under review

புகழ்ச் சோழ நாயனார்

From Tamil Wiki
புகழ்ச் சோழ நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

புகழ்ச் சோழ நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

புகழ்ச் சோழ மன்னர், சோழநாட்டின் உறையூரை ஆண்டு வந்தார். சிறந்த சிவபக்தரான இவர், ஆலயங்களில் சிவபூசைகள் தடையில்லாது நடைபெறவும், சிவனடியார்களுக்கு வேண்டியன கிடைத்து அவர்கள் மகிழ்வோடு வாழும்படியும் நல்லாட்சி புரிந்து வந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

ஒரு சமயம், புகழ்ச் சோழ மன்னர், கப்பம் வசூலிக்கவும், தன் கீழுள்ள சிற்றரசர்களைச் சந்திக்கவும் தனது அரசுடமை நகரங்களுள் ஒன்றான கருவூருக்கு வந்தார். அந்நாளில் சிவகாமி ஆண்டார் என்னும் அடியவர் சிவனுக்குச் சாற்றுவதற்காகக் கொண்டு வந்த மலர்களை மன்னனின் பட்டத்து யானை பறித்துச் சிதறியது. அதனால் சினம் கொண்ட எறிபத்த நாயனார் பட்டத்து யானையையும், பாகரையும் மழுவை எறிந்து கொன்றார்.

அதனை அறிந்த புகழ்ச் சோழ மன்னர், எறிபத்த நாயனாரிடம், யானையால் நேர்ந்த சிவ அபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று தம் உடைவாளினை நீட்டினார். அதுகண்டு பதறிய எறிபத்த நாயனார் தம் கழுத்தை அறுத்துக் கொள்ளப் போனார். அப்பொழுது சிவ லீலையால் இறந்த யானையும், பாகரும் உயிர் பெற்று எழுந்தார்கள். அது கண்டு அதிசயித்த புகழ்ச் சோழ மன்னரும், எறிபத்த நாயனாரும் ஒருவரை ஒருவர் வணங்கிச் சிவனுக்கு அன்பர்களாயினர்.

இந்நிலையில், நமக்குத் திறை செலுத்தாத அரசன் ஒருவனும் இருக்கின்றான் என்ற செய்தியை புகழ்ச் சோழ மன்னர் அறிந்தார். படையுடன் சென்று அவனை வென்று வருமாறு அவர் ஆணையிட, மந்திரிகளும் தளபதிகளும் அவ்வாறே பெரிய படைகளுடன் சென்றனர். கடும் போரை நிகழ்த்தினர். போரின் வெற்றிக்கு அடையாளமாக, போரில் கொல்லப்பட்ட தலைக்குவியல்கள் சிலவற்றைப் புகழ்ச் சோழ மன்னர் முன் கொண்டுவந்தனர்.

அவ்வாறு கொண்டு வந்த தலைக் குவியல்களுள் சடைமுடியுடன் கூடிய ஒரு தலையைக் கண்டார் புகழ்ச் சோழ மன்னர். அது ஒரு சிவனடியாரின் தலை என்பதை அறிந்து, கண் கலங்கிக் கண்ணீர் சிந்தினார். ‘மெய்ந்நெறியில் நின்ற சிவனடியார் தலையை வீரர்கள் தாங்கிவரக் கண்டும், பாவியாகிய நான் இன்னமும் உயிரோடு இருக்கின்றேனே’ என்று எண்ணி மனம் வருந்தினார்.

உடனடியாகத் தனது மகனுக்கு முடிசூட்டும்படி மந்திரிகளுக்கு ஆணையிட்டார். பின் திருநீற்றுக் கோலம் பூண்டார். அக்னியை வளர்க்கச் செய்தார். சிவனடியாரின் தலையை ஒரு பொற் தட்டில் ஏந்தி, நமசிவாய மந்திரத்தை ஓதிக் கொண்டே அந்த நெருப்பில் பாய்ந்தார்.

உடன் தெய்வப் பூ மழை நிலம் முழுவதும் பரவியது. மங்கல ஒலிகள் வானில் நிறைந்தன. புகழ்ச்சோழ மன்னர் சிவபெருமான் திருவடியை அடைந்து, என்றும் பிறவா உயர் நிலையைப் பெற்றார்.

பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

புகழ்ச் சோழ மன்னரின் சிவத் தொண்டு

பிறை வளரும் செஞ்சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம்
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக்
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார்.

எறிபத்த நாயனாரிடம் தன்னையும் கொல்லுமாறு கேட்டுக் கொண்டது

சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம்
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார்.

சிவனடியாரின் தலையைக் கண்டது

மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்
எண் இல் பெருகும் தலை யாவையினும்
நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் நடுக்
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே

புகழ்ச் சோழ மன்னர் நெருப்பில் பாய்ந்தது

கண்ட சடைச் சிரத்தினை ஓர் கனகமணிக் கலத்து ஏந்திக்
கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி
மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்

குரு பூஜை

புகழ்ச் சோழ நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆடி மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Aug-2023, 06:18:14 IST