under review

சிற்பி

From Tamil Wiki
சிற்பி
சிற்பி, மனைவி

சிற்பி (ஜூலை 29, 1936) சிற்பி பாலசுப்ரமணியம். தமிழ் புதுக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வித்துறையாளர். வானம்பாடி இதழை நடத்தியவர். வானம்பாடி கவிதை இயக்கம் என்னும் மரபின் முன்னோடிகளில் ஒருவர். 2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் ஜூலை 29, 1936-ல் பொன்னுச்சாமி- கண்டியம்மாள் இணையருக்குப் பிறந்தார். பொ.பாலசுப்பிரமணியன் என்பது இயற்பெயர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953-ம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்றார். மலையாள மகாகவி வள்ளத்தோளுடன் தமிழ் மகாகவி பாரதியை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சிற்பி 1960-ல் ரங்கநாயகியை மணம்செய்துகொண்டார். செந்தில்வேல், சக்திவேல் என இரண்டு மகன்கள். சிற்பி 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

சிற்பி

சிற்பியின் முதல் படைப்பு அவர் அண்ணாமலை பல்கலையில் பிஏ ஆனர்ஸ் படிக்கும்போது எழுதிய 'ஆழ்கடலே கேள்’ என்னும் முதல் கவிதை. கண்ணதாசன் நடத்திய வெண்பாப் போட்டிகளில் கலந்துகொண்டபோது சிற்பி என பெயர் சூட்டிக்கொண்டார். 1963-ல் வெளிவந்த நிலவுப்பூ முதல் கவிதைத்தொகுப்பு. 1970-ல் வானம்பாடி இயக்கம் தொடங்கியபோது சிற்பி அதில் தீவிரமாக ஈடுபட்டார். 1981-ல் வானம்பாடி இதழை மீண்டும் கொண்டுவந்தார். வெவ்வேறு இலக்கிய அமைப்புகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அமைப்புப்பணிகள்

சிற்பி பேராசிரியராக

சாகித்ய அகாதமி பொதுக்குழுவிலும் தமிழ் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக 1993 முதல் 1998 வரை பங்கேற்றார். சிற்பி சாகித்ய அகாதெமி செயற்குழு உறுப்பினராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ் ஆலோசனைக் குழுவில் 2008-ல் பங்கேற்றார். சிற்பி 1996-ல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழ் கவிஞர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள், பரிசுகள் அளித்து வருகிறது.

கல்விப்பணி

சிற்பி தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு முன்னாள் உறுப்பினர். பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசு பண்பாட்டுத்துறை, மத்திய அலுவலர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு செயலர் தேர்வாணையத் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர். சிற்பியின் கீழ் 15 முனைவர் பட்ட ஆய்வுகளும் 6 எம்ஃபில் ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதழாளர்

சிற்பி வானம்பாடி கவிதை இதழுடன் தொடர்பு கொண்டிருந்தார். வானம்பாடி இதழின் இரண்டாம் காலகட்டம் அவருடைய பொறுப்பில் வெளிவந்தது. அன்னம் விடு தூது ,வள்ளுவம்,கவிக்கோ,கணையாழி இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியிருக்கிறார். ஞானி , புவியரசு, தமிழ்நாடன், ஈரோடு தமிழன்பன், மீரா போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். வானம்பாடி கவிதை இயக்கம் கொண்ட முதன்மை முகமாகத் திகழ்ந்தார்.

இலக்கிய இடம்

சிற்பி முதன்மையாக இலக்கியச் செயல்பாட்டாளர் கல்வியாளர் என்னும் வகையில் தமிழிலக்கியச் சூழலில் பங்களிப்பாற்றியவர். வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். கல்வியாளராக நவீனத் தமிழிலக்கிய ஆய்வுகளைச் செய்தவர், ஆய்வாளர்களை உருவாக்கியவர். பல்கலை மானியக்குழு, சாகித்ய அகாதெமி உள்ளிட்ட கல்வி- இலக்கிய அமைப்புகளில் ஆலோசகர் பொறுப்புகளில் பங்களிப்பாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்பாளராக நவீன மலையாள இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகம் செய்வதில் முக்கியமான இடம் வகித்தார். சிற்பியின் கவிதைகள் நேரடியானவை, மரபார்ந்த அறம்சார்ந்த பார்வையையும் கற்பனாவாத மனநிலையையும் யாப்பின்றி பதிவு செய்பவை. தொகுப்பாசிரியராக பெரியசாமித் தூரன் எழுதிய கைப்பிரதிகளை மீட்டு பதிப்பித்தது சிற்பியின் சாதனைகளில் ஒன்று.

சிற்பி கொள்ளுபேரனுடன்

விருதுகள்

 • மௌன மயக்கங்கள் - கவிதை நூல் - தமிழக அரசு விருது (1982)
 • பாவேந்தர் விருது - தமிழக அரசு (1991)
 • உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு - தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
 • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு - (1997)
 • கம்பன் கலைமணி விருது - கம்பன் அறநிலை, கோவை (1998)
 • மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது (1998)
 • பாரதி இலக்கிய மாமணி விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை (1998)
 • 'பூஜ்யங்களின் சங்கிலி’ - தமிழ்நாடு அரசு பரிசு (1998)
 • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
 • சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது - 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு - 2001)
 • சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 - (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு - (2003)
 • மகாகவி உள்ளூர் விருது - திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
 • பாரதி பாவாணர் விருது - மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004))
 • ராஜா சர் முத்தையா விருது (2009)
 • கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
 • 'நல்லி’ திசை எட்டும் மொழியாக்க விருது (2010)
 • கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மாயில் விருது (2010)
 • பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)
 • பத்மஸ்ரீ விருது (2022)
சிற்பி நூல்

சிற்பி பற்றிய படைப்புகள்

 • சிற்பியின் படைப்புக்கலை - முனைவர் தே.ஞானசேகரன் (ப.ஆ.) (1993)
 • கோபுரத்தில் ஒரு குயில் - சி.ஆர்.ரவீந்திரன் (1996)
 • சிற்பி - மரபும் புதுமையும் - முனைவர் தே.ஞானசேகரன்(ப.ஆ.) (1996)
 • கவிஞர் சிற்பி -கருத்தியல்வளம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)
 • கவிஞர் சிற்பி - கவிதைவளம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)
 • கவிஞர் சிற்பி - கவிதைக்குள் ஒரு பிரபஞ்சம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (2004)
 • சிற்பியின் படைப்புலகம் - பேராசிரியர்கள் மா.நடராசன், மதியழகன் (ப.ஆ.) (2004)
 • சிற்பியின் கவிதையில் சிறைப்பட்ட சீர்திருத்தக் கவிஞர் - அ.சங்கரவள்ளி நாயகம் (2006)
 • சிற்பி துளிகளில் ஒளிரும் வெளிகள் - சொ.சேதுபதி (2011)
 • சிற்பி - மௌனம் உடையும் ஒரு மகாகவிதை - நவபாரதி (2011)
 • ஆழிக்கவிதைகளும், ஆழியாற்றுக்கவிதைகளும் - உ.அலிபாவா (ப.ஆ) (2012)
 • Sirpi Poet as Sculptor - P.Marudanayagam (2006)
 • A noon in Summer (1996)
 • Sirpi Poems - A Journey (2009)

நூல்கள்

சிற்பியின் படைப்புலகம்
கவிதை
 • நிலவுப் பூ (1963) - கோலம் வெளியீடு, பொள்ளாச்சி முதற்பதிப்பு-1963
 • சிரித்த முத்துக்கள் (1968) - மணிவாசகா் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு-1968
 • ஒளிப்பறவை (1971) - அன்னம் வெளியீடு, சிவகங்கை, முதற்பதிப்பு-1971
 • சர்ப்ப யாகம் (1976) - கோலம் வெளியீடு, பொள்ளாச்சி, முதற்பதிப்பு-1976
 • புன்னகை பூக்கும் பூனைகள் (1982) - அன்னம் வெளியீடு, சிவகங்கை, முதற்பதிப்பு-1982
 • மௌன மயக்கங்கள் (1982) (தமிழக அரசு பரிசு பெற்றது)
 • சூரிய நிழல் (1990) - கோலம் வெளியீடு, பொள்ளாச்சி, முதற்பதிப்பு-1990, இரண்டாம் பதிப்பு-1995
 • இறகு (1996) - கோலம் வெளியீடு, பொள்ளாச்சி
 • சிற்பியின் கவிதை வானம் (1996) - (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1996
 • ஒரு கிராமத்து நதி (1998) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
 • பூஜ்யங்களின் சங்கிலி (1999) (தமிழக அரசு பரிசு பெற்றது) - கோலம் வெளியீடு, பொள்ளாச்சி
 • பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு (2001)
 • பாரதி - கைதி எண்: 253 (2002)
 • மூடுபனி (2003)
 • சிற்பி: கவிதைப் பயணங்கள் (2005)
 • தேவயானி (2006)
 • மகாத்மா (2006)
 • சிற்பி கவிதைகள் தொகுதி-2 (2011)
 • நீலக்குருவி (2012)
 • கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)
கவிதை நாடகம்
 • ஆதிரை (1992)
சிறுவர் நூல்கள்
 • சிற்பி தரும் ஆத்திசூடி (1993)
 • வண்ணப்பூக்கள் (1994)
கட்டுரைகள்
 • இலக்கியச் சிந்தனைகள் (1989)
 • மலையாளக் கவிதை (1990)
 • இல்லறமே நல்லறம் (1992)
 • அலையும் சுவடும் (1994)
 • மின்னல் கீற்று (1996)
 • சிற்பியின் கட்டுரைகள் (1996)
 • படைப்பும் பார்வையும் (2001)
 • கவிதை நேரங்கள் (2003)
 • மகாகவி (2003)
 • நேற்றுப் பெய்த மழை (2003)
 • காற்று வரைந்த ஓவியம் (2005)
 • புதிர் எதிர் காலம் (2011)
 • மனம் புகும் சொற்கள் (2011)
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
 • இராமானுஜர் வரலாறு (1999)
 • ம.ப.பெரியசாமித் தூரன் (1999)
 • பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் (1999)
 • ஆர்.சண்முகசுந்தரம் (2000)
 • சே.ப. நரசிம்மலு நாயுடு (2003)
 • மகாகவி பாரதியார் (2008)
 • நம்மாழ்வார் (2008)
 • தொண்டில் கனிந்த தூரன் (2008)
கட்டுரைகள்
 • தேனீக்களும் மக்களும் (1982)
 • சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான் (கிரண்பேடி) (2006)
 • வெள்ளிப்பனி மலையின்மீது (எம்.பி.வீரேந்திரகுமார்) (2009)
இலக்கிய வரலாறு
 • தமிழ் இலக்கிய வரலாறு (2010)
மொழிபெயர்ப்பு நூல்கள்

கவிதைகள்

 • சச்சிதானந்தன் கவிதைகள் (1998)
 • உஜ்ஜயினி (ஓ.என்.வி.குரூப்) (2001)
 • கவிதை மீண்டும் வரும் (சச்சிதானந்தன்) (2001)
 • காலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி) (2010)
 • கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012)

நாவல்கள்

 • அக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (1996) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
 • ஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்) (1999)
 • வாராணசி (எம்.டி.வாசுதேவன் நாயர்) (2005)
ஆங்கில நூல்
 • A Comparative Study of Bharati and Vallathol (1991)
அறக்கட்டளை சொற்பொழிவு நூல்கள்
 • கம்பனில் மானுடம் (2002)
 • இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை (2006)
 • பாரதிதாசனுக்குள் பாரதி (2011)
உரை நூல்கள்
 • திருப்பாவை: உரை (1999)
 • திருக்குறள்: சிற்பி உரை (2001)
 • மார்கழிப்பாவை (2009) (திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி உரை)
தொகுப்பு நூல்கள்
 • நதிக்கரைச் சிற்பங்கள் (2012)
பதிப்பித்த நூல்கள்
 • மகாகவி பாரதி சில மதிப்பீடுகள் (1982)
 • பாரதி - பாரதிதாசன் படைப்புக்கலை (1992)
 • தமிழ் உலா I & II (1993)
 • பாரதி என்றொரு மானுடன் (1997)
 • மருதவரை உலா (1998)
 • நாவரசு (1998)
 • அருட்பா அமுதம் (2001)
 • பாரதியார் கட்டுரைகள் (2002)
 • மண்ணில் தெரியுது வானம் (2006)
 • கொங்கு களஞ்சியம் (2006)
 • வளமார் கொங்கு (2010)
ஆய்வுகள்
 • தமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம் (1989 - 1991)
 • இடைக்காலக் கொங்கு நாட்டின் சமூக - பொருளாதார அமைப்புகள் (1993 - 1997)
 • கொங்கு களஞ்சியம் - இரு தொகுதிகளின் பதிப்பாசிரியர்

மதிப்புறு பொறுப்புகள்

 • காந்திகிராம் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்.
 • சாகித்ய அகாதமி செயற்குழு உறுப்பினர் / ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆலோசனைக் குழு (2008)
 • சாகித்ய அகாதமி பொதுக்குழு / தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் (1993 - 1998)
 • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் செயற்குழு, விருதுக்குழு உறுப்பினர்.
 • தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் (2000 - 2005)
 • தலைவர், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் (2009)
 • தலைவர், பி.எம்.எஸ்., அறக்கட்டளை
 • செயலர், பொள்ளாச்சி இலக்கியக் கழகம்
 • உறுப்பினர், பாரதிய வித்யா பவன் நிர்வாகக் குழு, கோவை
 • உறுப்பினர், டாக்டர் NGP கல்லூரிக் குழு, கோவை
 • முன்னாள் உறுப்பினர், Afirm cancan either eitherraiseraise Money Moneyusing Equity,Equity, Equity,or using Debt DebtRKR கல்வியியல் கல்லூரிக் குழு, உடுமலைப் பேட்டை
 • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு முன்னாள் உறுப்பினர்
 • பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசு பண்பாட்டுத்துறை, மத்திய அலுவலர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு செயலர் தேர்வாணையத் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர்
 • உறுப்பினர், நிர்வாகக்குழு, பாரதியவித்யா பவன், கோவை
 • பப்பாசி, புதியதலைமுறை, இளையராஜா அமைத்த பாவலர் வரதராஜன் நினைவு விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்

மேற்கோள்கள்


✅Finalised Page