under review

பிரமிள்

From Tamil Wiki
பிரமிள்
பிரமிள்
பிரமிள்

பிரமிள் (சிவராமகிருஷ்ணன், தருமு சிவராம்) (ஏப்ரல் 20,1939 - ஜனவரி 6, 1997) நவீனத்தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், ஓவியர்.

பிறப்பு, கல்வி

பிரமிளின் இயற்பெயர் சிவராமலிங்கம். தருமு சிவராம் என்றழைக்கப்பட்டார். பிரமிள் ஏப்ரல் 20, 1939-ல் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருக்கோணமலையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை ராமகிருஷ்ண மடம் நடத்திய இரவுப்பாடசாலையில் பயின்றார். 1971-ல் தமிழ் நாட்டுக்கு வந்தார். டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர் கோயில், மதுரை என பல இடங்களில் வசித்திருந்தாலும் அதிக நாட்கள் சென்னையில் தான் பிரமிள் வாழ்ந்தார். பிரமிள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆன்மிக வாழ்க்கை

பிரமிள் பெயர்க்கணிதத்தின் மீதிருந்த ஈடுபாட்டால், வாழ்நாள் முழுதும் விதவிதமாகத் தன் பெயரை பல முறை மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கியத்தை விடவும் ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். பிரமிளுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தியின் மீதும் பெரும் ஈடுபாடு இருந்தது. இளமையில் அவரை அதிகம் பாதித்தவர் திருக்கோணமலை இல்லறத்துறவி, சாது அப்பாத்துரை. யோகி ராம்சுரத் குமார், பேடா போன்ற பல ஞானிகளின் பாதிப்பும் குறிப்பிடத்தகுந்தது

இலக்கிய வாழ்க்கை

பிரமிள் தனது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தார். கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றை எழுதினார்.

தன் இருபத்தி எட்டாவது வயதில் மௌனியின் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதினார். 'கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்' என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து 'எழுத்து இதழில் எழுதிய கட்டுரை கவனம் பெற்றது.

லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம் பொற்கொடி இளங்கோ, டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமீள், பிரேமிள், பிரமிள் பானு, ஜீவராம் அருப்பிருமீள், அஜித்ராம் பிரேமிள், பிரமிள் பானுச்சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தியவ் விஷ்னுவ் அக்னி ராம்பிரமிள், அரூப் சிவராமு, ஔரூப் சிவராம், தர்மு சிவராம், தருமு சிவராமு போன்ற பல புனைப்பெயர்களில் எழுதினார்.

தொடக்கத்தில் எழுத்து பத்திரிக்கையும் இடையில் கொல்லிப்பாவை பத்திரிக்கையும் இறுதியில் 'லயம்' பத்திரிக்கையும் பிரமிளுக்கு முதன்மையான படைப்புக்களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்களை கால சுப்ரமணியம் தனது லயம் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

ஓவியம்

பிரமிள் ஓவியக்ககையிலும், சிற்பக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். ஓவியங்கள் தீட்டினார். களிமண் சிற்பங்கள் செய்தார். புத்தகங்களிலும், இதழ்களிலும் இவர் வரைந்த ஓவியங்கள் வெளியாகின. 1971-ல் கண்டி பிரான்ஸ் நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

மதிப்பீடு

பிரமிள் ”உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்” என்று சி.சு. செல்லப்பாவால் மதிப்பிட்டார்.

"தனது நிறைவேறாத ஆன்மிக இலக்கின், குறைபட்ட சாத்தியமாகவே தனது படைப்புகளைப் பார்த்திருக்கிறார் "என்று ஷங்கர் ராமசுப்ரமணியன் பிரமிளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் வெளியான 'தமிழ்ச் சிறுகதைகள்' என்ற நூலில் பிரமிளின் 'சந்திப்பு' சிறுகதை சேர்க்கப்பட்டபோது, அந்தக் கதைதான் மிகச் சிறப்பானது என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸின்' டெல்லி பதிப்பு சொன்னது.

"தமிழ்ப் புதுக்கவிதையின் முழுமையான தனித்துவம் பிரமிள் கவிதைகளில் மட்டுமே உள்ளது. பிரமிள் காலந்தோறும் மனிதனை முடிவிலி நோக்கிச் செலுத்திய அடிப்படை வினாவால் உருவாக்கப்பட்டவர். எந்த வினா ரிக்வேதத்து சிருஷ்டிகீதத்தை, கணியன் பூங்குன்றனின் செய்யுள் வரிகளை உருவாக்கியதோ அதே வினாவால் செலுத்தப்பட்டவர். அவ்வினாவுக்கு விடைதேடும் பொருட்டு மரபு தனக்களித்த படிமப் பெரும் செல்வத்தைக் கருவியாக்கி முன்னகர்பவர். தன் ஆளுமையின் பெரும் கொந்தளிப்பான கவியுலகு ஒன்றை உருவாக்கியவர். எங்கெல்லாம் அந்த முதல்பெருவினா தன்னைச் செலுத்துகிறதோ அங்கெல்லாம் புத்தம்புது கவிமொழியை உருவாக்கியவர். நவீனத்தமிழ்ப் புதுக்கவிதையில் தமிழ் மரபின் சாரத்தைத் தன் வரிகளில் புதுப்பிக்க முடிந்த முதல் பெரும் கவிஞர். பித்தும் தன்முனைப்பும் தத்தளிப்பும் தரிசனங்களுமாக நம்முன் வாழ்ந்து மறைந்த இப்பெருங்கலைஞனைத் தமிழ் நமக்களிக்கும் பெருமிதம் ததும்பும் அனைத்துச் சொற்களாலும் நாம் கௌரவிக்கவேண்டும்" என எழுத்தாளர் ஜெயமோகன் தன் "இலக்கிய முன்னோடிகள்' (நற்றிணை பதிப்பகம்) நூலில் குறிப்பிட்டுள்ளார்.

'காவியம்' என்ற இவரது கவிதை தமிழில் நவீன புதுக்கவிதைக்கான மாதிரியாக அதிக அளவில் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

மறைவு

உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால், பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரமிள், ஜனவரி 6, 1997-ல் காலமானார். வேலூருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

விருதுகள்

  • கும்பகோணம் சிலிக்குயில் பதிப்பகத்தின் 1995-ம் ஆண்டுக்கான 'புதுமைப்பித்தன் வீறு' விருது
  • நியூயார்க் விளக்கு அமைப்பின் 1996-ம் ஆண்டுக்கான 'புதுமைப்பித்தன்' விருது.

நூல்பட்டியல்

கவிதைத் தொகுதிகள்
  • கண்ணாடியுள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்
சிறுகதை தொகுப்பு
  • லங்காபுரி ராஜா
  • பிரமிள் படைப்புகள்
சிறுகதைகள் சில
  • காடன் கண்டது
  • பாறை
  • நீலம்
  • கோடரி
  • கருடனூர் ரிப்போர்ட்
  • சந்திப்பு
  • அசரீரி
  • சாமுண்டி
  • அங்குலிமாலா
  • கிசுகிசு
  • குறுநாவல்
  • ஆயி
  • பிரசன்னம்
  • லங்காபுரிராஜா
நாடகம்
  • நட்சத்ரவாசி
  • (அடையாளம்).
பிரமிள் நூல் வரிசை

(பதிப்பு: கால. சுப்ரமணியம்)

  • பிரமிள் கவிதைகள், 1998 (முழுத் தொகுதி) (லயம்)
  • தியானதாரா, 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா).
  • மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்)
  • பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்)
  • வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).
  • பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி)
  • பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).
  • விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)
  • ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).
  • யாழ் கதைகள். 2009. (லயம்).
  • காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).
  • வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி)
  • வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி)
  • எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது)
  • அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது)
  • தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)
  • சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)
  • ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. (தமிழினி)
  • மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014.(தமிழினி)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. (அடையாளம்)

நினைவு நூல்கள்

  • நினைவோடை - சுந்தர ராமசாமி (2005)

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jun-2023, 12:28:38 IST