under review

தம்பிமார் கதை

From Tamil Wiki
Thambimaar kadhai1.jpg

தம்பிமார் கதை : கதைப்பாடல். நட்டாரியல் சார்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாய்மொழி வழக்கில் இருந்த இந்தக் கதைப்பாடல் பின்னர் அச்சானது. மன்னர் மார்த்தாண்டவர்மாவின் மாமன் மகன்கள் வலிய தம்பி, குஞ்சு தம்பி ஆகியோரின் வீரம் போற்றும் கதைப் பாடல். திருவிதாங்கூர் அரசில் மார்த்தாண்டவர்மாவுக்கு எதிராக கலகம் செய்தவர்களான தம்பிமார் இருவரின் வாழ்க்கையை போற்றுகின்றது.

பார்க்க: மாடம்பிமார் கதை

தம்பிமார் கதை

Thambimaar kadhai.jpg

திருவிதாங்கூர் நாட்டை ஆண்ட ராமவர்மத் தம்புரான் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மார்கழி திருவிழாவைக் காண வந்தார்.

அயோத்தி நகரில் இடையர் குலத்தில் பிறந்த அபிராமியும் அவள் அண்ணன் கிருஷ்ணனும் அயோத்தி மகாதேவர் கோவிலில் நடனப்பணி செய்து வந்தனர். அயோத்தியில் பெரும் பஞ்சம் வந்த போது நகர் நீங்கி தட்சண பூமி நோக்கி நடந்தனர். அயோத்தி நகரைக் கடந்து கங்கைகொண்டான், கயத்தாறு ஊர்களைத் தாண்டி ஆசிரமம் என்னும் ஊருக்கு வந்தனர். அங்கே இரவு தங்கி திருக்குறுங்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், பனக்குடி கடந்து ஆரல்வாய்மொழி வந்தனர். அங்கே இரண்டாம் நாள் இரவு தங்கிவிட்டு தோவாளை, வெள்ளமடம் வழியே ஆனைப்பாலம் தாண்டி சுசீந்திரம் வந்தனர்.

அப்போது சுசீந்திரத்தில் மன்னன் ராமவர்மா காண வந்த மார்கழி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அபிராமி சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயனைத் தொழுத கையோடு நேராக சென்று மன்னனைத் தொழுதாள். நடன மங்கையான அபிராமியின் அழகைக் கண்ட ராமவர்மா அபிராமிக்கு பட்டும், கச்சையும் வழங்கி மணம்புரிந்தார். நாகர்கோவில், சுங்கான்கடை, செட்டிமடம் கடந்து இரணியல் வந்த மன்னர் அபிராமியை அம்மை தம்புரான் என அழைத்தார். கிருஷ்ணனுக்கு கொச்சுமாறப் பிள்ளை என்ற பட்டமும் வழங்கினார். இரணியலில் அவர்களுக்கு அரண்மனை கட்டி அளித்தார்.

அபிராமி ஆண் குழந்தை ஒன்றை ஈன்றேடுத்தாள். அக்குழந்தை வலது கையில் சங்கு, சக்கர ரேகையுடன் பிறந்தது. ராமவர்மா ஆண் குழந்தை பிறந்த நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணித்த சோதிடன் தம்புரானைப் பார்த்து, "தம்புரானே குழந்தை உத்திர நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது. யோகம் கூடிய நட்சத்திரம். இவருக்கு ஒரு தம்பி, தங்கை பிறப்பார்கள். பின்னால் இந்நாட்டை ஆளப்போகும் மன்னர் அம்மை தம்புரானின் மகளை மணமுடிக்கக் கேட்டார். அதற்கு அண்ணன்மார்கள் சம்மதிக்காமல் மறுத்ததால் அவர்கள் கொல்லப்படுவார்கள்" என்றார். குழந்தை பிறந்தவுடன் இறப்பு பற்றிய செய்தி வந்ததும் மன்னர் அதிர்ச்சியடைத்தார். அன்றிலிருந்து ராமவர்மா மிக கவனமாக இருந்தார்.

மகனுக்கு வலிய தம்பி பத்மநாபன் எனப் பெயரிட்டார். வலிய தம்பிக்கு மூன்று வயதான போது அம்மை தம்புரான் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். மன்னர் அக்குழந்தைக்கு குஞ்சு தம்பி எனப் பெயரிட்டார். வலிய தம்பி ஆறு வயதானபோது கொச்சுமணித் தங்கை பிறந்தாள்.

கொச்சுமணித் தங்கையின் பிறப்பைக் கணித்த சோதிடர் "மன்னா வலிய தம்பிக்கு 22 வயதாகும் போது கொச்சுமணித் தங்கை 16 வயதில் பருவமடைந்திருப்பாள். அப்போது வன்கொலை நிகழும். நாட்டின் மன்னராகப் பின்னர் பட்டமேற்க போகிறவர் கொச்சுமணியை பெண் கேட்டு வருவார். அண்ணன்கள் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவிப்பர். அதனால் மன்னருக்கும் தம்பிகளுக்கும் பிணக்கு வரும். மன்னர் தம்பிகளின் அதிகாரத்தை ஒடுக்கி சொத்துகளைப் பறிப்பார். இருவரையும் அவரே கொலையும் செய்வார்." என்றார். சோதிடர் சொல் கேட்ட மன்னர் மீண்டும் கலக்கமுற்றார். தன் வாழ்நாளில் பிள்ளைகள் மூவரையும் பத்திரமாக்க திட்டங்கள் தீட்டினார்.

வலிய தம்பி ஏழு வயதான போது பத்மநாபபுரம் நீலகண்ட பிள்ளை வலிய தம்பிக்கும் குஞ்சு தம்பிக்கும் கல்வி கற்றுக் கொத்தார்.இரணிய சிங்கநல்லூரின் மேற்கு பக்கம் மேற்கு தெருவில் பள்ளிபுரை கட்டி அங்கே நல்ல நாள் கணித்து ஆசான் தம்பிகளுக்கான கல்வியைத் தொடங்கினார். வலிய தம்பிக்கு ஒன்பது வயதானதும் வாள் சண்டை, மற்போர், உடைவாள் வெட்டு போன்ற போர் பயிற்சிகளைக் கற்பித்தார். பொன்னங்குருவி பாய்வது போல் பாயும் முறை, வல்லயங்கொண்டு எறிகின்ற முறை, கைகளால் கட்டு போடும் முறை, வர்மத்தட்டு முறை என பல போர் முறைகளைக் கற்பித்தார். தம்பிமார்கள் அவை அனைத்தையும் திறம்பட கற்றுத் தேறினர். ஆசான் தம்பிகளுக்கு யானை ஏற்றமும், குதிரை ஏற்றமும் கற்பித்தார். தம்பிமார்கள் போர் செய்யும் முறையைக் கண்ட மன்னர் ஆசானுக்கு 1008 கழஞ்சு பொன்னைக் கொடுத்து மகிழ்ந்தார்.

தம்பிமார்களின் திறமையைக் கண்ட ராமவர்மா நாலாமுட்டு சந்தையில் முதலெடுப்பு தீர்வை, கொடுப்பக்குடி பேட்டையில் முதலெடுப்பு, தாழாக்குடி பகுதிகளில் வரிப்பிரிக்கும் பொறுப்பு, கூட்டப்புளி, கொடுப்பக்குளி, அம்மாண்டிவிளை போன்ற இடங்களில் உள்ள நிலங்களை தம்பிகளுக்குக் கொடுத்தார். ராமவர்ம மகாராஜா தீர்த்தமாட விரும்பி தம்பிமார்களையும், படைகளையும் காவலுக்கு அழைத்துக் கொண்டு சிங்கநல்லூர் அரண்மனையிலிருந்து கிளம்பி தலக்குளம், ஏலாவைக் கடந்து வள்ளியாபுரம் வந்தார். வள்ளியாபுரத்தில் பூதம் எழுதி வைத்திருந்த கல்வெட்டைப் படித்து மகிழ்ந்தார். பின்னர் படைகள் பேய் கடுக்காய்முடி, மம்மத்து முலை கடந்து வள்ளியாறு வந்தனர். பின்னர் வாலியாம்பாறை என்ற இடத்தில் எல்லா ஆறுகளும் சங்கமிக்கும் பகுதியில் மன்னரை நீராட மந்திரி வேண்டினார்.

மந்திரியின் சொல்படி மன்னர் நீராட சென்ற போது கடல் மேல் எழுந்து சீற்றம் கொண்டது. கடல் கொந்தளிப்பதைக் கண்ட படைகள் பின் வாங்கின. மன்னர் தன் இடைவாளை எடுத்து தன் பெருவிரலை அறுத்து நீரில் வீசியதும் கடல் சீற்றம் அடங்கியது. மன்னர் நதியில் தீர்த்தமாடி நகர் மீண்டார். மன்னர் சிங்கநல்லூருக்கு திரும்பும் சமயத்தில் எதிரில் முத்தாரம்மன் தேரில் வந்தாள். மன்னரின் மேல் பலவித வித்துக்களைத் தெளித்தாள். மறுநாள் மன்னருக்கு கொடுங்காய்ச்சல் கண்டது. மன்னருக்கு அன்ன ஆகாரம் உள்ளே செல்லாமல் ஆனது. மன்னரைப் பஞ்சு மெத்தையிலிருந்து எடுத்து பருமணலுக்குக் கொண்டு வந்தனர். வைத்தியரின் எல்லா மருந்தும் முறிந்தது. மன்னரின் மனைவியும், மக்களும் அருகிலிருந்து அழுதனர். மன்னர் மந்திரியை அழைத்து, "இனி நான் பிழைப்பது சாத்தியமில்லை. நான் இறப்பதற்குள் இந்நாட்டை ஆளும் மன்னனை நியமிக்க வேண்டும். ஆற்றுங்கல்லில் அரசாளும் அழகன் வாலவஞ்சி மார்த்தாண்டவர்மனை அழைத்து வாருங்கள்" என்றார்.

காவலர்கள் ஆற்றுங்கல்லுக்குச் சென்று மன்னரின் மருமகனான வாலாஞ்சி மார்த்தாண்டவர்மனைக் கண்டு ராமவர்மாவின் எண்ணத்தைத் தெரிவித்து அழைத்து வந்தனர். மருமக்கள்தாய முறைப்படி மருமகன் அரசனாவதே மரபு. ராமவர்மா மார்த்தாண்டவர்மனிடம், "இனி இப்பாருலகை நீ தான் ஆட்சி செய்ய வேண்டும். உனக்கு துணையாக காவலுக்கு தம்பிமார்கள் இருவரும் இருப்பார்கள். கிருஷ்ணத்தம்மாளும், என் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக இனி நீ தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு உன்னைத் தவிர உறவினர் என யாருமில்லை. அவர்களுக்கு நான் விட்டுக்கொடுத்த சொத்துக்கள் அவர்களிடமே இருக்கட்டும். அதனை நீ எடுத்துவிடாதே, சுசீந்திரம் கோவிலின் படித்திரத்தை நிறுத்திவிடாதே" என அறிவுரை கூறி சேரநாட்டின் செங்கோலையும், முத்திரையையும் மார்த்தாண்டவர்மனின் வழங்கினார். மன்னரின் இறுதி சடங்கு முடிந்ததும் மார்த்தாண்டவர்மா சிங்கநல்லூர் அரண்மனைக்கு திரும்பினார். தம்பிகள் இருவரும் அரசாங்க நிர்வாகத்திலும், சட்ட ஒழுங்கிலும் மன்னருக்குத் துணை நிற்பதாக வாக்குறுதி கொடுத்தனர்.

மன்னர் மார்த்தாண்டவர்மா

மன்னர் மார்த்தாண்டவர்மா தன் சிங்கநல்லூர் அரண்மனையில் நடை சென்ற போது கொச்சுமணித் தம்புராட்டியை நேரில் கண்டார். கண்ட நொடி அவள் மேல் காதலில் விழுந்தார். தம்பிமார்களை அழைத்து, "உங்கள் கொச்சுமணித் தம்புரானுக்கு பரிவட்டம் கட்ட நான் விரும்புகிறேன்" என்றார்.

இதைக் கேட்ட தம்பிமார் சினந்தனர். தங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு மன்னரிடம், "மன்னர் தங்கள் வயதையும் கொச்சுமணியின் வயதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். என்றாலும் ஒரு நிபந்தனையின் பேரில் இதற்கு சம்மதிக்கிறோம். அவளுக்கு பிறக்கும் பிள்ளைக்கு தான் இந்நாட்டின் மணிமுடி வழங்கப்பட வேண்டும். அதற்கு உத்தரவாதம் மன்னர் அளித்தால் இத்திருமணத்திற்கு நாங்கள் சம்மதிக்கிறோம்" என்றனர்.

தம்பிகள் பேசுவதைக் கேட்ட மன்னர் அவர்கள் மேல் கோபம் கொண்டார். நீங்கள் பேசுவது முறையல்ல எனச் சீறினார். ஏனென்றால் திருவிதாங்கூரில் மன்னரின் மருமகன்களே அரசனாக முடியும். அதைக்கேட்ட தம்பிகள் விடை பெறாமலே சிங்கநல்லூர் விட்டு கிளம்பினர். தன்னை அவமதித்த தம்பிகளை மன்னர் பழிவாங்க விரும்பினார். தன் தாய் மாமன் ஆண்டிருந்த பள்ளி மெத்தையை சிங்கநல்லூர் அரண்மனைக்கு எடுத்துவர ஆணையிட்டார். மன்னரின் ஆணையை ஏற்ற பட்டன்மார்கள் தம்பிமார்கள் அரண்மனைக்குச் சென்று ராமவர்மாவின் கட்டிலையும், மெத்தையையும் எடுக்க முயன்றனர். முத்துமணி இலவாணிச்சியின் வீட்டிலிருந்த குஞ்சு தம்பிக்கு மெத்தை எடுக்க வந்த செய்தி சென்றது. குஞ்சு தம்பி வேகமாக விரைந்து சென்று, "என் தந்தை எனக்கு கொடுத்த மெத்தையை நீங்கள் பறிப்பதா." எனச் சொல்லி தன் கையிலிருந்த வாளால் மெத்தையை கிழித்தெறிந்தார்.

இச்செய்தியை கேட்ட மார்த்தாண்ட வர்மா தம்பிகளுக்கான மானியங்களைப் பறித்துக் கொண்டார். இதனை அறிந்த தம்பிமார்கள் சினந்தெழுந்தனர். பக்கத்துப் படை நாட்டிற்குச் சென்று படைக் கொண்டு மார்த்தாண்டவர்மாவை அழிக்கத் திட்டம் தீட்டினர். தம்பிமார்கள் வீட்டிலிருந்த வெள்ளி, வைரம், வெங்கல பாத்திரம், ஆபரணங்களையும் மூட்டைக் கட்டிக் கொண்டு தாயையும், தங்கையையும் அழைத்துக் கொண்டு சிங்கநல்லூர் நீங்கி சுசீந்திரம் சென்றனர். அங்கே ராமகிருஷணக் குருக்கள் வீட்டில் தாயையும், தங்கையையும் இருக்கச் சொல்லிவிட்டு கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பிச்சை கைப்பள்ளி நாயர், மாடன் பொன்னிற நாயர் ஆகியோருடன் பக்கத்து நாட்டிற்குச் சென்றனர்.

நெல்லை சீமையில் வரிப்பிரிக்கும் பொறுப்பிலிருந்த அழகப்ப முதலியார் தம்பிமார்களைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்றார். தம்பிமார்கள் முதலியாரிடம் நடந்ததைக் கூறினர். மூட்டையில் பணமிருப்பதை அறிந்ததும் அழகப்ப முதலி தம்பிமார்களுக்கு உதவ முன்வந்தார். தம்பிமார்களிடம், "நான் உங்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும்." எனக் கேட்டார். தம்பிகள் மனம் மகிழ்ந்து, "பத்மநாபபுரம் கோட்டையை பிடித்து எங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். நீங்கள் நாஞ்சில் நாட்டில் மூன்று நாட்கள் கொள்ளையிட உதவுகிறோம்" என்றனர்.

அழகப்ப முதலியார் தன் பெரும்படைகளை அணிவகுக்கச் செய்தார். தம்பிமார்களின் படையும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர். அழகப்ப முதலியின் படை சிந்துபூந்துறை விட்டு, திருக்குறுங்குடி வழியாகப் பணக்குடி வந்து கடுக்கரை வந்தனர். கடுக்கரையில் பாளையம் அமைத்தனர். பின் அங்கிருந்து புறப்பட்டு நாஞ்சில் நாட்டின் 12 பிடாகைகளிலும் கொள்ளையடித்தனர். முதலியார் சுசீந்திரத்த்திற்கு வந்தார் கோவில் பாத்திரங்களையும், ஆபரணங்களையும் கொள்ளையடித்தார்.

மன்னர் மார்த்தாண்டவர்மா அரண்மனையிலிருந்து எதிரிகளின் பீரங்கி முழக்கத்தைக் கேட்டார். கொச்சுரவி மார்த்தாண்ட பிள்ளை, மந்திரி கிட்ணன் கேசவன் இருவரையும் அழைத்தார். பகைவருடன் போர் செய்ய யாரை அனுப்பலாம் என ஆலோசனை செய்தார். களகூட்டத்துப் பிள்ளை, மகுடச்சேரி மார்த்தாண்ட பிள்ளை, வீரபாகு பிள்ளை, நெடுமங்காட்டு நீலகண்ட பிள்ளை, அனந்தபத்மநாப பிள்ளை ஆகியோரை வரவழைத்தார். மாடம்பிமார்கள் 16 பேரும் கோட்டைக்கு வந்தனர். பத்மநாபபுரம் கோட்டைக்கு வெளியே அழகப்ப முதலியார் படைக்கும், மார்த்தாண்டவர்மா படைக்கும் போர் நடந்தது. மாடம்பிமார்கள், முதலியார்களை எதிர்த்து போர் புரிந்தனர். இருபக்கமும் பீரங்கி குண்டுகளைப் பொழிந்தனர். ஆனால் போரின் பாதியிலேயே மாடம்பிமார்கள் சதி செய்தனர். அதனை அறிந்த மார்த்தாண்டவர்மா கோட்டையின் ரகசிய வழியே தப்பிக்க முயற்சித்தார். அரசன் தப்பிப்பதை அறிந்த வலிய தம்பி தன் வாளை எடுத்து வெட்டச் சென்றார். அழகப்ப முதலி தம்பியை தடுத்து, "அரசரை அழிப்பது நியாயமில்லை. அவரை விட்டுவிடு" என்றார்.

தப்பிச் சென்ற மன்னர் மார்த்தாண்டவர்மா அழகப்ப முதலியாரை ரகசியமாக சந்தித்தார். தம்பிமார்கள் முதலிக்கு கொடுத்தபடி இரண்டு சாளியில் பணம் கொடுத்தார். அழகப்ப முதலியார் பணத்தைப் பெற்றதும் மனம் மாறினார். இரு தரப்பிற்கும் இடையே சமரசப் பேச்சை முன்னெடுத்தார். முதலியார் மன்னரையும், தம்பிகளையும் பார்த்து, "இந்நாட்டு வழக்கப்படி பாலும், கடையாலும் தொட்டு நாங்கள் இருவரும் சதிசெய்ய மாட்டோம் என சத்தியம் செய்யுங்கள்" என்றார். தம்பிமார்கள் இருவரும் சத்தியம் செய்தனர். மார்த்தாண்டவர்மா சதி செய்ய விரும்பினார். அவர் சத்தியம் செய்யும் முன் ஒரு ஈயை பிடித்து தன் நகத்துக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டார். கோவிலின் முன் வாசலுக்குச் சென்று பாலும், கடையாலும் வைத்து, "ஈ உயிர் உள்ள வரை தம்பிகளுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்" என்றார்.

இருதரப்பும் சத்தியம் செய்ததும் அழகப்ப முதலியார் மன்னரிடம், "அரசே, தம்பிமார்களுக்கு உரிய மானியங்களைக் கொடுத்துவிடுங்கள். அவர்களின் சொத்துகளை அவர்களுக்கே திருப்பியளிக்க வேண்டும். இது என் கட்டளை" என்றார். மன்னர் அதற்கு இசைந்தது முதலி தன் படைகளைத் திருப்பிக் கொண்டு பாண்டிச்சீமைக்கு விரைந்தார். மன்னர் மனம் மாறியதை எண்ணி தம்பிமார்கள் தங்கள் பரிவாரத்துடன் சுசீந்திரம் சென்றனர்.

நாகர்கோவில் கொட்டாரத்திற்கு திரும்பிய மன்னர் தம்பிமார்களை அரண்மனையில் தன்னை சந்திக்கும் படி செய்தி அனுப்பினார். மன்னரின் செய்தியை ஒட்டன் வலிய தம்பியிடம் சொன்ன போது தம்பி தன் அணிகலன்களை அணிந்து தாயாரிடம் விடைபெற்று அரண்மனை விரைந்தார். மன்னர் வலிய தம்பியை மகிழ்ச்சியுடன் வரவேற்று நலம் விசாரித்து, "உன் உடைவாளைத் தா" என்றார். மன்னரின் சொல் கேட்ட வலிய தம்பி மன்னரிடம் வாளை நீட்டினார். வலிய தம்பியின் வாளைப் பெற்ற மன்னர் காவலாளிகளிடம் கொட்டாரத்தின் எல்லாக் கதவுகளையும் அடைக்கும்படி கட்டளையிட்டார்.

சிவந்த முகத்துடன் வலிய தம்பியின் முகத்தைப் பார்த்து, "சுசீந்திரத்தில் மார்கழி திருவிழா நடத்தவேண்டியிருக்கிறது. பாத்திரங்களும், ஆபரணங்களும் வேண்டும். அரை நாழிக்குள் அவற்றைக் கொண்டுவா." என்றார். தம்பி பலவீனமான முகத்துடன், "அரசே அவற்றை அழகப்ப முதலியார் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்" என்றார். மார்த்தாண்டவர்மா, "அழகப்ப முதலி உன் அப்பனோ" என்றார். "எனக்கு அவர் அப்பனென்றால் உங்களுக்கு மாமன் அல்லவா" என்றார் தம்பி. தம்பி பேசிக்கொண்டிருக்கும் போதே ஆசான்மார்களும், பணிக்கர்களும் தம்பியை சூழ்ந்துக் கொண்டனர்.

மார்த்தாண்டவர்மாவின் வீரர்கள் தம்பியுடன் மல்லுக்கட்டினர். தம்பி சிலரை கையாலே கொன்றார். கையில் ஆயுதமில்லாமல் தம்பியால் நீண்டே நேரம் நிலைக்க முடியவில்லை. ஆசான்மார்கள் தம்பியை பிடித்துக் கட்டி மன்னர் முன் நிறுத்தினர். மார்த்தாண்டவர்மா வலிய தம்பியின் தலையை துண்டாக வெட்டினார். வலிய தம்பி இறந்த செய்தியறிந்த குஞ்சு தம்பி தாழாக்குடியிலிருந்து கொட்டாரம் விரைந்தார். மன்னரின் அறைக்குள் சென்று அவரை வாளால் வெட்டினார். வாள் குறித்தவறி உத்திரத்தில் பட்டது. மன்னர் விழித்தெழுந்தார், காவலர் குஞ்சு தம்பியை சூழ்ந்துக் கொண்டனர். வலிய தம்பியைப் போல் குஞ்சு தம்பியும் தலை வெட்டப்பட்டு இறந்தார். தன் மகன்கள் இறந்த செய்தியறிந்த தாய் கிருஷ்ணத்தம்மாளும், தங்கை கொச்சுமணியும் இறந்தனர். மாமா கொச்சுமாறப் பிள்ளையும் இறந்தார்.

இறந்த அனைவரும் கைலாயத்தை அடைந்தனர். சிவனிடம் வேண்டி வரம் பெற்றனர். சிவன் அவர்களுக்கு "புதுக்கூடத்து வாதை" எனப் பெயரிட்டார். தாய்க்கு புகழ்பெரிய நீலி எனவும் தங்கைக்கு புதுக்கூடத்து இசக்கி எனவும் பெயரிட்டார். சிவன் சொல் கேட்டு அனைவரும் பூலோகத்தில் தெய்வமாய் குடிக்கொண்டனர்.

வரலாறும் கதைப்பாடலும்

தம்பிமார் கதை, மாடம்பிமார் கதை என இரண்டு கதைப் பாடல்களும் தென் திருவிதாங்கூரில் மார்த்தாண்டவர்மாவை சார்ந்தும், எதிர்த்தும் இருந்த இருவேறு கட்சிகளை குறிப்பன. இதில் தம்பிமார் கதை இராமவர்மாவின் திருமணத்தில் தொடங்கி தம்பிமார்களின் மறைவில் முடிகிறது (பொ.யு. 1734-ல் முடிகிறது). மாடம்பிமார் கதை பொ.யு. 1729-1734 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கிறது. தம்பிமார்களுக்கும், மார்த்தாண்டவர்மாவுக்கும் உள்ள முரண்பாடு குறித்தும், மார்த்தாண்டவர்மா சதிகாரர்களிடம் தப்பிய முயற்சி குறித்தும், பின்னர் மார்த்தாண்டவர்மா தம்பிமார்களின் உறவினர்களை அழித்தது குறித்தும் வாய்மொழி வழக்காறுகள் இன்றும் குமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இக்கதைப்பாடல்கள் வாய்மொழி வழக்காற்றிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு எழுதப்பட்டவை.

இக்கதைகள் அனைத்தும் மன்னரை எதிர்த்து அரசப்பதவிக்காக நின்றவர்களின் புகழ் பாடுகிறது. வன்கொலை செய்யப்பட்டவர்களின் கதை இவை. அவர்களை தெய்வமாக்குவதற்கென்று படைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த முனைவர் அ.கா. பெருமாள், "தம்பிமார்கள் சமூகப் புரட்சியாளர்கள் அல்லர். அரசப்பதவிக்காக ஆசைப்பட்டு கலகம் செய்தவர்கள். அதற்காக கட்சி சேர்த்துக் கொண்டவர்கள். எனவே மன்னர் வாழ்ந்த காலத்தில் கதைப்பாடல்கள் தோன்றியிருக்க முடியாது. தம்பிமார்களின் காலத்திற்கு பின்னர் திருவிதாங்கூர் அரசர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள மோசமான உறவு மக்களிடம் தம்பிமார்களைக் குறித்த மதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மன்னரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட சில சமூகத்தினருக்குக் கோவிலுள் செல்ல தடையிருந்தது. பெண் மேலாடை அணிய தடை போன்ற சட்டங்கள் திருவிதாங்கூர் அரசில் இருந்தன. மேலும் தம்பிமார்களை ஆதரித்தவர்கள் அவர்களை வழிபட்டிருக்கலாம். பின்னர் கதைப்பாடல்களை உருவாக்கியிருக்கலாம்" என்கிறார்.

கதைப்பாடல் தோன்றிய காலம்

மேலே குறிப்பிட்ட வரலாற்று தகவல்களையும், மன்னர் மார்த்தாண்டவர்மாவிற்கு எதிராக தம்பிமார்கள் கலகம் செய்ததையும் வைத்துப் பார்க்கும் போது இக்கதைப்பாடல் மார்த்தாண்டவர்மாவின் காலத்திற்கு பிற்பாடே எழுதப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது என்ற முடிவிற்கு வர முடிகிறது.

கதைப்பாடல் கூறும் செய்திகள்

தம்பிமார் கதையை வரலாற்று நோக்கில் ஆராய்ந்த முனைவர் அ.கா. பெருமாள், ராமவர்மா மன்னரின் காலத்தில் திருவனந்தபுரம், திருவிதாங்கோடு, திருவஞ்சிக்கரை, பத்மநாபபுரம், பாறசாலை ஆகியன முக்கியமான நகரங்களாக இருந்தன.இங்கு முக்கியமான அதிகாரிகள் இருந்தனர். இதில் பத்மநாபபுரம் முக்கியமான நகரமாக திருவிதாங்கூரின் தலைநகராக இருந்தது.

பத்மநாபபுரத்தின் பழைய பெயர் கல்குளம். பொ.யு. 1620 வரை இங்கே மண்ணால் ஆன கோட்டை தான் இருந்தது. 1664-ல் கல்குளத்தில் வலுவான கோட்டை இருந்ததையும் அது முக்கியமான நகராகக் கருதப்பட்டதையும் ஜான்நியோஹஸ் நேரடியாகப் பார்த்த நிகழ்ச்சியை திருவிதாங்கூர் வரலாறு குறிப்பிடுகிறது. மார்த்தாண்டவர்மா கல்குளம் கோட்டையை பொ.யு. 1744-ம் ஆண்டு பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக்கியதிலிருந்து பத்மநாபபுரம் என்ற பெயர் பிரபலமானது.

அபிராமியும் தேவதாசியும்

தம்பிமார் கதைப்பாடலில் ராமவர்மாவின் மனைவி அபிராமியும் அவள் அண்ணன் கிருஷ்ணனும் இடையர் குலத்தவராக சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் அபிராமி அயோத்தி நாட்டில் மகாதேவர் கோவிலில் கைமுறையும், மெய்முறையையும் காட்டியதற்கான குறிப்பு வருகிறது. மன்னர் ராமவர்மா சுசீந்தரம் கோவில் மார்கழி திருவிழாவிற்கு வந்த போது அங்கே மன்னரிடம் கைமுறையும், மெய்முறையும் காட்டினாள். இதன் மூலம் அபிராமி தேவதாசி குலத்தவள் என்ற முடிவிற்கு முனைவர் அ.கா.பெருமாள் வருகிறார்.

மேலும் அவர் வில்லிசைப் பாடும் கலைமாமணி முத்துசாமிப் புலவரிடம் இது பற்றிக் கேட்ட போது, "தம்பிமார்களின் அம்மா தேவதாசி எனப் பாடினால் கோவிலில் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த காலத்திற்கு அது சரி. எனக்கு முந்தைய காலத்தவர்கள் அபிராமியை இடையச்சி எனச் சொன்னதால் நானும் அப்படி பாடுகிறேன்" என்றார்.

தேவதாசியர் சமூகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1930 வரை தேவதாசி முறை இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவதாசிகள் கைமுறையும், மெய்முறையும் செய்து வந்தனர். தேவதாசிகளில் சிலர் தஞ்சை மாவட்டத்திலிருந்து வந்தவர்களும் உண்டு. இவர்களை தமிழ் தேவதாசி என்றும், பூர்வீகமாக இருந்தவர்களை மலையாள தேவதாசி என்றும் அழைத்தனர். பொ.யு. 1930-ம் ஆண்டிற்கு பிறது தமிழ் தேவதாசிகள் தங்களை நாஞ்சில் நாட்டு வேளாளர் சமூகத்துடனும், மலையாள தேவதாசி நாயர் சமூகத்துடனும் இணைத்துக் கொண்டனர்.

ராமவர்மா அபிராமி திருமணம்

தம்பிமார் கதைப்பாடல் மூலம் அபிராமி தஞ்சைப் பகுதியிலிருந்து வந்த தமிழ் தேவதாசியாகக் கொள்ளவே வாய்ப்பிருக்கிறது. சுசீந்திரம் கோவிலைச் சேர்ந்த தேவதாசிகளைப் பெரும் செல்வந்தர்கள் வைப்பாக வந்திருந்தனர் என சுசீந்திரம் ஆலயம் ஆய்வு புத்தகத்தில் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார். இச்செல்வந்தர்கள் பெரும்பாலும் நாயர், வேளாளர் சமூகத்தினர் அல்லது அரச குடும்பதினரைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இத்தேவதாசி பெண்கள் இரண்டாம் மனைவியாகக் கருதப்பட்டனர். எனவே ராமவர்மா அபிராமியை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு தான் இரணய சிங்கநல்லூரில் இருந்தார்.

இரணிய சிங்கநல்லூர் பற்றிய குறிப்பு கதைப்பாடல்களில் வருகிறது. இரணிய சிங்கநல்லூர் சேரமான் பெருமான் காலத்திலே முக்கிய நகராக இருந்ததாக மரபு வழி கதையும் உண்டு. இரணிய சிங்கநல்லூர் குறித்த பொ.யு. 1208-ம் ஆண்டின் சுசீந்திரம் கல்வெட்டும் உள்ளது. எனவே 1000 ஆண்டு பழமையான இரணிய சிங்கநல்லூரில் அபிராமியை அரண்மனையில் தங்க வைத்து ராமவர்மா பத்மநாபபுரத்திலுள்ள அரண்மனையில் வாழ்ந்தார் என அறிய முடிகிறது.

மேலும் தம்பிமார்கள் மானியம் வாங்க ராமவர்மா அமைத்துக் கொடுத்த இடங்கள் எனக் கதைப்பாடலில் குறிப்பிட்டவை எல்லாம் நாஞ்சில் நாட்டு பகுதியிலேயே வருகிறது. இது அபிராமி தமிழ் வம்சாவழி என்பதனால் இருக்கலாம் என அ.கா. பெருமாள் கருதுகிறார்.

தம்பிமார்களும் யோகக்காரர்களும்

தம்பிமார்கள் ராமவர்மாவின் முறையான மனைவியின் பிள்ளைகள் இல்லையென்றாலும் செல்வந்தர்களாகவே இருந்தனர். குறிப்பாக கோவில் நிர்வாகத்தில் தொடர்பு கொண்டிருந்தனர். இதனால் யோகக்காரர்களின் தொடர்பும் அவர்களுக்கு இருந்தது. இதுவே மன்னருக்கும், தம்பிமார்களும் பகை உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம்.

மார்த்தாண்டவர்மா தம்பிமார்கள் இடையே பூசலுக்கான காரணங்கள்

கதைப்பாடலில் மார்த்தாண்டவர்மா தம்பிமார்களின் தங்கையை பெண் கேட்டதாகவும் அதற்கு அவர்கள் முதலில் மறுத்தும், பின் அரச பதவிக் கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்தனர். இதனால் கோபம் கொண்ட மார்த்தாண்டவர்மா தம்பிமார்களுக்கு கொடுத்த சொத்துக்களைப் பறித்துவிடுகிறார்.

மார்த்தாண்டவர்மாவிற்கும், தம்பிமார்களுக்கும் இடையேயான பூசலுக்கு காரணம் திருவிதாங்கூர் வரலாற்றுடன் ஓரளவு ஒத்துப் போகின்றன. அவை வேறுபடும் இடங்களும் உள்ளன. குறிப்பாக மார்த்தாண்டவர்மாவிடம் தம்பிமார்கள் தங்கள் தங்கையை மணக்குமாறு சொல்கின்றனர். மார்த்தாண்டவர்மா தம்பிகளின் தங்கையை மணந்தால் திருவிதாங்கூர் அரசு நிலைக்குலையும் எனக் கருதினார். இந்த காரணத்தினால் தம்பிமார்களின் மாமா கொச்சுமாறப் பிள்ளையும், மார்த்தாண்டவர்மாவிற்கும் பகை வந்தது என கே. சிவசங்கரன் "வேணாட்டின்றே பரிணாமம்" நூலில் குறிப்பிடுகிறார், மதிலக ஓலையும் அதனை உறுதி செய்கின்றன.

மாடம்பிமார் கதை

மாடம்பிமார் கதையில் மன்னர் மார்த்தாண்டவர்மா மூத்த மாடம்பியின் மகளை திருமணம் செய்ய மறுத்ததாக வருகிறது. மன்னர் கோவில் கணக்குகளை சரியாக எழுதவில்லை என மாடம்பிமார்கள் அவதாறு கிளப்பினர். இதனால் கோபம் கொண்ட மார்த்தாண்டவர்மா 16 மாடம்பிகளுடன் போர் செய்து அவர்களைத் தூக்கிலிடுகிறார்.

தம்பிமார் கதை, மாடம்பிமார் கதை இரண்டும் குறிப்பிடும் மாடம்பிமார் எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள். கதைப்பாடலில் உள்ள தகவல்கள் வரலாற்று தகவல்களுடன் முரண்படுகின்றன. தம்பிமார்கள் கொலை செய்யப்பட்ட பின்பும் அவர்கள் குடும்பத்திலும், மாடம்பிமார்கள் குடும்பத்திலும் உள்ள பெண்களை முட்டம் கடற்கரையிலுள்ள முக்குவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர் என்ற வரலாற்றுக் குறிப்பு உள்ளது. மாடம்பிமார்கள் 16 பேரையும் வரலாற்றாசிரியர்கள் பட்டியலிடுகின்றனர். இவர்களில் போற்றி, பண்டாலை என்னும் இரண்டு நம்பூதிரிகள் தேச பிரஷ்டம் செய்யப்பட்டனர். பிறர் கைது செய்யப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு.

யோகக்காரர்கள்

கதைப்பாடலில் யோகக்காரர்கள் பற்றிய எந்த குறிப்பு வரவில்லை. ஆனால் மார்த்தாண்டவர்மா கோவிலுக்கு வந்த நாளன்று அவர் வருவதற்கு முன் பூஜையை முடித்த யோகக்காரர்களின் கொட்டத்தை அடக்க கொச்சுராமன் அவர்களை தூக்கிலிட்ட குறிப்பு கே.கே. பிள்ளையின் சுசீந்திரம் கோவில் நூலில் உள்ளது.

மக்கள்-மருமக்கள் வழி போராட்டம்

தம்பிமார்கள் தாய் வழி தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள். தம்பிமார்களின் சொத்தும் நிர்வாகமும் நாஞ்சில் நாட்டில் இருந்தது. ஆனால் நாஞ்சில் நாட்டு வேளாளர் முழுவதும் மன்னரை ஆதரித்தனர். நாயர்களில் சில குடும்பங்களை தவிர பெரும்பாலும் மன்னரை ஆதரித்தனர். நாடார்களில் பொத்தையடி ஊரைச் சார்ந்த சில குடும்பங்கள் மட்டும் மன்னரை ஆதரித்தனர். நாடார்களில் பெரும்பாலனவர்களும், பணிக்கர் சமூகத்தில் சிலரும் தம்பிமார்கள் ஆதரவாளராக இருந்தனர்.

எனவே இப்போரை மக்கள்-மருமக்கள் வழி போராட்டமாக கருத வாய்ப்புள்ளது. நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் மருமக்கள் வழியைப் பின்பற்றுபவர்கள். நாடார்கள் மக்கள் வழியினர். கதைப்பாடலில் வரும் இரண்டாவது செய்தி அழகப்ப முதலியாரின் கொள்ளை. முதலியார் பெரும்பாலும் வேளாளர் வாழும் நாஞ்சில் நாட்டிலேயே கொள்ளையடித்திருக்கிறார். எனவே வேளாளர்கள் மேல் தம்பிமார்களுக்கு கோபம் இருந்திருக்கலாம் எனக் கருதலாம்.

தம்பிமார் கதையை வில்லிசையில் பாடுகின்ற குமரி மாவட்டக் கலைஞர்கள்

1 ஆறுமுகப் பெருமாள் புலவர் ஒரப்பன விளை
2 கணபதி தெக்குறிச்சி
3 கிருஷ்ண மணி கல்லு விளை
4 சண்முக நாடார் முருங்க விளை
5 சித்திரைக்குட்டி தெக்குறிச்சி
6 சுயம்புத்தங்கம் கண்ணா விளை
7 சுயம்பு ராஜன் ராஜாக்கமங்கலம்
8 ஞானக்கண்ணுப் புலவர் வெள்ள மடி
9 பாக்கியலெட்சுமி பள்ளி விளை
10 புகழ் பெருமாள் தெக்குறிச்சி
11 பெரிய நாடார் ஒரப்பன விளை
12 பெருமாள் நாடார் தெக்குறிச்சி
13 போத்தி புலவர் வெள்ளமடி
14 முத்துசுவாமிப் புலவர் சுயம்புலிங்கபுரம்
15 முத்தையா புலவர் பண்ணையூர்
16 ராஜகிளி அம்மாண்டி விளை
17 ராஜாத்தி கல்லுக்கட்டி

உசாத்துணை

  • தம்பிமார் கதை, அ.கா. பெருமாள், கே. ஜெயகுமார், இன்ஸ்டிட்யூட் ஆப் ஆசியன் ஸ்டடீஸ், சென்னை (ஆங்கில மொழியாக்கம்: 1999-ல் மா. சுப்பிரமணியம் இக்கதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். A Scorching Guile என்ற பெயரில் இதை ஆசிய கல்வி நிறுவனம், ஜி ஜான் சாமுவேல் ஆசிரியத்துவத்தில் வெளியிட்டது.)✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Apr-2023, 06:15:19 IST