங்கே பொன்னிறத்தாள் இல்லாததால் சுற்றி பக்கத்திலுள்ள இடங்களுக்குச் சென்று தேடினர். இணைசூரப்பெருமாள் காட்டாளம்மன் கோவிலில் கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டான். அவன் எல்லோரையும் அழைத்து காட்டாளம்மன் கோவிலுக்கு விரைந்தான். கோவிலின் நான்கு மூலையையும் பார்த்தனர். பூனை, ஆடு, பன்றி பலி கொடுக்கப்பட்டிருந்தது. இணைசூரனன் கோவிலின் உள்ளே சென்றான். அங்கே பொன்னிறத்தாள் நெஞ்சு பிளக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அருகே தலைவாழை இலையிலிருந்த பாலகனைக் கையில் எடுத்து அழுதான்.

மகளின் கோலத்தைக் கண்ட தந்தை அவளருகே சென்று தன்னை மாய்த்துக் கொண்டார். அண்ணன்கள் ஏழு பேரும் கழுத்தில் நவகண்டம் ஏற்றினர். மாமன்மார்கள் இனி வாழ மாட்டோம் எனக் கூறி உயிரை விட்டனர். மற்ற உறவினர்களும் மாய்ந்தனர். இணைசூரனும் தன் முன் வாளை நிறுத்தி அதன்மேல் பாய்ந்தான். இதற்கிடையே கைலாயம் சென்ற பொன்னிறத்தாள் சிவனிடம் வரம் வேண்டி நின்றாள். அவள் நிலை கண்ட சிவபெருமான், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.

பொன்னிறம் சிவனிடம், "எனக்கு நாட்டில் பூசை கொள்ளும் வரம் வேண்டும். தலைப்பிள்ளை, மதலைகளைக் குடலைப் பிடுங்க வரம் வேண்டும். என்னைக் கொன்ற கள்ளரின் வம்சத்தை அடியோடு கொல்லும் வரம், காட்டிக் கொடுத்த வேதிகனைக் கருவறுக்கும் வரம் இப்படி நிறைய வரங்கள் வேண்டும்." என்றாள். மேலும் வாவறை, குறுமாங்குளி, மூன்றரை கூடம் போன்ற இடங்களில் இசக்கியாக நிற்க வரம் வேண்டுமென கேட்டாள். சிவபெருமானும் அவர் கேட்ட வரத்தைக் கொடுத்தார்.

சிவனிடம் வரம் பெற்ற பொன்னிறத்தாள் நூல் பாலம் வழி கைலாயத்தில் இருந்து தன்னைக் கொன்ற கள்ளர்களின் ஊருக்குள் நுழைந்தாள். அங்கிருந்து குடும்பங்களை ஒன்றுவிடாமல் கொன்றொழித்தாள். தன்னைக் காட்டிக் கொடுத்த வேதிகனையும் அவன் குடும்பத்தையும் அழித்தாள். தான் நீராடிய சுனை கரைக்கு வந்தாள். அங்கே அவளது தோழிகள் இருபத்தியொரு பேரும் பேயாய் நின்றனர். அவர்களுடன் நீராடி மகிழ்ந்தாள். பின் காட்டாளம்மன் கோவிலுக்குச் சென்று காட்டாளம்மனை வேண்டி நிறைய வரம் பெற்றாள்.

காட்டாளம்மனிடம் வரம் பெற்று மதுரை நகருக்கு விரைந்தாள். மதுரையிலுள்ள நான்கு மாசி வீதிகளிலும் பலி ஏற்றாள். அங்குள்ளவர்கள் மேல் மண்ணை வாரி தூற்றி பயமுறுத்தினாள். பொன்னிறத்தாள் மதுரை நாட்டு யானையை பிடித்தாள். யானைக்கு மதம் பிடித்தது. யானை மதுரை வீதியெங்கும் ஓடி, சாடி, துள்ளியது. மக்களை மிதித்துக் கொன்றது. பாகனால் அடக்க முடியாததைக் கண்ட மன்னன் திகைத்தான். சோதிடர்களை அழைத்து யானையின் மதத்திற்கான காரணத்தைக் கேட்டான். சோதிடர்கள் பிரஸ்னம் பார்த்து வந்திருப்பது பொன்னிறத்தாள் என்றும் அவளது கதையையும் மன்னனிடம் கூறினர். மன்னன் தெய்வக் குற்றம் நிகழ்ந்ததை எண்ணி வருந்தினான்.

தெய்வ குற்றத்தை போக்க மன்னன் மந்திரவாதிகளை அழைத்தான். பொன்னிறத்தாள் சிவனிடம் வரம் பெற்று வந்ததால் யாவரும் பயந்தனர். இளவேலன் ஒருவன் வந்து, "என் மந்திரத்தால் இப்போது அவளை அடக்கிக் காட்டுகிறேன்" என்றான். இளவேலன் வேறு மந்திரவாதிகளையும் மலையிலிருந்து அழைத்து வந்தான். எல்லோரும் கூடி மன்னனிடம், "மன்னா மதுரையிலுள்ள வாதைகளை இப்போதே விரட்டுவோம். எங்களுக்கு வேண்டிய பொருட்களை தாருங்கள். வெள்ளரிசி, குருத்தரிசி, சாம்பிராணி, களபம், பூ, பழம், சர்க்கரை, 21 பூனைமுட்டை, 21 குதிரைமுட்டை, புலிமான் கொம்பு, நீலம் தீண்டா வெல்லம், 7 சாவல், 100 கோழி எல்லாம் வேண்டும்" என்றனர். மன்னன் அவர்களுக்கு தேவையான பொருட்களை வரும்படி செய்தான். மந்திரவாதிகள் பெரிய பரண்கட்டி நின்றனர். இளவேலன் அந்த பரண்மேல் உரலைக் கவிழ்த்து வைத்து அதன்மேல் நின்றான்.

பொன்னிறத்தாள் இளவேலனை ஓங்கி அடித்தாள். இளவேலன் அக்கணமே மாய்ந்தான். தன் கணவன் இறந்ததை அறிந்த இளவேலனின் மனைவி மதுரை நகருக்கு ஓடோடி வந்தாள். தன் கணவனைத் திருப்பி தரும்படி பொன்னிறத்தாளை வேண்டினாள். வேலத்தியின் வேண்டுதலுக்கு பொன்னிறத்தாள் இறங்கினாள். இளவேலனை திரும்ப உயிர் பெற செய்தாள். உயிர் பெற்ற இளவேலன் பல வாதைகளுக்கும் பூஜை செய்தான். தன் மனைவியுடன் சேர்ந்து பொன்னிறத்தாளுக்கு பூஜை செய்தான். தன் மகள் செண்பககுட்டியை பொன்னிறத்தாளுக்குப் பலி கொடுத்தான். வாதைகள் எல்லாம் கோபம் தீர்ந்து மதுரையில் கோவில் கொண்டு நிலைபெற்றனர்.

பொன்னிறத்தாளை புருஷாதேவி காட்டாளம்மனாக வந்து பலி கொண்டதற்கு வேறு இரண்டு கதைகள் வழக்கில் உள்ளன. (பார்க்க: புருஷாதேவி கதை).

நிகழ்ந்த காலம்

பொன்னிறத்தாளின் கணவன் இணைசூரன்பெருமாள் மதுரை திருமலை நாயக்கருக்கு உறவினன் என்பதை நூல் சுட்டும் பாடல்,

மதுரை நாடதிலே திருமலைவாழ் நாயக்கன் மகன்
தளவாய் நாயக்கன் மகன் தக்க இணைசூரனுமோ

மதுரை நாயக்கர் மன்னர்களில் பேரரசனாக விளங்கியவர் திருமலை நாயக்கர் அவருக்கு தளவாய் நாயக்கன் என்ற மகன் பிறந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்புகளிலும் இல்லை. ஆனால் திருமலை நாயக்கருக்கு நிறைய மனைவிகள் இருந்ததார்கள் என்றும் அவர்கள் மூலம் தளவாய் நாயக்கன் பிறந்திருக்கலாம் என்றும் அவர்கள் தென்பகுதிகளின் தலைவனாக இருந்தனர் என்றும் வாய்மொழிகதைகள் கூறுகின்றன. திருமலை நாயக்கரின் காலம் 1623 - 1659. இதன் மூலம் இக்காலத்திற்கு பிற்பட்டது பொன்னிறத்தாளின் கதை என அறிய முடிகிறது. பொன்னிறத்தாள் கதை கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது. கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 25 அல்லது 50 ஆண்டுகளுக்கு பின் கதைப்பாடல் வடிவம் பெற்றிருக்க வேண்டுமென ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

காட்டாளம்மன் கோவில்

இக்கதைப்பாடலில் வரும் காட்டாளம்மன் கோவில் தென்காசியில் கோட்டை வடிவில் இருந்தது எனப் பாடல் மூலம் அறிய முடிகிறது. <poem> அந்நாளில் கள்ளரெல்லாம் ஆகாவென்று கூடுவாராம் கூடிய கள்ளரெல்லாம் காட்டாளம்மன் கோவிலிலே தென்காசிக் கோட்டையைப் போல் அழகாய் நின்ற இடம் காட்டாளச்சி கோவிலிலே கடிதாய் கூடினரே. </poe,? என வருணிக்கிறது. தென்காசி பாழடைந்த கோட்டையை தான் நேரில் பார்த்ததாக 1820-ம் ஆண்டில் டர்னல் என்ற ஆங்கிலேயர் குறிப்பிடுகிறார் (A History of Tinnelvely, R. Caldwell, 1982, P54.) எனவே இக்கதைப்பாடல் 1820 முன் கோட்டை பாழடைவதற்கு முன்பு இருக்கலாம்.

உடையார் கதைப்பாடல் உடையார் தென்காசி வீதி வழியே சென்று கோட்டைக்குள் சென்ற நிகழ்ச்சியை குறிப்பிடுகிறது. இக்கதை 17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். எனவே பொன்னிறத்தாள் கதை, புருஷாதேவி கதை இரண்டும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என ஆய்வாளர் அ.கா. பெருமாள் கருதுகிறார்.

நிகழ்விடம்

பொன்னிறத்தாள் கதையின் ஆதார நிகழ்வு தென்காசியில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பொன்னிறத்தாள் தென்காசியிலுள்ள காட்டாளம்மனுக்கு பலி கொடுக்கப்படுகிறாள். அவள் சிவனிடம் வரம் பெற்று தெய்வமாக மதுரை மீள்கிறாள். பலவித வாதைகளைச் செய்து தென்காசி மீண்டு தெய்வமாகிறாள்.

பொன்னிறத்தாள் வழிபாடு நாடார் சமூகத்தின் மூலம் திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி, கேரளா சென்றதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுக்கின்றனர்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page