புருடோத்தம நம்பி
புருடோத்தம நம்பி ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது அடியார்களில் ஒருவர். அவரது பாடல்கள் திருவிசைப்பாவில் எட்டாவது தொகுப்பாக அமைகின்றன.
வாழ்க்கைக் குறிப்பு
புருடோத்தமன் என்பது திருமாலின் பெயர்களில் ஒன்று என்பதால் புருடோத்தம நம்பி திருமாலை வழிபடும் குடும்பத்தில் வந்தவர் என எண்ணப்படுகிறது. தன்னை"மாசிலா மறைபல ஒது நாவன் வண் புருடோத்தமன்"(குறையற்ற வேதங்களை உச்சரிப்பவர்) என்று குறிப்பிட்டுள்ளதால் அந்தணர் குலத்தவர் என்றும் தில்லையில் வாழ்ந்தவர் என்றும் அறியப்படுகிறது. அவரது வாழ்க்கையைப் பற்றிய வேறு விவரங்கள் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
திருவிசைப்பாவின் அங்கமாகத் தில்லையின் மேல் புருடோத்தம நம்பி பாடிய இரண்டு பதிகங்கள் (26,27) உள்ளன. இப்பதிகங்களில் முப்புரம், மார்க்கண்டேயன், யமன், இராவணன் பற்றிய புராணக் குறிப்புகள் உள்ளன. 'வாரணி நறுமலர்' எனத் தொடங்கும் பதிகம் தில்லைக் கூத்தனைக் காதலித்த மகளிர் அகம் நெகிழ்ந்து உரையாடுவதாக உள்ளது. தன்னைத் தன்மையிலும், ஆடுகின்ற செல்வனை முன்னிலையிலும் வைத்துப் பாடும் தலைவி, உணர்ச்சி வேகத்தினாலே தன்னை மறந்து படர்க்கையில் வைத்துப் பாடும் பாடல் சிறப்பானது.
பாடல் நடை
வானவர்கள் வேண்ட
வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை
ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையும்
தில்லைச்சிற்றம்பலவர்
நானமரோ என்னாதே
நாடகமே ஆடுவரே.
உசாத்துணை
- சைவ இலக்கியம்-தமிழ் இணைய கல்விக் கழகம்
- ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு-திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:01:07 IST