வானம்பாடி (சிற்றிதழ்)
- வானம்பாடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வானம்பாடி (பெயர் பட்டியல்)
வானம்பாடி (1971-1982) கோவையில் இருந்து வெளிவந்த சிற்றிதழ். தெலுங்கு மொழியில் உருவான திகம்பர கவிதை இயக்கத்தின் சாயலில் உருவானது. இடதுசாரிக் கருத்துக்களையும் புரட்சி அறைகூவல் கவிதைகளையும் வெளியிட்டது. தமிழ்ப்புதுக்கவிதையை எளிமைப்படுத்தி 'மக்கள்மயமாக்கியது’ வானம்பாடி இதழ். வானம்பாடி மரபு என ஒரு கவிதைப்போக்கு உருவானது. நேரடியான அரசியல்குரலும், அறைகூவும் தொனியும் கொண்டவை இக்கவிதைகள். (பார்க்க வானம்பாடி கவிதை இயக்கம்)
வரலாறு
கோயம்புத்தூரில் புவியரசு, ஞானி, சிற்பி, முல்லை ஆதவன் ஆகியோரின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட சிற்றிதழ் வானம்பாடி. நவம்பர் 1971-ல் முதல் இதழ் வெளியானது. புவியரசின் மருமகனின் மலர்விழி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு புவியரசின் வீட்டு முகவரியில் இருந்து வெளிவந்தது.
வானம்பாடி இதழின் வெளியீட்டு விழா டிசம்பர், 1970-ல் கோயம்புத்தூர் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. அவ்விதழ் "கூடுகள் திறக்கின்றன" என்கிற முழக்கத்தோடு வெளியாகி இருந்தது. அக்கினி புத்திரனும், புவியரசும் சேர்ந்து அறிவித்த கூட்டறிக்கை
"இந்தக் கோவை நகர்
இன்னுமொரு பெத்ரோகிராட்
சோசலிச யாகங்கள்
இங்கேதான் தொடங்கும்
யுகப்புரட்சி முதல்வெடிகள்
இங்கேதான் வாய்திறக்கும்."
என்று அறைகூவியது. 'மானுடம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்’ என தன்னை அறிவித்துக்கொண்டது. 1975-ல் அவசரநிலை அறிவிக்கப்பட்டதும் பலர் அவ்வியக்கத்தில் இருந்து விலகவே 'வானம்பாடி’ கவிதை இதழ் நின்றது
1981-ல் சிற்பி பொள்ளாச்சியிலிருந்து வானம்பாடி இதழை மீண்டும் பிரசுரிக்க தொடங்கினார். மலையாளம், தெலுங்கு மற்றும் பிற மொழிக் கவிதைகள் அதில் மொழிபெயர்ப்பாகி வந்தன. ஜனவரி 1981-ல் 'உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பிதழ்' வெளியாயிற்று. கவிதை சார்ந்த கட்டுரைகளும் பல கவிதைகளும் இதில் வெளியாயின. டிசம்பர் 82-ல் வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் வெளியாயிற்று. அதன் பின் இதழ்கள் வெளிவரவில்லை. வானம்பாடி இதழ்கள் மொத்தம் 21 இதழ்கள் வெளியாயின.
உள்ளடக்கம்
வானம்பாடி இதழுக்கு முன்னோடியான இதழ் என கோவை ஞானி நடத்திய புதிய தலைமுறை இதழையும் பின்னர் வந்த தொடர்ச்சி என வேள்வி, நிகழ் ஆகிய இதழ்களையும் சொல்வதுண்டு. வானம்பாடியின் முதல் இதழில் கூடுகள் திறக்கின்றன என்ற மூன்று பக்கத் தலையங்கம் மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தியது. இது பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல் என்னும் முழக்கம் முதல் இதழில் இருந்தது. கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிபுத்திரன், சக்திக்கனல், பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ.இராஜாராம், மீரா, மு.மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், ஜனசுந்தரம், முல்லை ஆதவன், இளமுருகு, தேனரசன், சி. ஆர். ரவீந்திரன், ஜீவ ஒளி, நித்திலன், அபி, இன்குலாப், கல்யாண்ஜி (வண்ணதாசன்), கலாப்ரியா, பிரமிள், பிரபஞ்சன், மீரா, வண்ணநிலவன், விக்ரமாதித்யன் போன்றோரும் அதில் கவிதைகள் எழுதியுள்ளனர். பிரமிள், லா.ச. ராமாமிர்தம் பேட்டிகளும் வெளியியாகின.
முரண்பாடுகள், முடிவு
தொடக்கம் முதலே வானம்பாடி இயக்கத்தில் உள்முரண்பாடுகள் இருந்தன. வானம்பாடி கவிஞர்களில் அனைவரும் இடதுசாரி தீவிரநிலைபாட்டை ஏற்கவில்லை. சிலர் திராவிட இயக்க அனுதாபிகளாகவும் இருந்தனர். இந்நிலையில் 1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. வானம்பாடிகளில் ஒரு சாரார் அவசரநிலையை ஆதரித்து கொண்டாடினர். மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75' என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். வானம்பாடிகளில் சிற்பி போன்றவர்கள் அவசரநிலை கெடுபிடிகளால் ஒதுங்கிக்கொண்டனர். ஆகவே வானம்பாடி இதழ் நின்றது.
இலக்கிய இடம்
வானம்பாடி விட்டு விட்டு குறைந்த இதழ்களே வெளிவந்தாலும் தமிழ்ப் புதுக்கவிதையில் ஒரு உடைவை உருவாக்கியது. உரத்தகுரலும் அரசியல் உள்ளடக்கமும் கற்பனாவாத அணுகுமுறையும் கொண்ட கவிதைமரபு ஒன்றை அது தொடங்கிவைத்தது. அது வானம்பாடி கவிதை இயக்கம் என அழைக்கப்படுகிறது
பார்க்க வானம்பாடி
உசாத்துணை
- வானம்பாடி இதழ் நகல்
- எழுத்து முதல் கொல்லிப்பாவை வரை
- தஸ்தயேவ்ஸ்கி கொடுத்த ஞானம்!- கவிஞர் புவியரசு பேட்டி | தஸ்தயேவ்ஸ்கி கொடுத்த ஞானம்!- கவிஞர் புவியரசு பேட்டி - hindutamil.in
- வானம்பாடிகளின் கவிதை இயக்கம்-கோவை ஞானி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:34 IST