under review

மௌனி

From Tamil Wiki
மௌனி

மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியில் பிறந்தார். தன் சொந்த ஊரான செம்மங்குடி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்[1]. உயர் நிலைக் கல்வி வரை கும்பகோணத்தில் பயின்றார். பின் 1929-ம் ஆண்டு, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவருக்கு மௌனி என்ற புனைப்பெயரை சூட்டி, மணிக்கொடியில் எழுத தூண்டியது மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா.

தனி வாழ்க்கை

மௌனி

திருமணமாகி 14 வருடங்கள் மௌனி கும்பகோணத்தில் வசித்தார். பின், தன் குடும்ப தொழில் மற்றும் சொத்துக்களை பராமரிக்க சிதம்பரம் சென்று, இறுதி வரை சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். மௌனிக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து குழந்தைகள். மௌனியின் முதல் மகனும் மூன்றாவது மகனும் விபத்துக்களில் மரணமடைந்து விட்டனர். தத்துவத்தில் உயர் படிப்பு படித்த இரண்டாவது மகன் மன நிலை சரியில்லாமல் இருந்து 2004-ல் காலமானார். மௌனி, தன் இறுதிக் காலத்தில் மகளுடன் சிதம்பரத்தில் வாழ்ந்து ஜூலை 6, 1985-ல் காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

கும்பகோணத்தில் 1933 நடந்த ஒரு மகாமகம் விழாவில் மௌனியை தற்செயலாக சந்தித்த மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா, அவரை கதை எழுத சொன்னதாக மௌனியே பதிவு செய்திருக்கிறார். (எனக்குப் பெயர் வைத்தவர்- கட்டுரை[2]) . 1935-ல் இரண்டு கதைகளை எழுதி பி.எஸ்.ராமையாவுக்கு அனுப்பினார். மௌனி என்னும் பெயருடன் அவருடைய முதல் கதை 'ஏன்?', 1936-ம் ஆண்டு பிப்ரவரி மாத மணிக்கொடி இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து குடும்பத்தேர், பிரபஞ்ச கானம் என்ற கதைகள் மணிக்கொடியில் வெளியாயின. மரணம், ஆண் - பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை ஆகியவையே மௌனியின் பெரும்பாலான கதைக்களங்கள்.

மௌனி

விவாதங்கள்

எம்.வி. வெங்கட்ராம் எழுதிய ’மௌனியும் எம்.வி.வியும்’ கட்டுரை மௌனி பற்றிய விமர்சகர்களின் பிம்ப உருவாக்கத்தை உடைத்தது. மௌனியின் கதைகளை தன்னுடைய தேனீ இதழுக்காக வாங்கி பிரசுரித்த எம்.வி.வெங்கட்ராம் அவர் கதைகளாக எழுதுவதில்லை என்றும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஒற்றை வரிகளை இணைத்து கதைபோல ஒரு வடிவத்தை மட்டுமே அளிப்பதாகவும் அவற்றை பி.எஸ்.ராமையா போன்ற இதழாசிரியர்கள் செம்மைப்படுத்தி கதைகளாக ஆக்கியதாகவும் சொல்கிறார்.

இலக்கிய இடம்

மௌனியின் இலக்கிய இடம் பற்றிய மதிப்பீடுகள் இரு எல்லைகளில் நிலைபெறுகின்றன. புதுமைப்பித்தன் இவரை "சிறுகதையின் திருமூலர்" என்று மௌனியின் சிறுகதைகள் தொகுப்பில் குறிப்பிடுகிறார். மறு எல்லையில் கைலாசபதி, தி.க. சிவசங்கரன், கு. அழகிரிசாமி போன்றோர் மௌனியை மேட்டிமைவாதம், இருண்மைவாதம், குறுங்குழுவாதம் ஆகியவற்றின் அடையாளமாக கண்டனர். இந்த இரு எல்லைகளுக்கு நடுவே நின்று மௌனியின் மீதான முக்கிய விமர்சனமாக இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமார் எழுதி, பின் வானதி பதிப்பக வெளியீடான "மௌனியுடன் கொஞ்சம் தூரம்" கட்டுரையை கொள்ளலாம்.மௌனிக்கு மேலை இலக்கியத்தில், குறிப்பாக காஃப்காவின் மீது ஈடுபாடு இருந்தது. இருப்பினும், அழகியல் ரீதியாக மௌனியின் கதைகளை காஃப்கா கதைகளுடன் ஒப்பிடக் கூடாது என்று திலீப் குமார் கூறுகிறார்[3]. ஜெயமோகன் மௌனியின் அழகியலில் ஆதிக்கம் செலுத்தியவராக பிரிட்டிஷ் கவிஞர் ராபர்ட் ப்ரவுனிங்கை குறிப்பிடுகிறார்[4]. மௌனி அகவயமான அனுபவங்களை திறனற்ற அன்றாடமொழியில் கூற முயன்று அதனால் சிக்கலான கூறுமுறையை அடைந்தவர் என்கிறார்.

"மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது புது அனுபவம் அமைகிறது. ‘உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுபவை எல்லாமே இப்படி முதல் தடவையாக படிக்கும்போது புது அனுபவமும் மறுபடி மறுபடி படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உருவாக்க வல்லவை’ என்கிறார் க.நா.சுப்ரமணியம்

’மெளனி இந்திய வேதாந்த விசாரத்தின் தளத்தில் நின்று செயல்படுகிறார். நமது பரிச்சய உலகத்தின் சாயல்கள், காட்சிகள் இவற்றை மெளனியின் கலை உதறிவிடுகிறது. ஆணும் பெண்ணும் இரு ஆகர்ஷண கோளங்களாக இவர் கதைகளில் வெளிப்படுகின்றனர். இனக் கவர்ச்சியை உடல் தளத்திலிருந்து மேலே எடுத்துச் சென்ற பின்னரும் வேதாந்த, இசைத் தளங்களோடு அவை இணைக்கப்பட்ட பின்னரும் ஆகர்ஷண சக்திகள் கூடி முயங்க முடியாமல் போவதில் கொள்ளும் துக்கம் இவரது சிறுகதைகள் நெடுகிலும் வியாபித்துக் கிடக்கிறது. இது லௌகிகத் தளத்திற்குரிய துக்கம். இந்தத் துக்கத்தை இவர் விவரிக்கும் பாங்கில், கூடாத காதல் குறியீடாக விரிந்து, வாழ்வின் சகல துக்கங்களையும் நெருடும் முகாந்திரமாகிவிடுகிறது. மெளனியின் சிறுகதைகள் சிருஷ்டியின் ஊனத்தைக் கவிதைகளாக்கி இருக்கின்றன’ என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார் (கலைகள் கதைகள் சிறுகதைகள்[5]).

நடுத்தர வர்கத்தினர் நவீன கல்வி பெற்ற போது கண்ட ஆண், பெண் உறவு, அதன் மீதான தயக்கங்கள், அதன் விளைவான பகற்கனவுகளினால் ஆன உலகமே மௌனியின் பெரும்பாலான கதை உலகம். பாத்திரங்கள், இனம்புரியாத ஒரு பிரமிப்பு நிலையை அல்லது துக்கத்தை வகுத்து சொல்ல இயலாமல் தவிப்பவை. அந்த தவிப்பின் சில தருணங்களை கச்சிதமான மொழியில் அவரால் வாசகருக்குக் கடத்தி விட முடிவதே அவரது கதைகளின் வெற்றி.

படைப்புகள்

சிறுகதைகள்
  • ஏன்? (1936)
  • பிரபஞ்சகானம் (1936)
  • குடும்பத்தேர் (1936)
  • காதல்சாலை (1936)
  • கொஞ்சதூரம் (1936)
  • சுந்தரி (1936)
  • அழியாச்சுடர் (1937)
  • மாறுதல் (1937)
  • நினைவுச்சுழல் (1937)
  • மாபெருங்காவியம் (1937)
  • மிஸ்டேக் (1937)
  • சிகிச்சை (1937)
  • எங்கிருந்தோ வந்தான் (1937)
  • இந்நேரம், இந்நேரம் (1937)
  • மாறாட்டம் (1938)
  • நினைவுச்சுவடு (1948)
  • மனக்கோலம் (1948)
  • சாவில் பறந்த சிருஷ்டி (1954)
  • குடை நிழல் (1959)
  • பிரக்ஞை வெளியில் (1960)
  • மனக்கோட்டை (1963)
  • உறவு, பந்தம், பாசம் (1968)
  • அத்துவானவெளி (1968)
  • தவறு (1971)
கட்டுரைகள்
  • எனக்கு பெயர் வைத்தவர், பி.எஸ். ராமையா மணி விழா மலர், 1965[2]
  • செம்மங்குடி, தன் ஊர் தேடல், ஆனந்த விகடன், 1968[1]
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • மௌனியின் 11 சிறுகதைகளை ஆங்கிலத்தில் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் மொழி பெயர்த்துள்ளார்.
  • மௌனியின் மாபெருங்காவியம் சிறுகதையை என். பானுமதி மொழி பெயர்த்துள்ளார். (A Great Epic (மாபெருங்காவியம்) by N Banumathy)
  • Mauni: A writers' writer, Chennai: Katha (2004)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jan-2023, 11:35:44 IST