under review

நம்பியாண்டார் நம்பி

From Tamil Wiki

நம்பியாண்டார் நம்பி சைவ (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) சமயப் பெரியோர்களுள் ஒருவர். சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். பதினொன்றாம் திருமுறையில் பத்துப் பிரபந்தங்களையும் இயற்றினார். பெரிய புராணத்துக்கு மூல நூலாக அமைந்த திருத்தொண்டத் தொகையையும் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

10-ம் நூற்றாண்டில் திருநாரையூரில் வைகாசி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது தந்தை திருநாரையூரில் கோவில் கொண்ட பொல்லாப் பிள்ளையார் கோவிலில் பூசகராக இருந்தார். நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்து கொடுத்தது முதலாம் இராஜராஜனிடம் என்றும் இவர் வாழ்ந்தது முதலாம் இராஜராஜன் மற்றும் அவர் புதல்வன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் என்றும் மு. அருணாசலம் தனது 'தமிழிலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு' நூலில் குறிப்பிடுகிறார்.

நம்பியாண்டார் நம்பிகள், முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலும், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்று (பொ.யு. 985-1014) கருதப்படுகிறது. உமாபதி சிவாசாரியார் திருமுறைகண்ட புராணத்தில் அபயகுல சேகரன் இராசராசன் என்றே குறிப்பிடுகின்றார். பன்னிரு திருமுறைகளில் பதினொரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்ததாலும், அவரால் தொகுக்கப்பட்ட ஒன்பதாம் திருமுறையில் இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் எடுப்பித்த கோயிலும் இடம் பெற்றுள்ளமையாலும் இவ்விரு மன்னர் காலங்களிலும் நம்பிகள் வாழ்ந்தவர் என்று கொள்ளலே முறை என அறிஞர்கள் கருதுகின்றனர். அதன்படி நம்பிகள் காலம் கி.பி. 10-11-ம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலம் எனக் கொள்வது பொருத்தமாகிறது.

திருமுறை கண்ட புராணம் கூறும் நம்பியாண்டார் நம்பி வரலாறு

திருமுறை கண்ட புராணத்துள் சொல்லியுள்ள நம்பியாண்டார் நம்பியின் வரலாறு பின்வருமாறு;

இராஜராஜ மன்னன் திருவாரூரிலிருந்து அரசு செய்து வந்த காலத்தில், சில சிவனடியார், மூவர் பாடல்களுள் இரண்டொன்றை மட்டும் ஓதத் கேட்டு, அவர்கள் பாடிய திருமுறைகள் அனைத்தையும் அறிந்தவர்களைத் தேடிகொண்டிருந்தான். திருநாரையூரில் கோவில் கொண்ட பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசை செய்து வந்த ஆதி சைவரொருவர் இருந்தார். அவரது புதல்வர் நம்பி முறைப்படி கல்வி பயின்று வளர்ந்து வந்த நாட்களில் , தந்தை வெளியூர் செல்ல நேரிட்டது. தந்த சொல்படி பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைசெய்து நைவேத்தியத்தைப் படைத்த நம்பி, பிள்ளையார் உண்ணாததைக் கண்டு, "பெருமானே, யான் செய்த பிழை உண்டோ, திருவமுது செய்யாத தென்னே?" என்று கேட்டுத் தம் தலையைக் கல்லில் மோதப்போனார். பிள்ளையார் அவர்முன் தோன்றி, திருவமுதை உண்டார். மகிழ்ந்த நம்பி, "இனி நான் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் அடிப்பார்; ஆதலால் நீங்களே எனக்குக் கலைகளைக் கற்பிக்க வேண்டும்" எனக் கேட்டு, அவ்வாறே விநாயகப் பெருமானிடத்தில் கல்வி பயின்றார். கல்வியில் . விநாயகர் துதியாக நம்பி 'மூத்த பிள்ளையார் இரட்டை மணிமாலை' பாடினார். அதன்பி அவர் 'நம்பியாண்டார் நம்பி' என அழைக்கப்பட்டார்.

சோழமன்னன் அவரைப் பற்றி அறிந்து, அவரை சோதிக்க எண்ணி, பழங்களை எடுத்து வந்து அவற்றைப் பிள்ளையாருக்கு ஊட்டிவிடும்படி நம்பியை வேண்ட, நம்பியின் விருப்பப்படி பிள்ளையார் அவற்றையும் உண்டார். மகிழ்ந்த அரசன், மூவர் தேவாரங்களையும் பெறவேண்டும் எனப் பொல்லாப் பிள்ளையாரிடம் வேண்டினார். தில்லையில் நடராசப் பெருமான் சபையின் பக்கம் மூவரின் கை அடையாளமுடைய அறையில் அவை உள்ளன என்பதைப் பிள்ளையார் கூறி, மூவரின் வரலாற்றையும் கூறினார். அரசன் சென்று அவற்றை எடுத்துத் தரும்படி தில்லை மூவாயிரவருக்கு அறிவிக்க, அவர்கள், "மூவர் வந்தால்தான் அறை திறக்கும்" என்றார்கள். அரசனும் மூவர் சிலையைச் செய்து மூவர் விழா முடித்து வீதியுலா வருவித்து, திருமுறை அறைக்கெதிரே கொணர்ந்து நிறுத்தி, அறையைத் திறப்பித்துப் பார்க்க, திருமுறை ஏடுகள் யாவும் கரையான் மூடியிருக்க கண்டான். எண்ணெயிட்டு , மண் அகற்றி ஏடுகளைப் பார்க்க, பெரும் பகுதி பழுதாகியிருந்தது. "மூவர் பாடலில் ஈண்டு வேண்டுவன மட்டும் வைத்தோம்" என்று ஒரு அசரீரி எழுத்தது.

அரசன் கிடைத்த் தேவாரங்களைத் திருமுறைகளாக வகுக்க எண்ணி நம்பியை வேண்ட, அவர் சம்பந்தர் திருமுறை மூன்று, அப்பர் திருமுறை மூன்று, சுந்தரர் திருமுறை ஒன்று, திருவாசகம் ஒன்று, திருவிசைப் பாமாலை ஒன்று, திருமந்திரம் ஒன்று ஆகப் பத்துத் திருமுறைகளாகத் தொகுத்தார். பின்னர் அரசன் நம்பியை வணங்கி, "திருமுகப் பாசுரம் முதலாம் பதிகங்களையும் ஒரு முறையாகச் செய்க" என வேண்ட, அவர் பதினொன்றாந் திருமுறையாத் தொகுத்தார்: அதன்மேல் அவரே திருத் தொண்டத்தொகையையொட்டித் திருத்தொண்டர் அந்தாதி பாடினார். பின்னர் தேவாரப் பாடல்களுக்கான பண்களை அறிய வேண்டி, திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதாரத் தலமாகிய திருஎருக்கத்தம் புலியூருக்குச் சென்று "அரனே, இன்னிசை தந்தருள்" என்று வேண்டினார். அப்போது அசரீரி , "பாணர் மரபிலே வந்த பெண்ணொருத்திப் பண்களை அருளிச் செய்தோம்" என்று எழுந்தது. அரசனும் நம்பியும் அவளை நடராஜர் உருமுன்பு கொண்டுசென்று பாடவைத்து, பண்களை வகுத்துக் கொண்டார்கள்.அரசன் திருமுறை கண்ட சோழன் எனப் பெயர் பெற்றான்.

திருமுறைத் தொகுப்பு

மன்னன் இராஜராஜனின் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி திருமுறைகளை கீழ்காணுமாறு தொகுத்தார்;

திருமுறைகள் எழுதியவர்கள் மற்றும் நூல்
முதல் மூன்று திருஞானசம்பந்தர் தேவாரம்
நான்கு, ஐந்து மற்றும் ஆறு திருநாவுக்கரசர் தேவாரம்
ஏழு சுந்தரர் தேவாரம்
எட்டு மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார்
ஒன்பது
  • திருமாளிகைத்தேவர்,
  • சேந்தனார்,
  • கருவூர்த் தேவர்,
  • பூந்துருத்தி நம்பி,
  • காடநம்பி,
  • கண்டராதித்தர்,
  • வேணாட்டடிகள்,
  • திருவாலியமுதனார்,
  • புருடோத்தம நம்பி,
  • சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் இயற்றிய திருவிசைப்பா மற்றும்
  • சேந்தனார் இயற்றிய திருப்பல்லாண்டு
பத்து திருமூலர் இயற்றிய திருமந்திரம்
பதினொன்று பன்னிருவர் இயற்றிய நாற்பது நூல்கள்

நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்குப் பிறகு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பனிரெண்டாம் திருமுறையாக இணைக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் சிலர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தது முதல் ஏழு திருமுறைகளையே என்று குறிப்பிடுகின்றனர். தேவாரத்தைத் தொகுப்பதே அவர் பணியாய் இருந்தது எனவும் கருதுகின்றனர். ஆனால், உமாபதி சிவாச்சார்யார் பாடியருளிய ‘திருமுறை கண்ட புராணத்தில்’ பதினொரு திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பிகளே தொகுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நம்பியாண்டார் நம்பி இயற்றிய நூல்கள்

நம்பியாண்டார் நம்பி கீழ்காணும் பத்து நூல்களை இயற்றினார். இப்பத்து நூல்களுள் ஒன்று விநாயகர் மீதும், ஒன்று சிவன் மீதும், ஒன்று திருத்தொண்டத் தொகையின் விரிவாகவும், ஆறு நூல்கள் திருஞானசம்பந்தர் மீதும், பத்தாவது நூல் திருநாவுக்கரசர் மீதும் பாடப் பெற்றுள்ளன.

பண்பாட்டு,இலக்கிய இடம்

நம்பியாண்டார் நம்பி மூவர் எழுதிய தேவாரப் பாடல்களைக் கண்டறிந்து, சைவத் திருமுறைகளைத் தொகுத்து, சைவத்திற்கு பெரும் பங்களிப்பாற்றியவர். சுந்தரமூர்த்தி நாயனார் சுருக்கமாகத் தம் திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தார். பெரியபுராணத்துக்கு நம்பியாண்டர் நம்பியின் திருத்தொண்டர் அந்தாதியே மூலநூலாக அமைந்தது.

உசாத்துணை


✅Finalised Page