ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஷங்கர்ராமசுப்ரமணியன் (பிறப்பு: 1975) ( ஷங்கர் ராமசுப்ரமணியன், சங்கர் ராமசுப்ரமணியன், சங்கர ராம சுப்ரமணியன்) எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர், இதழாளர்.
வாழ்க்கைக்குறிப்பு
ஷங்கர்ராமசுப்ரமணியன் 1975-ல் திருநெல்வேலியில் பிறந்தார். பெற்றோர் ச. பொன்னுசாமி - ஆர். மீனாட்சி. இயந்திரப் பொறியியலில் (Mechanical Engineering) பட்டப்படிப்பு முடித்தார். புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.
இதழியல்
ஷங்கர்ராமசுப்ரமணியன் 1999-லிருந்து இதழியலில் பணியாற்றி வருகிறார். சுட்டி விகடன், குமுதம், மின் பிம்பங்கள், பீப்பிள்ஸ் வாட்ச், தி சன்டே இந்தியன், இந்து தமிழ் திசை நிறுவனங்களில் பணியாற்றினார். இந்து தமிழ் திசை நாளிதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
2001-ல் ஷங்கர்ராமசுப்ரமணியனின் முதல் கவிதைத் தொகுப்பான ’மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ வெளியானது. இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம் போன்ற தளங்களில் எழுதிவருகிறார். பன்னிரெண்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.
கவிதைகள்
ஷங்கர் ராமசுப்ரமணியன் முதன்மையாகக் கவிஞராகவே அறியப்படுகிறார். 2001-ல் வெளிவந்த மிதக்கும் இருக்கைகளின் நகரம் இவரது முதல் கவிதைத்தொகுதி. ஆயிரம் சந்தோஷ இலைகள் என்றபேரில் முழுக்கவிதைத் தொகுப்பு 2017-ல் வெளிவந்தது. இகவடை பரவடை என்னும் தலைப்பில் 2023-ல் கட்டற்ற மொழியமைப்பு கொண்ட நீள்கவிதை ஒன்றை எழுதினார்.
விமர்சனங்கள்
படைத்தவன்' மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்' என்ற கட்டுரைத்தொகுப்பை எழுதினார். 'கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்', 'பிறக்கும்தோறும் கவிதை', 'நான் பிறந்த க-வி-தை' ஆகியவை அவரது பிற நூல்கள்.
தொகைநூல்கள்
'சிறுகோட்டுப் பெரும்பழம் - விக்ராமதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்','யவனிகா ஸ்ரீராம்: ஒரு வாசிப்பு', 'அருவம் உருவம்: நகுலன் 100' ஆகிய தொகுப்பு நூல்களை உருவாக்கியுள்ளார்.
இலக்கிய இடம்
"புன்னகைக்குப்பின் அடியில் மெல்ல கசப்பை விட்டுச்செல்லும் அழகிய சித்தரிப்புகள்" என ஜெயமோகன் ஷங்கர்ராமசுப்ரமணியத்தின் கவிதைகளை மதிப்பிடுகிறார். "சுயமற்றிருப்பதை அரூபமாக மட்டுமில்லாமல் பௌதீகமாகவும் ஷங்கர் சாதித்திருக்கிறார். ஷங்கருடைய கவிதைகளில் உடலும் காமமும் இடம்பெற்றிருக்கும்போது அங்குப் புலன் உணர்ச்சி என்பதே இல்லை. உடல் உறுப்புகள் பற்றி எழுதும்போதுக்கூட அவை பௌதீகமாக உருவம் பெறுவதில்லை." என விஷால்ராஜா மதிப்பிடுகிறார்.
விருதுகள்
- 2017-ல் ஷங்கர்ராமசுப்ரமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் விருது வழங்கியது.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- மிதக்கும் இருக்கைகளின் நகரம்
- ஆயிரம் சந்தோஷ இலைகள்
- நிழல், அம்மா
- கல் முதலை ஆமைகள்
- பிறக்கும்தோறும் கவிதை
- ஞாபக சீதா
- ராணியென்று தன்னையறியாத ராணி
- காகங்கள் வந்த வெயில்
- அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்
- ஆயிரம் சந்தோஷ இலைகள்
- இகவடை பரவடை
கட்டுரைத் தொகுப்பு
- படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்
- கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்
- பிறக்கும்தோறும் கவிதை
- நான் பிறந்த க-வி-தை
தொகுப்பு நூல்கள்
- சிறுகோட்டுப் பெரும்பழம் - விக்ராமதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
- யவனிகா ஸ்ரீராம்: ஒரு வாசிப்பு
- அருவம் உருவம்: நகுலன் 100.
மொழியாக்கம்
- விசாரணை அதிகாரி, பியோதர் தஸ்தயவெஸ்கி (கரமசோவ் சகோதரர்கள் நாவலின் திருப்புமுனை அத்தியாயம்)
- ஜூவின் கதை (ஆங்கில மூலம்: பால் ஜக்கரியா, தூலிகா பதிப்பகம்)
- அனுமனின் ராமாயணம் (ஆங்கில மூலம்: தேவ்தத் பட்நாயக், தூலிகா பதிப்பகம்)
இணைப்புகள்
- ஷங்கர்ராமசுப்ரமணியன்: வலைதளம்
- யார் இல்லாதபோதும் கவிதை இருக்கும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்: நேர்கண்டவர்: விஷால் ராஜா
- ’கல், முதலை, ஆமைகள்’: எஸ். ராமகிருஷ்ணன்
- தூல சூட்சும சந்நிதி: arunchol: ஷங்கர்ராமசுப்ரமணியன்
- கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
- நவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்-ஷங்கர்ராமசுப்ரமணியன்
- பலூன் கோடாரி -விஷால் ராஜா
- இந்த பிருஷ்டம், இந்த பூமியில் இருப்பது ரொம்ப ரொம்ப இனிமையாக இருக்கிறது: ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் உரையாடல், யூட்யூப் காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Aug-2023, 19:58:30 IST