திருமாளிகைத் தேவர்
- தேவர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேவர் (பெயர் பட்டியல்)
திருமாளிகைத் தேவர் (பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டு) திருவிசைப்பா பாடிய ஒன்பது ஆசிரியர்களில் முதலாமவர். திருவிசைப்பாவில் உள்ள 29 பதிகங்களில் முதல் நான்கு பதிகங்களைப் பாடியவர்.
வாழ்க்கைக்குறிப்பு
திருமாளிகைத் தேவர் இவருடைய இயற்பெயரா, புனைப்பெயரா என்பது தெரியவில்லை. அவரது முன்னோர்கள் மாளிகை மடம் என்ற இடத்தில் வாழ்ந்ததனால் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.
“மாடமாளிகை சூழ் தில்லையம்பலம்” (5.1.10) என்ற தேவார பாடலுடன் ஒப்பிட்டு தில்லையில் வாழ்ந்து அங்குள்ள பெருமானை பாடியதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என க. வெள்ளைவாரணர் குறிப்பிடுகிறார். திருமாளிகைத் தேவரை ஆதி சைவ அந்தணர் என்றும், சைவ வேளாள மரபினர் என்றும் குறிப்பிடுபவர்களும் உண்டு. திருவிடைமருதூரில் வாழ்ந்த அவரது முன்னோர்கள் சோழ அரசர்களுக்கு சைவராயர் என்று அழைக்கப்படும் தீட்சை குருவாக இருந்தனர்.
முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி ஓன்பதாம் நூற்றாண்டு) திருவீழிமிழலை கோவிலில் உள்ள கல்வெட்டில் 'திருமாளிகைத் தேவராகிய ஜயந்தன்' என்று குறிக்கப்படுவதால், திருமாளிகைத் தேவர் இராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவராகவும், அவரது இயற்பெயர் ஜயந்தனென்றும், பிறந்த ஊர் திருவீழிமிழலையாகவும் இருக்காலாமென க. வெள்ளைவாரணார் குறிப்பிடுகிறார்.
திருமாளிகைத் தேவர் திருவாவடுதுறைக்குச் சென்று துறவறம் பூண்டார். பின்னர் திருவாவடுதுறைக்கு தெற்கே ஒரு மடத்தை நிறுவி, தனது சிவ வழிபாட்டைத் தொடர்ந்தார். சித்தரான போகரிடம் உபதேசம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவரோடு இருந்த போகருடைய சீடர்களில் கருவூர்ச் சித்தரும் ஒருவர்.திருமாளிகைத் தேவர் போகநாதரின் மாணவர் என்பதற்கு சான்றாக,
"கலந்தருள் காலாங்கர் தம்பாலகோரர்
நலந்தரு மாளிகைதேவர் நாதாந்தர்
புலங்கொள் பரமானந்தர் போகதேவர்
நிலத்திகழ் மலர் நிராமயத்தோரே "
என்ற பாடல் கூறப்படுகிறது. திருமந்திரத்தில் 'குருமட வரலாறு' என்ற தலைப்பில் வரும் இப்பாடல் திருமூலர் பரம்பரையில் வந்த அடியார்களுள் சிறப்புடையவர்களை கூறுவதாகவும், காலாங்கர், பாலகோரர், மாளிகைதேவர், போகதேவர் என்ற வழிமுறையில் போகதேவருக்கு ஒரு தலைமுறை முந்தியவராக குறிக்கப்பட்ட மாளிகை தேவரை போகதேவருக்கு மாணவராக கூறுவது சிறிதும் பொருந்தாதென க.வெள்ளைவாரணார் கருதுகிறார்.
தொன்மங்கள்
திருமாளிகைத் தேவரைப் பற்றிய பல தொன்மக்கதைகள் வழக்கில் உள்ளன. தொட்டிகலை சுப்பிரமணிய முனிவர் திருமாளிகை தேவரை பற்றி பாடிய பாடலில்,
"குடங்கர் விசும்படை நிறுவிக்
குணபநடந் திடஇயக்கிக் கொடிஞ்சிப் பொற்றோர்
வடகழற்றி ஒட்டி, மதில்
நந்திகளை வரவழைத்து வரைநன்காட்டின்
உடம்பினெழு புகைமாற்றிக்,
கொங்கணர்பாத்திரம் சுவற்றி, உணவதாய் வெந்
திடும்பயறு மூளை செய்தெமக்கு
அருள்திருமாளிகைத்தேவர் இணைத்தாள் போற்றி "
அவற்றைக் குறிப்பிடுகிறார்.
திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடி சிவபூஜைக்காகத் திருமஞ்சன குடமும், மலர்கூடையும் கொண்டுவரும் போது எதிரில் சிலர் பிணத்தை தூக்கி வருவதைக் கண்டு மலரும், திருமஞ்சனமும் தூய்மை கெடாமல் இருக்க வான் நோக்கி எறிந்தார். பூஜைக்கான மலரும், மஞ்சனமும் வானில் நிற்க உயிரற்ற உடல் சுடுகாட்டிற்கு நடந்து செல்லுமாறு வேண்டினார்.
சேந்தனாருடன் தில்லைக்கு சென்ற போது திருத்தேர் ஓடாமல் வீதியில் நிற்பதைக் கண்டு அதனை வடமின்றி ஓடும்படி செய்தார். அப்போது அங்கே திருமாளிகைத் தேவரின் அழகைக் கண்ட மகளிர் அவரையே இடைவிடாது எண்ணி வணங்கி அவரை போல் சாயல் கொண்ட புதல்வர்களைப் பெற்றனர் என்னும் தொன்மம் உள்ளது (குழந்தை இல்லாத பெண்கள் அவரை வணங்கி ஆசி பெற்று பிறந்த பிள்ளைகள் அவரைபோலவே இருந்ததாகவும் கூறப்படுகிறது). இதனால் ஐயம் கொண்ட வேதியர் திருமாளிகைத் தேவர் கூடாவொழுக்கம் உடையவர் என காடவர்கோன் கழற்சிங்கன் (கி.பி. 825-850) என்னும் பல்லவ அரசனின் சிற்றரசனான நரசிங்கனிடம் முறையிட்டனர்.
அரசன் திருமாளிகைத் தேவரை கயிற்றில் கட்டி வரும்படி ஆணையிட்டான். அரசனின் ஆணையேற்ற ஏவலர்கள் திருவாவடுதுறை கோவிலுக்குச் சென்று திருமாளிகைத் தேவரை கயிற்றால் பிணைத்த போது அவர்கள் ஒருவர் மற்றொருவரை கயிற்றில் கட்டி அரண்மனை திரும்பினர். இதனால் கோபம் கொண்ட நரசிங்கன் பெரும்படையை திரட்டிக் கொண்டு திருமாளிகைத் தேவரை பிடிக்கச் சென்றதாகவும் அப்போது கோவிலின் மதில் மேல் இருந்த நந்திகள் உயிர்பெற்று நரசிங்கனின் படையை புறமுதுகிட்டு ஓடச் செய்ததாகவும் தொன்மம் உள்ளது.
இவை தவிர, திருமாளிகைத் தேவரைப் பற்றி புழங்கிய மற்ற தொன்மங்கள்:
- இடுகாட்டில் எழும் சவபுகையின் நாற்றத்தை மாற்றியது.
- கொங்கண சித்தரின் வற்றாத தண்ணீர் கொண்ட கமண்டலத்தை வற்றச் செய்தது.
- சிவ நைவேத்தியமாக பெற்ற சுண்டல் பயிரை மடத்தின் புறவாசலில் பாத்தி அமைத்து முளைக்கச் செய்தது.
கோயில்
திருவாவடுதுறை ஆதீனத்திருமடத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திரு உருவம் நான்கு கைகளோடு கூடியதாய் அமைந்துள்ளது. இவர் குருவுக்கு பணி விடை செய்யவும் சிவபூஜை செய்தற்பொருட்டும் தமது தவ வலிமை யால் வேறு இரண்டு திருக்கைகளை உண்டாக்கிக் கொண்டார் என்பது தொன்மம். கோமுத்தீசுவரருக்கு உச்சிக் கால பூசை முடிந்தவுடன் திருமாளிகைத்தேவருக்கும் அச்சிவாசாரியராலேயே அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பெறுகின்றன. அதன் பின்னரே மடாலயத்தில் மாகேசுவர பூசை நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது.
திருவாவடுதுறை திருமடத்தின் அடியார்களுள் ஒருவராகிய தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் திருமாளிகை தேவரைப் போற்றும் விதமாக திருமாளிகைத் தேவர் திருவிருத்தம் என்ற நூலைப் பாடியுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
திருமாளிகைத் தேவர் தில்லை நடராஜரைப் பாடிய நான்கு பதிகங்கள் (45 பாடல்களை) திருவிசைப்பாவின் முதல் நான்கு பதிகங்களாக அமைந்துள்ளன.
பாடல் நடை
ஒளிவளர் விளக்கே
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே” (9.1.1)
சேவடிகள் என் மனத்து வைத்தருள்
உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூமப் படலத்தின்
பியர் நெடுமாடத் தகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்தசிற் றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள் என் மனத்து வைத்தருளே” (9.2.1)
சிற்றம்பலக் கூத்தன்
உறவாகிய யோகமும் போகமுமாய்
உயிராளீ என்னும்என் பொன்ஒருநாள்
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என் னும் மணி நீரருவி
மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே” (9.3.1)
உசாத்துணை
- பன்னிரு திருமுறை வரலாறு - வித்துவான். க. வெள்ளைவாரணார்.
- திருமாளிகைத் தேவர் வரலாறு-சைவம்.ஆர்க்
- ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு மூலமும் உரையும்- புலவர் பி.நடராசன்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:42:31 IST