under review

மோகமுள்

From Tamil Wiki
மோகமுள்
மோகமுள் முதற்பதிப்பின் அட்டை. ஓவியர் சாகர்
மோகமுள் சுதேசமித்திரன்

மோகமுள் (1956 ) தி.ஜானகிராமன் எழுதிய நாவல். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இதுவே என்று அதன் சமகால விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. தமிழின் முதன்மையான நாவல்களின் பட்டியலில் எப்போதும் இருந்துகொண்டுள்ளது. பழைய கும்பகோணம் நகரின் பின்னணியில் கர்நாடக இசையையும் பேசுபொருளாகக் கொண்டு பாபு, யமுனா என்னும் இரு கதைமாந்தரின் உறவை ஆராய்கிறது.

எழுத்து வெளியீடு

தி.ஜானகிராமன் எழுதிய இரண்டாவது நாவல் மோகமுள். முன்னரே அமிர்தம் வெளிவந்தது. அன்பே ஆருயிரே மலர்மஞ்சம் ஆகிய நாவல்கள் நூலான பிறகே மோகமுள் நூலாகியது. மோகமுள் 1955 முதல் 1956 வரை சுதேசமித்திரன் வார இணைப்பிதழில் தொடராக வெளிவந்தது. மோகமுள் உருவான கதை என்னும் கட்டுரையில் தி.ஜானகிராமன், அந்த வார இதழிலிருந்து மூன்றுபேர் வந்து தன்னிடம் கதை கேட்டதாகவும், அது வரை அக்கதையின் எண்ணமே தன்னிடம் இருக்கவில்லை என்றும், கும்பகோணத்தில் தானறிந்த பல உண்மையான மானுடர் அளித்த உந்துதலில் உடனே எழுத ஆரம்பித்துவிட்டதாகவும், எழுத எழுத நாவல் உருவாகி வந்தது என்றும் சொல்கிறார். ’ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின’ என்று குறிப்பிடுகிறார். இந்நாவல் 1964-ல் மீனாட்சி புத்தகநிலையத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் ஐந்திணை பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம் என பல பதிப்புகளைக் கண்டது.

மோகமுள் சுதேசமித்திரன் 1956

கதைச்சுருக்கம்

மோகமுள் சுதேசமித்திரன்

மோகமுள் நாவலின் கதைநாயகன் பாபு. ஜானகிராமனின் தனியாளுமைக்கு அணுக்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கதாபாத்திரத்தின் தந்தை ஜானகிராமனின் தந்தையைப்போலவே இசைக்கலைஞர். பாபு இசைக்கலைஞனாகும் கனவுடன் இசையையே வாழ்க்கையாகக் கொண்ட ரங்கண்ணா என்பவரிடம் இசை பயில்கிறான். கும்பகோணம் கல்லூரியில் படிக்கிறான். அங்கே ராஜம் என அவனுக்கு அணுக்கமான ஒரு நண்பன், அவன் பெண்களை தெய்வமாக வழிபடுபவன்.

பாபுவுக்கு பழக்கமான ஒரு மராட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவள் யமுனா. பாபுவை விட மூத்தவள். யமுனாவின் தந்தை அவள் அம்மாவை முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆகவே யமுனாவுக்கு திருமணமே ஆகவில்லை. பாபுவுக்கு யமுனா மேல் வழிபாட்டுணர்வும், உள்ளூர காதலும் இருக்கிறது. அதை அவனே படிப்படியாகத்தான் அடையாளம் கண்டுகொள்கிறான். இதன் நடுவே பாபுவுக்கும் பக்கத்துவீட்டில் ஒரு வயோதிகரின் மனைவியாக வந்த தங்கம்மாவுக்கும் நடுவே காமம் சார்ந்த உறவு உருவாகிறது. தங்கம்மா தற்கொலை செய்துகொள்கிறாள்.

பாபு ரங்கண்ணாவிடம் இசை கற்று மேலும் வடக்கே சென்று இந்துஸ்தானி இசை கற்க நினைக்கிறான். கதையோட்டத்தில் யமுனாவின் தந்தை மறைய அவள் ஏழ்மை அடைந்து மெலிந்து கருத்த முதியபெண்ணாக பாபுவை தேடிவருகிறாள். பாபுவின் உள்ளத்தில் இருக்கும் காமத்தை அவள் அறிவாள். அதை அவள் தீர்த்துவைத்து 'எல்லாம் இதற்காகத்தான்’ என்னும் முதிர்ச்சியுடன் அவனை ஆற்றுப்படுத்தி வடக்கே இசை கற்க அனுப்புகிறாள்.

கதைமாந்தர்

  • பாபு - தி.ஜானகிராமன் தன் சாயலுடன் படைத்த கதாபாத்திரம் என அவர் சொல்கிறார்
  • ராஜம் - கல்லூரியில் இருந்த ஒரு நண்பனின் சாயலில் படைக்கப்பட்ட கதாபாத்திரம்
  • ரங்கண்ணா -உமையாள்புரம் சுவாமிநாதையரின் சாயலில் படைக்கப்பட்டது
  • யமுனா - தி.ஜானகிராமன் கல்லூரியில் படிக்கையில் அவருக்கு எட்டு வயது மூத்தவரான ஒரு பெண்ணிடம் அறிமுகம் இருந்தது. அவள் ஒரு பொறியாளரை மணந்துகொண்டாள். அவள் சாயலில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்.

திரைவடிவம்

மோகமுள் நாவலை திரைவடிவமாக ஆக்க பலர் எண்ணியிருந்தாலும் ஞான ராஜசேகரன் 1995-ல் அதை படமாக எடுத்தார். புதுமுகங்கள் நடித்த படம். இளையராஜா இசை. ஆனால் நாவலின் அழகும் நுட்பமும் வெளிவராத வழக்கமான தமிழ் சினிமாவாகவே அமைந்தது என விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது.

இலக்கிய இடம்

மோகமுள். ஓவியம் சாகர்

மோகமுள் நாவலின் சிறப்பியல்பாகச் சொல்லப்படுவது மிகமெல்லிய முறையில் தொடர்ந்து காமம் வெளிப்படும் இடங்களை தொட்டுத் தொட்டுச் சொல்லிக்கொண்டே செல்லும் அதன் சரளமான கதையோட்டம். அதில் இசைகேட்கும் அனுபவமும், தென்னக இசைக்கும் வடஇந்திய இசைக்குமான ஒப்புமைகளும், இசையை தொழிலாகக் கொள்பவர்களுக்கும் வழிபாடுக்கு நிகராகக் கொள்பவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டிருக்கும் விதமும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. க.நா.சுப்ரமணியம் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக அதைச் சொல்கிறார். சி. மோகன் தமிழில் எழுதப்பட்ட முதன்மையான மூன்று நாவல்களில் ஒன்றாக மோகமுள் நாவலை 1987-ல் புதுயுகம் பிறக்கிறது என்னும் இதழில் எழுதிய கட்டுரையில் மதிப்பிட்டார். வெங்கட் சாமிநாதன் இந்தியநாவல்களிலேயே மோகமுள் சிறந்தது என எழுதியிருக்கிறார். நெடுங்காலம் மோகமுள் தமிழிலக்கிய வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் கிளர்ச்சியூட்டும் படைப்பாக இருந்தது. அது பெண் பற்றிய ரகசியக்கனவுகள் திரளும் வயதில் அவ்வுணர்ச்சிகளுடன் உரையாடும் நாவலாக இருந்தமையே காரணம். ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே ஆணின் காமம் சார்ந்த பார்வையில் உருவாக்கப்பட்டவையே என சொல்லும் சுகுமாரன் "இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் ஆண்மைய நோக்கின் வெளிப்பாடுகளே. ஆண் மனம் தன்னை முழுமையாக்கிக் கொள்ள விரும்பும் பால்விழைவின் கற்பனைகள்தாம். ஆனால் ஜானகிராமன் இந்தப் பெண் பாத்திரங்களை ஆணுக்கு இணையாகவே உருவாக்க விரும்பியிருக்கிறார். சமயங்களில் ஆணுக்குச் சமமானவர்களாக; சில சமயம் ஆணை மீறியவர்களாக. இவர்களில் யமுனா மட்டுமே ஆணைத் தன்னைக் கடந்து செல்ல வலியுறுத்துகிறவளாக உருவாக்கப்பட்டிருக்கிறாள்" என குறிப்பிடுகிறார்.[1]

இந்நாவலை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களிலொன்றாக மதிப்பிடும் ஜெயமோகன் அதேசமயம் இதிலுள்ள இசைசார்ந்த வாழ்க்கைக் களம் ஒரு பின்புலமாக மட்டுமே உள்ளது என்றும், நாவலின் மையப்பேசுபொருளான காமம் சார்ந்து அது குறியீட்டுப்பொருள்கொண்டு விரிவடையவில்லை என்றும் சொல்கிறார். நாவலை ஓர் ஒழுக்காக கொண்டுசெல்லவே ஆசிரியர் முயல்கிறார் என்றும், நல்ல நாவல்கள் உருவாக்கும் வாழ்க்கைநெருக்கடிகளை மோகமுள் காட்டவில்லை என்றும், பெரும்பாலும் மேலோட்டமான அன்றாட உரையாடல் வழியாகவே நாவல் நகர்கிறது என்றும் அவை நாவலை சிறந்த நாவலாக ஆகமுடியாமலாக்கிவிடுகின்றன என்றும் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page