தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்
To read the article in English: Thottikalai Subramania Munivar.
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் (1740-1810) பல தமிழ் கீர்த்தனைகள், விருத்தங்கள் இயற்றியவர். சைவசித்தாந்தி, சிவஞான முனிவரின் மாணவர். கலைசைக்கோவை, திருத்தணிகைத் திருவிருத்தம், கலைசைச் சிதம்பரேசர் வண்ணம் போன்ற நூல்களை இயற்றியவர். இவரது கலைசைச் சிலேடை வெண்பா 50 ஆண்டுகள் முன் வரை வித்துவான்களுக்குப் பாடமாக இருந்திருக்கிறது.
பிறப்பு, கல்வி
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் 1740-ல் காட்டுமன்னார்கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்தார். சிவஞான போதப் பேருரையின் ஆசிரியரான சிவஞான சுவாமிகளிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சைவசித்தாந்த நூல்களையும் கற்று செய்யுள் இயற்றுவதில் புலமை பெற்றார்.
ஆன்மிக வாழ்க்கை
இளமையிலேயே திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் அம்பலவாணரிடம் துறவும் ஞானோபதேசமும் பெற்று சில காலம் அங்கு ஆதீனப் புலவராக இருந்தார்[1]. இவரது புலமையால் மதுரகவி என்னுப் பட்டம் பெற்றார். பின்னர் மடத்தில் ஞானவான்கள் சரியாக பேணப்படவில்லை என வெறுத்து சென்னைக்கு அருகிலுள்ள கலைசை என்னும் தொட்டிக்கலைக்கு சென்று சிவஞான சுவாமிகளுடன் தங்கினார். தொட்டிக்கலைக் கேசவ முதலியார் என்பவரும் வேதாசல முதலியார் என்பவரும் இவரை ஆதரித்தவர்கள்.
இசைப்பணி
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் தனது ஞானகுருவாகிய அம்பலவாண தேசிகர் மீது 24 பாடல்கள் கொண்ட பஞ்சரத்தின மாலை பாடினார். இதனுள் ஐந்து கீர்த்தனங்கள். அதன் பல்லவிகள்:
தேசிகர் பட்டணப் பிரவேசம்
ராகம்: ஆனந்த பைரவி, தாளம்: அடதாள சாப்பு
வண்ணச் சிவிகையேறி வந்தான் – அருட்பவனி வண்ணச் சிவிகையேறி வந்தான்
மேகவிடு தூது
ராகம்: கல்யாணி, தாளம்: ஆதி
ஈர முகிலே மையல் தீரவே தூது சென் றெனக் குபகாரம் செய்வாய்
வண்டுவிடு தூது
ராகம்: மோகனம்
மஞ்சரியே மண மஞ்சரியே வாங்கியே வருவாய் நீ வெகு விரைவாய்
இதில் அனுபல்லவியை அடுத்துள்ள சரணங்களில் ஒவ்வொன்றிலும் ஏழு சீர்களுடைய இரண்டடிகளும், பத்து சீருள்ள மூன்றாம் அடியும் உள்ளன.
அன்னவிடு தூது
ராகம்: த்விஜாவந்தி
அஞ்சமே எனக்கொரு தஞ்சமே யாகி நீபோய் அலங்கல் கொணர்ந்தால் உள்ளம் கலங்கேனே
கிளிவிடு தூது
ராகம்: மாஞ்சி, தாளம்: அடதாளம்
கிள்ளையே மயற் கொள்ளையே யறக் கள்ளையே சொரி காவித் தாரைக் கேட்டு நீ வாங்கிக் காட்டினாலொரு கேதம் நான் அடையேனே
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரின் ஆசிரியரான சிவஞான சுவாமிகள் முக்தியடைந்தபோது இவர் எழுதிய "நினைத்தாற் சகிக்கப் போமோ" என்ற கீர்த்தனம் (1785) புகழ்பெற்றது. இவைதவிர வேறுபல சிந்துக்களும் கண்ணிகளும் இசைக்கென்றே பாடினார்.
இலக்கிய வாழ்க்கை
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் பன்னிரெண்டு பிரபந்தங்கள் பாடினார். சுப்பிரமணியர் திருவிருத்தம் குஷ்டரோகி ஒருவன் மூலமாகவும், திருத்தணிகைத் திருவிருத்தம் கண்பார்வைக்குறைபாடுள்ள ஒருவன் நிமித்தமாகவும் பாடப்பட்டது. அவர்கள் இருவரும் குறை நீங்கப்பட்டனர் என்ற நம்பிக்கை உள்ளது.
முப்பதுக்கும் மேற்பட்ட சிறுநூல்களும் திருவாவடுதுறைக் கோவை, கலைசைக் கோவை (கலைசை(கலசை) என்பது தொட்டிக்கலையின் வேறுபெயர்) போன்ற பெரிய நூல்களும் எழுதினார். இவர் இயற்றிய ஆவினன்குடி பதிற்றுப்பத்தந்தாதி 1790-ல் அரங்கேற்றப்பட்டது.
மறைவு
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் 1810-ல் காலமானார்.
நினைவிடம்
கலைசையில் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவருக்காகக் கட்டப்பட்ட மடம் "சாமியார் மடம்" என்ற பெயரில் உள்ளது.
நூல்கள் பட்டியல்
அச்சிடப்பட்டவை
- கலைசைக் கோவை - உ.வே.சாமிநாதையரால் பரிசோதிக்கப்பட்டு குறிப்புரையுடன் பதிப்பிக்கப்பட்டது
- கலைசைச் சிலேடை வெண்பா
- கலைசைச் சிதம்பரேசர் பரணி
- திருவாவடுதுறைக் கோவை
- சிவஞான முனிவர் துதி விருத்தங்கள்
- சிவஞான முனிவர் கீர்த்தனைகள்
அச்சில் இல்லாதவை
- கலைசைச் சிதம்பரேசர் சந்நிதிமுறை (19 பிரபந்தங்கள்)
- கலைசைச் சிதம்பரேசர் வண்ணம்
- கலைசைச் சிதம்பரேசர் பஞ்சரத்தினம்
- கலைசைச் சிதம்பரேசர் கட்டியம்
- கலைசைச் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்
- திருக்குற்றால சித்திரசபைத் திருவிருத்தம்
- பழனிக் குழந்தைவேலர் பஞ்சரத்தின மாலை
- ஸ்ரீ சுப்பிரமணியர் திருவிருத்தம்
- திருத்தணிகைத் திருவிருத்தம்
- வருட திருமுல்லைவாயிற்கொடியிடையம்மை பிள்ளைத்தமிழ்
- ஆயலூர் முருகர் பிள்ளைத்தமிழ்
- திருச்செந்திற் சந்தவிருத்தம்
- ஆவினன்குடிக் கைலாயநாதர் பதிற்றுப்பத்தந்தாதி
- திருமாளிகைத்தேவர் திருவிருத்தங்கள்
- திருச்சிற்றம்பலதேசிகர் சிந்து
- திருச்சிற்றம்பலதேசிகர் சந்தவிருத்தம்
- அம்பலவாண தேசிகர் பஞ்சரத்தின மாலை
- அம்பலவாண தேசிகர் வண்ணம்
- அம்பலவாண தேசிகர் ஆனந்தக் களிப்பு
உசாத்துணை
- தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
- தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை
- தொட்டிக்கலையின் தமிழ்த்தொண்டு
- தமிழ்த்தாமரை: நூல்கள்-ஆசிரியர்கள் 1
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Apr-2023, 07:49:24 IST