under review

எஸ்.என். நாகராஜன்

From Tamil Wiki
எஸ். என். நாகராஜன்
எஸ். என். நாகராஜன்

எஸ்.என். நாகராஜன் (எஸ்.என்.என்) (சத்தியமங்கலம் நாகராஜன்) (டிசம்பர் 28, 1927 -மே 24, 2021) மார்க்ஸியச் சிந்தனையாளர், பொருளியல் ஆய்வாளர், களச்செயல்பாட்டாளர், வேளாண் அறிவியலாளர். மக்களுக்கான அறிவியலின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். ஆண்மையம் கொண்ட மேலைமார்க்ஸியத்திற்கு மாற்றாக கீழை மார்க்ஸியம் என்னும் சிந்தனை முறையை முன்வைத்தவர். 'அறிவுக்குப் பதிலாக அன்பை ஓர் அறிதல்முறையாகக் கொள்ளவேண்டும்' என்று சொன்னவர். கோவை ஞானி, இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வார் ஆகியோர் இவரின் மாணவர்களாகக் கருதப்பட்டவர்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ்.என். நாகராஜன் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் சத்தியமங்கலத்தில் டிசம்பர் 28, 1927-ல் பிறந்தார். வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார். கொல்கத்தாவில் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகத்தில் (ICAR) முதுநிலை அறிவியலாளராக பணியாற்றினார். மக்கள் விவசாயம் மீது நம்பிக்கை கொண்டிருந்ததால் பசுமைப் புரட்சியை எதிர்த்து ஆய்வகத்தில் இருந்து வெளியேறினார்.

இதழியல்

எஸ்.என்.நாகராஜன் 'புதிய தலைமுறை' எனும் சிற்றிதழை நடத்தினார்.

அரசியல் வாழ்க்கை

எஸ்.என்.நாகராஜன் ப.ஜீவானந்தத்தின் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அவருடனான சந்திப்பிற்குப்பின் முழு நேர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் ஆனார். மார்க்சிய களப்பணியாளராக செயல்பட்டார். தன் பிறந்த ஊரான சத்தியமங்கலத்தை தன் களப்பணிக்கான ஆய்வுக்களமாக ஆக்கிக் கொண்டார். CPI, CPI (மார்க்சிஸ்ட்), CPI (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் போக்குகளிலும் அங்கமாக இருந்தார்.

தத்துவம்

கீழை மார்க்சியம்

எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸியத்தின் செவ்வியல்வடிவத்தின் மேல் ஆழமான ஐயங்களையும் விமர்சனங்களையும் 1970-கள் முதல் முன்வைத்தார். மார்க்ஸியம் ஒரு மண்ணில் அங்கிருக்கும் மெய்ஞான மரபுகளின் நீட்சியாகவே உருவாகமுடியும். அவ்வண்ணம் 'மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்' உருவானால் மட்டுமே அந்தச் சமூகத்துடன் அது மெய்யான உரையாடலை நிகழ்த்தும். 'மார்க்சியத்தை மொழிபெயர்க்கக்கூடாது' என்பது எஸ்.என்.நாகராஜனின் தரப்பு.

மார்க்சியம் அடிப்படையில் ஒரு ஐரோப்பிய சிந்தனையாகவே புரிந்துகொள்ளப்பட்டிருந்த சூழலில், அதை ஓர் மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாக அணுகக்கூடாது என்றும் அதை மெய்யியல் நோக்கில் கீழைநாடுகளுக்குரிய ஒரு மார்க்சியமாக முன்னெடுக்க வேண்டும் என்று கருதினார்.

இந்தியாவின் மரபில் மார்க்ஸியத்திற்கான முன்தொடர்ச்சிகளை ஆராய்ந்து இந்தியாவின் நாத்திகமரபையும் இந்தியாவின் சேவை அல்லது பிரபத்தி சார்ந்த மரபையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இந்திய மார்க்சியர்களில் ஈ.வெ. ராமசாமி, ராமானுஜர், வள்ளலார் ஆகியோரை மார்க்ஸிய முன்னோடிகளாகக் கருதினார். மார்க்ஸையும் ஆழ்வார்களையும் பொருத்திப் பார்த்தார்.

எஸ்.என்.நாகராஜன் வைணவத்தின் 'பிரபத்தி' என்ற கருதுகோளின் முக்கியத்துவத்தை உணர்ந்து,மக்களை அவர்களுக்குச் செய்யும் சேவையினூடாக அறியும் வழியை முன்வைத்தார். மக்களிடமிருந்து விலகி நின்று அவர்களை ஆராய்ந்து அறியும் அறிஞர்களின் பார்வை ஆணவம் கொண்டது, அது பிழையாகவே ஆகும் என வாதிட்டார். 'அறிவுக்குப் பதிலாக அன்பை ஓர் அறிதல்முறையாகக் கொள்ளவேண்டும் என உறுதியாக நம்பினார்.

மக்கள்-விவசாயம்

மக்களிடமும் விவசாயிகளிடம் இருந்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துக்கொண்டே இருந்தார். பெரும்பாலும் அவர் விவசாயிகளின் நடுவிலேயே இருந்து, உரையாடிக் கொண்டிருந்தார். . வேளாண் அறிஞராக என்பதனால் விவசாயிகளுக்கு உதவியானவராகவும் அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்தார்.

சதுப்புவிவசாயப் பகுதியான தக்கலை குமாரகோயில் பகுதியில் விவசாயிகள் வயலில் எருவிட்டு அதை நொதிக்கவைத்து சிவப்பாக ஒரு நுண்பூஞ்சையப் படரச்செய்யும் வழக்கம் கொண்டிருந்தனர். வயல்பூப்பது என்று சொல்லப்படும் அந்தப்பாசியை ஒருவயலில் இருந்து இன்னொரு வயலுக்கு கொண்டுசென்று பரப்பினர். வயலை வளப்படுத்தும் அந்த நுண்பூஞ்சையை . எஸ்.என். நாகராஜன் வேளாண்விஞ்ஞானிகளிடையே கவனப்படுத்தினார். பின்னாளில் அஸோஸ்பைரில்லம்(Azospirillum போன்ற நுண்பூஞ்சை உரங்கள் சந்தைக்கு வந்தன. பேச்சிப்பாறை பகுதியில் ஆழ்களி(கடல் சூழ்ந்த) நிலத்தில் வேய்மூங்கிலை தறித்துப்போட்டு உள்ளே காற்றோட்டம் உருவாக்கி விவசாயம் செய்யும் வழிமுறையை அவதானித்து எழுதினார்.

மாணவர்கள்

மார்க்சிய ஆய்வில் ஒரு மாணவர் வரிசையை எஸ்.என்.நாகராஜன் உருவாக்கினார். ஞானி அவரது நண்பரும் மாணவருமாக இருந்தார். 'நிகழ்' போன்ற சிற்றிதழ்கள் வழியாக ஞானி அவரது சிந்தனைகளை முன்னெடுத்தார். இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வார் எஸ்.என். நாகராஜனை தன் வழிகாட்டியாக குறிப்பிட்டார்.

எழுத்து

எஸ்.என்.நாகராஜன் பெரும்பாலும் எழுதியதில்லை. உரையாடலே அவருடைய வழி. அவருடன் உரையாடியவர்கள் வழியாக அவர் தன் சிந்தனைகளை நிகழ்த்தினார். அவருடைய பிற்காலத்தைய பேட்டிகள் அவருடைய சிந்தனைகளை முன்வைப்பவை. கோவை ஞானியில் அவர் வெளிப்பட்டார். அவர் எழுதிய குறிப்புகள், கடிதங்களின் தொகுப்பாக ஞானி வெளியிட்ட 'கீழைமார்க்சியம்' என்னும் நூலே அவருடைய சிந்தனைகளின் ஒரே ஆவணமாக உள்ளது.

மறைவு

எஸ்.என்.நாகராஜன் மே 24, 2021-ல் காலமானார்.

மதிப்பீடு

எஸ்.என். நாகராஜன் இந்தியாவின் பத்து முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர் என்று 'தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' பத்திரிகையால் குறிப்பிடப்பட்டவர்.

"தமிழகத்தில் இருந்து மார்க்ஸிய சிந்தனைக்கு அசலான ஒரே கொடை என்பது எஸ்.என்.நாகராஜனின் கீழைமார்க்சியம் என்னும் கருத்தாக்கமே. ஆகவே அவரை இந்நூற்றாண்டின் தமிழகத்து முதற்சிந்தனையாளர்களில் ஒருவராக முன்வைப்பது என் வழக்கம். மேலைமார்க்ஸியம் 'ஆண்தன்மை' கொண்டது. ஆகவே தாக்கும்தன்மை, தன்முனைப்பு ஆகியவை கொண்டது. அவர் ஆண்தன்மையை ஓர் எதிர்மறைப் பண்பாகக் கண்டார். மேலைமார்க்ஸியம் இயற்கையின்மேல் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது, மையப்படுத்தும் தன்மை கொண்டது, அதிகாரத்தின் வழியாக மாற்றத்தைக் கொண்டுவரும் இயல்பு கொண்டது என்பது எஸ்.என்.நாகராஜனின் கருத்து. அதற்கு மாற்றாக எஸ்.என்.நாகராஜன் முன்வைத்தது கீழை மார்க்ஸியம். அது 'பெண்தன்மை'கொண்டது. ஆகவே படைப்புச்சக்தி கொண்டது. இயற்கையுடன் ஒத்திசைந்துசெல்லுதல், பரவலாக்கப்பட்ட பன்மையாக்கப்பட்ட மையமற்ற தன்மை, சேவையினூடாக சமூகமாற்றம் ஆகியவை அதன் இயல்புகள் என்றார்." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

நூல்கள்

தமிழில்
  • கீழை மார்க்சியம்
  • கம்யூனிசம் விடுதலையின் இலக்கணம்
  • தமிழகத்தில் வேளாண்மை
  • மார்க்சியம் கிழக்கும் - மேற்கும்
  • அழிவின் தத்துவம்
  • கிழக்கு வெல்லும்
  • வாழும் மார்க்சு
  • ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது
ஆங்கிலத்தில்
  • Eastern Marxism

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Feb-2026, 10:07:27 IST