சா.கந்தசாமி
- கந்தசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கந்தசாமி (பெயர் பட்டியல்)
சா.கந்தசாமி (ஜூலை 23, 1940 - ஜூலை 31, 2020) தமிழ் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். தமிழ்ச் சிற்றிதழ்களில் முக்கியமானது என கருதத்தக்க கசடதபற இதழை நடத்தியவர். சுடுமண் சிற்பங்கள், ஓவியம், நுண்கலைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தவர். குறும்படம், ஆவணப்பட இயக்குநர். தமிழில் கசடதபற இலக்கிய இயக்கம் முன்வைத்த அழகியலின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர். 'மினிமலிசம்' என்று கூறப்படும் சுருக்கவாத அழகியலை தன் படைப்புகள் வழியாக வலியுறுத்தியவர்.
பிறப்பு, கல்வி
சா.கந்தசாமி தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாயவரத்தில் சாந்தப்ப தேவருக்கு மகனாக ஜூலை 23, 1940-ல் பிறந்தார். பதினைந்தாவது வயதில் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தார். ராமகிருஷ்ணன்(க்ரியா), ம.ராஜாராம், நா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இவரின் இலக்கிய நண்பர்கள்.
தனிவாழ்க்கை
சா.கந்தசாமி 1968-ல் ரோஹிணியை மணந்தார். இரு மகன்கள், ஒரு மகள். சா.கந்தசாமி சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றினார். சென்னை நந்தனத்தில் குடும்பத்துடன் வசித்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
சென்னையில் நிகழ்ந்த இலக்கியச் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக 'இலக்கியச் சங்கம்' என்ற அமைப்பை 1965-ல் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார். மாதம் ஒரு முறை இரண்டாம் சனிக்கிழமை அன்று தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் கூட்டங்கள் நடத்தி ஒரு கலை இலக்கிய ஆளுமையை அழைத்துப் பேச வைத்தனர். முதல் கூட்டத்தில் க.நா.சு. பேசினார்.
சாகித்ய அகாடமிக்காக 'தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்வு' என்ற இரு நாள் கருத்தரங்கம் ஒன்றை வடிவமைத்தார். சாகித்ய அகாடமியும், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து 2019 நவம்பரில் இக்கருத்தரங்கை நடத்தின.
பொறுப்புகள்
தமிழக அரசின் லலித்கலா அகாதெமியின் முன்னேற்றத்தில் அவர் பெரும் பங்கு வகித்தார். சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழு, இந்திய திரைப்படத் தணிக்கை குழு ஆகியவற்றில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார்.
இதழியல்
சா.கந்தசாமி ஞானக்கூத்தன், ந.முத்துசாமி ஆகியோருடன் இணைந்து தமிழ்ச் சிற்றிதழ்களில் முக்கியமானதான கசடதபற இதழை நடத்தினார். இது மரபு எதிர்ப்புத் தன்மை, கற்பனாவாத மறுப்பு அழகியல், தத்துவ விலக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மரபை விலக்கிக்கொள்வது அல்லது பகடி செய்வது இவர்களின் அணுகுமுறையாக இருந்தது. எந்தவிதமான உணர்வெழுச்சியோ நெகிழ்ச்சியோ இல்லாத புனைவுமுறை கொண்டவர்களாக இவர்கள் கருதப்பட்டனர். படைப்பில் தத்துவார்த்தமான பார்வை ஒரு சுமை என்றும் அது வாழ்க்கையைக் காட்டுவதற்குத் தடை என்றும் நம்பியவர்கள்.
இலக்கிய வாழ்க்கை
சா.கந்தசாமி தன் 1969-ல் இருபத்தி ஐந்தாம் வயதில் தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காகச் சிறிய வனம் ஒன்று அழிக்கப்படுவது பற்றிய 'சாயாவனம்' என்ற நாவலை எழுதினார். இது வாசகர் வட்டம் வெளியீடாக வந்தது. 'இலக்கியச் சங்கம்' அமைப்பு 'கோணல்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பை 1968-ல் கொண்டுவந்தது. இதில் சா.கந்தசாமியின் சிறுகதையும் இடம்பெற்றது. 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பு 1974-ல் வெளியானது. 'அவன் ஆனது' நாவல் 1981-ல் வெளியானது. படைப்பிலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 'தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள்' என்ற சா.கந்தசாமி தொகுத்த சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது. 'சா.கந்தசாமி கதைகள்' என்ற பெயரில் இவரது சிறுகதைகள் மொத்தமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொரு நாவல்களையும் எழுதியுள்ளார். இலக்கியக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
ஜவஹர்லால் நேரு, ஈ.வெ. ராமசாமி, உ. வே. சாமிநாதையர், வெ. சாமிநாத சர்மா ஆகியோரின் படைப்புகளை கந்தசாமி தன் இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார். "இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது" என சா.கந்தசாமி கூறினார். 'சாயாவனம்' மற்றும் இவரது 'சூரிய வம்சம்', 'விசாரணைக் கமிஷன்' ஆகியவை ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆவணப்படம்
சா.கந்தசாமி இலக்கியத்துக்குச் சமானமாக வரலாற்றாய்விலும் நாட்டார்கலைவடிவங்களிலும் ஆர்வம் கொண்டவர். சா.கந்தசாமியின் தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு 1989-ம் ஆண்டு சென்னை தூர்தர்ஷன் சேனல் 'காவல் தெய்வங்கள்' என்ற இருபது நிமிட ஆவணப்படத்தை சைப்ரசில் நிக்கோசியாவில் அங்கினோ திரைப்பட விழாவில் வெளியிட்டது. ஜெயகாந்தன், அசோகமித்திரன், பிரபஞ்சன் உள்ளிட்ட எழுத்தாளர்களைப் பற்றியும் ஆவணப்படங்கள் தயாரித்துள்ளார்.
மதிப்பீடு
"தமிழில் கசடதபற இலக்கிய இயக்கம் முன்வைத்த அழகியலின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் சா.கந்தசாமி. 'மினிமலிசம்' என்று கூறப்படும் சுருக்கவாத அழகியலை நம்பி, அதை வலியுறுத்தியவர் அவர். வர்ணனைகள், விவரணைகள் இல்லாத சுருக்கமான கூறுமுறை கொண்டதும் அன்றாட மொழிக்கு மிக அருகே அமைவதுமான மொழிநடை அவருடையது. கதை என்னும் வடிவமே வாழ்க்கையை உருமாற்றிவிடுகிறது, கதையில் சுவாரசியம் வாழ்வுண்மைகளை நெருங்கமுடியாமல் வாசகனை விலக்குகிறது என்று நம்பி 'கதையை கதையிலிருந்து வெளியேற்றுவதே தன் அழகியல்' என்று அறிவித்துக்கொண்டவர் சா.கந்தசாமி. நிகழ்ச்சிக்கோவைகளால் மட்டுமே ஒரு மைய உணர்வை அல்லது புரிதலை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லும் தன்மை கொண்டவை அவருடைய ஆக்கங்கள்.'சாயாவனம்' அவர் படைப்புகளில் முதன்மையானது. சாதாரண நிகழ்வுத்தொகுப்பு உணர்ச்சியில்லாமல், செய்திகளாகவே சொல்லப்பட்டிருக்கும், ஆனால் ஒட்டுமொத்தமாக அது வாழ்க்கையின் ஓர் உண்மையைக் கூர்மையாகச் சுட்டவும் செய்யும். 'தொலைந்துபோனவர்கள்','அவன் ஆனது', 'சூரியவம்சம்' ஆகியவை அவருடைய குறிப்பிடத்தக்க நாவல்கள். தக்கையின்மீது நான்கு கண்கள் போன்று சுருக்கவாத அழகியல்கொண்ட சிறந்த கதைகளையும் எழுதியிருக்கிறார்" என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.
"அறிந்த உலகிலிருந்து அறியப்படாத உலகிற்குள்ளும், சொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றுக்குள்ளும் பிரவேசிக்கும் படைப்பு மனம் சா.கந்தசாமியுடையது. அவருடைய எழுத்தின் பிரதான அம்சமாக இருப்பது, கதைத் தன்மையல்ல; வாழ்வின் விசித்திரங்களும், அதன் பிடிபடாப் புதிர்த்தன்மைகளுமே அவருடைய எழுத்துக்கான வசீகரங்களாக இருக்கின்றன. அந்த வசீகரமே இந்த வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும் அர்த்தமும் கொடுப்பதாகக் கந்தசாமி கருதுகிறார். வாழ்வின் மீதான வியப்புகளிலிருந்தே அவருடைய படைப்புகள் உருவாகியிருக்கின்றன. வியப்புகள் உருவாக்கும் கேள்விகளின் பாதையில் பயணிப்பதே அவருடைய புனைவுத் தடங்கள். கேள்விகள் எழுப்பும் சுவாரஸ்யத்தில்தான் அவருக்கு ஈடுபாடே தவிர பதில்களில் அல்ல." என சி. மோகன் மதிப்பிடுகிறார்.
"சா.கந்தசாமிதான், நான் இலக்கியத்திற்குள் வந்ததற்கும் பதிப்பகம் தொடங்கியதற்குமான மூல காரணம்" என்றார் ு முன்பு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச�.
விருதுகள்
- 'விசாரணைக் கமிஷன்' நாவலுக்காக 1998-ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- சுடுமண் சிலைகள் பற்றிய இவரது ஆவணப் படம் சர்வதேச விருது பெற்றது.
- லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995-ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது.
- சாயாவனம் நாவல் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
- இவரின் "நிகழ் காலத்திற்கு முன்பு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006-ம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
மறைவு
சா.கந்தசாமி ஜூலை 31, 2020-ல் காலமானார்.
நூல் பட்டியல்
நாவல்
- சாயாவனம்
- விசாரணைக் கமிஷன் (கவிதா வெளியீடு)
- சூரிய வம்சம் (காலச்சுவடு பதிப்பகம்)
- அவன் ஆனது (காலச்சுவடு பதிப்பகம்)
- இழையறாத பெருவாழ்வு (சந்தியா பதிப்பகம்)
- கறுப்பின் குரல் (அன்னம் - அகரம் வெளியீட்டகம்)
- வான்கூவர்: ஒரு நகரத்தின் கதை (சந்தியா பதிப்பகம்)
- முடிவின் தொடக்கம் (கவிதா வெளியீடு)
சிறுகதைத் தொகுப்பு
- தக்கையின் மீது நான்கு கண்கள் (க்ரியா பதிப்பகம்)
- ஆறுமுகசாமியின் ஆடுகள் (நற்றிணை பதிப்பகம்)
- கடவுளின் கனி (சந்தியா பதிப்பகம்)
- பத்ரிநாத் (கவிதா பப்ளிகேஷன்)
- மாயவலி (அன்னம் - அகரம் வெளியீட்டகம்)
- ரம்பையும் நாச்சியாரும் (நற்றிணை பதிப்பகம்)
- பின்னுக்கு முன்னாக (கவிதா வெளியீடு)
- சா.கந்தசாமி கதைகள் (முழுத்தொகுப்பு) (கவிதா பப்ளிகேஷன்)
பிற
- சாந்தகுமாரி
- ஏரிக்கரையில்
- பாய்ச்சல்
- அதர்படயாத்தல்
- தொலைந்து போனவர்கள்
- நீரின் பேரோசை
- படித்து அறிவோம்
- யாதும் ஊரே
- வேலையற்றவன்
- வாழும் வரலாறு
- புது டில்லி (டிஸ்கவரி புக் பேலஸ்)
- பெரும் மழை நாட்கள் (நற்றிணை பதிப்பகம்)
- மாயலோகம் (கவிதா வெளியீடு)
- கனடா நாட்குறிப்பு (கவிதா வெளியீடு)
- சொல்லப்படாத நிஜங்கள் (கவிதா வெளியீடு)
- தமிழில் சுயசரித்திரங்கள் (கட்டுரை)
- வள்ளத்தோள் கவிதைகள் (சாகித்திய அகாதெமி)
- நவீன தமிழ்ச் சிறுகதைகள் (தொகுப்பாசிரியர்)
- தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள் (தொகுப்பாசிரியர்)
- க.நா.சுப்ரமண்யனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (தொகுப்பாசிரியர்)
- தமிழில் இரயில் கதைகள் (தொகுப்பாசிரியர்)
இணைப்புகள்
- சாயாவனம் நாவல் பற்றி - ஜெயமோகன்
- சா.கந்தசாமி: காலத்தைச் செதுக்கிய கலைஞன்! - சி.மோகன்
- சா. கந்தசாமி - அழியாச் சுடர்கள்
- Sa. Kandasamy | சேப்பியன்ஸ் | A Brief History of Humankind | விருட்சம் இயக்கியம்
- ஹராரியின் கலகச்சட்டகம் - சத்திவேல் கோபிசெட்டிபாளையம்
- மொழிகள் - ஒரு கேள்வி - ஜெயமோகன் தளம்
- விஷ்ணுபுரம் விருது 2014: கவிஞர் ஞானக்கூத்தனுக்கு எழுத்தாளர் சா. கந்தசாமி வாழ்த்து
- thakkaiyin meethu naanku kangal - குறும்படம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:48:28 IST
