under review

அரவிந்தர்

From Tamil Wiki
அரவிந்தர்.jpg

அரவிந்தர் (அரவிந்த கோஷ்) (ஆகஸ்ட் 15, 1872 - டிசம்பர் 5, 1950) இந்திய தேசியவாதி, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர், கவிஞர், விமர்சகர், ஆன்மீகவாதி, யோக சாதகர்.

இங்கிலாந்த் கேம்பிரிட்ஜில் கல்வி கற்ற அரவிந்தர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு ஈடுபட்டார். ஆலப்பூர் சிறையில் ஓராண்டு காலம் இருந்த போது ஏற்பட்ட ஆன்மீக மாற்றத்தால் அரசியலில் இருந்து விலகி பாண்டிச்சேரியில் தன் ஆசிரமத்தில் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார்.

அரவிந்தர் முறையாக யோக சாதகங்கள் கற்றவர். கவிதை மற்றும் கவிதை குறித்தான விமர்சனங்களை எழுதியவர். இலக்கிய, தத்துவ வாசிப்பிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர். யோகம் மற்றும் ஆன்மீக சாதகர்.

பிறப்பு, கல்வி

Aravindar-child.jpg

அரவிந்தர் ஆகஸ்ட் 15, 1872 அன்று கொல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) கிருஷ்ண தன கோஷ், ஸ்வர்ணலதா தேவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷின் சொந்த ஊர் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கோனகர் கிராமம். கிருஷ்ண தன கோஷ் கோனகர் கிராமத்தில் செல்வந்தர் வீட்டில் பிறந்தவர். வெளிநாடு சென்று கல்வி முடித்துத் திரும்பியதால் இந்து சமுதாயம் கிருஷ்ண தன கோஷை, "கடல் கடந்து சென்ற பாவத்தைப் போக்க பிராயசித்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் சாதிப்பிரஷ்டம் செய்யப்படுவீர்" என எச்சரித்தனர். அதனால் தன் சொத்துக்களை விற்று கோனகர் ஊரை விட்டு வெளியேறினார்.

கிருஷ்ண தன கோஷ் பகல்பூர், ராம்பூர், குல்னா மாவட்டங்களில் சிவில் சர்ஜனாகப் பணியாற்றினார். கிருஷ்ண தன கோஷ் கொல்கத்தாவில் பணியாற்றிய போது அரவிந்தர் பிறந்தார். அரவிந்தர் இவர்களின் மூன்றாவது மகன். அரவிந்தருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். விநயபூஷண், மனமோகன் என இரு அண்ணன்கள். தங்கை சரோஜினி, தம்பி பரீந்திரன்.

செல்வந்தராகப் பிறந்த அரவிந்தர் வீட்டில் ஆங்கிலம் பேசும் சூழலில் வளர்ந்தார். கிருஷ்ண தன கோஷ் குழந்தைகளை மிஸ் பாகெட் (Miss Paggett) கவனித்துக் கொண்டார். பாகெட்டிடம் இருந்து அரவிந்தர் ஆங்கிலத்தைக் கற்றார். அரவிந்தரின் ஐந்து வயதில் அவர் இரு அண்ணன்களுடன் டார்ஜிலிங்க் லோரொட்டோ கான்வென்ட் பள்ளியில் (Lorreto Convent School) சேர்ந்தார்.

1880-ம் ஆண்டு கிருஷ்ண தன கோஷ் அரவிந்தரை விநயபூஷண், மனமோகனுடன் இங்கிலாந்து சென்று படிக்க அனுப்பினார். கிருஷ்ண தன கோஷின் நண்பர் மிஸ்டர். கிளேசியரின் (Mr. Glazier) நெருங்கிய உறவினர் வில்லியம் ஹெச். ட்ருவெட் (Rev. William H. Drewett) வீட்டில் தங்கி அரவிந்தர் படித்தார். ஏழு வயதான அரவிந்தர் மான்செஸ்டர் நகரில் கல்வி பயிலும் வயதடையாதலால் வீட்டிலேயே ட்ருவெட் தம்பதியரிடம் கல்விக் கற்றார். மிஸ்டர். ட்ருவெட் அரவிந்தருக்கு லத்தீன், ஆங்கிலம் கற்பித்தார். ட்ருவெட்டின் மனைவி வரலாறு, புவியியல், கணிதம், பிரெஞ்ச் கற்பித்தார்.

Aravindar-bio.jpg

இக்கல்வியின் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டத்தால் அரவிந்தர் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ், பைரன் என மிக இளம் வயதிலேயே வாசிக்கத் தொடங்கினார். லத்தீன் மொழி அறிந்திருந்ததால் லண்டன் செயின்ட் பால் (St. Paul's) பள்ளியின் தலைமையாசிரியர் அரவிந்தருக்கு கிரேக்க மொழி கற்றுக் கொடுத்து மேல் வகுப்பில் சேர்த்தார். இங்கே கவிதைகளைப் படிக்கத் தொடங்கிய அரவிந்தர் சில கவிதைகளும் எழுதினார். செய்யுள் வடிவில் எழுதப்பட்ட அக்கவிதைகள் Fox's weekly பத்திரிகையில் வெளிவந்தன.

அரவிந்தர் செயின்ட் பால் பள்ளியில் இறுதியாண்டு படித்தபோது ஐ.சி.எஸ் வகுப்பில் மாணவராக சேர்ந்தார். ஐ.சி.எஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேறிய அரவிந்தர் செயின்ட் பால் பள்ளியில் கல்வியை முடித்த போது சீனியர் கிளாசிகல் ஸ்காலர்ஷிப் பெற்றார். ஐ.சி.எஸ் தேர்ச்சி பெற்றதன் மூலம் சில உதவித்தொகைகள் வந்தன. இதனைக் கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். கிங்ஸ் கல்லூரியில் ஒராண்டில் கிரீக், லத்தீன் மொழியில் செய்யுள்கள் எழுதி பரிசுப் பெற்றார்.

ஆனால் கேம்பிரிட்ஜில் படிப்பை முடிப்பதற்குள் அரவிந்தரின் மனம் தேசிய விடுதலை நோக்கி திரும்பியது. அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷ் பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். கிருஷ்ண தன கோஷ் வங்காளத்தில் வெளிவந்த 'வங்காளி’ பத்திரிகையை அரவிந்தருக்கு அனுப்பினார். கிருஷ்ண தன கோஷ் அரவிந்தருக்கு தொடர்ந்து கடிதங்களும் எழுதினார். இதனால் அரவிந்தர் கல்லூரி படிப்பிலிருந்து விலக்கம் கொண்டார். அரவிந்தர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெறவில்லை (பட்டத்திற்காக விண்ணபித்திருந்தால் கிடைத்திருக்கும்). ஐ.சி.எஸ் பரீட்சையில் தேறிய போதும் குதிரைச் சவாரி பரீட்சைக்குப் போகாமலேயே இருந்துவிட்டார். இரண்டாவது முறையும் அதனைத் தவறவிட்டதால் ஆங்கில அரசு அரவிந்தரை ஐ.சி.எஸ் தேறியவர் பட்டியலில் சேர்க்கவில்லை.

தனி வாழ்க்கை

அரவிந்தர்1.jpg

அரவிந்தர் 1893-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். இந்தியாவில் பரோடா சமஸ்தான மன்னரிடம் பணியில் சேர்ந்தார். சர் ஜேம்ஸ் காட்டன் பரிந்துரையில் அரவிந்தருக்கு வேலை கிடைத்தது. அரவிந்தர் முதலில் சர்வே செட்டில்மென்ட் டிப்பார்ட்மெண்டில் (Survey Settlements Department) வேலை செய்தார். அங்கே அவருடைய மாதச் சம்பளம் ரூ. 200. பரோடா மன்னர் எல்லாத் துறைகளிலும் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் செட்டில்மென்ட் டிப்பார்ட்மெண்டிலிருந்து ரெவன்யூ டிப்பார்ட்மெண்டிற்கு மாறினார். பின் சிறிது காலம் வேறு சில துறைகளிலும், தலைமைச் செயலகத்திலும் வேலை செய்தார். இறுதியில் பரோடா கல்லூரியில் அரவிந்தருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டது.

அரவிந்தர் குடும்பத்துடன்

பரோடா கல்லூரியில் வேறு அரசாங்கத் துறைகளில் பணி செய்து கொண்டே வாரத்தில் சில மணி நேரம் பிரெஞ்ச் கற்பித்தார். பிரெஞ்ச் விரிவுரையாளர் எனத் தொடங்கிய பணியில் படிப்படியாக வேறு கல்லூரி வேலைகளும் சேர்ந்தன. 1900-ல் கல்லூரி முதல்வர் மிஸ்டர் டெயிட் (Tait) மகாராஜாவிடம் அரவிந்தரை முழு நேர ஆங்கில பேராசிரியராக நியமிக்கும் படி கேட்டார். அரவிந்தரின் சம்பளம் ரூ.360 -ஆக உயர்த்தப்பட்டு ஆங்கிலப் பேராசிரியர் பணி கிடைத்தது. பரோடா கல்லூரியிலேயே துணை முதல்வராகப் பதவி உயர்வு பெற்றார். அங்கே சிறிது காலம் மாற்றாள் கல்லூரி முதல்வராகவும் அரவிந்தர் பணியாற்றினார். 1906-ம் ஆண்டு வரை இப்பணியில் இருந்தார். பின் கொல்கத்தா தேசிய கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். அகஸ்ட் 2, 1907 அன்று அரவந்தர் தேசிய கல்லூரி வேலையை ராஜனாமா செய்தார்.1901-ல் அரவிந்தர் தன் இருபத்தொன்பதாம் வயதில் பூபால் சந்திர போஸின் மகள் மிருணாளினி போஸை திருமணம் செய்துகொண்டார்.

பொது வாழ்க்கை

இங்கிலாந்தில் இந்திய விடுதலை
அரவிந்தர்2.jpg

அரவிந்தர் கேம்பிரிட்ஜில் படித்த காலத்தில் இந்திய மாணவர்கள் 'இந்தியன் மஜ்லிஸ்’ என்ற கழகத்தைத் தொடங்கினர். அரவிந்தர் அதன் செயலராக சில காலம் இருந்தார். மஜ்லிஸ் கூட்டங்களில் இந்தியாவின் பூரண விடுதலையை ஆதரித்துப் பேசினார். அரவிந்தர் மஜ்லிஸில் பேசியது ஒயிட் ஹாலில் (White Hall) இருந்த இந்தியன் சிவில் சர்வீஸ் கமிஷனுக்குப் சென்றதன் பேரில் அவரை அரசாங்கம் ஐ.சி.எஸ் வேலைக்குத் தேர்ந்தெடுக்கவில்லை என்ற ஊகமும் உள்ளது. அரவிந்தர் இங்கிலாந்தில் இருந்த கடைசி நாட்களில் இந்திய விடுதலைக்கான ரகசிய சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

அரவிந்தரும் தேசிய காங்கிரஸும்

இங்கிலாந்தில் இருந்து பரோடா திரும்பிய போது அப்போதைய காங்கிராஸ் கட்சியின் மிதவாதத்தின் மேல் அரவிந்தர் ஒவ்வாமை கொண்டிருந்தார். அரவிந்தர் அஸ்திவார பலமற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு அதனிடத்தில் இலட்சிய வேகங் கொண்ட தேசிய தத்துவம் மற்றும் ஆழமான அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு புதிய காங்கிரஸை உருவாக்கும் எண்ணம் கொண்டார்.

அரசாங்கப் பணிகளில் ஈடுபட்ட போது தேசிய தலைவர்களுடன் அரவிந்தருக்கு தொடர்பு ஏற்பட்டது. தேஷ்பாண்டே, திலகர், மாதவராவ் ஆகியோருடன் நட்புக் கொண்டார். அரவிந்தர் பரோடா வந்த ஆறு மாதத்தில் மாதவராவ் கேட்டுக் கொண்டதன் பெயரில் ’இந்துப் பிரகாஷ்’ பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மிதவாதக் கொள்கைகளைக் கண்டித்து எழுதினார். இதனை வாசித்த மராட்டியத் தலைவர் மகாதேவ கோவிந்த ரண்டே பத்திரிகை உரிமையாளரிடம் அரசாங்கத்திற்கு விரோதமான அக்கட்டுரையை விமர்சித்தார். அரசாங்கத்தைப் பற்றி தொடர்ந்து எழுதினால் ராஜத் துரோக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அவ்விமர்சனத்திற்கு பின் தேஷ்பாண்டே அரவிந்தரிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் செயல்பூர்வமான அரசியல் பற்றி எழுதாமல் அரசியல் தத்துவம் பற்றி எழுதத் தொடங்கினார். இக்கட்டுரைத் தொடருக்காக, 'பழைய விளக்குகளுக்குப் பதிலாக புதிய விளக்குகள்’ என்ற தலைப்பு கொடுத்தார்.

ஆனால் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சில நாட்களிலேயே அதன் மேல் விலக்கம் கொண்டார். ஆனால் இக்கட்டுரை தொடர் மூலம் தேசிய தலைவர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

வந்தே மாதரமும் விடுதலை போராட்டமும்
அரவிந்தர்3.jpg

'வந்தே மாதரம்’ பத்திரிகையை ஆகஸ்ட் 6, 1906 அன்று விபின் சந்திரபால் பதிவு செய்தார். ’வந்தே மாதரம்’ தினசரி பத்திரிகையாக வெளிவந்தது. விபின் சந்திரபால் அதன் துணையாசிரியராக உதவக் கேட்டதால் அரவிந்தர் இணைந்தார். அரவிந்தர் கொல்கத்தா தேசியக் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அவர்கள் 'வந்தே மாதரத்தை’ கட்சிப் பத்திரிகையாக நடத்தினால் அதற்கு ஆதரவு தர சம்மதித்தனர். விபின் சந்திரபால் பின்னாளில் பத்திரிகைக்கு வேண்டிய வருவாய்க்கு வகை செய்யும் பொருட்டு 'வந்தே மாதரம்’ கம்பெனியைத் தொடங்கினார். விபின் சந்திரபால் கட்சியின் நோக்கத்தையும் திட்டத்தையும் பரப்ப பல மாவட்டங்கள் பயணம் செய்த போது அரவிந்தர் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். பத்திரிகை தொடங்கி சில மாதங்களிலேயே விபின் சந்திரபால் சில்ஹெட்டிற்கும் வேறு சில இடங்களுக்கும் சென்றுவிட்டதால் அரவிந்தர் பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். ஆனால் தன்னுடைய பெயரை ஆசிரியரெனப் போட அரவிந்தர் மறுத்துவிட்டார். பரோடாவில் வேலையில் இருந்தது காரணமாக இருக்கலாம்.

GhoshAurobindo.jpg

ஏப்ரல் 9,1907 முதல் ஏப்ரல் 23,1907 வரை அரவிந்தர் சாத்வீக எதிர்ப்புப் பற்றி 'வந்தே மாதரத்தில்’ சில கட்டுரைகள் எழுதினார். சாத்வீக போராட்டத்தைப் பற்றி அரவிந்தர் குறிப்பிடும் போது, "இன்று இந்தியாவில் நிலவுகின்ற சூழ்நிலையில் சாத்வீகப் போராட்டமே நமக்கு மிகவும் இயல்பான, பொருத்தமான ஆயுதமாகும். குறிப்பாக அந்நிய ஆட்சியானது நாட்டு மக்கள் அதை ஏற்றுக் கொண்டு தாமாகவே அதனுடன் ஒத்துழைக்க முன் வருவதையே முக்கியமாக நம்பி இருக்கிற நாடுகளுக்குச் சாத்வீகப் போராட்ட முறை பொறுத்தமாகும். சாத்வீகப் போராட்டத்தின் முதல் தத்துவம் பிரிட்டிஷ் வாணிபம் நமது நாட்டைச் சுரண்டுவதற்கும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் நாட்டை ஆள்வதற்கும் ஒத்துழைக்க மறுத்து அந்நிய நிர்வாகத்தை நடக்க முடியாமல் செய்வதாகும். ஒரே வார்த்தையில் அதற்குப் பெயர் பகிஷ்காரம்..." என எழுதினார். 1906-7-ல் அரவிந்தர் பகிஷ்காரம், சுதேசி, ஒத்துழையாமை, சாத்வீகப் போராட்டம் பற்றி வந்தே மாதரம் மூலம் பேசினார். ஜூலை 30, 1907 'வந்தே மாதரம்’ பத்திரிகை அலுவலகம் சோதனையிடப்பட்டது. 'யுகாந்தர்’ பத்திரிகையில் வெளியான சில கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'வந்தே மாதரம்’ வெளியிட்டதால் அவை ராஜத் துரோகமாகக் கருதப்பட்டு ஆசிரியராக இருந்த அரவிந்தரை ஆகஸ்ட் 16 அன்று ஆங்கில அரசு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. வாரண்டைப் பெற்றுக் கொண்ட அரவிந்தர் ஸ்டேஷனுக்குச் சென்று தன்னைக் கைது செய்ய ஒப்புக் கொடுத்தார். ஆனால் அவர் ஆசிரியர் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லாததால் சீக்கிரத்தில் விடுதலையானார். இந்த சிறைவாசம் சில நாட்களே நீடித்தாலும் இது அரவிந்தரை தேசிய விடுதலைத் தலைவர்களின் கவனத்திற்கு சீக்கிரமாகக் கொண்டு சென்றது. ஆகஸ்ட் 1907-ல் மிட்னாப்பூர் மாகாண மாநாடு பற்றி எழுதிய ஆர்.சி. மஜூம்தார், "தேசியவாதிகளின் தலைவர் என்ற முறையில் அம்மாநாட்டில் கலந்துக் கொண்டார்" எனக் குறிப்பிட்டார்.

அலிப்பூர் சிறை
அரவிந்தர் சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

மே,1908-ல் மாதம் முஸபர்பூரில் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் கொல்லப்பட்டனர். போலீஸ் கமிஷனர் இவ்வழக்கின் விசாரணையில் புரட்சி தேசியவாத இளைஞர்களின் வழிகாட்டியும், தலைவரும் அரவிந்தர் எனக் கருதினர். அரவிந்தர் தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை சுமார் ஐந்து மணிக்கு சூப்பிரன்டெண்டன்ட் கிரேகன் தலைமையில் ஒரு படை வீட்டினுள் சென்று அரவிந்தரைக் கைது செய்து லால் பஜார் சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு பிறகு அரவிந்தர் நீதிபதி முன் ஆஜர்படுத்தபடாமலே எழுத்து வாரண்ட் மூலம் ஓராண்டு சிறைதண்டனை பெற்றார். இந்த ஓராண்டு சிறைவாசம் அரவிந்தரின் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக அரவிந்தர் இளவயதிலிருந்து நம்பி வந்த யோக சாதனையை நோக்கித் திரும்பினார். அரவிந்தர் பின்னாளில் இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு ஆன்மிக பாதை நோக்கி தன் வாழ்வை மாற்றிக்கொள்ள இச்சிறைவாசம் காரணமாக அமைந்தது.

மே 6,1909 அன்று அலிப்பூர் செஷன்ஸ் நீதிபதி மிஸ்டர் பீச்கிராப்ட் அரவிந்தர் குற்றமற்றவர் எனக் கூறி அவரை விடுதலை செய்தார். சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார். கொல்கத்தாவில் வாரந்தோறும் கூட்டம் நடத்தினார்.

இதழ்கள்
கர்மயோகி
அரவிந்தர்4.jpg

அரவிந்தர் ஜூன் 19, 1909 அன்று 'கர்மயோகி’ என்னும் ஆங்கில வார இதழைத் தொடங்கினார். அதில் தேசியம், சமயம், இலக்கியம், அறிவியல், தத்துவம் என பல துறைகளில் கட்டுரை கர்மயோகியில் வெளிவந்தன. அரவிந்தர் சிறையிலிருந்து மீண்ட பின் தேசியக் கட்சி சிறு சிறு கூட்டுகளாகப் பிரிந்திருந்தது. இந்நாட்களில் ஆங்கில அரசாங்கம் கடுமையான அடக்குமுறையைக் கையில் எடுத்தது. அரவிந்தரை அந்தமானுக்கு அனுப்ப முயற்சித்தனர். அது முடியாத காரணத்தினால் அவரை நாடு கடத்த முடிவு செய்தனர்.

இதை அறிந்த சகோதரி நிவேதிதை அதனை அரவிந்தரிடம் சொன்ன போது அவர் பணி தடைப்பட்டுவிடாமல் இருக்க தன் கையொப்பமிட்ட கட்டுரை ஒன்றை கர்மயோகியில் வெளியிட்டார். அதில் தம்மை நாடு கடத்துவதற்கான யோசனையைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு நாட்டுக்கு என் கடைசிச் சாசனம் என்று அரசியல் சாசனம் ஒன்றை அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு கடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அரவிந்தர் நம்பியது நடந்தது.

தர்மா

ஆகஸ்ட் 23, 1909 அன்று 'தர்மா’ என்ற வங்காள வார இதழைத் தொடங்கினார். அதன் தலையங்கத்தின் மேல் கீதையின் புகழ்பெற்ற வசனமான, "தர்மம் மங்கி அதர்மம் ஒங்கும்போது நான் பிறவியெடுக்கிறேன்" இடம்பெற்றிருந்தது.

அரவிந்தர் தொடர்ந்து கர்மயோகியிலும் தர்மா இதழிலும் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் மீண்டும் நாடு கடத்தல் பற்றிய வதந்திகள் கிளம்பத் தொடங்கின. முன்பு செய்தது போலவே, "என் நாட்டு மக்களுக்கு" என்ற தலைப்பில் டிசம்பர் 25, 1909 அன்று கர்மயோகியில் கட்டுரை எழுதி வெளியிட்டார். மீண்டும் ஜனவரி 8, 1910-ல் 'நாடு கடத்தும் ஆபத்து’ என 'கர்மயோகியில்’ எழுதினார்.

வங்காள வெளியேற்றம்

ஜனவரி 24, 1910 அன்று துப்பறியும் துறை உதவி சூப்பரிண்டெண்ட ஹாம்சுல் ஆலம் உயர் நீதிமன்றத்தில் இருபது வயது இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைப் பற்றி அரவிந்தர் கர்மயோகியில் எழுதினார். அரசாங்கத்தின் பெரிய துப்பறியும் அதிகாரியை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்தது அரசாங்கத்தை அரவிந்தரின் நாடு கடத்தல் பற்றி மேலும் தீவிரமாக யோசிக்கத் தூண்டியது.

அரவிந்தர் சிலையுரு - சாவித்திரி இல்லம், அரோவில்

இதன் காரணமாக அரவிந்தர் வங்காளத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கொல்கத்தாவிலிருந்து படகு மூலம் சந்திரநாகூர் செல்ல ஏற்பாடாகியது. கொல்கத்தாவில் இருந்து படகில் தப்பிச் சென்ற அரவிந்தர் அங்கே அவருடைய நண்பரான மோதிலால் ராய் வீட்டில் தங்கினார். (இதனைப் பற்றிய குறிப்புகளை மோத்திலால் ராய் தன் புத்தகத்தில் 'My Life's partner' by Motilal Roy’) குறிப்பிடுகிறார்.) வீடு சோதனை செய்வது தொடர்ந்து நடந்ததால் மோதிலால் ராய் அரவிந்தரை தன் நண்பரின் வீட்டில் தங்கச் செய்தார். அங்கிருந்து பாதுகாப்பு காரணமாக அரவிந்தர் வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டேயிருந்தார். கடைசியாக அங்கிருந்து ஏப்ரல் 4, 1910 அன்று பாண்டிசேரி சென்றடைந்தார்.

அரவிந்தரும் பாண்டிசேரியும்

பாண்டிசேரியில் அரவிந்தரும் அவருடன் வந்த விஜெயும், மோனியும் கோமுட்டிச் செட்டித் தெருவிலுள்ள சங்கர செட்டியார் வீட்டின் இரண்டாவது மாடியில் தங்கினர். அக்டோபர் வரை அதே வீட்டில் இருந்தனர். அரவிந்தர் பாண்டிசேரி வந்த மூன்றாம் மாதத்தில் ஆங்கில அரசாங்கத்திற்கு விஷயம் தெரிந்தது. தேசிய கட்சித் தொண்டர்களுக்கு தெரிய வந்த போது அரவிந்தரின் அரசியல் வழிகாட்டுதல் வேண்டி தொடர்ந்து கடிதம் எழுதினர். "இந்தியாவை விடுதலை செய்யும் பொறுப்பை ஸ்ரீ கிருஷ்ணன் எடுத்துக் கொண்டான்" என அரவிந்தர் அவர்களுக்கு மறுமொழி அனுப்பினார்.

பாண்டிசேரியில் அரசியலில் இருந்து தன்னை முற்றாக விலக்கிக் கொண்டு வாழ்ந்தார். ஆறு மாதம் கழித்ததும் சங்கர செட்டியார் வீட்டிலிருந்து நகரின் தென் பகுதியில் சப்ரின் தெருவில் ஏப்ரல்,1911 வரை வசித்தார். அங்கே நவம்பர்,1910-ல் நளினி, மோனி, விஜய் மூவரும் சில முறை கொல்கத்தா சென்றது தவிர பாண்டிசேரியிலேயே தங்கினர்.

இங்கே பாரதியாருடன் அரவிந்தருக்கு நட்பு ஏற்பட்டது. பாரதி 1908 -ம் ஆண்டு சென்னையில் இருந்து வெளிவந்த இந்தியா இதழ் தடைசெய்யப்பட்டதை ஒட்டி பாண்டிசேரி வந்து வாழ்ந்தார் (பார்க்க: இந்தியா (இதழ்)). அரவிந்தருக்கும், பாரதிக்கும் இடையே நெருங்கி நட்பு வளர்ந்தது. பாரதியும், ஸ்ரீநிவாசாச்சாரியாரும் அரவிந்தரைப் பார்க்க அடிக்கடி சென்றனர். பின்னர் பாரதி ஒவ்வொரு நாள் மாலையும் அரவிந்தரை சந்தித்து பேசினார். இருவரும் இலக்கியம், சமுதாயம், அரசியல், கலைகள், தத்துவம் என தினம் பேசினர். பாரதி அரவிந்தரிடம் ரிக் வேதம் கற்றார்.

ஏப்ரல் 11, 1911 அன்று அரவிந்தர் தன் சீடர்களுடன் சப்ரன் தெரு வீட்டை விட்டு செயின்ட் லூயி தெருவிலுள்ள வீட்டிற்கு மாறினார். ஏப்ரல் 1913 வரை அவ்வீட்டில் வசித்தார். அரவிந்தர் பாண்டிசேரி வந்த பின்பும் ஆங்கில அரசு அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. முதல் உலகப் போர் காலகட்டத்தில் பாண்டிசேரியில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான அகதிகள் தங்காமல் திருப்பி அனுப்பக் கோரி பிரெஞ்ச் அரசிற்கு தொல்லை கொடுத்தது. இதன் காரணமாக பிரெஞ்ச் அரசாங்கம் தேச பக்தர்கள் அனைவருக்கும் அல்ஜீரியாவால் இடம் தருவதாகவும் அங்கே மாறும்படியும் கேட்டுக் கொண்டனர். அரவிந்தர் பாண்டிசேரியில் இருந்து செல்ல மறுத்துவிட்டார். அவர், "நான் என்னவோ இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

ஆன்மீக வாழ்க்கை

அரவிந்தர் அல்பாசாவுடன் முதல் சந்திப்பு

அரவிந்தருக்கு சிறு வயதிலிருந்து யோக சாதகம் சார்ந்த ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்தில் அரவிந்தர் மீது கவிந்த இருளைப் பற்றியும் வெவ்வேறு தருணங்களில் அரவிந்தருக்கு நிகழ்ந்த யோக நிகழ்வு பற்றியும் அவரது சீடர்கள் அரவிந்தரின் வாழ்க்கை குறிப்பில் குறிப்பிடுகின்றனர். அரவிந்தரின் ஆன்மீக தரிசனம் இரண்டு வேறுபட்ட தளங்களில்/காலங்களில் நிகழ்ந்தது. ஒன்று அரவிந்தர் பரோடாவில் இருந்த போது தன் நண்பர் தேஷ்பாண்டே, ஜாதவுடன் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள சாந்தோடுக்குச் சென்றார். அங்கிருந்து மூவரும் கங்கா நாத்திற்குச் சென்றனர். அங்குள்ள சுவாமி பிரமானந்தா ஆசிரமத்தில் மூவரும் ஒரு நாள் தங்கி திரும்பினர். இதன் பின் அரவிந்தரும், தேஷ்பாண்டேவும் தேவியின் உபாசகராக மாறினர். அரவிந்தர் சுத்த சைவ உணவிற்கு மாறினார். இங்கே அரவிந்தருக்கு காளியிடம் பேசுவதும், ஆவிகளுடன் பேசுவதுமான நம்பிக்கை ஏற்பட்டது. தேவி கோவிலில் மரபில் உள்ள மேலும் சில சடங்குகள் செய்பவராக மாறினார்.

அரவிந்தரிடம் ஏற்பட்ட இரண்டாவது மாற்றம் அவரது சிறைவாசத்தில் நிகழ்ந்தது. அரவிந்தர் சிறையில் ஒன்பதிற்கு ஐந்து அறையில் தனியாக இருந்த போது அவர் கிருஷ்ணனின் சொற்களை நேரடியாகக் கேட்கத் தொடங்கினார் என அவர் சீடர்களின் அனுபவ குறிப்புகள் மூலம் அறிய முடிக்கிறது. அவர் தமக்கு நடக்கும் ஒவ்வொன்றும் கிருஷ்ணனின் ஆணை பேரில் நடப்பதாக எண்ணினார். கீதை மீது பற்றும் அதனைக் கற்றறிந்த ஞானம் கொண்ட அரவிந்தர் சிறை நாட்களில் கீதை மற்றும் உபநிஷத் நூல்களை வரவழைத்து படித்தார். இவ்விரு நிகழ்ச்சிகளும் அரவிந்தரின் பின்னாளின் ஆன்மீக பாதைக்கு முதற்புள்ளியாய் அமைந்தன.

சந்திரநாகூரில் சில காலம் இருந்தபோது அரவிந்தர் தன்னை தெய்வ அன்னைக்குப் பூரண சரணாகதி செய்தவராக இருந்தார். மோதிலால் ராய் அதைப்பற்றி கேட்ட போது தம்முடைய சரணாகதியின் பொருள் என்ன என்று விளக்கினார். "இந்த சரணாகதி என்னை தெய்வ அன்னையுடன் ஐக்கியமடையச் செய்தது" என்றார்.

பாண்டிசேரி வந்த பின் மோதிலால் ராய்க்கு எழுதிய கடிதங்களில் 'காளி’ என்று கையெழுத்திட்டார். அது அரவிந்தர் ஆலப்பூர் சிறையில் இருந்த போது அடைந்த கிருஷ்ண-காளி தொடர்ச்சி என அவரது சீடர்கள் குறிப்பிடுகின்றனர்.

யோக சாதனை
Aurobindoandalpaza.jpg

அரவிந்தர் 1904-ம் ஆண்டு யோகம் பயலத் தொடங்கினார். 1908-ல் விஷ்ணு பாஸ்கர லேலே என்னும் மகாராஷ்டிர யோகி அரவிந்தரின் யோக சாதனையில் உதவினார். 1910-ம் ஆண்டிற்கு பின் தன் அரசியல் வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக விலகி யோக சாதனைகளில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆர்யா இதழ்

'ஆர்யா' என்னும் தத்துவ இதழை அரவிந்தர் ஏற்று நடத்தினார். அரவிந்தர் தன்னை யோக சாதகனாகவே முன்வைத்தார். அவர் தன்னை தத்துவவாதியாகக் கருதவில்லை. அரவிந்தர் தன் சீடருக்கு எழுதிய கடிதத்தில், "நான் ஒரு கவி, அரசியல்வாதி, தத்துவ ஞானி அல்ல. ரிஷார்ட் என்னிடம் ஒரு தத்துவ ஞான இதழுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டார். ஒரு யோகிக்கு எந்த வேலையையும் செய்யக் கூடிய திறன் இருக்க வேண்டும் என்பது என் கொள்கையாதலால் அதற்கு ஒப்புக் கொண்டேன். உலகப் போருக்கு ரிஷார்ட் சென்றுவிட்டதால் ஆர்யா இதழின் முழு பொறுப்பும் என்னிடம் வந்தது" என எழுதினார்.

'ஆர்யா' இதழ் பாண்டிசேரியில் 'மாடர்ன் பிரஸ்’இல் அச்சிடப்பட்டு ஸ்ரீ அன்னை வசித்த தெருவிலிருந்து வெளியிடப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

அரவிந்தர் ஸ்டாம்ப்.jpg

அரவிந்தர் ஆங்கிலம் பயிலும் சூழலில் இளம் வயது முதலே வளர்ந்ததால் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ், பைபிள், கீதை, உபநிஷதம், வேதம் என இலக்கியம் மற்றும் தத்துவ தளங்களில் தன் வாசிப்பை விரித்துக் கொண்டார். கேம்பிரிட்ஜில் படிக்கும் போது செய்யுள் வடிவில் அரவிந்தர் எழுதிய கிரேக்க கவிதைகள் Fox's weekly பத்திரிகையில் வெளிவந்தன.ப ரோடாவில் வேலையில் இருந்த போது தொடர்ந்து இலக்கியம் வாசிப்பதிலும் கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். 1895-ல் அரவிந்தர் எழுதிய பாடல் தொகுப்பு 'Songs to Mrytilla’ வெளிவந்தது. காளிதாசனுடைய நாடகத்தை 'ஊர்வசி (Urvasi)’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1894-ம் ஆண்டு அரவிந்தருக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தை 1939-ல் 'Godhead’ என்ற கவிதையாக எழுதினார். பரோடாவில் விடுப்பு எடுத்துக் கொண்டு காஷ்மீர் சென்ற போது ஏற்பட்ட மூன்றாவது ஆன்மீக அனுபவத்தை 'Adwaita’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதினார்.

இந்தியா திரும்பி கொல்கத்தாவில் வாழ்ந்த போது தாகூரின் நெருங்கிய நண்பராக இருந்தார். பாண்டிசேரியில் பாரதியாருடன் தினமும் உரையாடும் நட்பில் இருந்தார்.

அரவிந்தர் இலக்கியமென்பது ஆன்மீகத்தை அல்லது ஆன்மாவை நோக்கிய பயணமாக இருக்கவேண்டுமென விரும்பினார். கவிதைகள் மீது அவர் எழுதிய விமர்சனங்களும் அதையே முன்வைத்தன. இக்கோட்பாட்டின் இலக்கிய வடிவமாக "Savitri - A Legend and a Symbol" என்னும் நீள் கவிதை நூலை எழுதினார். அந்நூல் காவியத்தின் வசன கவிதையாக அமைந்தது. மகாபாரதத்தில் உள்ள சாவித்திரி கதாப்பாத்திரத்தை மனித ஆன்மாவின் குறியீடாக ஏற்றி எழுதப்பட்ட கவிதைகள் அவை. இக்கவிதை நூலை இருபது ஆண்டுகளுக்கு மேல் எழுதி தன் வாழ்வின் இறுதி நாட்களில் முடித்தார்.

அரவிந்தர் இதை தவிர கவிதை விமர்சன நூல்களும், யோகம் சார்ந்த நூல்களும், தத்துவ விளக்க நூல்களும் எழுதியுள்ளார்.

அரவிந்த ஆசிரமம்

அரவிந்த ஆசிரமம் நுழைவுவாயில்

அரவிந்தர் அன்னை இருவரையும் மையமாகக் கொண்டு உருவாகியது அரவிந்த ஆசிரமம். அன்னை என்றழைக்கப்படும் மிரா அல்பாசா ஏப்ரல் 24, 1920 அன்று பரான்ஸிலிருந்து பாண்டிசேரி வந்த பின் அரவிந்தரின் சீடர்களின் எண்ணிக்கை பெருகியது. இதனை ஒழுங்கான அமைப்பாக மாற்றும் பொறுப்பு அல்பாசாவிடம் சென்றது. எனவே பாண்டிசேரியில் தேவைக்கு ஏற்ப வீடுகளை வாங்கி ஆசிரமம் அமைக்கும் பணியில் அல்பாசா ஈடுபட்டார். 1926-ம் ஆண்டு அரவிந்தர் குறுக்கீடுகளின்றி தமது சாதனையைத் தொடர்வதற்காக தன் அறைக்குள் தன்னை ஒதுக்கிக் கொண்டார்.

அரவிந்த ஆசிரமம் பாண்டிசேரியில் உள்ள மரைன் வீதியில் தற்போது உள்ளது. இங்குள்ள அரவிந்தர் தங்கியிருந்த மைய வீட்டில் அரவிந்தரின் சமாதி உள்ளது.

அரவிந்தர் பல்நாட்டுக் கல்வி மையம்

அரவிந்தர் கல்வி மையம்

1934-ம் ஆண்டு அரவிந்தரின் ஆலோசனைப் படி ஆசிரமப் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னாளில் அரவிந்தர் பல்நாட்டு கல்வி மையமாக மாறியது. இங்கு கல்வித்துறையில் புதிய பரிசோதனைகளும் ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. இக்கல்வி நிலையத்தில் பட்டமோ, டிப்ளமோவோ வழங்கப்படுவதில்லை. ஏனெனில், "கல்வியின் நோக்கம் அறிவை அறிவுக்காகவும், நற்குணங்களை வளர்ப்பதற்காகவும் தேடச் செய்யும் சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்னும் அரவிந்தரின் நோக்கத்திற்கு ஏற்ப இப்பள்ளி நடைபெற்று வருகிறது.

ஆரோவில்

அரோவில் தொடக்கம்.jpg

"சமயங்கள், அரசியல் முறைகள், தேசிய இனங்கள் இவைகளையெல்லாம் கடந்துசென்று உலகிலுள்ள அனைத்து நாடுகளிலுமுள்ள ஆண்களும், பெண்களும் அமைதியிலும், வளர்ந்துவரும் இசைபாட்டிலும், வாழக் கூடிய சர்வதேச நகரமாக அரோவில் விளங்க வேண்டும்" என்பது அரோவில்லின் கொள்கையாக அரவிந்தரின் நினைவாக பிப்ரவரி 28, 1968 அன்று பாண்டிசேரி அருகிலுள்ள பகுதியில் தொடங்கப்பட்டது. மனித இனத்தின் ஒற்றுமையைக் குறிக்கும் சின்னமாக சலவைக்கல்லால் தாமரை மொட்டு போல் அமைந்த தாழியுள் உலகின் எல்லா நாடுகளின் மண்ணையும் இட்டு ஆரோவில் நகருக்கு அடிக்கல் நாட்டினர். இந்நிலம் பாண்டிசேரியை அடுத்துள்ள 11,000 ஏக்கர் நிலப்பரப்பில் 50000 பேர் வசிக்கக்கூடிய இடமாக அமைக்கப்பட்டது.

மறைவு

Aravindar-death.jpg

டிசம்பர் 5, 1950 அன்று அரவிந்தர் தன் ஆசிரமத்திலேயே இயற்கை எய்தினார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • Savitri - A Legend and a Symbol
  • Collected Poems (அரவிந்தர் 1883 முதல் 1940 எழுதிய கவிதைகளின் தொகுப்பு)
கவிதை விமர்சன நூல்கள்
  • The Future Poetry with On Quantitative Metre
  • Letters on Poetry and Art
சுயசரிதை
  • Autobiographical Notes and Other Writings of Historical Interest
கடிதத் தொகுப்பு
  • Letters on Himself and the Ashram
  • The Mother with Letters on the Mother
உரைநடை நூல்கள் தொகுப்பு
  • Early Cultural Writings
  • Collected Plays and Stories — Volume 1: The Viziers of Bassora, Rodogune, and Perseus the Deliverer.
  • Collected Plays and Stories — Volume II: Eric and Vasavadutta (seven incomplete or fragmentary plays; and six stories, two of them complete)
யோக நூல்கள் தொகுப்பு
  • Letters on Yoga — I
  • Letters on Yoga — II
  • Letters on Yoga — III
  • Letters on Yoga — IV
  • The Record of Yoga — I–II (Sri Aurobindo's diary of his yogic practice between 1909 and 1927)
  • The Synthesis of Yoga — I–II
மொழிபெயர்ப்பு
  • Translations (அரவிந்தர் சமஸ்கிருதம், வங்காளம், தமிழ், கிரேக்கம், லத்தீன் மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களின் தொகுப்பு)
  • Writings in Bengali and Sanskrit
அரசியல் எழுத்துகள்
  • Bande Mataram — I–II (1890 - 1908 கிடைத்த அனைத்து அரசியல் உரைகள் மற்றும் எழுத்துகள்)
  • Karmayogin - (1909 - 1910 கிடைத்த அனைத்து அரசியல் உரைகள் மற்றும் எழுத்துகள்)
ஆன்மீக நூல்கள்
  • Essays Divine and Human (1910 - 1950 எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு)
  • Essays in Philosophy and Yoga (1910 - 1950 எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு)
  • The Life Divine — I–II
தத்துவ நூல்கள்
  • Vedic and Philological Studies
  • The Secret of the Veda
  • Hymns to the Mystic Fire
  • Upanishads-I : Isha Upanishad
  • Upanishads-II : Kena and Other Upanishads
  • Essays on the Gita
பண்பாட்டு நூல்கள்
  • The Renaissance in India with A Defence of Indian Culture
  • The Human Cycle — The Ideal of Human Unity — War and Self-Determination (மூன்று மனித இனம் மற்றும் அரசியல் தத்துவம் சார்ந்த நூல்களின் தொகுப்பு)

உசாத்துணை

  • ஸ்ரீ அரவிந்தர், ச. மகாலிங்கம், ஸ்ரீ அரவிந்த ஆசிரம டிரஸ்ட், பாண்டிசேரி (1988, 2019).
  • ஸ்ரீ அரவிந்தரும் அவரது ஆசிரமமும், ஸ்ரீ அரவிந்த ஆசிரம டிரஸ்ட், பாண்டிசேரி (தமிழ் மொழிபெயர்ப்பு: ச. மகாலிங்கம், 1979, 2013)

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2022, 09:24:10 IST