under review

சுசீந்திரம் ஆலயம்

From Tamil Wiki
சுசீந்திரம் கோயில் கோபுரம்

கன்யாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான சிவ ஆலயம். தாணுமாலயன் [ஸ்தாணுமாலையன்] என்று மூலவருக்குப் பெயர். சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரே சிவலிங்கத்தில் அமைந்துள்ளது என்று தொன்மம். ஆகவே ஸ்தாணு, மால், அயன் என்ற பேரில் மூலவர் அழைக்கப்படுகிறார்.

இடம்

கன்யாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் நகரில் இருந்து கன்யாகுமரி செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் உள்ளது.இந்த ஊரின் வடக்கும் கிழக்குமாக வளைந்து பழையாறு ஓடுகிறது. கன்யாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் உள்ள சுசீந்திரம் பஞ்சாயத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

பெயர்

சுசீந்திரம் ஆலயத்தின் கல்வெட்டுகளில் சுந்திரம், சுசிந்திரம், சுசீந்திரம், ஸுஜிந்த்ரம், சீந்தரம் என்னும் ஐந்து வகை சொற்கள் உள்ளன. இங்குள்ள பொ.யு. 941-ம் ஆண்டின் கல்வெட்டு சுசிந்திரம் என்று குறிப்பிடுகிறது. பொ.யு. 10-ம் நூற்றாண்டு முதல் பொ.யு. 18-ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளில் சுசீந்திரம் என்னும் பெயரே தொடர்ந்து வருகிறது.

இந்த ஊரின் பெயருக்கு பல விளக்கங்கள் உள்ளன.இதன் பெயர் சிவீந்திரம் என்று சொல்லப்படுகிறது. சிவ இந்திரம் என்னும் சொல்லிணைவு இது இந்திரனுக்குரிய ஊர் என்பதை காட்டுகிறது எனப்படுகிறது. சுசி இந்திரம் என பிரித்து இந்திரன் தொழுநோய் நீங்கி உடல் தூய்மையடையும்பொருட்டு வழிபட்ட இடம் என்பதனால் இந்தப் பெயர் அமைந்தது என்று ஒரு விளக்கமும் உண்டு.

பொ.யு. 11-ம் நூற்றாண்டு கல்வெட்டு சுசீந்திரத்தை ராஜராஜ பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டுப் பிரம்மதேயமான சுந்தரசோழ சதுர்வேதி மங்கலம் என்று கூறுகிறது. சுசீந்திரம் இரட்டை தெருவில் உள்ள குலசேகரப்பெருமாள் கோயிலின் முகமண்டபக் கல்வெட்டு இவ்வூரை வீரகேரள சதுர்வேதி மங்கலம் என்று கூறுகிறது.

மூலவர்

நடைமுறையில் இது சிவன் கோயில். ஆனால் தொன்மப்படி சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக உறையும் சிவலிங்கம் இங்கே நிறுவப்பட்டுள்ளது. ஸ்தாணு [சிவன்] மால் [விஷ்ணு] , அயன் [பிரம்மன்] ஆகிய தெய்வங்கள் இணைந்த தெய்வம் என்பதனால் இறைவனின் பெயர் ஸ்தாணுமாலயன்.

கல்வெட்டுகள் இக்கோயில் மூலவரை மகாதேவர், சடையார், சுசிந்திரமுடையார், சிவிந்திரமுடைய நயினார், உடையார் எம்பெருமான், பரமசிவன் என்றே குறிப்பிடுகின்றன. பொயு 906-ல் வெட்டப்பட்ட பழைய கல்வெட்டில் மகாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செண்பகராமன் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில்தான் முதல்முதலாக தாணுமாலயன் என்னும் பெயர் வருகிறது. இது சோழர்களுக்குப்பின் இப்பகுதியை ஆண்ட சிற்றரசர்களில் ஒருவரான திருப்பாப்பூர் மூத்த திருவடி அளித்த நிபந்தத்தை குறிப்பிடும் கல்வெட்டு. பொ.யு. 1471-ல் வெட்டப்பட்டது

தொன்மம்

சுசீந்திரம் ஆலயத்தின் ஸ்தலபுராணம் சம்ஸ்கிருதம் மலையாளம் தமிழ் மூன்று மொழிகளிலும் உள்ளது. சம்ஸ்கிருத மூலம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மலையாள தலபுராணம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவரான வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் கொட்டாரத்தில் பாச்சு மூத்தது எழுதியிருக்கிறார். தமிழ் தலபுராணத்தை முத்தமிழ் கவிராயர் எழுதியிருக்கிறார்.

சுசீந்திரம் ஆலயத்தைப் பற்றிய நான்கு தொன்மங்கள் உள்ளன.

அத்ரி அனுசூயை கதை: அத்ரி முனிவரின் மனைவியான அனசூயையை சோதனை செய்ய மும்மூர்த்திகளும் துறவியர் வடிவில் வந்து அவள் நிர்வாணமாக வந்து உணவிடவேண்டும் என்று கோரினர். அவள் தன் கற்பின் வல்லமையால் அவர்களை கைக்குழந்தையாக ஆக்கி அதன்பின் தான் நிர்வாணமாக ஆகி உணவூட்டினாள். இந்தக்கதையின் படி அனசூயாவால் ஒன்றாக்கப்பட்ட மும்மூர்த்திகள் இங்குள்ளனர் என்கின்றது தலபுராணம்

இந்திரன் விமோசனம் பெற்ற கதை: இந்திரனுக்கு தொழுநோய் ஏற்பட்டதனால் இங்கு வந்து வழிபட்டு தூய்மையடைந்தான் என்கின்றது ஒரு தொன்மம்

அறம் வளர்த்த அம்மன் கதை: இங்கு பள்ளியறை நாச்சியார் என்னும் இளம்பெண் தாணுமாலயனை தன் கணவனாக எண்ணி தவம்செய்து அவனைச் சென்றடைந்தாள் என்று தொன்மம் உள்ளது

கன்யாகுமரி அம்மன் திருமணக் கதை: தாணுமாலயன் கன்யாகுமரி தேவியை மணக்க விரும்பி சீர்வரிசைகளுடன் சென்றதாகவும் அந்த மணம் நடக்கலாகாது என எண்ணிய இந்திரன் சேவலாக வந்து கூவி விடிந்துவிட்டது என்று தாணுமாலயனை ஏமாற்றியதாகவும் திருமணத்திற்கு பிந்தியதனால் தாணுமாலயன் திரும்பிச் சென்றுவிட கன்யாகுமரி தேவி அழியாக் கன்னியாக கடல்முனையில் நின்றுவிட்டதாகவும் தொன்மம் உள்ளது.

கோயில் அமைப்பு

சுசீந்திரம் அருகே கற்காடு என்னும் சிற்றூரில் உள்ள மாறன் சடையன் என்னும் பாண்டிய மன்னனின் கல்வெட்டுதான் சுசீந்திரம் கட்டுமானம் பற்றிய பழைய ஆவணம். பொ.யு. 880-ல் இந்த ஆலயத்திற்கு கொடை அளிக்கப்பட்டதைச் சொல்கிறது. ஆகவே இந்த ஆலயம் அதற்கும் இருநூறாண்டுகள் முன்னரே இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களின் முடிபு. அதன்பின் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுக்காலம் இந்த ஆலயம் தொடர்ச்சியாக விரிவாக்கிக் கட்டப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 4 ஏக்கர் பரப்பளவுள்ளது இந்த ஆலயம். ஏறத்தாழ மூன்றரை ஏக்கர் பரப்பிற்கு ஆலயக்கட்டுமானம் உள்ளது.

நாடகசாலை: கோயிலின் நுழைவாசலில் இருந்து கோபுரவாசல் வரையுள்ள பகுதி. இது பொ.யு. 1797-ல் கட்டப்பட்டது என்று கே.கே.பிள்ளை குறிப்பிடுகிறார். இங்கே முன்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. எட்டு தேவதாசிகளால் நாடகசாலை கட்டப்பட்டது என்று கல்வெட்டுச் சான்று உள்ளது.

ராஜகோபுரம்: ராஜகோபுரத்தின் அடித்தளம் பொ.யு. 1544-ல் கட்டப்பட்டது. 344 ஆண்டுகளுக்கு பிறகு திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாள் மகாராஜா 1881-ல் கோபுரத்தை கட்ட ஆரம்பித்தார். அவர் காலமாகவே அவருக்குப்பின் வந்த மூலம் திருநாள் மகாராஜா பொ.யு. 1888-ல் கட்டி முடித்தார்.

ஊஞ்சல் மண்டபம்: ஊஞ்சல் மண்டபம் பொ.யு. 1584-ல் கட்டப்பட்டது.இதில் மன்மதன், ரதி, கர்ணன் ,அர்ஜுனன் சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டபத்தின் ஒருபகுதியை பண்டாரம் சாதியை சேர்ந்த இரவி என்பவரின் மனைவி கட்டினார் என கல்வெட்டு சொல்கிறது

வசந்த மண்டபம்: கிழக்கு வெளிப்பிராகாரத்தில் வசந்த மண்டபம் அமைந்துள்ளது. சுசீந்திரத்தை அடுத்த பறக்கை என்னும் ஊரைச்சேர்ந்த முத்துக்குட்டி மாலையம்மா என்பவள் இந்த மண்டபத்தையும் சித்திரசபையையும் கட்டிமுடித்தாள் என கல்வெட்டுகள் சொல்கின்றன. பொ.யு. 1835-ல் இது கட்டப்பட்டதுசெண்பகராமன் மண்டபம். இந்த ஆலயத்தின் மிகப்பெரிய மண்டபம் இது.பொ.யு. 1471 முதல் பொ.யு. 1478-ல் இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 36 தூண்களிலாக ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கு உள்ளன. வேணாட்டின் அரசர் இராமவர்மா இந்த மண்டபத்தைக் கட்டினார். இவருக்குச் செண்பகராமன் என்ற பெயரும் உண்டு.

சித்திரசபை: 1516 முதல் 1535 வரை வேணாட்டை ஆண்ட பூதலவீர உதயமார்த்தாண்ட வர்மா இந்த சித்திரசபையை கட்டியிருக்கலாம். 1825-ல் மாதுக்குட்டி மாலையம்மா இதை புதிப்பித்தார்.

குலசேகர மண்டபம்: திருவிழாவுக்கான ஊர்திகள் அலங்கரிக்கப்படும் மண்டபம்.இந்த மண்டபம் 1799-க்கு முன்பு கட்டப்பட்டது.

ஆதித்ய மண்டபம்: செம்புத்தகடு வேயப்பட்ட மண்டபம்.1484-ல் ஆதித்ய வர்மா என்னும் அரசனால் கட்டப்பட்டது.

வீரபாண்டியன் மண்டபம்: கோமாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீவீரபாண்டியன் பெயரால் அமைந்த மண்டபம் இது. பொ.யு. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது

உதயமார்த்தாண்ட மண்டபம்: காலைபூசைகளுக்கான மண்டபம். இது பொ.யு. 12-ம் நூற்றாண்டு வரை மரத்தாலானதாக இருந்தது.

ரிஷப மண்டபம்: ரிஷபம் இருப்பதனால் இப்பெயர். பொ.யு. 12-ம் நூற்றாண்டை ஒட்டி கட்டப்பட்டது.

ஊஞ்சல் மண்டபம்: இது மயில்மண்டபம் கல்யாண மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.பொ.யு. 1584-ல் இது கட்டப்பட்டது என கல்வெட்டுச்சான்று உள்ளது.

துணைத்தெய்வங்கள்

தட்சிணாமூர்த்தி ஆலயம்: தட்சிணாமூர்த்தி ஆலயம் முகப்பில் அமைந்துள்ளது. இதை திருமலை நாயக்கர் கட்டினார் என்று சொல்லப்படுகிறது.

நீலகண்ட வினாயகர்: வசந்த மண்டபத்திற்கு மேற்கே நீலகண்ட வினாயகர் ஆலயம் உள்ளது. இது தெக்குமண் மடத்தைச் சேர்ந்த புருஷோத்தமர் நீலகண்டர் என்னும் நம்பூதிரி. இது 1587-ல் கட்டப்பட்டது.அருகே உள்ள கங்காளநாதர் கோயில் 1819-ம் ஆண்டு சீதப்பால் ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரால் கட்டப்பட்டது.

கைலாசநாதர் ஆலயம்: கோயிலுக்குள் இயற்கையாக அமைந்த சிறுபாறைமேல் கைலாசநாதர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயமும் முகப்பில் உள்ள கொன்றையடிநாதர் ஆலயமும் தாணுமாலயன் ஆலயத்தை விட தொன்மையானவை என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தாணுமாலயன் ஆலயம் முன்னர் இருந்திருந்தால் அதைவிட உயரமாக இந்த ஆலயம் நிறுவப்பட்டிருக்காது என கே.கே.பிள்ளை குறிப்பிடுகிறார்.

சேரவாதல் சாஸ்தா கோயில்: பொ.யு. 1479-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய ஆலயம்.

ராமசாமி ஆலயம்: இது பொ.யு. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அ.கா.பெருமாள் கருதுகிறார்.

ஜெயந்தீஸ்வரம் ஆலயங்கள்: சுசீந்திரம் ஆலய வளைப்புக்குள் ஜெயந்தீஸ்வரம் ஆலயங்கள் எனப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன.சுப்ரமணியர், துர்க்கை, கிருஷ்ணன்,சிவன் ஸ்ரீசக்கரம், இராமேஸ்வரலிங்கம் ஆகியவை இந்த ஆறு சிறு ஆலயங்களின் தெய்வங்கள். பொ.யு. 1819-ம் ஆண்டு ஆவணங்களில் இவை ஜெயந்தீஸ்வரர் ஆலயங்கள் என அழைக்கப்பட்டுள்ளன.சுசீந்திரத்தின் சன்னிதி தெரு பிள்ளையார் கோயிலில் கிடைத்த கல்வெட்டில் பொ.யு. 1605-ம் ஆண்டு இவ்வாலயங்கள் கட்டப்பட்டதாகச் சான்று உள்ளது.

சுப்ரமணியர் ஆலயம்: இங்குள்ள பரிவாரதேவதை ஆலயங்களில் பழமையானது சுப்ரமணியர் கோயில். பொ.யு. 1238-ம் ஆண்டு கல்வெட்டு இந்த ஆலயம் பற்றிச் சொல்கிறது.வடக்கு வெளிப்பிராகாரத்தில் காலபைரவர் ஆலயம் உள்ளது.

நந்தி கோயில்:கிழக்கு வெளிப்பிராகாரத்தில் மாக்காளை கோயில் உள்ளது. அருகே கொன்றையடிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கொன்றையடிநாதர் சுயம்புலிங்கம் என்பது தொன்மம்.பொ.யு. 12-ம் நூற்றாண்டில் கொன்றைமரத்தின் அடியில் நிறுவப்பட்ட லிங்க வடிவில் இந்த ஆலயம் இருந்திருக்கலாம்.

கருடாழ்வார் ஆலயம்: கருடாழ்வார் ஆலயம் கொன்றையடி நாதர் ஆலயத்தின் அருகே உள்ளது.தென்மேற்குத் தூணில் திருமலை நாயக்கரின் சிலை உள்ளது என்று ஆய்வாளர் கருதுகிறார்கள். இது திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது எனப்படுகிறது

பள்ளிகொண்டப் பெருமாள் ஆலயம்: தெற்கு உட்பிரகாரம் தென்மேற்கு மூலையிலுள்ளது இந்த ஆலயம். இவர் அமரபுஜங்கப் பெருமாள் என பழைய ஆவணங்களில் சொல்லப்படுகிறார். இந்த ஆலயத்தின் தொன்மையான படிமை இந்தக் கருவறையில் உள்ளது. பொ.யு. 10-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது இது. மாறன் சடையனின் பொ.யு. 10-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு இந்த தெய்வத்திற்கு அணிகலன்கள் அளித்ததைப் பற்றிச் சொல்கிறது. தெக்கேடம் கருவறையில் உள்ள வேங்கட விண்ணவருக்கும் முற்பட்டவர் இந்த பள்ளிகொண்ட பெருமாள் என்று கே.கே.பிள்ளை கருதுகிறார்.

சுசீந்திரப்பெருமாள் கோயில்: மேற்கு உட்பிரகாரத்தில் உள்ள இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.துர்க்கை கோயில். இரு மையக்கருவறைகளில் அமைந்துள்ள இந்த ஆலயம் பொ.யு. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

மூடுகணபதி ஆலயம்: உட்பிரகாரத்தில் இரு மையக்கருவறைகளுக்கு நடுவே உள்ள இந்த ஆலயம் பொ.யு. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

சங்கரநயினார் கோயில்: உட்பிரகாரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1929-க்கு முன்னரே கட்டப்பட்டது.

சண்டேஸ்வரர் கோயில்: உள்வடக்கு பிரகாரத்திலுள்ள இந்த ஆலயம் 1958-ல் கட்டப்பட்டது.

காலபைரவர் ஆலயம்: கோயில் ஆவணப்பதிவு இந்த தெய்வத்தை க்ஷேத்திரபாலன் என்று குறிப்பிடுகிறது.பொ.யு. 13-ம் நூற்றாண்டுச் சிற்பம் இங்கே மூலவராக உள்ளது.

இந்திர வினாயகர் ஆலயம்: இந்த ஆலயம் 17-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

உதயமார்த்தாண்ட வினாயகர் ஆலயம்: இந்த ஆலயம் வெளியே நாடகசாலையை ஒட்டி அமைந்துள்ளது.

தேரடி மாடன்: தேர்நிலை அருகே இருக்கும் தேரடி பூதத்தான் ஆலயம் பிற்காலத்தில் கட்டப்பட்டது.

கொன்றையடிநாதர் ஆலயம்: சுசீந்திரம் ஆலயவளைப்பின் தொன்மையான ஆலயம் இது எனப்படுகிறது. முன்பு கொன்றைமரத்தடியில் லிங்கம் மட்டும் இருந்திருக்கலாம். கருவறையில் 20 செமீ நீளமுள்ள மூன்று லிங்கங்கள் உள்ளன. பொ.யு. 12-ம் நூற்றாண்டில் இன்றுள்ள கோயில் கட்டப்பட்டது.

அறம் வளர்த்த அம்மன்: அறம் வளர்த்த அம்மன் என்னும் தேவியின் ஆலயம் சுசீந்திரத்தில் சிறப்பாக வழிபடப்படுகிறது. செண்பகராமன் மண்டபத்தின் வடக்குச் சுவரை ஒட்டி இந்த ஆலயம் அமைந்துள்ளது. கருவறை முகமண்டபம் என இரு அறைகள் கொண்டது. தாணுமாலயன் மேல் காதல்கொண்டு இறைவனுடன் கலந்தவள் என இவளுடைய புராணம் சொல்கிறது.1758-ம் ஆண்டு ஆலயத்திற்குள் உயிரிழந்த ஒரு பெண் இவள் என ஆவணங்கள் சொல்கின்றன. இவள் பெயர் பள்ளியறை நாச்சியார். இவள் அன்னை இக்கோயிலை நிறுவ நிதியளித்தாள் என பொ.யு. 1758-ம் ஆண்டு நிபந்தக்குறிப்பு சொல்கிறது.மூலவராக அமைந்துள்ள செப்புச்சிலை சுசீந்திரத்தில் காணப்படும் சாதாரணமான சிலைகளில் ஒன்று என கே.கே.பிள்ளை குறிப்பிடுகிறார். சிலையின் கையில் தாமரை மலர் உள்ளது இவளுக்கு மாசிமாதம் மகர நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. இவளுடைய குடும்பத்தவரே அச்செலவை வகிக்கிறார்கள்.

சுசீந்திரம் ஆஞ்சநேயர்

சுசீந்திரம் வெளிப்பிராகாரத்திலுள்ள அனுமனின் சிலை 4.90 மீட்டர் உயரம் கொண்டது.187-2ல் ஆலயம் அருகே குளம் தோண்டியபோது இச்சிலை கிடைத்தது. சிலை செய்யப்பட்ட ஆண்டு தெரியவில்லை.1930-ல்தான் இந்த சிலை கோயிலுக்குள் நிறுவப்பட்டது.

கருவறைகள்

சுசீந்திரம் ஆலயத்தில் தெக்கேடம் வடக்கேடம் என்னும் இரு கருவறைகள் உள்ளன.வடக்கேடம் கருவறையில் லிங்க வடிவில் மூலவர் அமைந்திருக்கிறார். 75 செமீ நீளமுள்ளது இந்த சிவலிங்கம். இந்த லிங்கம் எப்போதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.லிங்கத்தை மறைத்த வடிவில் இருக்கும் ஒரு கவசம் அன்றாடம் வைக்கப்படுகிறது. முழு மனிதவடிவிலுள்ள கவசம் பிரசன்ன தேவன் எனப்படுகிறது.இது சிறப்பு வழிபாடுகளுக்கு மட்டும் உரியது.

தெக்கேடம் கருவறையில் விஷ்ணு இருக்கிறார். 210 செமீ உயரமுள்ள கடுசர்க்கரை என்னும் வேதிப்பொருளால் அமைக்கப்பட்ட சிலை இது.பள்ளிகொண்டார் கோயிலுக்கு நிவந்தம் அளித்த பாண்டியன் மாறன் சடையன் கல்வெட்டில் இந்த கருவறை பற்றிய செய்தி இல்லை. பொ.யு. 11-ம் நூற்றாண்டில் ஜடாவர்ம சுந்தர சோழ பாண்டியனின் கல்வெட்டில் இந்த கருவறை குறிப்பிடப்படுகிறது. ஆகவே 11-ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டிருக்கலாம்.

பூஜைகளும் விழாக்களும்

இது கேரள முறைப்படி வழிபாடு நிகழும் ஆலயம். சுசீந்திரம் கோயில் பூஜை மூன்று வகைகளில் செய்யப்படுகிறது. பித்த பூஜை என்பது மூலவருக்கு நீராட்டு செய்வது. மூர்த்திபூஜை என்பது கருவறை தெய்வத்தை விக்ரகத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுதல். பிரசன்ன பூஜை என்பது நைவேத்யம் முதலியவை செய்து வணங்குதல். இவற்றைத் தவிர மானசபூஜை என்று ஒன்றும் உண்டு. மூடிய கதவுக்குப்பின் மூலவருக்கு ஒலி மட்டுமேயான மந்திரங்கள் மற்றும் கைமுத்திரைகளுடன் பூசை செய்வது இது.

இங்கே பன்னிரண்டு கால பூஜை நடைபெறுகிறது.காலையில் [காலை 430 முதல் 530 வரை ]பள்ளி உணர்த்துதல் முடிந்து திருநடை திறந்ததும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் உஷாபூஜை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவை நிகழ்கின்றன. காலை 930 முதல் மதியம் 1230 வரை மிருஷ்டான பூஜை, மிருஷ்டான ஸ்ரீபலி, உச்சிகால அபிஷேகம் ஆகியவை நிகழ்கின்றன. மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை அத்தாழ பூஜை, அத்தாழ ஸ்ரீபலி ஆகியவை நிகழ்கின்றன.

இக்கோயிலில் மார்கழி, ஆவணி, சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாத விழா பெரியது. மார்கழியில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது

நிர்வாக முறை

சுசீந்திரம் பொ.யு. 10-ம் நூற்றாண்டு வரை பிரம்மதேயமாக இருந்தது. சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டு இதை குறிப்பிடுகிறது.

தென்திருவிதாங்கூர் ஆலயங்கள் மகாசபை மூலப்பரடைச் சபை என்னும் இரு அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டன. சுசீந்திரம் இந்த இரு சபைகளால் நிர்வாகம் செய்யப்பட்டது. மகாசபை பொதுமக்களாலானது. மூலப்பரடைச்சபை ஆலயத்தை நேரடியாக நிர்வாகம் செய்த சிறுகுழு. மூலப்பரடைச் சபையில் பிராமணர்கள் மட்டுமே உறுப்பினராக இருந்தனர்.

மூலப்பரடைச் சபை மறைந்தபோது மகாசபை விரிந்து யோகக்காரர்கள் என்னும் அமைப்பு உருவாகியது. கே.கே.பிள்ளை இந்த அமைப்பு பொ.யு. 1229-ல் உருவானது என்கிறார். யோகக்காரர்களின் அவை முழுக்க முழுக்க நம்பூதிரிகளால் ஆனது. பொயு 1812-ல் பிரிட்டிஷ் ரெசிடெண்ட் கர்னல் மன்றோ ஆலோசனையின்படி ராணி லட்சுமிபாயின் அரசாணை வழியாக யோகக்காரர்களின் அதிகாரம் ஒழிக்கப்பட்டது. திருவிதாங்கூரில் இருந்த 340 பெரிய கோயில்களும் 1171 சிறிய கோயில்களும் அரசுடைமை ஆயின.

இன்றைய நிர்வாகம்

1956-ல் திருவிதாங்கூரில் இருந்து கன்யாகுமரி மாவட்டம் பிரிந்து தமிழகத்துடன் இணைந்தது.கேரள மாநிலமும் தமிழகமும் இணைந்து உருவாக்கிக் கொண்ட புரிதலின் படி கன்யாகுமரி மாவட்ட தேவஸ்வம் போர்டு உருவாகியது. இன்று கோயில் அந்த அமைப்பின் நிர்வாகத்தில் உள்ளது.

வழிபாட்டு முறை

சுசீந்திரம் ஆலயம் கேரள தாந்த்ரீக முறைப்படி பூஜை, வழிபாடுகள் செய்யப்படுவது. பொ.யு. 12-ம் நூற்றாண்டுக்கு பின் தாந்த்ரீகமுறை இங்கே கொண்டுவரப்பட்டது. கோவிந்த பிரஞ்ஞ படாரர் என்னும் வேதியருக்குப் பின் தாந்திரீக முறை இங்கே வந்தது எனப்படுகிறது. திருவிதாங்கூரின் தலைமை தந்ரியாக இருந்த தரணநல்லூர் நம்பூதிரிப்பாடு இந்த ஆலயத்திற்கும் பொறுப்பானவர்.

தந்திரிகளுக்கு அடுத்தபடியாக வட்டப்பள்ளி மடத்தைச் சேர்ந்த ஸ்தானிகர்கள் கோயில்மேல் வழிபாட்டு அதிகாரம் கொண்டவர்கள். கோயிலை அவர்கள் தாந்த்ரீக முறைப்படி மேற்பார்வை இடவேண்டும் இவ்வாலயத்தின் பூசகர்கள் மேல்சாந்திக்காரர்கள் எனப்படுகின்றனர். கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா, பெருவனம், சுகபுரம் போன்ற ஊர்களில் உள்ள நம்பூதிரிக்குடும்பங்கள் இப்பதவிக்கு வருவது வழக்கம். இவர்களே மூலக்கருவறைகளில் பூஜை செய்ய உரிமைகொண்டவர்கள். ஒருநாள் சிவன் கருவறையில் பூஜை செய்தவர் மறுநாள் விஷ்ணு கருவறையில் பூஜை செய்யவேண்டும். கீழ்சாந்திக்காரர்கள் என்பவர்கள் மேல்சாந்திக்கு உதவுபவர்கள், மற்றும் சிறிய ஆலயங்களில் பூஜை செய்பவர்கள். பெரும்பாலும் துளு பிராமணர்கள் எனப்படும் மத்வ மரபினரான பிராமணர்களே இப்பதவிகளில் இருந்தனர்.

இங்குள்ள ஆலயங்களில் மிகத்தொன்மையானதான கொன்றையடிநாதர் ஆலயத்தில் மட்டும் தமிழ் பிராமணர்களே பூஜை செய்கின்றனர். இவர்கள் நம்பியார் எனப்படுகின்றனர். இவர்கள் பொயு 7-ம் நூற்றாண்டு முதலே இப்பொறுப்பில் இருக்கின்றனர் என கல்வெட்டுகள் சொல்கின்றன. இப்போது இப்பூசகர்களில் நான்கு குடும்பங்கள் சுசீந்திரத்தில் உள்ளன

சுசீந்திரம் கைமுக்கு

சுசீந்திரத்தில் கைமுக்கு என்னும் சடங்கு நெடுங்காலமாக நடந்துவந்தது. இது ஓர் உண்மையறியும் சடங்கு. பிழை செய்துவிட்டதாக ஐயத்திற்குள்ளாகும் நம்பூதிரியை அழைத்துவந்து கையில் துணிசுற்றி கொதிக்கும் எண்ணை கொண்ட கொப்பரையில் இருந்து தங்க ரிஷபம் ஒன்றை வெளியே எடுக்கவேண்டும். கை சுடவில்லை என்றால் அவர் குற்றமற்றவர். அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட ஒரு நம்பூதிரி இளைஞன் வெளியே ஓடி தெப்பக்குளத்தில் குதித்து உயிர்விட்டான். ஆகவே சுவாதி திருநாள் மகாராஜா 1834-ல் அரசாணை வழியாக கைமுக்கு நிகழ்வை நிறுத்தினார்

ஆலயப்பிரவேசம்

1916-ல் அப்போது ஸ்ரீமூலம் மக்கசபையின் நியமன உறுப்பினராக இருந்த குமாரன் ஆசான் ஆலய நுழைவு குறித்துப் பேசி சுசீந்திரம் கோயிலுக்குள்புக அனுமதி தேவை என்று கோரினார். 1930-ல் நேரடிப்போரட்டமாக இது வெடித்தது. 1924-ல் நாராயண குருவின் மாணவரான டி.கெ.மாதவன் தலைமையில் காங்கிரஸ் நடத்திய வைக்கம் கோயில் நுழைவுப்போராட்டம் பெற்ற வெற்றி சுசீந்திரம் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.

1936-ல் திருவிதாங்கூர் மன்னர் கோயில் நுழைவுரிமையை அனுமதித்து பிரகடனம் வெளியிட்டார். 1937 ஜனவரியில் மகாத்மா காந்தி நேரில் வந்து சுசீந்திரம் கற்காடு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து சுசீந்திரம் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போதைய தேவசம் உயரதிகாரி மகாதேவ அய்யர் அரசு ஆணையின்படி காந்தியை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

சுசீந்திரம் ஆய்வுகள்

சுசீந்திரம் ஆலயம் பற்றிய ஆய்வுநூலை முதன்முதலில் எழுதியவர் சிதம்பர குற்றாலம் பிள்ளை. இவர் ஆளூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

சுசீந்திரம் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வுநூலை கே.கே.பிள்ளை எழுதினார். 1946-ல் ஆய்வேடாக சென்னை பல்கலைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. 1953-ல் சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனம் நூலாக வெளியிட்டது.

முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள் தாணுமாலையன் ஆலயம் சுசீந்திரம் கோயில் வரலாறு என்னும் நூலை 2008-ல் தமிழினி வெளியீடாக வெளியிட்டார்.

சுசீந்திரம் பற்றிய சிற்றிலக்கியங்கள்

  • சுசீந்திரம் பதிற்றுப்பத்து அந்தாதி
  • கொன்றைப் பத்து
  • சுசீந்தைக் கலம்பகம்
  • திருச்சுசீந்தை மும்மணிமாலை
  • சுசீந்தை மான்மியம்
  • ஸ்ரீதாணுதவம்
  • சுசீந்திர சேத்திர மகாத்மியக் கும்மி

உசாத்துணை

  • தாணுமாலையன் ஆலயம் சுசீந்திரம் கோயில் வரலாறு - முனைவர் அ.கா.பெருமாள் 2008, தமிழினி.


✅Finalised Page