திருப்பல்லாண்டு (சைவம்)
- திருப்பல்லாண்டு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருப்பல்லாண்டு (பெயர் பட்டியல்)
திருப்பல்லாண்டு சேந்தனாரால் இயற்றப்பட்டு, ஒன்பதாம் திருமுறையில் இடம்பெறும் பிரபந்தம். சிவபெருமானை பக்தி மிகுதியால் பல்லாண்டு வாழ வாழ்த்தும் 13 பாடல்களினால் ஆனது.
ஆசிரியர்
திருப்பல்லாண்டை இயற்றியவர் சேந்தனார். திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள திருநாங்கூரைச் சேர்ந்தவர். பட்டினத்தாரின் தலைமைக் கணக்கராக இருந்தவர்.
நூல் தோற்றம்
பட்டினத்தார் துறவு பூண்டபின் சேந்தனார் சிதம்பரத்தில் வாழ்ந்தார். தினமும் விறகு வெட்டி வந்து, விற்ற பணத்தில் ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்துப் பின்பு தான் உணவருந்தும் வழக்கம் கொண்டிருந்தார்.
ஒரு மழை நாளில் ஈர விறகுகளை விற்க முடியாமல் இரவு இல்லம் வந்து, களியைத் தயாரித்து, அதையாவது ஒரு சிவனடியாருக்குக் கொடுக்க வேண்டிக் காத்திருந்தார். நள்ளிரவில், சிவனடியாராக நடராஜப் பெருமான் சேந்தனாரின் வீட்டிற்குச் சென்று களியை உண்டார். அடுத்த நாள் அதிகாலையில், கருவறையத் திறந்து பார்த்தபோது நடராஜரின் மேனியில் களி சிந்தியிருப்பதைக் கண்டு தெய்வக் குற்றம் நடந்ததோ என அரசருக்குத் தெரிவித்தனர். அரசனின் கனவில் சேந்தனார் அளித்த களிதான் தன் மேனியில் சிந்தியது என ஈசன் உரைத்தார்.
சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனத் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. சேந்தனாரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்த, தேரை தரையில் அழுந்தச் செய்தார் சிவபெருமான். தேர் தரையை விட்டு எழவில்லை. அசரீரீ "சேந்தன் பாட தேர் கிளம்பும்" என்றது. சேந்தன் "மன்னுக தில்லை.... பல்லாண்டு கூறுதுமே" என்ற பாடலோடு பதின்மூன்று பாடல்களைப் பாடினார். தேர் தானாகவே நகர்ந்து வலம் வந்து நிலையை அடைந்தது.
சேந்தனார் திருவிடைக்கழியில் ஒரு மடத்தை ஏற்படுத்தினார். மன்னன் அவருக்கு நிலங்கள் அளித்தான். இப்பொது அந்த இடம் சேந்தமங்கலம்(சேந்தன் மங்கலம்) என்று அழைக்கப்படுகிறது.
மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்குக் களியை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் இந்நிகழ்வின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நூல் அமைப்பு
சேந்தனார் எழுதிய திருப்பல்லாண்டு அறுசீரடிகளாலான 13 பாடல்களைக் கொண்டது. எனினும், சீர்நிலைமை வரையறையின்றியும், சில அடிகளில் சீர்மிகுந்தும், குறைந்தும் வரப்பெற்றுள்ளது. சிதம்பரம் ஸ்தலத்தைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்தது. 13 பாடல்களும் 'பல்லாண்டு கூறுதுமே' என்றே முடிகின்றன. சிவவரலாறும், அடியார்கள் வரலாறும், திருநீற்றின் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன.
- பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தன்
- அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
- சிற்றம்பலமே இடமாகப் பாவித்து நடம் பயிலவல்லான்’
- பாதகத்துக்குப் பரிசு வைத்தான்’
என்று பலவகையாக தில்லை நடராசரின் இயல்புகள் கூறப்படுகின்றன.
திருப்பல்லாண்டின் உரையாசிரியர் "இறைவன் என்றும் உள்ளவன் ஆதலின்,வாழ்த்துவார் வாழ்த்தும் வாழ்த்தினானாதல், வைவார் வையும் வைவினானாதல் அவனுக்கு வருவது ஒன்று இல்லையாயினும்,வெகுளியுற்றார்க்கு அவ்வெகுளி காரணமாக அவனை வைதல் இயல்பாதல் போல, அன்புற்றார்க்கும் அவ்வன்பு காரணமாக அவனை வாழ்த்தலும் இயல்பாதலின், அடைக்கும் தாழ் இல்லாதஅவ்வன்பின்செயல் அவர்மாட்டு இயல்பானே வெளிப்படுவதாம் என இப்பதிகம் தோற்றம் கொண்டதற்கான காரணத்தை ஒருவாறு ஆராய்ந்து உரைத்துள்ளார். கோபம் கொண்டவர் ஏசுதல் போல, அன்பு கொண்டார் வாழ்த்துதல் இயல்பேயாகும். அவ்வாழ்த்தே பல்லாண்டு என வந்தது" என இறைவனுக்குப் பல்லாண்டு கூறுவதற்கு விளக்கம் அளிக்கிறார்.
சிறப்புகள்
பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றதில் மிகக் குறைந்த பாடல்கள் கொண்ட பதிகம் திருப்பல்லாண்டு. சிவாலயங்களில் கால பூஜைகளின் இடையில் தீபாராதனைக்கு முன்னதாக, பன்னிரு திருமுறைகளிலிருந்து பாடல்களைத் தொகுத்து, பஞ்சபுராணம் (தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்) என்னும் தொகுப்பில் இருந்து ஐந்து பாசுரங்கள் பாடப்படும். இன்றைக்கும் சயாம் (தாய்லாந்து) நாட்டில் அரச குடும்பத்து நிகழ்ச்சிகளில் இப்பதிகம் பாடப்பெற்று வருவதாகக் கூறப்பெறுகிறது. சிதம்பரத்தின் தேர் உற்சவத்தின்போது ஓதுவார் பெருமக்கள் ஆகிரி ராகத்தில் திருப்பல்லாண்டு இசைப்பர்.
பாடல் நடை
கோயில்
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே. (1)
ஆதிரைநாள்
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே. (12)
உசாத்துணை
- திருப்பல்லாண்டு மூலமும் உரையும், தமிழ் இணைய கல்விக் கழகம்
- சேந்தனார் திருப்பல்லாண்டு
- திருப்பல்லாண்டு இசை வடிவில்-சம்பந்த குருக்கள், யூடியூப் காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-May-2024, 07:42:53 IST