சக்திக்கனல்
சக்திக்கனல் (கவிஞர் சக்திக்கனல்; க.பெ. பழனிசாமி) (டிசம்பர் 05, 1933 - ஆகஸ்ட் 30, 2024) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். வானம்பாடி குழுவைச் சேர்ந்தவர். நாட்டார் காப்பியமான 'அண்ணன்மார் கதை'யை முழுமையாக முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
பிறப்பு, கல்வி
கல்வெட்டுப்பாளையம் பெரியசாமி பழனிசாமி என்னும் க.பெ. பழனிசாமி, டிசம்பர் 05, 1933 அன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுப்பாளையத்தில், சி. பெரியசாமி - சிலம்பாயி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்தபின் அமெரிக்கன் கல்லூரியில் புதுமுக வகுப்புப் படித்தார். மதுரைக் கல்லூரியில் பயின்று வணிகவியலில் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
க.பெ. பழனிசாமி, கூட்டுறவுத் துறையில் ஒன்பதாண்டுகள் பணியாற்றினார். நா. மகாலிங்கத்தின் சக்தி குழும நிறுவனமான ஏ.பி.டியில் முப்பத்தைந்தாண்டுகள் கணக்கு மேலாளராக, தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். 2001-ல் பணி ஓய்வு பெற்றார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
க.பெ. பழனிசாமி, பள்ளியில் படிக்கும் போதே மரபுக்கவிதைகள் பலவற்றை எழுதினார். 'பாரதி தொண்டன்', 'இளந்தூரன்' போன்ற புனை பெயர்களில் கலைக்கதிர், காலச்சக்கரம் போன்ற இதழ்களில் எழுதினார். பெரியசாமித் தூரன் இவரது திறமையை அடையாளம் கண்டு 'சக்திக்கனல்' என்ற பெயரைச் சூட்டினார். அப்பெயரிலேயே தொடர்ந்து கவிதைகள் எழுதினார். வானம்பாடி கவிதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அக்குழுமத்தின் முக்கியக் கவிஞர்களுள் ஒருவரானார். முற்போக்குச் சிந்தனைகள் சார்ந்த பல கவிதைகளை எழுதினார். வானம்பாடி இதழின் 22 வெளியீடுகளில், 17 கவிதைகளை எழுதினார். தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் 48 கவிஞர்களின் தொகுப்பான 'எழுக கவிஞ!' என்ற நூலை வெளியிட்டார். கவிதை, பதிப்பு என 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
அண்ணன்மார் சுவாமி கதை
சக்திக்கனல், ஓலைச்சுவடியிலிருந்து கல்வெட்டுப்பாளையம் அமரர் பெரிய கவுண்டர் பெயர்த்தெழுதிய உடுக்கடிப் பாடலான 'அண்ணன்மார் சுவாமி கதை'யைப் பதிப்பித்து வெளியிட்டார். இக்கதை, 'பொன்னர் சங்கர் கதை' என்றும் 'கள்ளழகர் அம்மானை' என்றும் 'குன்றுடையான் கதை' என்றும் வாய்மொழிப் பாடலாக உடுக்கடித்துப் பாடப்பட்டு வந்தது.
சக்திக்கனல் 'அண்ணன்மார் சுவாமி கதை'யை 1971-ல் வெளியிடுவதற்கு முன்பே 1965-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரெண்டா பெக் அக்கதையின் வாய்மொழி வடிவத்தைச் சேகரித்திருந்தார். அதுபற்றிப் பெருமாள் முருகன், "அண்ணன்மார் சுவாமி கதையின் உடுக்கடிப் பாடல் வடிவத்தைப் பதிவு செய்தவரான பிருந்தா பெக், 'சக்திக்கனல் தமது கருத்துக்கேற்ப மாற்றங்கள் செய்துவிட்டார்' என்று குற்றம் சாட்டுகிறார். அதையெல்லாம் விவாதிக்க இன்னொரு பதிப்போ சுவடியோ யாரிடமும் இல்லை என்பது துரதிர்ஷ்டமே." என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைப்புச் செயல்பாடுகள்
சக்திக்கனல், கோவைக் கவிஞர்களை ஒருங்கிணைத்து கோவையில் தமிழ் எழுத்தாளர் மன்றத்தை ஏற்படுத்தினார். ஜீவா, 1961-ல் நடத்திய நடத்திய கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பு மாநாட்டின் கவியரங்கில் பங்கு கொண்டார். பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினராய்ப் பணிபுரிந்தார். ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை, புதுவை ஸ்ரீஅரவிந்தர் சொசைட்டி முதலியவற்றில் பொறுப்பேற்றுச் செயலாற்றினார்.
இதழியல்
சக்திக்கனல், நண்பர்களுடன் இணைந்து 'பணி' என்ற மாத இதழை நடத்துவதில் பங்குகொண்டார்.
விருதுகள்
- சாதனைச் செம்மல் பட்டம்
- பாரத வங்கிப் பரிசு
- தமிழ் நாடு அரசின் தீரன் சின்னமலை காவிய விருது
மறைவு
சக்திக்கனல், ஆகஸ்ட் 30, 2024 அன்று, தனது 96-ம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
சக்திக்கனல் வானம்பாடிக் குழுவைச் சேர்ந்த முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவர். நாட்டார் காப்பியமான அண்ணன்மார் சுவாமி கதையின் எழுத்து வடிவத்தை உருவாக்கியவராக அறியப்படுகிறார். சக்திக்கனல் பற்றி பெருமாள் முருகன், "கவிதையில் அவர் சாதனை என்று எதையும் சொல்ல முடியாது. ஆனால் 'அண்ணன்மார் சுவாமி கதை'யின் பதிப்பாசிரியர் (முதற்பதிப்பு 1971) என்பது அவரது சாதனைதான். நாட்டுப்புறக் கதைப்பாடல் ஒன்றைப் பதிப்பிப்பதற்கான முறையியலைப் பின்பற்றிய பதிப்பு அல்ல. எனினும் அக்கதைப்பாடல் அச்சில் வருவதற்கு அவரே காரணம்." என்று குறிப்பிட்டார். மேலும் அவர், "வானம்பாடி இயக்கப் புரட்சிக் கவிகளில் ஒருவராக இருந்து 'அண்ணன்மார் சுவாமி கதை' மூலம் நாட்டுப்புறக் கதைப்பாடல் பதிப்பாசிரியராக அடையாளம் பெற்று அறிந்தோ அறியாமலோ பிற்காலத்தில் சாதி வளையத்துக்குள் அடைபட்டுத் தம்மைச் சுருக்கிக் கொண்டவர் எனச் சக்திக்கனலை மதிப்பிடலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நூல்கள்
கவிதை
- சக்திக்கனல் கவிதைகள் - 1969
- கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும் - 1976
- ரிசப்ஷனிஸ்ட் - 1981
- நீங்கள் கேட்டவை - 1982
- தீரன் சின்னமலை காவியம் - 1984
- என்னைக் கவர்ந்த கவிதைகள் - 1986
- வெடித்தது புரட்சி - 1993
- மலைச்சாமி குன்றுடையான் - 1997
- பசுஞ்சோலைப் பயணம் - 1999
- மழலைப்பாடல்கள் - 2000
- ஒரு ரோடு ரோலரின் பவனி
- அண்ணன்மார் சுவாமி கும்மி
பதிப்பு
- அண்ணன்மார் சுவாமி கதை - 1971
உசாத்துணை
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற 100 தமிழ்க் கவிஞர்கள், முனைவர் ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, காமன்ஃபோல்க்ஸ் தளம்
- கவிஞர் சக்திக்கனல் நாட்டுப்புறக் காவியம் தந்த கவிஞர்
- கீற்று தளக் கட்டுரை
- பெருமாள் முருகன் தளக் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2025, 20:06:27 IST