நாயன்மார்கள்
சைவ சமயத்தில் நாயன்மார்கள் என்போர் 63 சிவனடியார்கள். பெரிய புராணம் என்னும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியவர்கள். பொ.யு. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டர் தொகையின் அடிப்படையில் 60 நாயன்மார்கள் என்று முதலில் வகுக்கப்பட்டது. பின்னர் சுந்தரரின் பெயரும் அவருடைய பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் பெயர்களும் அதில் இணைக்கப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களாக தொகுக்கப்பட்டது.
நாயன்மார்கள் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். தேவார மூவர் மற்றும் சில நாயன்மார்கள் திருமுறையில் சில நூல்களை இயற்றினர். சிலர் அரசர்கள். மற்றவர்கள் பல் தொழில்களைச் செய்தவர்கள். பக்தி, சிவத்தொண்டு, சிவனடியார்களுக்கு சேவை செய்தல் இவற்றின் மூலம் இறைவனை அடைந்தவர்கள்.
நாயன்மார்களுக்குச் சில சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் சிலைகள் வைக்கப்படுகின்றன. உற்சவ காலங்களில் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் உலா என்று பெயர்.
தோற்றம்
தமிழகத்தில் பொ.யு. 5 மற்றும் 6-ம் நூற்றாண்டில் பௌத்த மதத்தைப் புறம் தள்ளி சைவம் வளர்ச்சி பெற்றது. இவ்வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் சைவம் சார்ந்த நாயன்மார்கள். நாயன்மார்கள் என்ற சொல்லுக்கு தலைவன் என்ற பொருள் கொள்ளப்படுகிறது.
பொ.யு. 8 -ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டர் தொகையின் அடிப்படையில் 60 நாயன்மார்கள் என்று முதலில் வகுக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரை திருத்தொண்டர் திருவந்தாதியில் விரிவாகப் பாடினார். அப்போது 60 நாயன்மார் வரலாற்றைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரது பெற்றோர் சடையனார் - இசைஞானியார் ஆகியோரைச் சேர்த்து 63 நாயன்மார்கள் என வகுத்தார்.
பொ.யு. 1132-க்கும் பொ.யு. 1150-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்கனின் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். இப்புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் பதிகங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் காலத்தால் முந்தையவர். திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தர் என்று அழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்னர் பதினான்கு நாயன்மார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆதார நூல்கள்
- திருத்தொண்டத் தொகை - சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றியது.
- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி இயற்றியது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் சுருக்கமாக அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தார்.
- பெரிய புராணம் - நாயன்மார்களின் வரலாறு சேக்கிழாரால் பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது
நாயன்மார்கள் பட்டியல்
பெயர் | குலம் | பூசை நாள் | |
---|---|---|---|
1 | அதிபத்த நாயனார் | பரதவர் | ஆவணி ஆயில்யம் |
2 | அப்பூதியடிகள் | அந்தணர் | தை சதயம் |
3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | ஆனி பூரம் |
4 | அரிவாட்டாய நாயனார் | வேளாளர் | தை திருவாதிரை |
5 | ஆனாய நாயனார் | இடையர் | கார்த்திகை ஹஸ்தம் |
6 | இசைஞானியார் | ஆதி சைவர் | சித்திரை சித்திரை |
7 | இடங்கழி நாயனார் | வேளிர் | ஐப்பசி கார்த்திகை |
8 | இயற்பகை நாயனார் | வணிகர் | மார்கழி உத்திரம் |
9 | இளையான்குடி மாற நாயனார் | வேளாளர் | ஆவணி மகம் |
10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | புரட்டாசி அசுவினி |
11 | எறிபத்த நாயனார் | மரபறியார் | மாசி ஹஸ்தம் |
12 | ஏயர்கோன் கலிக்காமர் | வேளாளர் | ஆனி ரேவதி |
13 | ஏனாதி நாத நாயனார் | ஈழக்குலச்சான்றார் | புரட்டாசி உத்திராடம் |
14 | ஐயடிகள் காடவர்கோன் | காடவர்,பல்லவர் | ஐப்பசி மூலம் |
15 | கணநாதர் | அந்தணர் | பங்குனி திருவாதிரை |
16 | கணம்புல்ல நாயனார் | செங்குந்தர் ் | கார்த்திகை கார்த்திகை |
17 | கண்ணப்ப நாயனார் | வேட்டுவர் | தை மிருகசீருஷம் |
18 | கலிய நாயனார் | செக்கார் | ஆடி கேட்டை |
19 | கழறிற்றறிவார் | சேரர்-அரசன் | ஆடி சுவாதி |
20 | கழற்சிங்க நாயனார் | பல்லவர்-அரசன் | வைகாசி பரணி |
21 | காரி நாயனார் | மரபறியார் | மாசி பூராடம் |
22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | பங்குனி சுவாதி |
23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | ஆவணி மூலம் |
24 | குலச்சிறையார் | மரபறியார் | ஆவணி அனுஷம் |
25 | கூற்றுவர் | களப்பாளர் | ஆடி திருவாதிரை |
26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | தை ரேவதி |
27 | கோச்செங்கட் சோழன் | சோழர்-அரசன் | மாசி சதயம் |
28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | ஆடி கேட்டை |
29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | மார்கழி திருவாதிரை |
30 | சண்டேசுவர நாயனார் | அந்தணர் | தை உத்திரம் |
31 | சக்தி நாயனார் | வேளாளர் | ஐப்பசி பூரம் |
32 | சாக்கிய நாயனார் | வேளாளர் | மார்கழி பூராடம் |
33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | கார்த்திகை பூராடம் |
34 | சிறுத்தொண்டர் | மாமாத்திரர் | சித்திரை பரணி |
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | ஆடிச் சுவாதி |
36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | ஆவணி பூசம் |
37 | சோமசிமாறர் | அந்தணர் | வைகாசி ஆயிலியம் |
38 | தண்டியடிகள் | செங்குந்தர் | பங்குனி சதயம் |
39 | திருக்குறிப்புத் தொண்ட நாயனார் | வண்ணார் | சித்திரை சுவாதி |
40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | வைகாசி மூலம் |
41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | சித்திரை சதயம் |
42 | நந்தனார் | புலையர் | புரட்டாசி ரோகிணி |
43 | திருநீலகண்ட நாயனார் | குயவர் | தை விசாகம் |
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | வைகாசி மூலம் |
45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் |
46 | திருமூலர் | இடையர் | ஐப்பசி அசுவினி |
47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | வைகாசி பூசம் |
48 | நரசிங்க முனையர் | முனையரையர் | புரட்டாசி சதயம் |
49 | நின்றசீர் நெடுமாறன் | பாண்டியர் அரசர் | ஐப்பசி பரணி |
50 | நேச நாயனார் | சாலியர் | பங்குனி ரோகிணி |
51 | புகழ்சோழ நாயனார் | சோழர்- அரசர் | ஆடி கார்த்திகை |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | ஆனி ஆயிலியம் |
53 | பூசலார் | அந்தணர் | ஐப்பசி அனுஷம் |
54 | பெருமிழலைக் குறும்பர் | குறும்பர் | ஆடி சித்திரை |
55 | மங்கையர்க்கரசியார் | பாண்டியர்-அரசர் | சித்திரை ரோகிணி |
56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | மார்கழி சுவாதி |
57 | முருக நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் |
58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | பங்குனி பூசம் |
59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | கார்த்திகை மூலம் |
60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | ஆடி கார்த்திகை |
61 | மெய்ப்பொருள் நாயனார் | குறுநில மன்னர் | கார்த்திகை உத்திரம் |
62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | மார்கழி ரேவதி |
63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் | சித்திரை திருவாதிரை |
நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து வாழ்ந்தவர்கள்.
பெரும்பான்மையான நாயன்மார்கள் சோழ நாட்டினைச் சேர்ந்தவர்கள். எண்மர் தொண்டை நாட்டினர். மற்றவர்கள் சேரநாடு, பாண்டிய நாடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
தேவார மூவர்
சைவ சமயத்தில் அப்பர் (திருநாவுக்கரசர்), திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் குறிப்பிடப்படாத மாணிக்கவாசகரும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், 4,5,6-ம் திருமுறைகள் திருநாவுக்கரசராலும், 7-ம் திருமுறை சுந்தரராலும் இயற்றப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்கள்.
அரசர்கள்
நாயன்மாரில் 12 பேர் அரசர்கள்.
- சேரர் - சேரமான் பெருமான்
- சோழர் - கோச்செங்கட் சோழர், புகழ்ச் சோழர்
- பாண்டியர் - நெடுமாறர், மங்கையர்க்கரசியார்
- பல்லவர் - கழற்சிங்கர், ஐயடிகள் காடவர் கோன்
- களப்பாளர் - கூற்றுவ நாயனார்
- சிற்றரசர்கள்-
- மெய்பொருள் நாயனார் ,
- நரசிங்க முனையரையர்,
- பெருமிழலைக் குறும்பர்,
- இடங்கழி நாயனார்
பெண்கள்
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். பொ.யு. 3-4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பெண் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர். இரண்டாமவர் 'நின்றசீர் நெடுமாற நாயனார்' என்று பின்னர் அழைக்கப்பட்ட மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் மனைவியான மங்கையர்கரசியார். மூன்றாமவர் சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார். சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
அவதாரத் தலங்கள்
நாயன்மார்கள் பிறந்த தலங்கள் நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.
முக்தி
நாயன்மார்கள் மூன்று விதமான முறையில் சிவபதம் அடைந்ததாக அவர்கள் வரலாறு தெரிவிக்கிறது. குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், சிவனடியாரை வணங்கி, சேவை செய்து முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.
நாயன்மார்களின் படிமங்கள்
சைவ ஆலயங்களில் காணப்படும் நாயன்மார்களின் படிமங்கள்[1] மாறுபட்ட வடிவங்களில் காணப்படுகின்றன. இதில் அப்பரின் படிமம் முற்றிலும் மழிக்கப்பட்ட தலையுடன் கைகளை உயர்த்தி கூப்பிய நிலையிலும் ஞானசம்பந்தரின் படிமம் குழந்தை வடிவத் தோற்றத்துடன் வலது கையில் தாளக்கட்டையும், இடது கையில் கிண்ணமும் கொண்டிருக்குமாறும் அமைக்கப்பட்டிருக்கும். சுந்தரமூர்த்தி நாயனாரின் படிமம் தலையில் முடிகளைச் கற்றையாக வைத்து கையில் ஓர் குச்சியை ஏந்திய நிலையில் அல்லது மழிக்கப்பட்ட தலையுடன் இரு கைகளையும் மார்பின் மீது ஒன்றன் மீது ஒன்றாக கிடத்திய நிலையில் அமைந்திருக்கும். மாணிக்கவாசகரின் படிமம் மழித்த தலையுடனோ அல்லது சுருட்டப்பட்ட தலை முடியுடனோ அமைக்கப்படும். வலது கை உபதேசிக்கும் முத்திரையுடனும் இடது கை ஓலைச் சுவடியை ஏந்திய வண்ணமாகவும் அமைக்கப்படும்.
பொ.யு. 1046-ம் ஆண்டைச் சேர்ந்த சோழ மன்னன் இராஜராஜனின் திருவொற்றியூர்க் கல்வெட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் படிமங்கள் நிர்மாணித்த செய்தி காணப்படுகிறது. திருவெண்காடு கல்வெட்டிலும் நாயன்மார்களின் படிமம் நிர்மாணித்த செய்தி உள்ளது. தேவாரம் பாடிய மூவரின் படிமம் எத்தகைய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கல்வெட்டில் காணப்படுகிறது. இத்தகைய பின்னணியின் அடிப்படையில் நாயன்மார்களின் படிமங்கள் பொ.யு. 11-ம் நூற்றாண்டில் தமிழகக் கலை வரலாற்றில் தோற்றம் பெறத்தொடங்கின.
உசாத்துணை
- நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016
- சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Nov-2023, 07:56:38 IST