under review

எஸ். ராமகிருஷ்ணன்

From Tamil Wiki

To read the article in English: S. Ramakrishnan. ‎

எஸ். ராமகிருஷ்ணன்
எஸ்.ரா சாகித்ய அக்காதமி
எஸ்.ராமகிருஷ்ணன் குடும்பம்
எஸ்.ரா
இயல்விருது பாராட்டுவிழா

எஸ். ராமகிருஷ்ணன் (ஏப்ரல் 13, 1966) தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்த உரைகள் நிகழ்த்திவருகிறார்.

எஸ். ராமகிருஷ்ணனின் ஆரம்பகட்ட கதைகள் கறாரான யதார்த்தவாத அல்லது இயல்புவாத வகைமையை சேர்ந்தவை. பின்னர் மாய யதார்த்தப் புனைவுகளை எழுதினார். கரிசல் நில மக்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தவர்.

பார்க்க : எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே)

பிறப்பு,கல்வி

எஸ். ராமகிருஷ்ணன், ஏப்ரல் 13, 1966-ல் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் என்ற ஊரில் சண்முகம் - மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தவர். எஸ்.ராமகிருஷ்ணனின் தந்தை சண்முகம் கால்நடை மருத்துவமனையில் எழுத்தராக பனி புரிந்தவர். சூலக்கரை, சத்திரப்பட்டி, மல்லாங்கிணர் என்று பழைய ராமநாதபுர மாவட்டத்தின் சின்னஞ்சிறு கிராமங்களில் கழிந்தது எஸ்.ராமகிருஷ்ணனின் இளமைக்காலம். விருதுநகரில் ஆங்கில இலக்கியம் முதுகலையும் ஆய்வுநிறைஞர் பட்டமும் பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி நிறைவுசெய்யவில்லை.

தனிவாழ்க்கை

மனைவி சந்திர பிரபா. மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ். சென்னையில் வசித்து வருகிறார். படிப்பை முடித்தபின்னர் சில ஆண்டுகள் எதிலும் நிலைகொள்ளாமல் அலைந்த பின்னர் குங்குமம் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களுக்கு எழுதத் தொடங்கினார். வசந்தபாலன் இயக்கிய ஆல்பம் முதல்படம். அதன்பின் முழுநேர எழுத்தாளராக வாழ்கிறார்.

இலக்கியவாழ்க்கை

எஸ். ராமகிருஷ்ணன் - சஞ்சாரம்

எஸ். ராமகிருஷ்ணனின் தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ராமகிருஷ்ணனின் அண்ணா டாக்டர் வெங்கடாசலம் சிறந்த இலக்கிய வாசகர்.

தொடக்க கால எழுத்துக்கள்

1984-ல் மாணவராக இருக்கையிலேயே எழுத ஆரம்பித்த எழுதிய முதல்கதை 'கபாடபுரம்'. அது கையெழுத்து பிரதியாக நண்பர்களால் வாசிக்கப்பட்டு தொலைந்து போயிற்று. வெளியான முதல்கதை பழைய தண்டவாளம், கணையாழியில் வெளியானது.

கோயில்பட்டியில் இருந்த இலக்கியச் சூழல் எஸ்.ராமகிருஷ்ணனை தீவிர இலக்கியத்தின்பால் ஈர்த்தது. தேவதச்சன், எஸ்.ஏ.பெருமாள், ஜோதிவினாயகம் ஆகியோர் அவருக்கு இலக்கியத்தில் உரையாடல்தரப்புகள். கோணங்கி இலக்கிய வழிகாட்டியும் நண்பருமாக இருந்தார். கோணங்கியுடன் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழகத்தின் பல ஊர்களிலும் அலைந்து திரிந்திருக்கிறார். தன் அலைச்சல்களைப் பற்றி தேசாந்திரி என்னும் நூலில் விவரிக்கிறார்.

சிறுகதைகள்

1990-ல் எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதைத் தொகுதி ’வெளியிலிருந்து வந்தவன்’ சென்னை புக்ஸ் வெளியீடாக வெளிவந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தை கவர்ந்தது. அது யதார்த்தவாதக் கதைகள் கொண்டது. கோயில்பட்டி வட்டாரத்து கரிசல் மண்ணின் வாழ்க்கையைச் சித்தரிப்பது. சுந்தர ராமசாமி போன்றவர்களால் அத்தொகுதி கவனிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.

எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து லத்தீனமேரிக்க மாய யதார்த்தவாதச் சாயல் கொண்ட கதைகளை எழுதினார். அவை 'காட்டின் உருவம்' என்னும் தொகுதியாக வெளிவந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை தொகுதியிலும் அத்தகைய கதைகள் மிகுதியாக இருந்தன.

மூன்றாம் கட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் மீண்டும் தூயயதார்த்தவாதம் நோக்கி திரும்பினார். அவ்வப்போது மாய யதார்த்த கதைகளை எழுதினாலும் பெரும்பாலும் வாழ்க்கையின் அன்றாடத்தருணங்கள் நோக்கி திறப்பவை இக்காலக் கதைகள்.

பொதுவாசகர்களுக்கான எழுத்துக்கள்

குங்குமம் இதழில் பணியாற்றினாலும் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் நவீன இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்களில் எழுதுபவராகவே இருந்தார். 2001 முதல் ஆனந்தவிகடன் இதழில் அவர் எழுதத் தொடங்கிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி ஆகிய தொடர்கள் அவருக்கு பொதுவாசகர்களிடையே பெரும் புகழை உருவாக்கி அளித்தன. கதாவிலாசம் தொடர்வழியாக நவீன இலக்கியத்தை பொதுவாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தார். வரலாற்றை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்பொருட்டு எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா என இரண்டு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்.

நாவல்கள்

எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய நாவல்கள் அனைத்தையும் நூல்களாகவே வெளியிட்டார். எஸ்.ராமகிருஷ்ணனின் மகாபாரத மறுஆக்க நாவலான 'உப பாண்டவம் " அவருடைய முதல் நாவல். மகாபாரதத்தின் நாட்டார் வாய்மொழி மரபை இணைத்துக்கொண்டு அதை நவீன நாவலாக மறு ஆக்கம் செய்த படைப்பு அது. எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி, நெடுங்குருதி, யாமம், சஞ்சாரம் ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை.

தமிழுக்கு வெளியிலும் பரவலாக கவனிக்கப்பட்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய படைப்புகள் இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன

சொற்பொழிவாளர்

எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் ஓர் அறிவியக்கம் என்ற வகையில் எல்லா களங்களிலும் செயல்படுபவர். தமிழகத்தின் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர், திரைப்படங்களை அறிமுகம் செய்பவர், நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர், எஸ்.ராமகிருஷ்ணன் ரஷ்ய இலக்கியம் பற்றி ஆற்றிய தொடர்சொற்பொழிவுகள் புகழ்பெற்றவை.

அமைப்புப்பணிகள்

எஸ்.ராமகிருஷ்ணன் அட்சரம் என்னும் தன் இதழின் பேரால் இலக்கிய அமைப்பை தொடங்கி இலக்கிய முகாம்களை ஒருங்கிணைத்தார். தொடர்ந்து வாசகர்களுடன் உரையாடலில் இருக்கிறார். தன் நூல்களை வெளியிடும் பொருட்டு 'தேசாந்திரி' என்னும் பதிப்பகத்தை நடத்துகிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன் கோணங்கியுடன்

இதழியல்

எஸ்.ராமகிருஷ்ணன் அட்சரம் என்னும் சிற்றிதழை நடத்தினார். மும்மாத இதழாக எட்டு இதழ்கள் வெளிவந்தன.

இலக்கிய இடம்

எஸ். ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் பலவகையிலும் ஜெயகாந்தனுக்கு அணுக்கமான பார்வை கொண்டவர். அடிப்படையில் இடதுசாரி அரசியல்கோணம் கொண்டவரானாலும் காந்தியை முழுமையாக ஏற்றுக்கொண்டவர், இந்திய மரபின் மீதும் தமிழ்த்தொல்மரபின் மேலும் இணையான பற்று கொண்டவர். அவருடைய எழுத்துக்களில் உறுதியாக இந்தப்பார்வை வெளிப்படுகிறது.

எஸ். ராமகிருஷ்ணன் அடிப்படையில் வறண்ட நெல்லையின் கதையாசிரியர். யதார்த்தவாதக் கதைகளை எழுதியபடி தொடங்கியவர் தன் மாய யதார்த்தவாத தன்மை கொண்ட கதைகளை பின்னர் எழுதினார். பின்னாளில் மீண்டும் நேரடியான யதார்த்தவாத எழுத்தை முன்வைத்தார். அவை வாசகனுடன் நேரடியாக உரையாடும் தன்மை கொண்டவை. "என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம்." என்னும் அவருடைய வரிகளே அவருடைய இவ்வகையான கதைகளின் கூறுமுறை.

எஸ்.ராமகிருஷ்ணன் வறண்ட தெற்குத்தமிழ் நிலத்தின் துயர் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரிப்பவராகவும், இன்னொரு தளத்தில் ஒட்டுமொத்தமாக வரலாற்றையும் தத்துவத்தையும் இயக்கும் அடிப்படைகளைப் பற்றி ஆராய்பவராகவும் திகழ்கிறார். அவ்விரு தளங்களின் முரணியக்கம் வழியாக அவருடைய இலக்கியச்செயல்பாடுகள் நிகழ்கின்றன என்று ஜெயமோகன் வரையறை செய்கிறார்

எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது’ என்று ந.முருகேசபாண்டியன் குறிப்பிடுகிறார். எஸ்.ராவின் புனைவுகள் தமிழ் புனைகதைப் பரப்பின் எல்லைகளை பெருமளவுக்கு விரிவடையச் செய்தது என்றால் அவரது புனைவு மொழி கவிதைக்கும் உரைநடைக்கும் நடுவே ஆழமான சித்திரங்களையும் படிமங்களையும் உருவாக்குவதாக இருக்கிறது. நிலக்காட்சிகள், பருவ நிலைகளை பற்றிய எஸ்.ராவின் சித்திரங்கள் தமிழ் வாசகனின் நினைவுகளில் என்றும் அழியாத காட்சிகளை படைத்திருக்கின்றன என்று மனுஷ்யபுத்திரன் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

முதன்மை விருதுகள்
 • தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது (2001)
 • ஞானவாணி விருது - நெடுங்குருதி நாவல் - பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் (2003)
 • தமிழ் வளர்ச்சித் துறை விருது - அரவான் நாடகம் (2006)
 • சிறந்த புனைவு இலக்கிய விருது - யாமம் நாவல் - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் (2007)
 • சிகேகே இலக்கிய விருது - ஈரோடு சிகேகே அறக்கட்டளை (2008)
 • தாகூர் இலக்கிய விருது - யாமம் நாவல் - சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து வழங்கும் விருது (2010)
 • இயல் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் (2011)
 • சாகித்ய அகாடமி விருது - சஞ்சாரம் நாவல் (2018)
 • கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது (2011)
பிற விருதுகள்
 • மாக்சிம்கார்க்கி விருது
 • நல்லி திசை எட்டும் விருது
 • விஸ்டம் விருது
 • பெரியார் விருது
 • துருவா விருது
 • எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது
 • சேலம் தமிழ் சங்க விருது
 • விகடன் விருது
 • கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது
 • இயற்றமிழ் வித்தகர் விருது
 • இலக்கியச்சிந்தனை விருது
 • கலைஞர் பொற்கிழி விருது

படைப்புகள்

நாவல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
 • வெளியில் ஒருவன், சென்னை புக்ஸ்
 • காட்டின் உருவம், அன்னம்
 • எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் பாகம் 1, 2 மற்றும் 3 (2014)
 • நடந்துசெல்லும் நீரூற்று (2006)
 • பதினெட்டாம் நூற்றாண்டின் மழை (2008)
 • அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது (2010)
 • நகுலன் வீட்டில் யாருமில்லை (2009)
 • புத்தனாவது சுலபம் (2011)
 • தாவரங்களின் உரையாடல் (2007)
 • வெயிலை கொண்டு வாருங்கள் (2001)
 • பால்ய நதி (2003)
 • மழைமான் (2012)
 • குதிரைகள் பேச மறுக்கின்றன (2013)
 • காந்தியோடு பேசுவேன் (2013)
 • என்ன சொல்கிறாய் சுடரே (2015)
 • ஐந்து வருட மௌனம் (2021)
கட்டுரைத் தொகுப்புகள்
 • விழித்திருப்பவனின் இரவு (2005)
 • இலைகளை வியக்கும் மரம் (2007)
 • என்றார் போர்ஹே (2009)
 • கதாவிலாசம் (2005)
 • தேசாந்திரி (2006)
 • கேள்விக்குறி (2007)
 • துணையெழுத்து (2004)
 • ஆதலினால் (2008)
 • வாக்கியங்களின் சாலை (2002)
 • சித்திரங்களின் விசித்திரங்கள் (2008)
 • நம் காலத்து நாவல்கள் (2008)
 • காற்றில் யாரோ நடக்கிறார்கள் (2008)
 • கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள் (2008)
 • மலைகள் சப்தமிடுவதில்லை (2009)
 • வாசகபர்வம் (2009)
 • சிறிது வெளிச்சம் (2010)
 • காண் என்றது இயற்கை (2010)
 • செகாவின்மீது பனி பெய்கிறது (2010)
 • குறத்தி முடுக்கின் கனவுகள் (2010)
 • என்றும் சுஜாதா (2011)
 • கலிலியோ மண்டியிடவில்லை (2011)
 • சாப்ளினுடன் பேசுங்கள் (2011)
 • கூழாங்கற்கள் பாடுகின்றன (2011)
 • எனதருமை டால்ஸ்டாய் (2011)
 • ரயிலேறிய கிராமம் (2012)
 • ஆயிரம் வண்ணங்கள் (2016)
 • பிகாசோவின் கோடுகள் (2012)
 • இலக்கற்ற பயணி (2013)
 • காந்தியின் நிழலில் (2021)
 • நூலக மனிதர்கள் (2021)
 • காலத்தின் சிற்றலை (2021)
 • நேற்றின் நினைவுகள் (2021)
திரைப்படம் குறித்த நூல்கள்
 • பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள் (2006)
 • அயல் சினிமா (2007)
 • உலக சினிமா (2008)
 • பேசத்தெரிந்த நிழல்கள் (2009)
 • சாப்ளினோடு பேசுங்கள் (2011)
 • இருள் இனிது ஒளி இனிது (2014)
 • பறவைக் கோணம் (2012)
 • சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் (2013)
 • நான்காவது சினிமா (2014)
 • குற்றத்தின் கண்கள் (2016)
 • காட்சிகளுக்கு அப்பால் (2017)
குழந்தைகள் நூல்கள்
 • ஏழு தலைநகரம் கதைகள் (2005)
 • கிறு கிறு வானம் (2006)
 • கால் முளைத்த கதைகள் (2006)
 • நீள நாக்கு (2011)
 • பம்பழாபம் (2011)
 • எழுதத் தெரிந்த புலி (2011)
 • காசு கள்ளன் (2011)
 • தலையில்லாத பையன் (2011)
 • எனக்கு ஏன் கனவு வருது (2011)
 • வானம்
 • லாலிபாலே
 • நீளநாக்கு
 • லாலீப்பலே (2011)
 • அக்காடா (2013)
 • சிரிக்கும் வகுப்பறை (2013)
 • வெள்ளை ராணி (2014)
 • அண்டசராசம் (2014)
 • சாக்கிரடீஸின் சிவப்பு நூலகம் (2014)
 • கார்ப்பனை குதிரை (2014)
 • படிக்க தெரிந்த சிங்கம் (2016)
 • மீசை இல்லாத ஆப்பிள் (2016)
 • பூனையின் மனைவி (2016)
 • இறக்கை விரிக்கும் மரம் (2016)
 • உலகின் மிகச்சிறிய தவளை (2016)
 • எலியின் பாஸ்வோர்ட் (2017)
 • டான்டூனின் கேமிரா(2021)
உலக இலக்கியப் பேருரைகள்
 • ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் (2013)
 • ஹோமரின் இலியட் (2013)
 • ஷேக்ஸ்பியரின் மெக்பெத் (2013)
 • ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் (2013)
 • தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (2013)
 • லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா (2013)
 • பாஷோவின் ஜென் கவிதைகள் (2013)
வரலாறு
 • எனது இந்தியா (2012)
 • மறைக்கப்பட்ட இந்தியா (2013)
நாடகத் தொகுப்புகள்
 • அரவான் (2006)
 • சிந்துபாத்தின் மனைவி (2013)
 • சூரியனை சுற்றும் பூமி (2013)
நேர்காணல் தொகுப்புகள்
 • எப்போதுமிருக்கும் கதை
 • பேசிக்கடந்த தூரம்
மொழிபெயர்ப்புகள்
 • நம்பிக்கையின் பரிமாணங்கள் (1994)
 • ஆலீஸின் அற்புத உலகம் (1993)
 • பயணப்படாத பாதைகள் (2003)
தொகை நூல்கள்
 • அதே இரவு, அதே வரிகள் (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)
 • வானெங்கும் பறவைகள்
 • நூறு சிறுகதைகள் (தமிழின் சிறந்த நூறு சிறுகதைகள்)
ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள்
 • Nothing but water
 • Whirling swirling sky

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் பல இணையநூலகத்தில் வாசிக்கக்கிடைக்கின்றன

உசாத்துணை


✅Finalised Page