under review

ந. முருகேச பாண்டியன்

From Tamil Wiki
viruba.com

ந.முருகேசபாண்டியன் (பிறப்பு: டிசம்பர் 26, 1957) நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர். தமிழ் இலக்கியத் திறனாய்வை நவீனகோட்பாடுகளின் அடிப்படையில் அணுகியவர். உயிர்மை இதழில் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் பரவலாகக் கவனம் பெற்ற படைப்பு. இவருடைய முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. சொற்கள் ஒளிரும் உலகம் 2007 -ம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பிறப்பு, கல்வி

ந. முருகேசபாண்டியன் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் டிசம்பர் 26, 1957 அன்று பிறந்தார். சமயநல்லூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியிலும், அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார்.

மதுரை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை கணிதமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலகத் தகவல் அறிவியல் பட்டமும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நூலகத் தகவல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ந. முருகேச பாண்டியனின் வாசிப்பு பள்ளிப் பருவத்தில் தொடங்கி பதின்பருவங்களில் கல்கி, சாண்டில்யன், ஆர்.சண்முக சுந்தரம், ஜெயகாந்தன் என விரிந்தது. புனைவு என்பதற்கு அப்பால் கதைகளின் வழியாக மனித இருப்பினைக் கண்டறிந்தார். கல்லூரியில் பேராசிரியர் ஐ.சி.பாலசுந்தரம் தனது விமர்சனப் பார்வைக்கு வித்திட்டவர் என்று குறிப்பிடுகிறார். அவரது இலக்கிய ஈடுபாட்டினைக் கருத்தியல் சார்ந்த நிலையில் வடிவமைக்க நண்பர் புதியஜீவா, கவிஞர் சமயவேல் ஆகியோரின் நட்பு உதவியது.

சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, மக்கள் உரிமைக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் என தொடர்ந்து பல்வேறு அமைப்பு களில் இயங்கினார்.

தனி வாழ்க்கை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம், சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி, தேனி ஆகிய நிறுவனங்களில் ஆசிரியராகவும் நூலகராகவும் , புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் உள்ள கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நூலகராகவும் நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய நெறியாள்கையின் கீழ் நூலகம் தகவல் அறிவியல்துறையில் 24 ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தற்சமயம் மதுரையில் வசித்துவரும் இவர் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் என்ற காலாண்டிதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார்

இலக்கியப்பணி

bookmybook.in

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலில் சங்க இலக்கிய பெண் கவிஞர்களிலிருந்து ஆண்டாள் வரை உள்ள பெண் கவிஞர்களின் பாடல்களையும் தொகுத்து உரையெழுதினார். 1970-களின் பிற்பகுதியில் அவரது புதுக்கவிதைகள் தேடல் இதழில் பிரசுரமாயின. சிறுகதைகள் எழுதத் துவங்கினார். இலக்கியம் பற்றிய புரிதல் இடதுசாரிக் கருத்தின் தாக்கத்தினால் சிக்கலுக்குள்ளான அதேவேளையில், உலக இலக்கியங்களின் ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டார். டால்ஸ்டாயின் 'அன்னா .கரீனினா'வைத் தாண்டியோ, செகாவின் சிறுகதைகளைத் தாண்டியோ தான் புனைவில் சொல்வதற்கு எதுவுமில்லை எனக் கண்டறிந்தார்.

ராஜமார்த்தாண்டனின் தூண்டுதலால் அவர் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் மதிப்புரைகள் தினமணியில் வெளியாகின. கண்ணனின் வேண்டுகோள் காரணமாக 'காலச்சுவடு' இதழில் நூல் மதிப்புரைகள் எழுதினார். இடதுசாரி அமைப்பிலிருந்து கற்ற எதையும் விருப்பு வெறுப்பின்றி கறாராக அணுகும் முறை இலக்கிய விமர்சனத்திலும் பயன்பட்டது. அவரது படைப்புலகம் இலக்கிய விமர்சனம், மொழி பெயர்ப்பியல், கிராமத்து வாழ்க்கை, சங்க இலக்கியம் என பல துறைகள் சார்ந்தது.

bookmybook.in

ந. முருகேசபாண்டியன் எழுதிய ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி சங்கீத நாடக அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003-ம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலாகச் சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. மேலும் இவரது திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய சொற்கள் ஒளிரும் உலகம் 2007-ம் ஆண்டின் சிறந்த விமர்சன நூலாகத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கிராமத்துத் தெருக்களின் வழியே, ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் ஆகிய மானுடவியல் ஆய்வுப் புத்தகங்கள், குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல், மொழிபெயர்ப்பியல் ஆகியவை இவரது ஆக்கங்களில் குறிப்பிடத்தகுந்தவை. இருவேறு உலகம் இவரது சிறுகதைத் தொகுதி. சங்கப்பாடல்கள் குறித்தும் பல நூல்கள் எழுதியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருந்தாலும் தமிழில் நாவல்கள் குறித்து மிக விரிவான பார்வை உடைய ந.முருகேச பாண்டியன், பலநூறு விமர்சனக்கட்டுரைகளை எழுதியுள்ளதால் விமர்சகராக அறியப்படுகிறார்.

ஒரு கிராமத்து வரலாறு நூலில் தனது ஊரான சமயநல்லூரை அதன் அழகுகளோடும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த நிகழ்வுகளோடும், ஒரு காலகட்டத்தின் அழுத்தமான பதிவாக வெளிப்படுத்தினார். கடந்தகாலப் பதிவுகளைக்கொண்ட பண்பாட்டு வரலாறு என்றே இந்நூலைச் சொல்லலாம். சுமார் 400 பக்கங்களில், அன்றைய (1960-80) தமிழ்க் கிராம வாழ்க்கையை சரளமாக மொழியில் பதிவு செய்தார்.

இலக்கிய இடம்

discoverybookpalace.com

"நான் எனது பள்ளிப் பருவத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சார்பான மனநிலையுடனே வாழ்ந்து வருகிறேன். சக மனிதர்கள்மீதான அன்பு எனக்கு எப்பவும் பிடித்தமானது. அது எனது பதின்பருவத்தில் இயற்கை மீதும் சக உயிரினங்கள் மீதும் என்றும் பரவியது. பால், இன, மொழி, சாதி, மத அடிப் படையில் நசுக்கப்படும் நிலைக்கு எதிரான எனது அரசியல் பார்வை, என் இலக்கிய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் கோட்பாடு கொள்கையைவிடப் படைப்பாளியும் படைப்பும் எனக்கு மிகவும் முக்கியம்"

ஒரு தேர்ந்த படைப்பின் வழியாகப் படைப்பாளன் மனித இருப்புக் குறித்து கண்டறிந்த உண்மைகளையே முக்கியமானவை என்று ந. முருகேசபாண்டியன் கருதுகிறார். வாசகனின் வாசக மனநிலையைச் சீர்குலைத்து, அவனுக்குள் இடை விடாத கேள்விகளை எழுப்புவதே ஒரு சிறந்த இலக்கியப் படைப்பின் பணியாகக் கருதும் ந. முருகேசபாண்டியன் முற்போக்கு, பிற்போக்கு, உன்னதம் போன்ற அம்சங்களை முக்கியமாகக் கருதுவதில்லை.

"வெறுமனே ஊர், நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல், அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு"என்று ஒரு கிராமத்து வரலாறு நூலை மதிப்பிடுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

விருதுகள், சிறப்புகள்

 • சிறந்த ஆய்வுக்கான நூலகச் சுடர் ஆய்வுப் பரிசு (பிரதிகளின் ஊடே பயணம் )
 • சிறந்த வமிரிசக நூல் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (சொற்கள் ஒளிரும் உலகம்) (2007).
 • சிறந்த கட்டுரை, சின்னக் குத்தூசி அறக்கட்டளை ( தொலைக்காட்சி அரசியல் கட்டுரை), ரூ.10,000/- பரிசு பெற்றது (2012).
 • சிறந்த விமர்சகர் விருது - சென்னை டிஸ்கவரி பேலஸ் (2014).
 • சிறந்த கட்டுரை நூள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்) (2017).
 • திறனாய்வுச் செம்மல் பட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை அமைப்பு (2019)
 • வாழ்நாள் சாதனையாளர் விருது (தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு (2019)
 • கலைஞர் பொற்கிழி (உரைநடைப் பிரிவு) தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர் சங்கம்(பப்பாசி) (2020 )

படைப்புகள்

திறனாய்வு
udumalai.com
 • பிரதிகளின் ஊடே பயணம்(55 புத்தகங்களின் மதிப்புரைகள்). சென்னை: மருதா பதிப்பகம்,2003.
 • தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம் (திறனாய்வு).சென்னை: தி பார்க்கர்,2004.
 • சொற்கள் ஒளிரும் உலகம்(விமர்சனக் கட்டுரைகள்). திருவண்ணாமலை: வம்சி புக்ஸ்.2006
 • திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள் ( திறனாய்வு). சென்னை; வ,உ.சி.நூலகம். 2007
 • இலக்கிய ஆளுமைகளின் படைப்புத்திறன்(விமர்சனக் கட்டுரைகள்), திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2009.
 • என் பார்வையில் படைப்பிலக்கியம்(58 புத்தகங்களின் மதிப்புரைகள்).சென்னை: அம்ருதா, 2009
 • புத்தகங்களின் உலகில்(38 புத்தகங்களின் மதிப்புரைகள்). சென்னை: பாவை பதிப்பகம்,2010.
 • மறுவாசிப்பில் மரபிலக்கியம்:சங்க இலக்கியம் மமுதல் பாரதிதாசன் வரை(விமர்சனக் கட்டுரைகள்).சென்னை: நற்றிணை பதிப்பகம்,2011.
 • நவீனப் புனைகதைப் போக்குகள்.( விமர்சனக் கட்டுரைகள்). சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2015
 • எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?. (விமர்சனக் கட்டுரைகள்) சென்னை: உயிர்மை பதிப்பகம்,2015
 • அண்மைக்காலக் கவிதைப்போக்குகள்:வரலாறும் விமர்சனமும். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2016
 • மறுவாசிப்பில் செவ்விலக்கியப் படைப்புகள். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2015.
 • விமர்சகர்கள் படைப்பாளர்கள்: படைப்பாளுமைகள் பற்றிய கட்டுரைகள் (2016). சென்னை: என்.சி.பி.ஹெச். பதிப்பகம்
 • புனைவு எழுத்துகளின் மறுபக்கம்:சமகாலத்திய நாவல்கள்,சிறுகதைகள் குறித்த விமர்சனம்(2017). சென்னை: உயிர்மை பதிப்பகம்.
udumalai.com
 • பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர் (2017). கோவை: விஜயா பதிப்பகம்.
 • எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை? (விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு). சென்னை: டிஸ்கவரி புக்பேலஸ்.2019
மானுடவியல்/நாட்டுப்புறவியல்
 • கிராமத்து தெருக்களின் வழியே:தமிழ்ப் பண்பாட்டு மரபினைப் பதிவு செய்யும் ஆவணம்.சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் , 2017.
 • குடுப்புறவியல் குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் ஆய்வு. சென்னை: உயிர்மை பதிப்பகம் ,2009.மறு பதிப்பு: என்.சி.பி.ஹெச். சென்னை,2017.
அரசியல்
 • கலைஞர் என்றொரு ஆளுமை(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
சிறுகதைத் தொகுதி
 • மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும்.சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் 2019
பொது

என் இலக்கிய நண்பர்கள்( 15 இலக்கியவாதிகள் பற்றிய மனப்பதிவுகள்). சென்னை: உயிர்மை பதிப்பகம்,2006.

பொதுக் கட்டுரைகள்
 • தமிழர் வாழ்க்கையில் பூக்கள்( கட்டுரைகளின் தொகுப்பு). சென்னை:என்.சி.பி.ஹெச், 2014.
 • போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம்(அரசியல் கட்டுரைகள்).சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016
 • தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்(பண்பாட்டுக் கட்டுரைகள்).சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016
 • தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும். சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016.
 • காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்.(சமூக விமர்சனக் கட்டுரைகள்) சென்னை: உயிர்மை பதிப்பகம்,2018.
தொகுப்பாசிரியராகத் தொகுத்த நூல்கள்
 • சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள். சென்னை: மருதா பதிப்பகம்,2005. மறு பதிப்பு: மதுரை: செல்லப்பா பதிப்பகம்
 • அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்: சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை. சென்னை: என்சிபிஹெச் பதிப்பகம்,2014.
 • பிரபஞ்சன் கட்டுரைகள்.சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016
 • நாஞ்சில்நாடன் சிறுகதைகள். திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2011.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்(2017). சென்னை: என்.சி.பி.ஹெச். பதிப்பகம்.
 • நாஞ்சில்நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
 • கந்தர்வன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
 • என்.ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
 • வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
 • சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள். .(2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
 • ஜீ.முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள். (2018). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
 • ஆண்டாள் பாடல்கள்.(2019) சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
 • காரைக்காலம்மையார் பாடல்கள்(2019). டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்.
பதிப்பாசிரியராகப் பதிப்பித்த மொழிபெயர்ப்பு நூல்கள்
 • பாசிசம்(2006). கெவின் பாஸ்மோர். அ.மங்கை.. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
 • ஃப்ராய்ட்(2005). அந்தனி ஸ்டோர். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
 • உலகமயமாக்கல்(2006). மான்ஃபிரட் பி. ஸ்டெகர். க. பூரணச்சந்திரன். (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
 • பௌத்தம்(2005). தாமியென் கோவ்ன். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
 • வரலாறு(2005). ஜான் எச்.அர்னால்டு. பிரேம் (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
 • பாசிசம்(2005). மைக்கேல் கேரிதர்ஸ். சி.மணி. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
 • கலைஞர் பொற்கிழி (உரைநடைப் பிரிவு) தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர் சங்கம்(பப்பாசி) (2020 )

உசாத்துணை

ந.முருகேசபாண்டியன் நேர்காணல் வல்லினம் -உரையாடல் ஶ்ரீதர் தங்கராஜ், கார்த்திகைப் பாண்டியன்

கிராமத்துத் தெருக்களின் வழியே - புத்தக விமரிசனம் ஊர்வாசம் -எஸ். ராமகிருஷ்ணன்

ந.முருகேசபாண்டியன் நேர்காணல் விஜய் மகேந்திரன்

இணைப்புகள்

ந.முருகேசபாண்டியன் நேர்காணல் உரையாடல் ஆத்மார்த்தி youtube video uploaded by shruthitvliterature

மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் நூலை முன்வைத்து -வளவ்.துரையன் கீற்று இதழ்


✅Finalised Page