under review

இராமலிங்க வள்ளலார்

From Tamil Wiki

To read the article in English: Ramalinga Vallalar. ‎

வள்ளலார்
வள்ளலார்

இராமலிங்க வள்ளலார் (இராமலிங்க அடிகள் / இராமலிங்க சுவாமிகள் / திருவருட்பிரகாச வள்ளலார்,வள்ளலார்) (அக்டோபர் 5, 1823 – ஜனவரி 30, 1874) தமிழக மெய்ஞானிகளில் ஒருவர். சைவ அறிஞராகவும் கவிஞராகவும் அறியப்பட்டார். பின்னர் சாதிமத வேறுபாடுகளை மறுத்து சமரச சன்மார்க்க நெறியை முன்வைத்தார். சடங்குகளை மறுத்து அருட்பெருஞ்சோதி வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர். வடலூரில் சத்தியஞான சபையையும் சத்திய தர்ம சாலையையும் நிறுவியவர். திருவருட் பிரகாச வள்ளலார் என்றும், வடலூர் வள்ளலார் என்றும் குறிப்பிடப்படுபவர். இவர் எழுதிய பாடல்களில் திருவருட்பா முதன்மையான பக்தி நூல்.

பிறப்பு, கல்வி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அக்டோபர் 5, 1823 அன்று இராமலிங்கர் பிறந்தார். தந்தை ராமையா பிள்ளை கிராமக் கணக்கராக இருந்தவர். இராமையாவுக்கு ஆறாவது மனைவி சின்னம்மையார். முன் திருமணம் செய்த ஐந்து மனைவியருக்கும் குழந்தைப்பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே இராமைய்யா அவரை ஆறாவது மனைவியாக மணம் புரிந்தார் .

இராமையா மனைவி சின்னம்மை இணையருக்கு சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் இராமலிங்கர் பிறந்தார். இராமலிங்கர் பிறந்து ஆறு மாதங்களில் தந்தை இறந்து விட்டார். தாயார் குழந்தைகளோடு தான் பிறந்த ஊராகிய பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராசாமிப் பிள்ளை தெருவில் குடியேறினார்.

இராமலிங்கரின் அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். இராமலிங்கரை நன்கு படிக்க வைக்க வேண்டுமென விரும்பினார். அக்கால முறைப்படி தமிழ்க் கல்வி கற்பிக்க திவாகரம், நிகண்டு, சதகம், அந்தாதி போன்றவற்றை தம்பிக்குக் கற்பித்தார். இராமலிங்கருக்கு ஆன்மீக நாட்டம் இருந்த அளவுக்குக் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. சபாபதி தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில இராமலிங்கரை அனுப்பி வைத்தார். இராமலிங்கர் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தார். (சென்னை நகரில் கந்தசாமி கோவில் என்றும் முத்துக்குமாரசாமி கோவில் என்றும் சொல்லப்படும் ஆலயம்.)

அவரது ஆசிரியரும் இராமலிங்கர் பாடிய பாடல்களைக் கேட்டு, இயல்பிலேயே புலமை கொண்டிருந்த ராமலிங்கருக்கு கல்வி தேவையில்லை என்று சொல்லிவிட்டார். தான் கல்வியின் சிறப்பால் பாடத் தொடங்கவில்லை என்றும் கடவுளின் அருளால்தான் பாட முடிகிறதென்றும் அவரே தன் பாடல்களில் குறிப்பிடுகிறார்.

வள்ளலார் வரலாறு

தனிவாழ்க்கை

இராமலிங்கர் 1850 ல், தன் இருபத்தேழாவது வயதில் தன் அக்கா உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் விரைவிலேயே இல்லற வாழ்க்கையை துறந்தார்.

தோற்றம், வாழ்க்கை முறை

தொழுவூர் வேலாயுத முதலியார் தியோசஃபிக்கல் சொசைட்டிக்கு இராமலிங்க வள்ளலார் மறைவுக்குப் பின் அளித்த அறிக்கை ஒன்றில் இராமலிங்க வள்ளலாரின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார்

நடுத்தர உயரமுள்ளவராக, பார்ப்பதற்கு எலும்புக்கூடெனவே தோன்றும் மெலிந்த மேனியராக இருப்பார். ஆயினும் வலிமையுடையவர். மிக விரைந்து நடப்பார். நிமிர்ந்த தோற்றம், தெள்ளிய சிவந்த முகம், நேரான கூரிய மூக்கு, ஒளி வீசும் பெருங்கண்கள். முகத்தில் இடைவிடாத ஒரு துயரக்குறி. இறுதிக் காலத்தில் தலைமயிரை நீள வளரவிட்டிருந்தார். யோகிகளின் வழக்கத்திற்கு மாறாக ஜோடு அணிவார். உடை இரண்டு வெள்ளை ஆடைகளே. எதிலும் மிக்க அளவோடு இருப்பார். ஓய்வு கொள்வதேயில்லை கடும் மரக்கறியுணவினர்.இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முறையே உண்பார். அதுவும் சில கவளங்களே.அக்காலங்களில் சிறிது சர்க்கரை கலந்த வெந்நீரை மட்டுமே அருந்துவார்’

ஆன்மீக வாழ்க்கை

தொடக்கம்

வள்ளலார் இளமையில் கந்தகோட்டதில் பல மணிநேரம் தியானத்திலும் வழிபாட்டிலும் ஈடுபடுவார் என பிற்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர்.. இராமலிங்கர் முதலில் இயற்றிய பாடல்களான தெய்வமணிமாலை இங்குதான் பாடப்பட்டது. எளிய சொற்கள் கொண்ட 31 பாடல்களைக் கொண்ட இத்தொகுப்பில் பாடல்தோறும் ஈற்றடி

"கந்த கோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே" என்று அமைந்திருக்கும்.

இவற்றுள்

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்" எனத் தொடங்கும் பாடல் மிகவும் புகழ் பெற்றது.

வள்ளலார் தபால்தலை

பன்னிரண்டாவது வயதில் இருந்து முழுமையான ஞான வாழ்வு தொடங்கியதாகப் பாடியிருக்கிறார் ("பன்னிரண்டாண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம்" – பிள்ளைப் பெருவிண்ணப்பம்). இளமையில் தினமும் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அருட்பாவின் முதல் மூன்று திருமுறையின் பல பாடல்கள் ஒற்றியூர் இறைவன் மீது பாடப்பட்டவை.

சமரச சுத்த சன்மார்க்கம்

இராமலிங்கர் 1858-ல் சென்னையை விட்டு சிதம்பரம் சென்றார். இராமலிங்கரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். இராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார். அங்கே 1865-ம் ஆண்டு ’சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார். வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்னும் ஆறு அந்தங்களுக்கும் பொதுவான நெறி என்ற பொருளில் இப்பெயரை இட்டார்.

கடவுள் ஒருவரே, அக்கடவுளை ஒளி வடிவில் வழிபட வேண்டும், சிறுதெய்வ வழிபாடு கூடாது, அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணக் கூடாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தன்னுயிர் போல எண்ணவேண்டும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வைக் கைக்கொள்ள வேண்டும், பசி தீர்த்தல் முதலிய ஜீவகாருண்யமே பேரின்ப வீடு பேறடைய வழி போன்ற மெய்நெறிகளும்; புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிப்பதில்லை போன்ற சீர்திருத்தக் கொள்கைகளும்; இறந்தவரை எரிக்காது புதைக்க வேண்டும் என்பது போன்ற வாழ்க்கைநெறிகளும், வழிபாட்டுச் சடங்குகளும் சாதிச்சடங்குகளும் தேவையில்லை என்பது போன்ற விலக்குகளும் சமரச சுத்த சன்மார்க்க நெறியின் கொள்கைகள்..

தமிழியல் நோக்கில் வள்ளலார்

"சாதி சமயச் சழக்கை விட்டேன் – அருட்சோதியைக் கண்டேனடி"

"கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்முடி வழக்கம்எலாம் மண்மூடிப் போகமலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற"

போன்ற பல பாடல்களில் இந்நெறியின் கொள்கைகளை விளக்கிப் பாடியிருக்கிறார்.

தொழுவூர் வேலாயுத முதலியார் தியோசஃபிக்கல் சொசைட்டிக்கு அளித்த அறிக்கையில் வள்ளலாரின் கொள்கைகளை இவ்வாறு கூறுகிறார்

  • சாதி சமய வேற்றுமைகள் இறுதியில் ஒழிந்துபோம். அகில உலக சகோதரத்தும் வரும். இந்தியாவில் அது நிலை நாட்டப்படும்.
  • மக்களால் கடவுள் என்று சொல்லப்படுவது உண்மையில் எல்லா உயிர்களிடத்தும் காட்டும் அன்பே. இவ்வன்பே இயற்கை முழுவதையும் ஒழுங்காக இயங்கச் செய்கிறது.
  • மக்கள் தமக்குள்ளே மறைந்து கிடக்கும் தெய்விக சக்தியை உணர்ந்து கைவரப்பெற்றால், பூமியின் ஈர்ப்பாற்றல் முதலிய இயற்கை நியதிகளையும் மாற்றும் அரிய சக்திகளையும் பெற‌க்கூடும்.

இலக்கிய வாழ்க்கை

இராமலிங்க வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்க அடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுத முதலியாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் வள்ளலார் படைப்புகளின் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.

திருவருட்பா
திருவருட்பா

"கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே" (அருள்விளக்கமாலை, 2)
"கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே !
காணுர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!" (அருள்விளக்கமாலை, 39)
"அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்" (பரசிவ நிலை 1)

போன்ற எளிய வார்த்தைகளில் இறைவனைப் புகழ்ந்து இராமலிங்கர் பாடிய அருட்பா பாடல்கள் புகழ்பெற்றவை. ஏறக்குறைய எல்லாப் பாடல்களுமே சமரசம் ஜீவகாருண்யம் ஆகிய இரண்டு அடிப்படை கொள்கைகளை பாடுபவை.

சிற்றிலக்கிய மரபைச் சேர்ந்த உலா, தூது வகைமையில் பல பாடல்கள் அருட்பாவில் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் உலா வரும்போது கண்டு காதல் கொண்ட காதலியாகக் கற்பனை செய்து பாடிய பாடல்கள் திருவுலாப் பேறு, திருவுலா வியப்பு, திருவுலாத் திறம் போன்றவை. நாரையையும் கிளியையும் இறைவனிடம் தூது அனுப்பும் தூது வகைப் பாடல்களும் எழுதியுள்ளார்.

உரைநடை

வள்ளலார் மனுமுறைகண்ட வாசகம் (1854) என்னும் மனுநீதி சோழன் நீதிமுறை செய்த வரலாற்றை விளக்கும் உரைநடை நூலை எழுதினார்.

"நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ!" எனத் தொடங்கும் புகழ்பெற்ற பாடல் மகனது செயல் கேட்டு மனுநீதிச் சோழன் தன் செங்கோல் வளைந்தது என வருந்தும் பகுதியில் வருவது.

வடலூர் சத்தியஞான சபை
செய்யுள் நுட்பங்கள்

செய்யுளில் சொல்லைப் பலவிதமாகக் கையாண்டு புலமையைக் காட்டும் வழக்கம் சிற்றிலக்கியக் காலம் முதல் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பிட்ட சில சொற்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் முதலிலும், இடையிலும், கடையிலும் உள்ள எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து வெவ்வேறு சொற்களாக்கிக் குறிப்பினால் பொருளுணர்த்தும் முறையில் வள்ளலார் பாடிய பாடல்கள் உள்ளன. அவை எழுத்தியலமைப்பில் 'மிறைக் கவி' (சித்திரகவி) என்னும் வகையை சேர்ந்தவை.

தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான் அலைந்தோம்-போதாதா
நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே
எந்தாய் எனப் புகழவே.

வள்ளலார் ஆலயம்

என்னும் வெண்பாவின் முதலடியில் ஏழு முறை வந்துள்ள 'தா’ என்னும் எழுத்துக்களின் பின் 'குறை' என்ற சொல்லை இணைத்து எழுதாக்குறை என்று பொருள் கொள்ள வேண்டும். இரண்டாவது அடியில் உள்ள தாதாதா என்பதை தாதா, தா எனப் பிரித்து வள்ளலே தா(கொடு) எனப் பொருள் கொள்ள வேண்டும்.

சாற்றுகவிகள்

அக்காலத்தில் வெளிவந்த பல நூல்களுக்கு சாற்றுகவி எழுதியுள்ளார். அவற்றுள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதிநூலுக்கு (1859) எழுதிய சாற்றுகவி குறிப்பிடத்தக்கது.

சமூகப் பணி

சத்திய தரும சாலை
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

1858 முதல் 1867 வரை கருங்குழி என்னும் ஊரில் வேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில் தங்கியிருந்தபோது அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, மே 23, 1867 ல் {வைகாசி மாதம் பதினொன்றாம் தேதி} அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே ’சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்தார். இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறம், நாடு, உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டை தொடங்கினார். உணவிட்டமையால் இராமலிங்க அடிகள் 'வள்ளலார்’ என அழைக்கப் படலானார். வடலூரில் தலைமைநிலையம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் வடலூர் போல அன்னசாலைகள் நடத்துகிறார்கள்.

வள்ளலார் 1867-ல் சன்மார்க்க போதினி பாடசாலை என்ற பாடசாலை ஒன்றைத் தொடங்கினார். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என மும்மொழிகள் அங்கே கற்பிக்கப்பட்டன. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் அங்கு கற்கலாம் என்று அப்பாடசாலை பற்றிய குறிப்பில் இருந்து அறிய முடிகிறது.

சத்திய ஞான சபை

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இராமலிங்க அடிகள் தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு 'சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்’ என்று பெயரிட்டார். அதை நிலைநிறுத்தும்பொருட்டு அவர் நிறுவிய சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871-ம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் 'சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை’ என்று பெயர் சூட்டினார். 25.1.1872 (தை மாதம் 13-ம் நாள்) தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது.

வள்ளலார் வாழ்வும் வாக்கும் இராம இருசுப்பிள்ளை

இராமலிங்க அடிகள் சாதியப் பாகுபாடுகளை மறுத்தார். இந்து மதத்தில் இருந்த வந்த ஆசாரங்களை ஒப்புக்கொள்ளாமல், எந்த வழிபாட்டு சடங்குகளையும் கடைப்பிடிக்காமல் இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் 'அருட்பெரும்சோதி’ வழிபாட்டை முன்வைத்தார். அதனால் பல உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பை ஈட்டினார். அவருடன் அணுக்கமாக இருந்த தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ற தொண்டர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். அதைக்குறித்து 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்று இராமலிங்க அடிகள் எழுதினார்.

1870-க்குப் பிறகு இராமலிங்க அடிகள் வடலூருக்குத் தெற்கே இரண்டு மைல்தொலைவில் இருந்த மேட்டுக்குப்பத்தில் சித்திவளாக மாளிகை என்னும் இடத்தில் வாழ்ந்துவந்தார். அங்கு பிரம்மதண்டிகா யோகம் முதலான பலவிதமான யோக சாதனைகளை மேற்கொண்டார். 20.10.1873, செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு நீண்ட அருளுரை வழங்கினார் வள்ளலார். அந்த அருளுரையே 'பேருபதேசம்’ என்று சொல்லப்படுகிறது. (பார்க்க பேருபதேசம்)

விவாதங்கள்

இராமலிங்க அடிகள் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய மரபார்ந்த சைவ வாதிகள் ஏற்கவில்லை. இராமலிங்க அடிகள் முன்வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். அந்த மறுப்புக்கு இராமலிங்க அடிகளின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 1868-ல் சண்முகம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட 'திருவருட்பா தூஷண பரிகாரம்' என்னும் நூலின் வழியாக அருட்பா பற்றிய விவாதம் தொடங்கியது. 1869-ல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இராமலிங்க வள்ளலார் எழுதியவை அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.

வள்ளலார் காட்டும் வழி சாமி சிதம்பரனார்

வடலூர் இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா என்ற விவாதம் பின்னர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களால் வலுவாக எழுப்பப்பட்டது. ஆறுமுக நாவலர் மிகக் கடுமையான சொற்களை பயன்படுத்தினார். அதற்கு வள்ளலாரின் சீடர்கள் தொழுவூர் வேலாயுத முதலியார் முதலியோர் வசை பாதி விவாதம் பாதியாக பதிலுரைத்தார்கள். தொடர்ந்து மான நட்ட வழக்கும் நடந்தது.

பின்பு 1904-ல் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை அவ்விவாதத்தை முன்னெடுத்து வசைக் கவிதைகளை எழுதினார். இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதற்கு வடலூரைச் சேர்ந்த பானு கவி 1905-ல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். கதிரை வேற் பிள்ளைக்கு உத்தரக் கிரியை நடத்தும் துண்டுப் பிரசுரங்கள் பல அடிக்கப் பட்டன.

தமிழினி வெளியீடாக வந்த 'அருட்பா மருட்பா விவாதம்’ என்ற நூலில் ஆய்வாள ப. சரவணன் ஆறுமுகநாவலருக்கும் வடலூர் இராமலிங்க வள்ளலாருக்கும் இடையே நடந்த அருட்பா மருட்பா விவகாரத்தை விரிவான ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். (பார்க்க அருட்பா மருட்பா விவாதம்)

மறைவு

வள்ளலார் கையெழுத்து

1874 தைப்பூசத்தன்று (ஜனவரி 30) சித்திவளாகத்தில் தனது அறையில் சென்று தாழிட்டுக் கொண்டவர் மறைந்தார். அவர் அப்படியே சோதியில் கலந்துவிட்டதாக அவருடைய மாணவர்களால் கருதப்படுகிறது.

தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலாரின் மறைவை தியோசஃபிக்கல் சொசைட்டிக்கு அளித்த விரிவான வாக்குமூலத்தில் இவ்வாறு கூறுகிறார் ’அம்மாதம் 30-ம் தேதி நாங்கள் மேட்டுக்குப்பத்தில் எங்கள் குருவைக் கடைசியாகப் பார்த்தோம். சீடர்களிடம் அன்போடு விடைபெற்ற பின் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில் நுழைந்து விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது கட்டளைப் படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது. ஓராண்டுக்குப்பின் திறந்து பார்த்தபோது அறையில் ஒன்றுமில்லை’

வாழ்க்கைப் பதிவுகள்

  • இராமலிங்க அடிகளார் வரலாறு- ஊரன் அடிகள் அதிகாரபூர்வமான இராமலிங்க அடிகளார் வரலாறு.
  • மா.போ.சிவஞானம் எழுதிய ’வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ ராமலிங்க வள்ளலார் பற்றிய முதன்மையான ஆய்வுநூலாக கருதப்படுகிறது.
  • கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக ராஜ் கௌதமன் [முதல் பதிப்பு - தமிழினி, 2001] எனும் விமர்சன நூல் சமூக நோக்கில் இராமலிங்க வள்ளலாரை அவரது படைப்புகளையும் களப்பணி சூழலையும் விமர்சனபூர்வமாக அணுகிய ஆய்வு நூல்.
  • வள்ளலார் வாழ்வில் உண்மைகள்- எம் பாலசுப்ரமணியம்
  • வள்ளலார் வாழ்வும் வாக்கும் -இராம இருசுப்பிள்ளை
  • வள்ளலார் காட்டும் வழி- சாமி சிதம்பரனார்
  • தமிழியல் நோக்கில் வள்ளலார்- முனைவர் வே பரமேஸ்வரன்
  • வள்ளலார் வாழ்க்கை வரலாறு-பட்டத்தி மைந்தன்
  • வடலூர் வள்ளர்பெருமானார்கே.சி.சோமசுந்தரம்
  • வள்ளலார் கண்ட ஒருமை வாழ்வு. சரவணானந்தா

நினைவுகூரல்கள்

இந்திய அரசு இராமலிங்க வள்ளலாருக்கு 17-ஆகஸ்ட்-2007 ல் அஞ்சல்தலை வெளியிட்டது.

வள்ளலார் சிலை

அமைப்பு, வழிபாடு

இராமலிங்க வள்ளலார் தொடங்கிய சத்தியஞான சபையும் ஜோதிவழிபாடும் இந்து மதத்திற்குள் ஒரு துணைமதம்போல வளர்ந்தன. தமிழகமெங்கும் அந்த அமைப்புக்கு ஏராளமான கிளை அமைப்புகள் உருவாயின. அவை ஒற்றைத்தலைமைக் கீழ் ஒருங்கிணைக்கப்படவில்லை. வள்ளலார் வாரவழிபாட்டு நிலையங்கள், வள்ளலார் மன்றங்கள், அருட்பிரகாச சபைகள், சன்மார்க்க சங்கங்கள் என வெவ்வேறு பெயர்களில் அவை செயல்படுகின்றன. தமிழகத்தில் ஏராளமான ஊர்களில் வள்ளலாருக்கு சிறிய ஆலயங்களும் உள்ளன. வள்ளலார் ஜோதியில் கலந்தார் என்று சொல்லப்படும் தைப்பூச நாள் அவருக்கான குருபூஜை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வள்ளலார் தொடங்கிய சத்தியஞான சபை வடலூரில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அங்கே அவர் எரியவிட்ட அடுப்பு அணையாமல் பாதுகாக்கப்பட்டு உணவு சமைத்து வழங்கப்படுகிறது.

மதிப்பீடு

இராமலிங்க வள்ளலார் மூன்று வகைகளில் தமிழ் சமயத்திற்கும், பண்பாட்டிற்கும், சமூகத்திற்கும் பெரும்பங்காற்றியவர்.

மதச் சீர்திருத்தம்

இராமலிங்க வள்ளலார் பிறந்த காலகட்டத்தில் சைவ சமயம் புத்தெழுச்சி கொள்ள தொடங்கியது. தொன்மையான சைவ சமயநூல்கள் ஏட்டில் இருந்து அச்சில் பதிப்பிக்கப்பட்டன. அவற்றை பயிலவும் விவாதிக்கவும் சைவ மன்றங்கள் தமிழ்நாடு முழுக்க உருவாயின. சைவப்பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களும் பெருகினர். சைவத்துக்கு எதிரான வேதாந்தம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை கண்டிக்கும் நூல்களும் உருவாயின. இந்த சைவ மறுமலர்ச்சியின் உள்ளடக்கமாக சாதியப்பார்வையும் பழமைவாதமும் இருந்தது. சைவ சமயத்தில் அமைப்புசார்ந்த ஆதிக்கம் கொண்டிருந்த ஸ்மார்த்த பிராமணர்கள், சைவ வேளாளர்கள் போன்ற சாதியினரே சைவ மறுமலர்ச்சி இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களில் பலர் பழைய சாதிய ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் முன்னிறுத்தினர். ஆறுமுக நாவலர் போன்றவர்கள் தீண்டாமை உட்பட பழைய ஆசாரங்களை வலியுறுத்தினர். ஆகமமுறைசார்ந்த வழிபாட்டை சைவசமயத்தின் ஒரே வழிபாட்டுமுறையாக அனைத்து இடங்களிலும் நிறுவ முயன்றனர்.

அந்த சாதிஆதிக்கம், பழமைவாதம், ஒற்றைப்படையாக்கம் ஆகியவற்றுக்கு எதிரான எழுச்சியாக உருவானதே இராமலிங்க வள்ளலாரின் குரல். அவர் ஆலயவழிபாடு, சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிராக தனிமனிதனின் பக்தியையும், யோகசாதனைளையும் முன்வைத்தார். சாதிப் பாகுபாடுகளை மறுத்தார். சமயச்சழக்குகள் பயனற்றவை என்றார். மத ஆதிக்கத்திற்கு எதிராக இருபதாம்நூற்றாண்டின் மானுடசமத்துவக் கருத்துக்களையும் தனிமனித ஆன்மிக மீட்பையும் முன்வைத்தார். வள்ளலார் வலியுறுத்தியது நவீன ஜனநாயக யுகத்திற்குரிய நவீன ஆன்மிகம். ஆகவேதான் அவரை அப்போதும் பின்னரும் இருந்த முற்போக்காளர்களும் சீர்திருத்தவாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

அவர் காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பும் இப்பின்னணியில் உருவானதுதான். தொடக்கத்தில் அவர் ஸ்மார்த்தர், சைவவேளாளர் போன்றோரின் ஆதிக்கத்தை எதிர்த்தபோது அவருடன் இருந்த தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ற மாணவர்கள் அவர் சுத்தசன்மார்க்கம் என்னும் ஜோதிவழிபாட்டு முறையை முன்வைத்தபோது விலகிச்சென்றனர். ஆனால் இராமலிங்க வள்ளலார் தமிழ்ப்பண்பாட்டிலேயே உருவான ஒரு நவீன ஆன்மிகப்பார்வையை தொடங்கிவைத்தார். கேரளத்தில் நாராயண குரு, வங்காளத்தில் ராஜா ராம்மோகன் ராய் , ராமகிருஷ்ண பரமஹம்சர் என இந்தியா முழுக்க அவ்வாறு மரபான மத ஆசாரங்களை மறுத்து உருவான நவீன ஆன்மிக இயக்கங்களில் வள்ளலாருடைய இயக்கம் முன்னோடியானது.

உணவிடுதல்

இராமலிங்க வள்ளலார் தன் உணவளிக்கும் சேவையை தொடங்கிய காலகட்டத்தில் இந்தியா எங்கும் பெரும் பஞ்சம் நிலவியது. வங்காளம் முதல் தமிழ்நாடு வரை லட்சக்கணக்கானவர்கள் பட்டினியால் மடிந்தனர். அந்தப் பஞ்சங்களில் இந்தியாவில் இருந்த மரபான மதநிறுவனங்கள் பஞ்சத்துக்கு எதிரான நிவாரணப்பணிகளில் பெருமளவில் ஈடுபடவில்லை. அன்றிருந்த மத ஆசாரங்களும், தீண்டாமை முதலிய சாதிய விலக்குகளும், ஊழ்வினை போன்ற கொள்கைகளும் அதற்குத் தடையாக இருந்தன. இராமலிங்க வள்ளலார் தன் உணவுக்கொடை வழியாக அனைத்து அறங்களிலும் முதன்மையானது எளியோருக்கு உணவிடுவதே என வலியுறுத்தினார். இன்னொரு மனிதன் பட்டினி கிடப்பதை கண்டு வெறுமே இருப்பது பெரும் பாவம் என கூறினார். எத்தனை வழிபாடுகள் செய்தாலும் அந்தப்பழி கொண்டவர்களுக்கு மீட்பில்லை என்றார். அன்று வழிபாடுகள், சடங்குகளையே ஆன்மிகம் என எண்ணியிருந்த மரபுவாதிகளுக்கு அதன் வழியாக காலத்துக்கு உகந்த அழுத்தமான செய்தியைச் சொன்னார்.

பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வடலூர் சபையில் உணவளிக்கப்பட்டது. அதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாடு முழுக்க ஏராளமான உணவுக்கொடைகள் தொடங்கப்பட்டன. வள்ளலார் அளித்த உணவுக்கொடை என்பது மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மதநம்பிக்கையின் அறிவிப்பு. பின்னர் சுவாமி விவேகானந்தர் தொடங்கிய ராமகிருஷ்ண மடமும் பஞ்சநிவாரணப் பணிகளில் ஈடுபட்டது. பசித்தவனுக்கு உணவிடுதலே எந்த வழிபாட்டையும் விட முதன்மையான இறைவழிபாடு என்று விவேகானந்தர் சொன்னார். இராமலிங்க வள்ளலார் அவ்வகையில் இந்தியாவுக்கே ஒரு முன்னோடி.

சித்தர்யோக மரபின் மறுமலர்ச்சி

இராமலிங்க வள்ளலாருக்கு முன்புவரை சைவத்திற்குள் இரண்டு போக்குகள் ஒன்றையொன்று மறுத்து செயல்பட்டன. சைவசித்தாந்தம் மற்றும் சைவ வழிபாட்டு முறையே மையப்போக்கு. சைவத்துக்குள் இருந்த துணைமதங்களான காளாமுகம், காபாலிகம், மாவிரதம் பாசுபதம் போன்றவை காலப்போக்கில் மருவி ஒன்றாகி உருவான தமிழ்ச்சித்தர்மரபு ஒருவகை நாட்டார் மதமாக நீடித்தது. ஊர்கள்தோறும் சித்தர்கள் இருந்தனர். சித்தர் பாடல்கள் வாய்மொழி மரபாக பயிலப்பட்டன. ஆனால் மையச் சைவ வழிபாட்டுமுறை அவர்களை கடுமையாக நிராகரித்தது. அவர்கள் ஆங்காங்கே வட்டாரம் சார்ந்தே அறியப்பட்டனர்.

அச்சுமுறை தோன்றியதும் சித்தர்பாடல்கள் மலிவுவிலை 'குஜிலிப் பதிப்பு’களாக சந்தைகள் தோறும் விற்கப்பட்டன. சித்தர்பாடல்களிலுள்ள எளிமையான மொழியும் நாட்டார்ப்பாடல்களின் அமைப்பும் மக்களிடையே அவை பெரும் செல்வாக்கு செலுத்த காரணமாயின. இவ்வாறு மீண்டெழுந்து வந்த சித்தர்மரபை முழுமையாகப் புரிந்துகொள்வதில் தமிழ்ச்சூழலுக்கு பெரிய தடைகள் இருந்தன. அவை சித்தர்களின் குறியீட்டுமொழியில் அமைந்தவை. மறைமுக யோகப்பயிற்சிகளை முன்வைப்பவை. பெரும்பாலும் பதிப்பாளர்கள் அமர்த்திய தமிழறிஞர்களின் உரைகளே அவற்றுக்கு வந்தன. சித்தர்மரபு சித்தமருத்துவம் இரண்டும் வெவ்வேறு வகைகளில் விளக்கப்பட்டன.

சைவசித்தாந்தத்தின் சாரமாக உள்ள அன்பேசிவம் என்னும் மையக்கருத்தையும் சித்தர்களின் யோகமுறைகள் சார்ந்த ஒருமைநோக்கையும் நடைமுறையில் இணைத்தவர் வள்ளலார். சித்தமருத்துவம் சார்ந்தும் அவர் ஏராளமாக எழுதியிருக்கிறார். சித்தர்மரபைச் சேர்ந்த யோகமுறைகளையும் மறைஞானமுறைகளையும் விளக்கியிருக்கிறார்.

வள்ளலாரின் மெய்யியல் என்பது ஒருபக்கம் நவீன யுகத்திற்குரிய மனிதாபிமானநோக்கும் சமத்துவப் பார்வையும் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையும் கொண்டது. மறுபக்கம், ஆழத்தில் அது சித்தர்கள் முன்வைக்கும் அகவயமான தியானமுறைகளும் யோகப்பயிற்சிகளும் ஒருமைநோக்கும் அடங்கியது. இவ்விணைப்பே ஆன்மிகத்தில் அவருடைய முதன்மைக் கொடை.

ஆவணப்படம்

இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் 2024-ல் ”அன்பெனும் பெருவெளி” என்ற வள்ளலார் பற்றிய ஆவணப்படத்தை ஒன்மெய் ஃபவுண்டேஷன் தயாரிப்பில் இயக்கி வெளியிட்டார். இதில் வள்ளலாரின் பிரபலமான ஆறு பாடல்களை ஷான் ரோல்டனின் இசையமைப்பில் கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமண்யன் பாடினார்.

அன்பெனும் பெருவெளி ஆவணப்படம்

நூல்கள்

வள்ளலார் படைப்புகள் இணையத்தில் பதிப்பிக்கப்பட்டன.

இராமலிங்க வள்ளலார் எழுதிய நூல்கள்
  • திருவருட்பா
  • மனுமுறைகண்ட வாசகம் (1854) – மனுநீதி சோழன் முறை செய்த வரலாற்றை விளக்கும் உரைநடை நூல்
  • ஜீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்க வள்ளலார் பதிப்பித்த நூல்கள்
  • ஒழிவிலொடுக்கம் (1851) – எழுதியவர் சீகாழிக் கண்ணுடைய வள்ளலார்
  • தொண்டைமண்டல சதகம் (1855) – எழுதியவர் படிக்காசுப் புலவர்
  • சின்மய தீபிகை (1857)

உசாத்துணை


✅Finalised Page