புவியரசு

From Tamil Wiki
புவியரசு
புவி 90
புவியரசு உரை

புவியரசு (1930- 30 ஜூன் 2026 ) தமிழ் நவீனக்கவிஞர். மொழியாக்கங்களும் செய்து வருகிறார். வானம்பாடி இலக்கியச் சிற்றிதழை தொடங்கி நடத்தியவர்களில் ஒருவர். வானம்பாடி கவிதை இயக்கம் என்னும் மரபை உருவாக்கிய முதல்வர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

புவியரசின் இயற்பெயர் சு. ஜெகந்நாதன். உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் 1930ல் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். தந்தை சுப்பையா ‘புரூக் பாண்ட் தேயிலை நிறுவன’த்தில் ஓவியராக வேலைபார்த்தவர்.

புவியரசின் இளமையிலேயே பெற்றோர் கோவைக்குக் குடிபெயர்ந்தார்கள். புவியரசு கோவையில் பள்ளிக்கல்வியை முடித்தபின் இளநிலை கல்வியை கோவை அரசுக் கலைக் கல்லூரியிலும், தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார்.

தனிவாழ்க்கை

புவியரசின் மனைவி பெயர் ஜெகதாம்பாள். ஒரு மகனும் இரண்டு மகள்களும். திரைத்துறையில் பணியாற்றிய மகன் புவியரசு உயிருடனிருக்கையிலேயே மறைந்தார்.

புவியரசு தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

அரசியல்

புவியரசு இளமையில் ம.பொ. சிவஞானம் நடத்திய தமிழரசு கழகம் அமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்தார். மொழிவாரி மாநிலப்பிரிவினையின்போது தமிழகத்தின் எல்லைப்பகுதிகளான பாலக்காடு போன்றவை கேரளத்துடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து ம,பொ.சி நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டார்.

புவியரசு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

புவியரசு ஞானி , எஸ்.என். நாகராஜன் போன்றவர்களின் தொடர்பால் இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

இதழியல்

புவியரசு நாடகத்துக்காக காற்று என்னும் இலக்கியச் சிற்றிதழை நடத்தினார். பின்னர் நடிகர் கமல்ஹாசன் நடத்திய மையம் என்னும் இலக்கிய நடுத்தர இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வானம்பாடி இயக்கம்.

புவியரசு சிற்பி ,முல்லை ஆதவன், முதலியோருடன் இணைந்து நவம்பர் 1971 ல் வானம்பாடி சிற்றிதழை தொடங்கினார். தமிழில் புதுக்கவிதையில் பொதுரசனைக்குரிய ஒரு போக்கை வானம்பாடி இதழ் உருவாக்குவதற்கு வழியமைத்தவர்களில் புவியரசும் ஒருவர்.

திரைத்துறை

புவியரசு கமல்ஹாசனுக்கு அறிமுகமானார். புவியரசு ‘மகாநதி’, ‘விருமாண்டி’, ‘ஹவுஸ்ஃபுல்’ முதலான படங்களில் வசனகர்த்தாகவும், நடிகராகவும் பங்கெடுத்தார். கமல்ஹாசன் முன்னெடுத்து வெளிவராதுபோன ‘மருதநாயகம்’ 'அமரகாவியம்' திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பங்களிப்பாற்றினார்.

இலக்கியப் பணிகள்

புவியரசு 1952ல் தமிழரசுக் கழகத்தில் செயல்படும்போதே ஜெகந்நாதன் என்ற தன் பெயரை புவியரசு என்று தமிழ்ப்படுத்திக்கொண்டு எழுதத் தொடங்கினார். கவிதை, புனைகதை, மொழியாக்கம், கட்டுரை என எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

கவிதை

வானம்பாடி தமிழில் பொதுரசனைக்குரிய கவிதை முறை ஒன்றை உருவாக்கியது. கலீல் கிப்ரான், வால்ட் விட்மான், பாப்லோ நெரூதா போன்றவர்களின் கவிதைகளில் இருந்து உருவான அறைகூவும்தன்மையும் சித்தரிப்புத்தன்மையும் கொண்ட கவிதை முறை அது. அந்த கவிதைவடிவை மொழிபெயர்ப்புகள் வழியாக உருவாக்கியவர்களில் புவியரசு முக்கியமானவர். அந்தவகையில் பல கருப்பொருட்களில் கவிதைகளை எழுதினார். கவியரங்குகளில் கவிதைகளை உணர்ச்சிகரமாக வாசிப்பதும் புவியரசின் வழக்கம்.

மொழியாக்கம்.

புவியரசு கவிதைகள், நாவல்கள், ஆன்மிகநூல்கள் என பரந்துபட்ட அளவில் மொழியாக்கங்கள் செய்துள்ளார். ஆங்கிலம் வழியாகவே இம்மொழியாக்கங்களைச் செய்தார்.

கவிதைமொழியாக்கம்

ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

நாவல் மொழியாக்கம்

புவியரசு ருஷ்ய எழுத்தாளர் தஸ்தய்வேஸ்கியின் புகழ்பெற்ற பெருநாவலான கரமஸோவ் சகோதரர்களை தமிழாக்கம் செய்தார். தமிழில் இது மொழியாக்கத்தில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

கட்டுரை மொழியாக்கம்

புவியரசு மொழிபெயர்ப்பில் ஓஷோ (பகவான் ரஜனீஷ்) நூல்களின் மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை. தமிழில் ஓஷோவுக்கான ஒரு வாசகச்சூழலை உருவாக்கியவை அவை. புவியரசு மொழியாக்கத்தில் வெளிவந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதையான அக்னிச்சிறகுகள் தமிழில் மிக அதிகமாக விற்கப்பட்ட நூல்களில் ஒன்று.

கட்டுரைகள்

புவியரசு சமகால முற்போக்குக் கருத்துக்களை முன்வைக்கும் கட்டுரைகளை எழுதினார். அவை வெவ்வேறு நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

விவாதங்கள்

இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது ‘இந்திரா-இந்தியா’ என்ற புத்தகத்தை புவியரசும தமிழ்நாடனும் சேர்ந்து எழுதினார்கள். அது பிற இடதுசாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

விருதுகள்

புவியரசு மொழியாக்கம், கவிதைக்காகவும் இரண்டு சாகித்ய அக்காதமி விருதுகளைப் பெற்றவர்.

  • 2004ல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் புதுக்கவிதைக்கான பரிசைப் பெற்றார்.
  • 2007ல் காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பான புரட்சிக்காரன் என்னும் நூலுக்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.
  • 2008ல் அண்ணா பொற்கிழி விருது.
  • 2009ல் புவியரசின் கவிதைத் தொகுப்பான கையொப்பம் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

புவி 90

புவியரசின் 90 ஆவது அகவை நிறைவு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் October 25, 2021 அன்று கோவையில் கொண்டாடப்பட்டது.

ஆவணப்படம்

புவியரசு வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மயன்ஸ் இயக்கத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வெளியீடாக வந்துள்ளது.

இலக்கிய இடம்

புவியரசு நிலைகளில் தமிழுக்குப் பங்களிப்பாற்றினார்.

  • வானம்பாடி கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். வானம்பாடி கவிதைகளின் அழகியல் வடிவை தன் மொழியாக்கங்கள் வழியாக உருவாக்கியவர்.
  • மொழியாக்கங்கள் வழியாக ஓஷோ, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் போன்றவர்களின் படைப்புகளை பரவலாக்கியவர். தஸ்தய்வேவ்ஸ்கியின் பெருநாவலான கரமஸோவ் சகோதரர்கள் அவருடைய முக்கியமான ஆக்கம்.
  • வானம்பாடி மரபைச் சேர்ந்த கவிஞர். பொதுவாசகர்களுக்குரிய கவிதைகளை எழுதியவர்

நூல்கள்

மொழியாக்கம்
  • நான் துணிந்தவள். கிரண் பேடி
  • அக்னிச்சிறகுகள்
  • பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி குறுநூல்கள்
  • அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் மிகேய்ல் நைமி
  • கரமசோவ் சகோதரர்கள். பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி
  • பாவப்பட்டவர்கள். பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி
  • புரட்சிக்காரன் காஸி நஸ்ரூல் இஸ்லாம்
  • ஞானக்களஞ்சியம் கலீல் கிப்ரான்
  • நந்தா எஸ்கார்ட்ஸ் அதிபரின் சுயசரிதம்
  • பிராங்கன்ஸ்டைன் மேரி ஷெல்லி
  • பொன்மணிப் புதையல் கலீல் கிப்ரான்
  • முறிந்த சிறகுகள். கலீல் கிப்ரான்
  • வெள்ளைமாளிகை ரகசியங்கள்
  • மிர்தாதின் புத்தகம்
  • மீண்டும் ஜென் கதைகள்
  • தீர்க்கதரிசி கலீல் கிப்ரான்
  • கார்மெலின்
  • ஓதெல்லோ ஷேக்ஸ்பியர்
  • ஹாம்லெட் ஷேக்ஸ்பியர்
  • ஆண்டனியும் கிளியோபாட்ராவும் ஷேக்ஸ்பியர்
  • கீதாஞ்சலி தாகூர்
  • என்ற மனிதனும் அவன் தத்துவமும் ஓஷோ
  • இரகசியக்கதைகள் அரேபிய இரவுகள்
  • பஞ்சதந்திரக்கதைகள்
  • ரூபாயத் உமர் கய்யாம்
  • காலை மாலை சிந்தனைகள் ஜேம்ஸ் ஆலன்
  • ஜென் கதைகள்
  • டிராக்குலா பிராம் ஸ்டாக்கர்
ஓஷோ நூல்கள்
  • அன்பின் அதிர்வுகள்
  • இப்போதே பரவசம்
  • ஏன் காத்திருக்கிறீர்கள்
  • உன் அற்புத ரோஜா மலரட்டும்
  • புல் தானாகவே வளர்கிறது
  • கிருஷ்ணா என்னும் மனிதனும் அவன் சிந்தனையும்.
சிறுகதைகள்
  • அதே நிலா
  • தீர்ப்பு
  • திருமணப்பரிசு
  • தேன்மொழி
நாடகங்கள்
  • புவியரசின் மூன்று நாடகங்கள்
கட்டுரை
  • கொஞ்சம் யோசிக்கலாமா?
  • ஜென் புத்தர் தாயுமானவர்
  • பசித்த சிந்தனை
  • அந்தக் கடைசிநாட்கள்
  • என் உள்ளம் கவர் கமல்
  • வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள்
  • தமிழ்மண்ணில் சேரன்மாதேவி குருகுலம்
  • சித்தேரி பழங்குடிகள்
  • தயவுசெய்து இதைப் படிக்காதீர்கள்
கவிதை
  • கவிதைக்கென்ன வேலி
  • இதுதான்
  • ஒரு முக்கிய அறிவிப்பு
  • எட்டுத்திசைக்காற்று
  • புல்லாங்குழலே
  • மீறல்
  • கையொப்பம்
  • மறுபடியும்

உசாத்துணை