under review

ஊரன் அடிகள்

From Tamil Wiki
ஊரன் அடிகள்
நன்றி: தினமணி

ஊரன் அடிகள்(இயற்பெயர்:குப்புசாமி)(மே 22,1933 – ஜூலை 13,2022) சமரச சன்மார்க்கத் துறவி, நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், அறநிறுவனக் காவலர். வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறியில் ஆய்வாளர், சொற்பொழிவாளர். வள்ளலாரின் பாடல்களை செம்மைப்படுத்தி முறையாக எண்வரிசையில் அமைத்தார். வள்ளலாரைப் பற்றி பல நூல்கள் எழுதினார். 30 வருடங்களுக்கும் மேலாக சன்மார்க்க சபையில் அறங்காவலர் தலைவர் உட்பட பல பொறுப்புகளை வகித்து செயல்முறைகளை நெறிப்படுத்தினார். தமிழக ஆதீனங்களின் வரலாற்றைத் தொகுத்து வெளியிட்டார். தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக விளங்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஊரன் அடிகள் திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் மே 22,1933 அன்று ராமசாமி பிள்ளை-நாகரத்தினம் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் குப்புசாமி. கண்ணூரில் தொடக்க கல்வியும், ஶ்ரீரங்கத்தில் உயர்நிலைக்கல்வியும், திருச்சியில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுகாலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றினார். சிறு வயதிலிருந்து ஆலய வழிபாடுகளும், படித்த திருமுறைகளும் அவரது ஆன்மிக ஈடுபாட்டை வளர்த்தன. துறவறம் மேற்கொள்ள வேண்டி தன் பணியைத் துறந்தார்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தில் சிறப்புரை நன்றி: மு.இளங்கோவன்

துறவு வாழ்க்கை/சன்மார்க்க நெறி

குப்புசாமி இராமலிங்க வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் மே 23, 1967 அன்று துறவறம் மேற்கொண்டு 'ஊரன் அடிகள்' என அழைக்கப்பட்டார். தனது 35-வது வயதில் (1969) வடலூருக்கு வந்தார். ‘சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்’ என்ற ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி தமிழ் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறிபற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தார். 1970 முதல் 2000 வரை வடலூரில் சன்மார்க்க நிலையத்தில் அறங்காவலர், அறங்காவலர் குழுத் தலைவர், தக்கார் தர்மசாலை திருப்பணிக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். சுந்த சன்மார்க்க நிலையத்தின் தலைவராக 1969 முதல் 1983 வரை பொறுப்பு வகித்தார். அவர் பொறுப்பேற்றபோது சமரச சன்மார்க்க சபையின் நிதி நிலை பற்றாக்குறையில் இருந்தது. சந்தா முறையை உருவாக்கி அடியவர்கள் விரும்பும் நாளில் அவர்கள் சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி அதன்மூலம் நிதிநிலையச் சீராக்கினார்.

ஊரன் அடிகள் தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக இருந்தார். கருங்குழியில் வள்ளலார் 1858 முதல் 1867 வரை தங்கியிருந்த, நான்கு திருமுறைகளை இயற்றிய, வடலூர் சபைக்கு நிகராகப் போற்றப்பட்ட வீடு (அங்கு வள்ளலார் சில அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது) சிதிலமடைந்திருந்ததைக் கண்டு ஊரன் அடிகள் தன் சொந்தப் பணத்தில் அவ்வீட்டை வாங்கி புதுப்பித்து, சபைக்கு அர்ப்பணித்தார்.

வடலூரில் ஊரன் அடிகள் தன் வசிப்பிடத்தில் அமைத்த நூலகம்அரிய நூல்களைக் கொண்டிருந்தது.

இலக்கிய வாழ்க்கை

ஊரன் அடிகள் நூலகத்தின் ஒரு பகுதி நன்றி: மு.இளங்கோவன்

ஊரன் அடிகள் வள்ளலாரின் திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளையும் ஆராய்ந்து கால முறைப்படி பகுத்து செம்மைப்படுத்தினார். ஆறாயிரம் பாடல்களையும் ஆய்ந்து, முறைப்படுத்தி எண் வரிசையிட்டு வெளியிட்டார். தன் சொத்தின் பெரும்பங்கைச் செலவு செய்தும், பொள்ளாச்சி மகாலிங்கம் உள்ளிட்ட சிலரிடம் நிதி உதவி பெற்றும் இப்பணியைச் செய்தார். வள்ளலாரின் கையெழுத்துப் பிரதிகளை தேடியெடுத்தும், சேகரித்தும், சன்மார்க்க சபையில் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தினார்.

ஊரன் அடிகள் வள்ளலாரைப் பற்றி பல நூல்கள் எழுதினார். 'இராமலிங்கரும் தமிழும்', 'இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள், 'இராமலிங்க அடிகள் வரலாறு' ,வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் வரலாறு, 'இராமலிங்க அடிகளின் வரலாறு, கொள்கைகள், பாடல்கள், 'வள்ளலார் மறைந்தது எப்படி? (சாகாக்கலை ஆராய்ச்சி)', 'வள்ளலார் கண்ட முருகன், 'வள்ளலார் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும், ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவில் தலைமையுரை

ஊரன் அடிகள் பதினெட்டுச் சைவ ஆதீனங்களின் வரலாற்றினைத் 'சைவ ஆதீனங்கள்', 'வீரசைவ ஆதீனங்கள்' என்னும் இரு தொகுப்புகளாக எழுதினார். மே 22, 2000 அன்று ஊரன் அடிகளின் 70-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிடப்பட்டன.

வள்ளலாருக்கும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருவள்ளுவர், மகாவீரர் போன்றவர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை விளக்கி தனித்தனி நூல்களாக எழுதிப் பதிப்பித்தார். (மகாவீரரும் வள்ளலாரும் முதல் வள்ளலாரும் பாரதியும் வரை-பதினோரு நூல்கள்)[1]

தமிழகப் பல்கலைக்கழகங்களில் பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். சைவ சித்தாந்த பெருமன்றத்தில் அடிகள் வள்ளலார் தொடர்பாக ஆற்றிய உரைத் தொடர் நூல் வடிவம் கண்டது. இந்தியா முழுவதும் புனித யாத்திரைகள் செய்தார். பல நாடுகளுக்கும் பயணம் செய்து உரையாற்றினார்.

பதிப்பியல்

ஊரன் அடிகள் செம்மைப்படுத்தப்பட்ட திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் பதிப்பித்தார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்பா திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். சத்தியஞான சபையின் தூண்களில் பொறிக்கப்பட்ட கற்பதிப்புப் பாடல்களை கொண்ட சிறுநூலை முன்னுரையுடன் பதிப்பித்தார்.

இசைப்பணி

குடந்தை ப. சுந்தரேசனாரின் நூற்றாண்டு விழாவில் தலைமையுரை ஆற்றினார். ஊரன் அடிகள் பஞ்சமரபு நூல் வெளியீட்டிற்காக (1973)பொள்ளாச்சி மகாலிங்கத்திடம் சுந்தரேசனாரை ஆற்றுப்படுத்தினார்.

பரிசுகள், சிறப்புகள்

  • தமிழக அரசின் பரிசு (1971)-இராமலிங்க அடிகள் வரலாறு நூலுக்காக
  • தமிழக அரசின் அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது (2020)

இலக்கிய/பண்பாட்டு இடம்

ஊரன் அடிகள் வள்ளலாரின் நெறியைப் பரப்புவதில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டார். இராமலிங்க வள்ளலாரின் திருமுறைகளை செம்மைசெய்து பதிப்பித்தது அவரது குறிப்பிடத்தக்க பெரும்பணி. அரசோ மொழி ஆய்வு நிறுவனமோ செய்யவேண்டிய பணியைத் தனி ஒருவராக நேர்த்தியாக செய்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். வள்ளலாரின் வரலாற்றைப் பற்றிய நூல்களில் ஊரன் அடிகளின் நூலே சிறந்ததாகவும், ஆதாரமானதாகவும் கருதப்படுகிறது.

வடலூர் சன்மார்க்க நிலயங்களின் அறங்காவலராக நிதிநிலையயும் சீர்படுத்தி, நிர்வாகத்தை நெறிப்படுத்தினார். குன்றக்குடி அடிகளார் தம் அஞ்சலிக் குறிப்பில் "முத்திரை பதிக்கத்தக்க வகையில் சமய உலகத்திற்கு அற்புதமான படைப்புகளைத் தந்தவர். குறிப்பாக சைவ சமய ஆதீனங்களின் வரலாறு, வீர சைவ ஆதீனங்களின் வரலாறு அவர் தந்த மிகப்பெரிய கொடைகளாகும். அதற்காகத் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. தான் ஏற்றுக்கொண்ட துறவறப்பணியை வள்ளலார் தடத்தில் ஆழங்காற்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்த அந்தப் பெருந்துறவி மறைந்து விட்டார்" என்று ஊரன் அடிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மறைவு

ஊரன் அடிகள் ஜூலை 13, 2022 அன்று வடலூரில் காலமானார்.

படைப்புகள்

  • வடலூர் வரலாறு (1967)
  • இராமலிங்கரும் தமிழும் (1967)
  • பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள் (1969)
  • புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார் (1969)
  • இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள் (1969)
  • இராமலிங்க அடிகள் வரலாறு (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) (1971)
  • வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் வரலாறு (1972)
  • இராமலிங்க அடிகளின் வரலாறு, கொள்கைகள், பாடல்கள் (1973)
  • இராமலிங்க அடிகள் – ஒரு கையேடு (இராமலிங்க அடிகள் சித்தி நூற்றாண்டு விழா மலர்) (1974)
  • வள்ளலார் மறைந்தது எப்படி? (சாகாக்கலை ஆராய்ச்சி)(1976)
  • வள்ளலார் கண்ட முருகன்(1978)
  • வள்ளலார் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும்,(1979)
  • வள்ளுவரும் வள்ளலாரும் (1980)
  • வடலூர் ஓர் அறிமுகம் (1982)
  • வள்ளலார் மறைந்தது எப்படி ? (சாகாக்கலை ஆராய்ச்சி),(1982)
  • சைவ ஆதீனங்கள்(2002)
  • வள்ளுவரும் வள்ளலாரும் (2006)
  • திருமூலரும் வள்ளலாரும்(2006)
  • சம்பந்தரும் வள்ளலாரும்(2006)
  • அப்பரும் வள்ளலாரும் (2006)
  • சுந்தரரும் வள்ளலாரும்(2006)
  • தாயுமானவரும் வள்ளலாரும்(2006)
  • மாணிக்கவாசகரும் வள்ளலாரும் (2006)
  • வள்ளலாரும் காந்தி அடிகளும்(2006)
  • வீர சைவ ஆதீனங்கள் (2009)
பதிப்பித்த நூல்கள்
  • இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள் – ச.மு. கந்தசாமி பிள்ளை(1970)
  • இரமலிங்க சுவாமிகள் சரிதம் (செய்யுள்) – பண்டிதை அசலாம்பிகை அம்மையார்(1970)
  • திரு அருட்பா ஆறு திருமுறைகளும் சேர்ந்தது(1972)
  • திரு அருட்பா (உரைநடைப்பகுதி)(1978)
  • திரு அருட்பாத் திரட்டு(1982)
  • மகாவீரரும் வள்ளலாரும்-தொடங்கி 11 நூல்கள் (2006)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page