under review

நமிநந்தியடிகள் நாயனார்

From Tamil Wiki
நமிநந்தியடிகள் நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

நமிநந்தியடிகள் நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நமிநந்தியடிகள் நாயனார், சோழ நாட்டில் உள்ள ஏமப்பேரூரில் அந்தணர் குலத்தில் தோன்றினார். சிவபக்தராகத் திகழ்ந்த இவர், தினந்தோறும் திருவாரூருக்குச் சென்று இறைவனை வணங்கி வழிபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

ஒரு நாள் திருவாருக்குச் சென்ற நமிநந்தியடிகள் இறைவனை வணங்கி வழிபட்டார். பின் அறனெறி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றார். அங்கு எண்ணற்ற தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட விரும்பினார். தனது ஊருக்குச் சென்று நெய் வாங்கி வந்து விளக்கேற்ற தாமதமாகும் என்பதால், அவ்வூரிலேயே யாராவது ஒருவர் வீட்டிலிருந்து நெய் வாங்கி வந்து விளக்கெற்றலாம் என்று முடிவு செய்தார்.

அதன்படி ஆலயத்தின் அருகே இருந்த ஓரு வீட்டிற்குச் சென்றார். அது சமணர்கள் வசிக்கும் வீடு என்பதை அறியாமல் அங்குள்ளவர்களிடம் நெய் கேட்டார். அவர்களோ, “உங்கள் சிவபெருமான்தான் கையிலேயே நெருப்பை வைத்திருக்கிறாரே! அப்புறம் எதற்கு அவருக்கு விளக்கு? இங்கே நெய்யில்லை. அப்படியும் விளக்கெரிக்கத்தான் வேண்டுமென்றால் தண்ணீரை ஊற்றி எரியுங்கள்” என்றனர்.

நமிநந்தியடிகள் வருத்தத்துடன் ஆலயத்துக்குத் திரும்பினார். இறைவனுக்காக ஒரு விளக்கைக் கூடத் தன்னால் ஏற்ற முடியவில்லையே என்று மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார்.

அப்போது வானில் அசரீரி ஒலித்தது. “நமிநந்தியே! கவலை வேண்டாம். அருகே உள்ள குளத்தில் இருந்து நீரை எடுத்து வந்து விளக்கேற்றுவாயாக” என்றது.

நமிநந்தியடிகள், இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்தார். உடன் குளத்திற்கு ஓடோடிச் சென்றார். திருவைந்தெழுத்தை ஓதியவாறே நீரை முகந்து கொண்டு ஆலயத்துக்கு வந்தார். அகலில் திரியிட்டு, எண்ணெய்க்குப் பதிலாக அதில் நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர் விட்டு எரிந்தது.

மகிழ்ந்த நமிநந்தியடிகள், சிவபிரானது அருளைக் கிண்டலாகப் பேசிய சமணர்கள் வாயடைத்துப் போகும்படி குளத்து நீரை முகந்து ஊற்றி கோயில் முழுவதும் விளக்கேற்றினார். விளக்குகள் அணையாமல் விடிய விடிய எரிவதற்கு ஏற்றபடி அள்ளி அள்ளி நீரை ஊற்றி அகல்களை நிறைத்தார். தொடர்ந்து நாள் தோறும் நீரால் விளக்கேற்றும் இத்திருப்பணியைச் செய்து வந்தார்.

ஒரு சமயம், திருமணலிக்குச் சென்ற நமிநந்தியடிகள், திரளான பக்தர்களுடன் கலந்து இறைவனைத் தொழுதார். இரவில் தன் இல்லம் திரும்பியவர், வீட்டின் உள்ளே செல்லாது புறக்கடை வாசலில் படுத்து உறங்க முற்பட்டார். அதுகண்ட அவர் மனைவி, “தினமும் செய்யும் சிவபூசையையும், வேள்வியையும் முறைப்படிச் செய்து விட்டு, அமுதுண்டு பின் படுத்து உறங்குங்கள்” என்றார்.

அதற்கு நமிநந்தியடிகள், “இன்று தியாகராஜப் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாக் குலத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்து இறைவனைத் தொழுதனர். நானும் தொழுதேன். எங்கும், எல்லாருடனும் சேர்ந்து சேவித்ததனால் தூய்மை கெட்டு விட்டது. அதனால் அதற்குத் தக்க பரிகாரம் செய்ய வேண்டும். குளித்து, உடல் தூய்மை செய்த பின்னரே பூசையினைத் தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான தண்ணீர் முதலானவற்றை நீ இங்கே எடுத்துக் கொண்டு வா” என்றார்.

மனைவியும் தண்ணீர் கொண்டுவரச் சென்றார். அவர் வருவதற்குச் சற்று தாமதமானது. அந்நேரத்தில் தன்னையுமறியாமல் நமிநந்தியடிகள் உறக்கத்திற்கு ஆட்பட்டார். அப்பொழுது சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, “அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய சிவகணங்களே. அதை நீ காண்பாய்” என்று சொல்லி மறைந்தருளினார்.

உடன் கண்விழித்த நமிநந்தியடிகள், இல்லத்தினுள் புகுந்து, மனைவியிடம் நிகழ்ந்ததைச் சொல்லி, நித்ய பூசைகளை முறைப்படிச் செய்து முடித்தார்.

நமிநந்தியடிகள், பொழுது விடிந்ததும் திருவாரூக்குச் சென்றார். அவ்வூரில் வசிப்பவர்கள் எல்லோரும் சிவபெருமானது உருவத்தைக் கொண்டவர்களாகவும், திருநீறு ஒளி வீசும் உடலைப் பெற்றவர்களாகவும் இருப்பதைக் கண்டார். அங்கேயே அவர்களை வீழ்ந்து வணங்கினார். உடன் அனைவரும் அவரவர்களது பழைய தோற்றத்திற்கு மாறியதைக் கண்டார். ஆரூர் பெருமான் சன்னதிக்கு விரைந்து சென்று தான் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் தன் ஊருக்குத் திரும்ப மனம் வராததால், மனைவியை அழைத்து, அவ்வூரிலேயே குடியிருந்து கொண்டு தனது திருத்தொண்டுகளைச் செய்து வந்தார்.

வாழ்வாங்கு வாழ்ந்து சிவத்தொண்டு செய்த நமிநந்தியடிகள், நாயனார் ஆகப் போற்றப்பட்டார். ‘தொண்டர்களுக்கு ஆணி’ என்று திருநாவுக்கரசாரால் புகழப்பட்டார். இறுதியில் சிவபதம் எய்தினார்.

அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

நமிநந்தியடிகள் ஆலயத்தில் தீபமேற்ற விரும்பியது

நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண் இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுந்தார்

நமிநந்தியடிகளுக்குச் சமணர்கள் நெய் அளிக்க மறுத்தது

கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேல் கொள்ளும் புரை நெறியார்

சிவனின் அருளிச் செயல்

வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலர் ஆல்.

நமிநந்தியடிகள் நீரால் விளக்கெரித்தது

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைத்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பின் உடன்
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய

சிவபெருமான், நமிநந்தியடிகள் கனவில் தோன்றி உண்மையை உணர்த்தியது

ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் கறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண்
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார்

நமிநந்தியடிகள், திருவாரூரில் பிறந்தவர்களை தெய்வ வடிவில் கண்டது

தெய்வப் பெருமான் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்து அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார்.

குரு பூஜை

நமிநந்தியடிகள் நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், வைகாசி மாதம், பூச நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page