under review

லலிதாம்பிகா அந்தர்ஜனம்

From Tamil Wiki
veethi.com

லலிதாம்பிகா அந்தர்ஜனம் (மார்ச் 30, 1909 – பிப்ரவரி 6, 1987) மலையாளக் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர்,சமூக சீர்திருத்தவாதி. நவீன மலையாள இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர்களுள் ஒருவர். சமூக சீர்திருத்தப் பார்வையோடு பெண்ணடிமை, தீண்டாமை, அவற்றிற்கெதிரான சமூக விழிப்புணர்வு இவற்றை தேசிய எழுச்சியின் பின்புலத்தில் முன்னிறுத்தி ஓர் அரை நூற்றாண்டின் போக்குகளைத் தன் எழுத்துகளில் துணிவாக வெளிப்படுத்தியவர். ‘ அக்னிசாட்சி ’ நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். நம்பூதிரி சமூகத்தில் பெண்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளைத் துணிவுடன் வெளிப்படுத்தி அச்சமூகப் பெண்களின் முதற்குரலாக ஒலித்தவர்.

பிறப்பு,கல்வி

லலிதாம்பிகா இளமையில் நன்றி: மனோரமா இதழ்

லலிதாம்பிகா மார்ச் 30, 1909 அன்று கொல்லம் மாவட்டம் புனலூருக்கருகில் கோட்டவட்டம் என்ற கிராமத்தில் கோட்டவட்டத்து இல்லத்து தாமோதரன் நம்பூதிரி, ஆர்யாதேவி அந்தர்ஜனம் இணையருக்கு மகளாகப் பிறந்தார். நம்பூதிரி வகுப்பில் பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் வழக்கம் இருக்கவில்லை. எனினும் தாமோதரன் நம்பூதிரி வீட்டில் ஆசிரியையை அமர்த்தி லலிதாம்பிகைக்கு கல்வி கற்பித்தார். புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். இதனால் நம்பூதிரி சமூகத்திடமிருந்து எதிர்ப்புகளையும், அவதூறையும் சந்திக்க நேர்ந்தது. வீட்டிலுள்ள புத்தகங்களை வாசித்தும், தந்தையைக் காண வரும் அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் வீட்டு ஆண்களின் உரையாடல்களிலிருந்தும் லலிதாம்பிகை கலை, இலக்கியம், அரசியல், நாட்டு விடுதலைப் போராட்டம் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். விவேகானந்தர், தாகூர், காந்தி மூவரும் அவரது ஆதர்சங்களாக இருந்தனர். 'ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே தெய்வம்' என்ற நாராயண குருவின் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டார்.

லலிதாம்பிகா தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் எழுதிய காந்தியைப் பற்றிய 'இந்நாள் பார்த்தசாரதி' என்ற கட்டுரை 'சாரதா' என்ற பத்திரிகையில் வெளியாகியது.

தனி வாழ்க்கை

லலிதாம்பிகா கணவருடன் நன்றி :மனோரமா இதழ்

லலிதாம்பிகை தனது 17-ம் வயதில் இராமாபுரம் அமணக்கார இல்லத்தைச் சேர்ந்த நாராயணன் நம்பூதிரியை மணந்தார். நாராயணன் நம்பூதிரி லலிதாம்பிகையின் வாசிப்பிற்கும், எழுத்திற்கும் ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தினார். மகன்கள் பாஸ்கர குமார், மோகனன், ராஜேந்திரன். மகள்கள் லீலா, ஷாந்தா, ராஜம், மணி.

லலிதாம்பிகா கடுமையான இல்லப் பணிகளுக்கு நடுவே தனக்குக் கிடைத்த புத்தகங்களை வாசித்து வந்தார். 1932-ல் மன்னத்து பத்மநாபன் தலைமையில் நென்மினி மங்கலம், பார்வதி என்ற இரு நம்பூதிரி பெண்களும் முகத்திரை, மூடுதுணி, குடை மூன்றையும் தூக்கி எறிந்ததைப் பாராட்டும் முகமாக நடந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதற்காக குடும்பத்தின் எதிர்ப்பை சந்தித்தார். இந்நிகழ்வை 'மறக்குட நீங்குன்னு' என்ற சிறுகதையாக எழுதினார்.

நம்பூதிரி சமூகத்துப் பெண்களின் அன்றைய நிலை

நம்பூதிரி சமூகத்தில் பெண்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்தன. அந்தர்ஜனம் (உள்ளே இருப்பவர்கள்) என்று அழைக்கப்பட்ட அவர்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. வெள்ளை ஆடை மட்டுமே அணிந்து, வெளியில் செல்ல நேர்ந்தால் உடலையும் முகத்தையும் முழுமையாக மறைத்துக்கொண்டு மறைக்குடை என்னும் ஓலைக்குடையை வைத்திருக்க வேண்டும். கல்வியோ, வெளி உலகத் தொடர்போ அனுமதிக்கப்படவில்லை.

அக்காலத்தில் நம்பூதிரி சமூகத்தில் குடும்பத்தில் மூத்த ஆண்மகன் (அச்சன் நம்பூதிரி) மட்டுமே நம்பூதிரிப்பெண்ணை மணம் புரிந்துகொள்ள விதி இருந்தது. பிற மகன்கள் (அப்பன் நம்பூதிரி) மன்னர் குடும்பங்களிலோ, நாயர் சாதியிலோ மட்டுமே மணம்புரிந்துகொள்ள வேண்டும். நம்பூதிரிகள் ஆண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நாயர்கள் பெண்வழிச்சொத்துரிமை கொண்டவர்கள். ஆனால் நம்பூதிரிச்சொத்துக்களுக்கு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே வாரிசு. பிறருக்கு எந்த உரிமையும் இல்லை. இதனால் அச்சமூகத்தில் பல பெண்கள் திருமணமாகாமலோ, அல்லது முதிய நம்பூதிரிகளுக்கு பல மனைவிகளில் ஒருவராகவோ, இளம் விதவைகளாகவோ வீட்டிற்குள்ளேயே துன்பப்பட்டு இருளில் வாழ்ந்து மறைந்தனர்.

நம்பூதிரிப் பெண்கள் ஒழுக்கம் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டால் 'ஸ்மார்த்தவிசாரம்' என்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தனியறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகுட்படுத்தப்பட்டார்கள். தன் குற்றமின்மையை நிரூபிக்கத் தவறினால் இறந்ததாகக் கருதி, விலக்கி வைக்கப்பட்டு, விற்கப்பட்டனர்.

பார்க்க: விலக்கப்பட்டவர்கள்-ஜெயமோகன்[1]

ஜாதிக் கொடுமைகளும், தீண்டாமையும் நிறைந்திருந்த சமூகத்தில் 1930-களின் ஆரம்பத்தில் சில விழிப்புணர்வுப் போராட்டங்கள் எழுந்தன. நாட்டின் விடுதலை போராட்டத்துடன் மாப்ளா போராட்டம்(1921), வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம் (1924), குருவாயூர் சத்தியாகிரகம் (1931) என தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களும், நம்பூதிரி சமூகத்திற்குள்ளிருந்தே பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிரான குரல்களும் எழுந்தன. 'அடுக்களையிலிருந்து அரங்கத்தேய்க்கு' (வி.டி. பட்டத்ரிப்பாடு), 'மறக்குடையிலே மகாநரகம்'(எம்.ஆர். பட்டத்திரிப்பாடு) என்ற இரண்டு நூல்களும் நம்பூதிரிப் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளைப் பேசின.

கேரள சாகித்ய அகாதெமி விருது commonfolks.in

இலக்கிய வாழ்க்கை

வயலார் விருது

விடுதலை, சமூகப் போராட்டங்கள் லலிதாம்பிகாவுக்கு பெண்களின் நிலையைப் பற்றி எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. தன் அனுபவங்களையும், உணர்வுகளையும் கவிதைகளாக எழுதினார். இலக்கியத்தின் மூலம் தன் குறிக்கோளை அடைய, மக்களிடம் தன் கருத்துகள் சென்று சேர சிறுகதை வடிவத்தை தேந்தெடுத்தார். அவரது முதல் சிறுகதை 'யாத்திரா அவதானம்' . பெண்களுக்கும் எளியவர்களுக்கும் எதிரான அடக்குமுறைகள் அவரது கதைகளின் கருவாக அமைந்தன. தன் வீட்டில் வசித்த கைம்பெண்களின், தான் கண்ட, கேட்ட பெண்களின் துன்பங்களை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை நடப்பியல் முறையில் சிறுகதைகளாக எழுதினார். 1930 முதல் 1970 வரை நாற்பது ஆண்டுகள் கடுமையான இல்லப்பணிகளுக்கு இடையே தொடர்ந்து எழுதினார். இரவுகளில், விளக்கொளியில் எழுதியதால் கண்பார்வை பாதிக்கப்பட்டது. முதுமையில் கண்களை மூடிக்கொண்டே எழுதினார்.

'குற்றசம்மதம்'(1940)[2] , 'ப்ரதிகாரதேவத'(பழிவாங்கும் தெய்வம்,1938) குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் கதைகள். 'ப்ரதிகாரதேவத' தாத்ரி என்ற பெயரை உச்சரிக்கவே தடை இருந்த அக்காலத்தில் லலிதாம்பிகாவின் காதுகளில் ஓர் முதியபெண் ரகசியமாகச் சொல்லிய, கேரளத்தின் கடைசி ஸ்மார்த்தவிசாரத்திற்கு உட்பட்ட குறியேடத்து தாத்ரிக்குட்டியின் கதையின் அடிப்படையில் அமைந்தது. தாத்ரி தன் நிலைக்குக் காரணமானவர்களாக 64 ஆண்களின் பெயர்களை ஸ்மார்த்தவிசாரத்தில் குறிப்பிட்டார். இந்த இரு கதைகளுக்காக லலிதாம்பிகா மிகுந்த அவதூறுகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

'கொடும்காட்டில்பெட்ட ஓரில', 'தீரேந்திர மஜும்தாரிட அம்ம' நாட்டின் பிரிவினையின்போது பஞ்சாப், வங்காள மாநிலங்களில் பெண்கள் பட்ட இன்னல்களைப் பேசுபொருளாகக் கொண்டவை.

கட்டுரைகள்

'சீத முதல் சத்யவதி வரெ' திருவனந்தபுரம் வானொலியின் பெண்கள் நிகழ்ச்சிக்காக ராமாயண, மகாபாரத மகளிரின் பாத்திரங்களை மறு ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

கவிதை

லலிதாம்பிகாவின் கவிதைகள் பெண் விடுதலை, சமூக நீதி, நாடு தழுவிய சிக்கல்கள் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டவை. ஏழு கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன.

நாடகங்கள்

லலிதாம்பிகா 1931-ல் எழுதிய புகழ்பெற்ற 'புனர் ஜென்மம்' நாடகம் விதவை மறுமணத்தைக் கருவாகக் கொண்டது. 'யோகக்ஷேம சபை' என்னும் சீர்திருத்த இயக்கத்தால் பலமுறை மேடையேற்றப்பட்டது. பழமைவாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் அங்கதத்துடன் சாடியது.

'அவல் பொதி' குசேலரின் கதையின் பின்னணியில் இராமபுரத்து வாரியர் என்ற புகழ்பெற்ற மலையாளக் கவிஞரின் வாழ்க்கையின் சித்திரம்.

அக்னி சாட்சி(1972)

அடக்குமுறைகள் பிடிக்காமல், வீட்டைவிட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பெண்களின் உரிமைகளுக்காக, சாதி வேற்றுமைக்கு எதிராகக் குரல் கொடுத்து, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, சுதந்திரத்திற்குப்பின் துறவறம் ஏற்கும் தேதிக்குட்டி என்னும் நம்பூதிரி சமூகப் பெண்ணின் கதை. நம்பூதிரிப்பெண்களின் துயரத்தோடு அப்பன் நம்பூதிரிகளால் பாதிக்கப்பட்ட நாயர் குலப் பெண்களின் குடும்பங்களின் சீரழிவும் பேசப்படுகிறது. சாகித்ய அகாதெமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றது. அக்னி சாட்சியின் தமிழ் மொழியாக்கத்திற்காக சிற்பி பாலசுப்ரமணியம் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். வசந்தி சங்கரநாராயணனால் 'Fire, My witness' என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

சிறார் இலக்கியம்

லலிதாம்பிகா சிறாருக்கான கதைகளும், நெடுங்கதைகளும் எழுதினார். 'கோசாயி பரஞ்ச கத' சிறார் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது.

லலிதாம்பிகா 1965-ல் 'சகுந்தலா' என்ற திரைப்படத்திற்கு உரையாடல் எழுதினார்.

விருதுகள், பரிசுகள்

  • 1977:கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது (அக்னிசாட்சி)
  • 1977: சாகித்ய அகாதெமி விருது(அக்னிசாட்சி)
  • 1977:வயலார் விருது (அக்னிசாட்சி)
  • 1965: குழந்தை இலக்கியத்துக்கான கேரள சாகித்ய அகாதெமி விருது (கோசாயி பரஞ்ஞ கத)
  • 1973 இலக்கியத் திறனாய்வுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருது (சீத முதல் சத்யவதி வரெ)
  • 1981: கேரள சாகித்ய அகாதெமி புத்தாய்வு நிதிநல்கை (fellowship)
  • கல்யாணி கிருஷ்ணமேனன் பரிசு (குஞ்ஞோமன)

இலக்கிய இடம்

Fire, my witness

லலிதாம்பிகா அந்தர்ஜனம் கேரளத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளராகக் கருதப்படுகிறார். சமூக விழிப்புணர்வைப் பேசிய அவரது படைப்புகள் நடப்பியல் உத்தியில் அமைந்து, அவர் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலித்தவை. அவர் பெண்ணுரிமை பற்றி எழுப்பிய கேள்விகள் எக்காலத்துக்கும் பொருந்துபவை. தன் காலத்தை மீறி, தான் சார்ந்த சமூகத்தின் சீர்கேடுகளை பொதுவெளியில் எதிர்த்து, கடுமையாக ஒடுக்கப்பட்ட பெண்களிலிருந்து எழுந்த குரல் என்பதால் மிக முக்கியமானவை. தேசிய, சமூக லட்சியவாதத்தின் பின்னணியில் சமூக வரலாற்றின் திருப்புமுனையைக் காட்சிப்படுத்தியவை. பல சீர்திருத்தக் கருத்துகளையும் முன்வைத்தவை.

அக்னி சாட்சி 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தின் நம்பூதிரிகளின் வாழ்க்கையை முறையைக் காட்சிப்படுத்தியது. விமர்சகர் எம்.என்.காரசேரி “குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஒடுக்கப்பட்டு வாழ்ந்த கேரளத்துப் பெண்கள் தங்களது உரிமைகளுக்காக உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த வரலாறுதான் ‘அக்னி சாட்சி’” எனக் குறிப்பிட்டார். லலிதாம்பிகாவின் 'அக்னி சாட்சி' வரலாற்றின் திருப்பு மையமாகவும், ஆவணமாகவும், அமைந்த லட்சியாவதப் படைப்பாக மதிப்பிடப்படுகிறது. மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படும்போது மாற்று வரலாற்றுச் சித்திரமாகவும் வாய்ப்புகள் உள்ளது.

மறைவு

லலிதாம்பிகா பிப்ரவரி 6, 1987 அன்று காலமானார்.

லலிதாம்பிகா அந்தர்ஜனம் நினைவு இலக்கிய விருதுகள் இரண்டு வாழ்நாள் பங்களிப்புக்கும், இளம் பெண் எழுத்தாளருக்கும் ஒவ்வொரு வருடமும் 1992 முதல் வழங்கப்படுகின்றன.

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்பு
  • மூடுபடத்தில் (1946)
  • காலத்தின்றெ ஏடுகள் (1949)
  • தகர்ந்ந தலமுற (1949)
  • கிளிவாதிலிலூடெ (1950)
  • கொடுங்காற்றில் நின்னு (1951)
  • கண்ணீரின்டெ புஞ்சிரி (1955)
  • அக்னிபுஷ்பங்ஙள் (1960)
  • திரஞ்ஞெடுத்த கதகள் (1966)
  • சத்யத்தின்றெ ஸ்வரம் (1968)
  • விஸ்வரூபம் (1971)
  • தீரேந்த்ர மஜும்தாரின்டெ அம்மா (1973)
  • பவித்ர மோதிரம் (1979)
நாவல்
  • அக்னிசாட்சி (1977)
கவிதைத் தொகுப்பு
  • லலிதாஞ்சலி
  • ஓணக்காழ்ச்ச
  • சரணமஞ்சரி
  • பாவதீப்தி
  • நிசப்தசங்கீதம்
  • ஒரு பொட்டிச்சிரி
  • ஆயிரத்திரி - 1969
சிறார் இலக்கியம்
  • கிராமபாலிக
  • குஞ்ஞோமன
  • கோசாயி பரஞ்ஞ கத
  • தேன்துளிகள்
  • குஞ்ஞோமனயும் மற்று பாலகதகளும்
கட்டுரைகள்
  • சீத முதல் சத்யவதி வரை
  • விரதாத்ரி
  • மாயாத மழவில்லு
  • சகுந்தல
தன்வரலாறு
  • ஆத்மகதய்க்கு ஒரு ஆமுகம்
மொழியாக்கங்கள்
  • Fire, My Witness (அக்னிசாட்சி) . Translated by Vasanthi Sankaranarayanan.
  • Cast Me Out If You Will: Stories and Memoir (சிறுகதைகளும் நினைவுக்குறிப்புகளும்) மொழியாக்கம் கீதா கிருஷ்ணன்குட்டி
  • On the Far Side of Memory(சிறுகதைகள்)-மொழியாக்கம் தேவகி
திரை வடிவம்

அக்னி சாட்சி அதே பெயரில் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் ஷோபனா, ரஜித் கபூர் நடிப்பில் திரைப்படமாகியது. 1999-ல் சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. கேரள மாநில விருதுகளில் 9 பிரிவுகளில் விருது பெற்ற ஒரே திரைப்படம்.

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page