சுந்தரமூர்த்தி நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார் (நம்பியாரூரர்) சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர். சைவ சமயக் குரவர்கள் எனப்படும் நான்கு முக்கியமான சிவனடியார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன்.
சுந்தரர் சிறுவயதில் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் அவரைக் கண்டார். சுந்தரரைத் தனது மகனாக்க விரும்பி சடையனாரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
பித்தனின் செயல்
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நம்பியாரூரருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. மிகக் கோலாகலமாக மணமேடையில் நம்பியாரூரரும் மணப்பெண்ணும் வீற்றிருந்தனர். மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த வழக்கைத் தீர்த்து வைத்த பின்னரே திருமணம் செய்யவேண்டும் என வாதாடினார்.
திருமணம் தடைப்பட்டது. கோபமடைந்தார் நம்பியாரூரர். "நீர் பித்தன்" என்று திட்டினார். "நான் உமக்கு அடிமையா? அதற்கான ஓலையைக் காட்டும்" என்றார். முதியவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கினார். அதைக் கிழித்து எறிந்தார். ஆனால் முதியவர் சிரித்தார். "திருவெண்ணெய் நல்லூருக்கு வாரும். நீர் எனக்கு அடிமை என்பதை அங்கு காட்டுவேன்" என்றார். வேகமாக முன் சென்ற முதியவரைப் நம்பியாரூரரும். சுற்றத்தினரும் பின் தொடர்ந்தனர். சுந்தரரை அழைத்துக்கொண்டு திருவெண்ணைய்நல்லூர்க் கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்தார் சுந்தரர். "பித்தா பிறை சூடி".. என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடினார்.
பண்: இந்தளம்
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
திருமணக்கோலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றவர் நம்பியாரூரர். சுந்தரமான அழகுடன் விளங்கியதால் 'சுந்தரர்’ எனப்பட்டார். சிவனை தோழமை பாவத்தில் வணங்கிப் பாடல்கள் இயற்றியவர் சுந்தரர். பல சிவத்தலங்கள் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடினார். அவற்றுள் 101 பதிகங்கள் கிடைத்துள்ளன.
திருமணங்கள்
திருவாரூரில் பரவையார் என்ற தேவதாசி குலத்தினைச் சேர்ந்த பெண் ஒருவரை சுந்தரர் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்ததாகத் தொன்மம்.
சிவபெருமான் திருவிளையாடல்
அரசரான சேரமான் பெருமாள், சுந்தரருக்கு நண்பராயிருந்தார். சுந்தரர் ஒருமுறை சேரமான் பெருமானை சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகத் தொன்மம்.
அற்புதங்கள்
சுந்தரர் நிகழ்த்திய அற்புதங்களாகக் குறிப்பிடப்படுவன:
- செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
- சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
- காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
- அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயிலிருந்து மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
- வெள்ளை யானையில் ஏறி, திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
மறைவு
சுந்தரர் சிவனடியை அடைந்திட வேண்டி "தலைக்குத் தலை மாலை" என்ற இந்தளப் பண்ணில் அமைந்த பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி சுந்தரர் கைலாயம் அடைந்து முக்தி பெற்றார்.
பாடல்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்கள் தேவாரம் என்னும் தொகுதியில் வைக்கப்பட்டு 'சுந்தரர் தேவாரம்' எனக் குறிப்பிடப்படும். இப்பாடல்கள் 'திருப்பாட்டு' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளில் எழாம் திருமுறையில் வைக்கப்படுகிறது.
இவர் சிவபெருமான் மீது 38,000 பாடல்கள் பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவை பண்களோடு அமைந்துள்ளதால், பண் சுமந்த பாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் 101 பதிகங்களே[1] கிடைத்துள்ளன.
இவரது பாடல்கள் பதினேழு பண்களில் அமைந்துள்ளன:
எண் | பண் | பாடல்களின் எண்ணிக்கை | பதிக எண்கள் |
1. | இந்தளம் | 12 | 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 |
2. | காந்தாரபஞ்சமம் | 1 | 77 |
3. | காந்தாரம் | 5 | 71, 72, 73, 74, 75 |
4. | குறிஞ்சி | 4 | 90, 91, 92, 93 |
5. | கொல்லி | 7 | 31, 32, 33, 34, 35, 36, 37 |
6. | கொல்லிக் கௌவாணம் | 9 | 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 |
7. | கௌசிகம் | 1 | 94 |
8. | சீகாமரம் | 4 | 86, 87, 88, 89 |
9. | செந்துருத்தி | 1 | 95 |
10. | தக்கராகம் | 4 | 13, 14, 15, 16 |
11. | தக்கேசி | 17 | 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 |
12. | நட்டபாடை | 5 | 78, 79, 80, 81, 82, |
13. | நட்டராகம் | 14 | 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 |
14. | பஞ்சமம் | 7 | 96, 97, 98, 99, 100 |
15 | பழம்பஞ்சுரம் | 7 | 47, 48, 49, 50, 51, 52, 53 |
16 | பியந்தைக் காந்தாரம் | 1 | 76 |
17 | புறநீர்மை | 3 | 83, 84, 85 |
திருமுறை: ஏழாம் திருமுறை பண்: நட்டராகம்
தலம்: மழபாடி நாடு: சோழநாடு காவிரி வடகரை
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.
திருமுறை: ஏழாம் திருமுறை பண்: பழம்பஞ்சுரம் தலம்: பாண்டிக்கொடுமுடி நாடு: கொங்குநாடு
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவத்தொண்டர்களின் எண்ணிக்கையை 63 என வகுத்தார்.
தேவாரப் பாடல்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவர் ஒருவரே. இப்பண்ணை ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பாடவில்லை. மீளா அடிமை என்று தொடங்கும் பாடலில் (பதி-95) இப்பண் இடம் பெறுகிறது. இது ஒரு மங்கலகரமான பண். அரங்கிசை இறுதியில் இப்பண் இசைக்கும் மரபு இருந்துள்ளது.
குருபூஜை
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
உசாத்துணை
- நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016
- சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Mar-2023, 06:30:17 IST