திருத்தொண்டத் தொகை
திருத்தொண்டத் தொகை என்பது நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் பற்றி சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களைப் பாட, சுந்தரருக்குச் சிவபெருமானே ஆணையிட்டான் என்பதும், அவனே முதலடியாக ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று எடுத்துக் கொடுத்தான் என்பதும் இந்த நூலின் சிறப்பு.
திருத்தொண்டத்தொகை பாடல் பிறந்த வரலாறு
திருவாரூரில் உள்ள தேவாசிரியன் மண்டபம் சிவனடியார்களால் போற்றப்படும் ஒன்று. பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் விரும்பித் தங்கும் இடமாக இருந்ததால் ‘தேவாசிரியன் மண்டபம்’ என்று அம்மண்டபம் பெயர்பெற்றது. அதில் பல்வேறு சிவனடியார்கள் குழுமி சிவனைத் தொழுவது வழக்கம்.
(தேவாசிரியன் என்ற சொல் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் முதன்முதலாக சொல்லப்படுகிறது. சுந்தரர் தேவாசிரியனைத் தொழுது ஆரூர் கோயிலில் வழிபட்டதாக தடுத்தாட்கொண்ட புராணம் பகுதியில் வருகிறது[1]).
ஒருநாள் அவ்வாலயத்துக்கு சிவ வழிபாடு செய்ய வந்தார் சுந்தரர். தேவாசிரியன், மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களைக் கண்டு, “இங்கு கூடியிருக்கும் உயர்ந்த இந்த அடியார்களுக்கு என்னை அடியேனாகச் செய்யும் நாள் எந்த நாளோ?” என்று எண்ணிச் சிவபெருமானைத் துதித்தவாறே, அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஒருபுறமாக ஒதுங்கிச் சென்றார்.
அங்கிருந்த விறன்மிண்ட நாயனார் சுந்தரரின் செயலைக் கண்டு, ‘சிவனடியார்களைச் சுந்தரர் அலட்சியப்படுத்துகிறார்’ என்று தவறாக நினைத்தார். “அடியார்களை வணங்காமற் செல்கின்ற இந்தச் சுந்தரன் அந்த அடியார்களுக்குப் புறம்பானவன்; அந்த சுந்தரனை வலிய ஆட்கொண்ட சிவபெருமானும் அடியார்களுக்கு புறம்பானவனே” என்றார், சினத்துடன். அதனால் மனம் நொந்து வருந்தினார் சுந்தரர். இறைவனைத் தொழுதார்.
அவருக்குக் காட்சி தந்த சிவபெருமான்,
பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரை நீ அடைவாய்
- என்று சொன்னதுடன், அடியவர்களது பெருமையைப் பாடும் படி சுந்தரரிடம் சொன்னார். இத்தகைய பெருமை மிக்க அடியார்களைப் பற்றி தான் எவ்வாறு பாடுவது என சுந்தரர் தயங்கி நிற்க, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதலடியைச் சிவபிரானே எடுத்துக் கொடுத்தார்.
அவ்வடியையே முதல் அடியாகக் கொண்டு,
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
- என்று தொடங்கி, ஒவ்வொரு அடியவர்களது பெயரையும் கூறி, அவர்களுக்கு ‘அடியேன், அடியேன்’ என்று சொல்லி வணங்கி, 11 பாடல்களைப் பாடினார் சுந்தரர்.
சுந்தரர், அடியவர்கள் மீது கொண்டிருந்த பக்தியை உணர்ந்த விறன்மிண்ட நாயனார் அவரை வாழ்த்தினார்.
திருத்தொண்டர் புராணம்
சுந்தரரின் இந்தப் பாடல்களே சேக்கிழார் 'பெரிய புராணம்' நூல் எழுத உதவியாக இருந்தன. இந்த நூலை மூல நூலாகக் கொண்டும், நம்பியாண்டார் நம்பி எழுதிய “திருத்தொண்டர் திருவந்தாதி”யை வழி நூலாகக் கொண்டும், தாம் நாடெங்கும் பயணம் சென்று கண்ட, கேட்ட உண்மை வரலாறுகளையும், கல்வெட்டுகள், வரலாற்றுத் தரவுகள் மூலம் பெற்ற செய்திகளையும் இணைத்துத் தொகுத்து “மாக்கதை” எனப்படும் “திருத்தொண்டர் புராணத்தை” இயற்றினார் சேக்கிழார் பெருமான். திருத்தொண்டத் தொகையின் ஆசிரியரான சுந்தரரையும், அவரது பெற்றோர்களான சடையனார்-இசை ஞானியாரையும் இணைத்து 63 நாயன்மார்களாகக் கொண்டு அவர் பெரியபுராணத்தைப் படைத்தார்.
உசாத்துணை
- திருத்தொண்டத் தொகை தந்த திருவாளன்
- திருத்தொண்டத் தொகை - 72 சிவனடியார்கள் இனிது இணைய இதழ்
- பன்னிரண்டாம் திருமுறை: தேவாரம். ஆர்க் தளம்
- சேக்கிழாரின் பெரியபுராணம், பா.சு. ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Jun-2023, 07:01:17 IST