under review

யாமம் (நாவல்)

From Tamil Wiki
யாமம் நாவல்

யாமம் நாவல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. இந்த நாவல் பதினெட்டாம் நூற்றாண்டு சென்னையை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டது. மதராஸபட்டினத்தில், யாமம் என்னும் பெயரில் அற்புதமான நறுமணப் பொருளான அத்தர் தயாரிக்கும் கரீம், நில அளவையாளர் குழுவில் பணியாற்றும் பத்ரகிரி, அவனது தம்பி கணிதவியலாளன் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலத்தின் மனைவி தையல்நாயகி, குடும்ப சொத்து வழக்கில் சிக்கிக்கொள்ளும் நிலச்சுவான்தார் கிருஷ்ணப்ப கரையாளர், அவரது ஆசை நாயகி எலிசபெத், நீலகண்டம் என்னும் நாயால் வழிநடத்தப்படும் சதாசிவ பண்டாரம் ஆகியோரின் வாழ்வில் காமம் என்னவாக இருக்கிறது, எப்படி இவர்களை வழி நடத்துகிறது என்பதை வரலாற்று பின்புலத்துடன் சொல்லும் நாவல் யாமம்.

பதிப்பு

முதல் பதிப்பு டிசம்பர் 2007-ம் ஆண்டு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஆசிரியர்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் 1966-ல் பிறந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், சினிமா சம்பந்தப்பட்ட நூல்கள் என பல படைப்புகளை எழுதியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்காவது நாவல் யாமம். 2018-ம் ஆண்டு தான் எழுதிய சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதினை வென்றார்.

கதைச்சுருக்கம்

கடற்பயணங்கள் மேற்க்கொண்டு வணிகம் செய்யும் மீர் காசிமின் கனவில் வருகிறார் சூஃபி ஞானி பக்கீர் முசாபர். அவர் மூலம் அத்தர் வடிக்கும் கலையைக் கற்றுக்கொள்ளும் காசிம் அந்த மர்மத்தில் திளைக்கிறார். அவர் வழி வரும் அனைத்து ஆண்களின் கனவிலும் தொடர்ந்து வருகிறார் பக்கீர் முசாபர். மதராஸபட்டினத்துக்கு குடியேறும் காசிமின் வாரிசுகளால்தான் மீர்சாகிப் பேட்டை உருவாகிறது. அந்த பரம்பரையில் வரும் அப்துல் கரீமும் அத்தர் தயாரிக்கிறார். ஆண் குழந்தை வேண்டுமென்பதற்க்காக மூன்று பெண்களை தொடர்ந்து திருமணம் செய்கிறார். மூன்றாவது மனைவியான சுரையாவிற்க்கு பதிமூன்று வயது. ஆனால், முதல் மனைவி ரஹ்மானியா மூலம் அவருக்கும் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறக்கிறது. ஏமாற்றத்தில் குதிரை பந்தயத்தில் விழுகிறார் அப்துல் கரீம். அதன் வழியே செல்வம் அழிந்து, பிறகொரு நாள் காணாமல் போகிறார். மூன்று மனைவிகளும் கடுந்துன்பத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துக்கொண்டு வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

நில அளவையாளன் பத்ரகிரி தனது தம்பி திருச்சிற்றம்பலத்தின் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறான். சிறு வயதிலேயே நட்சத்திரங்களின் மீது பெருமோகம் கொண்ட பத்ரகிரி, நில அளவையாளர்கள் குழுவில் இணைந்து பணியாற்றுகிறான். கணிதத்தில் தேர்ந்து விளங்கும் திருச்சிற்றம்பலம், மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறான். மேலை நாகரீகம் அவனை பயமுறுத்துகிறது. ஊருக்கு செல்கையில் அவனது மனைவி தையல் நாயகியை அண்ணன் வீட்டில் விட்டு செல்கிறான். பத்ரகிரிக்கும் தையல்நாயகிக்கும் உறவு உண்டாகிறது. குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான் பத்ரகிரி. அவனது மனைவி விசாலாட்சி பத்ரகிரியை பிரிந்து பிறந்த வீட்டுக்கு செல்கிறாள். தையல்நாயகிக்கு பிறக்கும் குழந்தையும் இறக்கிறது. தையல் நாயகியின் மனநிலை சிதறி, பத்ரகிரியும் எல்லாவற்றையும் விட்டு அவன் பிறந்து ஊருக்கு செல்கிறான்.

லண்டனுக்கு சென்ற திருச்சிற்றம்பலம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலுக்கு பழகி, அங்கு பெரும்பெயர் எடுக்கிறான். சொந்த ஊருக்கு திரும்பும் திருச்சிற்றம்பலம், தனது அண்ணனின் துரோகத்தை கண்டு திகைத்து நிற்கிறான்.

கிருஷ்ணப்ப கரையாளர் தனது பங்காளிகளுடன் சொத்துக்காக வழக்கு தொடுக்கிறார். கீழ் கோர்ட்டுகளில் வழக்கு தோல்வியடைய லண்டனுக்கு அப்பீல் செய்கிறார். குடி, பெண்கள் என்று வாழும் கிருஷ்ணப்ப கரையாளர், வழக்கினால் நிம்மதி இழந்து தவிக்கிறார். எலிசபெத் என்னும் ஆங்கிலோ இந்திய தாசியிடம் விழுகிறார். தன் வாழ்வின் அந்திம காலத்தில் தவிக்கும் எலிசபெத்தும், கிருஷ்ணப்ப கரையாளரும் எல்லாவற்றையும் கைவிட்டு மேல்மலைக்கு சென்று குடியேறுகிறார்கள். அந்த மலையை எலிசபெத்துக்கு எழுதி வைக்கிறார் கரையாளர். அந்த மலையில் ஒரு கட்டத்தில் தேயிலை பயிரிடப்படுகிறது.

நீலகண்டம் என்னும் நாயால் வழிநடத்தபடும் சதாசிவ பண்டாரம், தாய் பேச்சை கேட்காமல் சன்னியாசத்துக்கு வந்தவர். அந்த நாய், பண்டாரத்தை வாழ்வின் சுக துக்கங்களுக்கு எல்லாம் வழி நடத்தி செல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த நாய், பண்டாரத்தை நடுத்தர வயது பெண்ணிடம் கொண்டு சேர்க்கிறது. பண்டாரத்துக்கு அந்த பெண்ணுடன் உறவு ஏற்படுகிறது. குழந்தை பிறக்கும் சமயத்தில் அந்த நாய் திடீரென்று எழுந்து நடக்க துவங்கிவிடுகிறது. மனைவி பிரசவ வேதனையில் துடிக்க, நாயை மீற முடியாத பண்டாரம் அந்த உறவையும் துறந்து நாய் வழி நடத்த சென்னைக்கு வந்து பட்டினத்தாரின் சமாதிக்குள் நுழைகிறார். உள்ளே நுழையும் பண்டாரம் மாயமாகிறார். அந்த சமாதியிருந்து அத்தரின் மணம் வீசுகிறது.

இப்படி மனிதர்களை இந்த வாழ்வு விசித்திரமான இடங்களுக்கு இட்டுச்செல்கிறது. யாமம் என்னும் இரவு என்னும் அத்தர் என்னும் காமம் அவர்களது வாழ்வில் என்னவாக பொருளாகிறது என்பதை கவித்துவத்துடன் விளக்கும் யாமம் நாவல், "யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது" என்ற வரிகளுடன் முடிவடைகிறது.

கதைமாந்தர்

  • சதாசிவ பண்டாரம் - நீலகண்டம் என்னும் நாயால் வழிநடத்தப்படும் பண்டாரம்
  • அப்துல் காசிம் - அத்தர் தயாரிக்கும் மீர் காசிமின் பரம்பரையில் வரும் ஆண் வாரிசு. அத்தர் தயாரிப்பு இவருடன் முடிகிறது.
  • ரஹ்மானியா - அப்துல் காசிமின் முதல் மனைவி
  • வகிதா - அப்துல் காசிமின் இரண்டாவது மனைவி
  • சுரையா - அப்துல் காசிமின் மூன்றாவது மனைவி
  • சந்தீபு - அப்துல் காசிமின் வீட்டில் வேலை பார்க்கும் சிறுவன்
  • கிருஷ்ணப்ப கரையாளர் - நிலச்சுவாந்தர். குடி, பெண்கள் என்று வாழ்க்கையை கழிப்பவர். இறுதியில் எல்லாவற்றையும் கைவிட்டு மலையில் குடியேறுகிறார்.
  • எலிசபெத் - ஆங்கிலோ இந்திய பெண். தாசி. இறுதியில் கிருஷ்ணப்ப கரையாளருடன் வாழ்க்கையை கழிக்கிறாள்.
  • பத்ரகிரி - நில அளவையாளன். தந்தையால் ஒதுக்கப்பட்டு தம்பியுடன் சித்தியுடன் வாழ்ந்தவன்.
  • திருச்சிற்றம்பலம் - கணிதவியலாளன். பத்ரகிரியின் தம்பி. லண்டனுக்கு மேற்படிப்பு படிக்க செல்கிறான்.
  • தையல்நாயகி - திருச்சிற்றம்பலத்தின் மனைவி.
  • விசாலாட்சி - பத்ரகிரியின் மனைவி
  • சற்குணம் - லண்டனுக்கு திருச்சிற்றம்பலத்துடன் பயணிப்பவன் . முதலில் உல்லாசியாக அறிமுகமாகும் சற்குணம் நாவலில் புரட்சியாளனாக, உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவனாகிறான்.

இலக்கிய இடம், மதிப்பீடு

மிக விரிவான தகவல் சார்ந்த ஆராய்ச்சிக்குப்பின் எழுதப்பட்ட ஆக்கம் இது. நுண்ணிய சித்தரிப்புகள் ஒரு நவீன வரலாற்று நாவலுக்குரிய தகுதியை இதற்கு அளிக்கின்றன. ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாது ஒன்றை ஒன்று தீர்மானித்தபடி பின்னிச் செல்லும் வாழ்க்கையின் வலையைக் காட்டுவது இந்த நாவல். சென்னையின் முதல் நில அளவையாளரான லாம்டன் குழுவினர், குறுமிளகு வணிகத்துக்காக வரும் ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெட்ராஸை நிறுவுவது, தேநீர் பயிர், மீர்சாகிபேட்டை என வரலாறு இந்த நாவல் முழுவதும் பேசப்படுகிறது.

கடந்த பதினைந்து வருடங்களாக எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ச்சியாக உருவாக்கி முன்னெடுத்துவரும் தனித்தன்மை கொண்ட எழுத்து முறையின் சிறந்த உதாரணம் என இந்த நாவலை குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இத்தனித்தன்மையை 'நவீன மீபொருண்மை’ [மாடர்ன் மெட்டா பிஸிக்ஸ்] என்று குறிப்பிடும் ஜெயமோகன், மனிதர்களை அலைக்கழிக்கும், ஆட்கொள்ளும், வழிநடத்தும், வெறுக்கவும், விரும்பவும் வைக்கும் அறிய முடியாமையைப்பற்றிய நாவல் 'யாமம்’ என்று சொல்கிறார்.

"இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையை போன்றது. இரவின் தீரா வாசனை எங்கும் பரவி இருக்கிறது. பசுவின் காம்பில் இருந்து பால் சொட்டுவதுபோல பிரபஞ்சத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டிக் கொண்டே இருக்கிறது." போன்ற கவித்துவமான வரிகள் மூலம் இரவு பற்றியும், அத்தரின் நறுமணம் பற்றியும் எஸ்.ரா தான் உருவாக்க விரும்பும் உணர்வை வாசகனிடம் எழுப்பிவிடுகிறார். அந்த உணர்வுடன் இந்த புனைவிற்க்குள் நுழையும் வாசகன் வாழ்வின் விசித்திரங்களில் சிக்கிக்கொள்கிறான்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jan-2023, 06:44:26 IST