under review

பெரிய புராணம்

From Tamil Wiki

To read the article in English: Periya Puranam. ‎


பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியம். சுந்தரமூர்த்தி நாயனாரின் 'திருத்தொண்டத் தொகை' எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும், அவரைக் காப்பிய தலைவராகக் கொண்டும், 63 சைவ அடியார்களின் சிவபக்தியையும். சிவத்தொண்டையும் , வரலாற்று முறையில் விவரிக்கும் நூல். இந்நூல் பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்ட நாயன்மார்களுடைய வாழ்க்கையின் மூலம் அக்காலச் சமுதாய வரலாற்றையும் சொல்கிறது.

ஆசிரியர்

பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பல்வேறு சிவாலயத் திருப்பணிகளைச் செய்த இவர், 63 நாயன்மார்களோடு சேர்த்து 64-ம் நாயன்மாராகப் போற்றப்படுகிறார். இவரது காலம் பொயு.பன்னிரண்டாம் நூற்றாண்டு.

தோற்றம்

அநபாய சோழன் எனப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் அநபாய சோழனின் விருப்பத்திற்கேற்ப சைவத்தின் சிறப்பையும், சிவனடியார்களையும் பாடும் எண்ணம் கொண்டு தில்லைக்குச் சென்று நடராஜரை வணங்கிய போது சிவனே அவருக்கு 'உலகெலாம்' என்று முதலடியை எடுத்துத் தந்ததாகத் தொன்மம் கூறுகிறது. சிதம்பரம் பொற்றாமரைக் குளத்துக்குப் பக்கத்திலுள்ள ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து "உலகெலாம் உணர்ந்தோதுதற்கரியவன்" எனத்தொடங்கி பெரிய புராணத்தைப் பாடி "உலகெலாம்" என்ற முதலடியையே ஈற்றடியாக மண்டலித்துப் பாடி முடித்தார். சோழ நாட்டு அமைச்சராக இருந்தமையால் நாட்டின் பல பகுதிகளுக்கும், நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர்.

சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார்.சிவனடியார்களின் வரலாறு, சிவத்தொண்டு, சிவனருள் பெற்றமை இவையே பெரிய புராணத்தின் பாடுபொருள்.

சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து பெரிய புராணக் காப்பியம் பாடி முடித்தவுடன் சோழ மன்னன் தன் பட்டத்து யானையில் சேக்கிழாரையும் பெரிய புராணக் காப்பிய ஏட்டையும் அமர்த்தி, புலவர் பின்னால் தாம் அமர்ந்து சாமரம் வீசி ஊர்வலம் வந்ததாகக் கூறப்படுகிறது. அமைச்சராக இருந்த சேக்கிழார், பதவியைத் துறந்து, சிதம்பரத்தில் இருந்து இறைப்பணி செய்து வந்தார். அநபாய சோழன் அவருக்கு 'தொண்டை சீர் பரவுவார்' என்ற பட்டம் சூட்டி சிறப்பித்தான். கல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும், இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன.

நூல் அமைப்பு

பெரிய புராணம் சிவனின் 63 அடியார்களின் பக்தியைச் சிறப்பிக்கும் காப்பியம். இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. 4286 விருத்தப் பாக்களைக் கொண்டது. அடியார்களின் வரலாறும். அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும், இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் எடுத்துக் கூறப்படுவதால் 'திருத்தொண்டர் மாக்கதை' என்று சேக்கிழாரால் பெயரிடப்பட்டது. அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் 'பெரியர் புராணம்' என்று கூற, காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.

சுந்தரரின் சிறப்பு, அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருட்திறம், குரு (ஆசிரியன்), லிங்கம் (இறைவன் திருமேனி), சங்கமம் (அடியார்) ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள், தொண்டின் திறம், சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள், சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டது. செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற, காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.

பெரியபுராணம் காப்பிய இலக்கணங்களுக்கு ஏற்ப முதற்காண்டம், இரண்டாம் காண்டம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. நூலின் உட்பிரிவைச் சேக்கிழார் 'சருக்கம்'என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். முதல் காண்டத்தில் 5 சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் 8 சருக்கங்களும் இடம் பெற்றுள்ளன. திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள 11 பாடல்களின் தொடக்கமே சருக்கங்களுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளன. உதாரணமாகத் திருத்தொண்டத் தொகையின் முதற்பாடல் 'தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்று தொடங்கியுள்ளதால், அப்பாடலில் இடம் பெற்றுள்ள அடியார் வரலாறுகளை விரித்துரைக்கும் பகுதிக்குத் 'தில்லை வாழ் அந்தணர் சருக்கம்'என்றே ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். முதல் சருக்கமாகக் கயிலாய மலைச் சிறப்புரைக்கும் 'திருமலைச் சருக்கத்'தையும் இறுதியாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் சென்றடைந்த செய்திகளைக் கூறும் 'வெள்ளானைச் சருக்கத்தையும் அமைத்துக் கொண்டார்.

திருஞானசம்பந்தர் வரலாறு பெரிய புராணத்தில் அதிகப் பாடல்களால் விரித்துரைக்கப்பட்டுள்ளது. 4287 பாடல்களில் திருஞானசம்பந்தர் புராணம் 1256 பாடல்களாலும், திருநாவுக்கரசர் வரலாறு 429 பாடல்களாலும் பாடப்பட்டுள்ளன. ஏனைய வரலாறுகள் கிடைத்திருக்கும் செய்திகளின் அளவிற்கு ஏற்ப விரித்தும் - சுருக்கியும் பாடப் பெற்றுள்ளன

பாவகைகள்

பெரிய புராணத்தின் பாடல்கள் பின்வரும் பாவகைகளில் இயற்றப்பட்டுள்ளன.

  • அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்-1805 பாடல்கள்
  • எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்-75 பாடல்கள்
  • எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்-280 பாடல்கள்
  • தரவு /கொச்சகக் கலிப்பா-1207 பாடல்கள்
  • கலி நிலைத் துறை-545 பாடல்கள்
  • கலி விருத்தம்-368 பாடல்கள்
  • வஞ்சி விருத்தம்-6 பாடல்கள்
சருக்கங்களும் அடியார்களும்
எண் சருக்கம் பாடல்கள் பாடுபொருள்/பாடப்பட்ட அடியார்கள்
1 திருமலைச் சருக்கம் 201
  • பாயிரம்
  • கயிலாய மலையின் இயற்கை எழிலும், சிவ பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவோலக்கமும் (அமர்ந்திருக்கும் நிலை) சிறப்பிக்கப்பட்டுள்ளன.
  • திருநாட்டுச் சிறப்பு-சோழ நாட்டின் சிறப்பு
  • திருநகரச் சிறப்பு-திருவாரூரின் சிறப்பு
  • திருக்கூட்டச் சிறப்பு-சைவ அடியார்களின் பெருமைகள்
  • தடுத்தாட் கொண்டபுராணம்- சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம் 348

தில்லைவாழந்தணர்

3 இலைமலிந்த சருக்கம் 422
4 மும்மையால் உலகாண்ட சருக்கம் 298
5 திருநின்ற சருக்கம்(7) 633
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்(6) 1734
7 வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் 115
8 பொய்யடிமையில்லாதபுலவர் சருக்கம் 41
9 கறைக் கண்டன் சருக்கம் 47
10 கடல் சூழ்ந்த சருக்கம் 24
11 பக்தராய்ப் பணிவார் சருக்கம் 58
12 மன்னிய சீர்ச் சருக்கம் 53
13 வெள்ளானைச் சருக்கம் 58 சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் இருவரின் கைலாய யாத்திரை

சிறப்புகள்

திருத்தொண்டத் தொகையில் ஆண் அடியார்கள் 58 பேரும், பெண் அடியார்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். சேக்கிழார் காப்பிய நாயகராகிய சுந்தரர், அவர் தந்தை சடையனார், தாயார் இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து நாயன்மார் தொகையை 63 ஆக உயர்த்தியுள்ளார். பெண் அடியவர்கள் மூவர் வரலாற்றுடன் இசை ஞானியார் வரலாறு இணைந்து வந்து விடுகிறது. மங்கையர்க்கரசியார் வரலாறு திருஞான சம்பந்தர் வரலாற்றுள் விரித்துரைக்கப்பட்டு விடுகிறது. எனவே, இவ்விருவர் வரலாறுகளும் தனியே மிகச் சுருக்கமாகவே பாடி அமைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார் வரலாறு ஒன்று மட்டுமே விரித்துரைக்கப்பட்டுள்ளது. திருத்தொண்டத் தொகையில் இடம் பெறாது அடியவர்கள் அருள் வரலாற்றில் இடம் பெற்றுள்ள திலகவதியார்(திருநாவுக்கரசரின் சகோதரி), திருவெண்காட்டு நங்கை(சிறுத்தொண்டரின் துணைவி), கமலவதி(சோழன் சுபதேவனின் துணைவிவி) முதலாகிய பல பெண்களும் இந்நூலுள் பெரிதும் போற்றப் பட்டுள்ளனர்.

தொகை அடியார்களும் தனி அடியார்களும்

ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது ஒரு அடியார் குழுவைச் சேர்ந்தவர்களைத் தொகுத்துச் சுட்டும் சொல் "தொகையடியார்கள்". இவர் இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வேறு பலரையும், தம் காலத்துக்கு முன்பும், பின்பும் வாழ்ந்தவர்களையும், வரவிருப்பவர்களையும் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டதைப் பின்பற்றியே இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புராணச் செய்திகள்
  • ஒரு காலத்தில் பெண்ணை ஆறு துறையூரின் தெற்கில் ஓடியது.
  • அகத்தியர் காவிரியை வரவழைத்தது.
  • இலக்குமி திருவாரூரில் வழிபட்டது,
  • உபமன்யு முனிவர் கண்ணனுக்குச் சிவ தீட்சை செய்வித்தது
  • உமை அம்மை காஞ்சிபுரத்தில் சிவ பூஜை செய்தது
  • உமையம்மை காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தது.
  • சிவபூஜை செய்து பரசுராமன் 'பரசு' என்ற ஆயுதம் பெற்றது.
வரலாற்றுச் செய்திகள்
  • ஆதித்த சோழன் தில்லை அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தமை.
  • இமயமலையில் சோழன் புலி இலச்சினை பொறித்தமை.
  • காஞ்சிபுரத்தைக் கரிகால் பெருவளத்தான் புதுக்கியது.
  • திருவதிகை, சித்தவடம், திருநல்லூர், சீகாழி, திருப்புகலூர், திருக்கடவூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திங்களுர், திருமருகல், திருவாரூர், திருவீழிமிழலை, மதுரை, காஞ்சி, காளத்தி, ஒற்றியூர் முதலிய சில இடங்களிற்றாம் நாயன்மார் காலத்தில் சைவ மடங்கள் இருந்தமை
  • அப்பரது வரலாற்றில் மகேந்திரவர்ம பல்லவனைப் பற்றிய குறிப்பு
  • பூசலார் புராணத்திற் கூறப்பட்ட இராசசிங்கன் என்ற பல்லவன்;
  • தண்டியடிகள் வரலாற்றிற் சொல்லப்பட்ட சோழ அரசன்;

பதினொரு திருமுறைகளிலும் பிற நூல்களிலும் கூறப்பெறாத பல செய்திகள் பெரிய புராணத்தில் உள்ளன. அவற்றுள் திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு, நந்தனார் செய்த திருப்பணிகள், சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமை, சுந்தரர் - சங்கிலியார் திருமணம் என்பன குறிக்கத் தக்கவை. இத்தகைய செய்திகள் பலவற்றை நோக்கச் சேக்கிழார் தமது தல யாத்திரையின்போது இவற்றைத் தக்கார் வாயிலாகக் கேட்டறிந்தனராதல் வேண்டும் என்று நினைக்க இடமுண்டாகிறது என்று மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

நாயன்மார் குலமரபு

நாயன்மார்கள் அக்காலத்தில் நிலவிய பல்வேறு குலங்களைச் சார்ந்தவர்கள். சைவம் என்ற ஒரு பெரிய வட்டத்துள் சாதி வேறுபாடுகள் கருதாது மனித குலத்தை ஒருங்கிணைக்கும் முயற்சி பெரிய புராணத்துள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடியவர்களுள் வேளாளர் 13, அந்தணர் 12, முடியரசர் 6, மரபு இன்னது என்று தெரியாதவர் 6, குறுநில மன்னர் 5, வணிகர் 5, ஆதிசைவர் 4, இடையர் 2, ஏனைய குலத்தோர் 10. இவர்கள் சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலைநாடு, கோனாடு, மழநாடு என்ற பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இன்ன நாட்டினர் என்ற குறிப்பு 9 அடியவர் வரலாறுகளில் இல்லை.

பாடல் நடை

உலகெலாம்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் (1 )

பெயர்க்காரணம்

இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

திருக்கூட்டச் சிறப்பு

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்(143)

திருஞானசம்பந்தர்

மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில்
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறைக்குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்தில் புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்

பூசலார்

நீண்ட செஞ் சடையினார்க்கு
  நினைப்பினால் கோயில் ஆக்கி
பூண்ட அன்பிடையறாத பூசலார்
  பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான்
  உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவியார் தம்
  பாதங்கள் பரவல் உற்றேன்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2025, 13:39:23 IST